சென்சார் தொழில்நுட்பம்... ஸ்மார்ட் அலுவலகம்!

உலக வணிகத்தையும், அலுவலகச் சூழலையும் புரட்டிப் போட்டுவிட்டது கரோனா. நேரடி வணிகம் தொலைந்து மின்வணிகம் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கி விட்டது.
சென்சார் தொழில்நுட்பம்... ஸ்மார்ட் அலுவலகம்!


உலக வணிகத்தையும், அலுவலகச் சூழலையும் புரட்டிப் போட்டுவிட்டது கரோனா. நேரடி வணிகம் தொலைந்து மின்வணிகம் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கி விட்டது. அலுவலகத்திற்கு சென்று தான் வேலை என்ற நிலை மாறி, வீட்டிலிருந்தே வேலை என்ற நிலையையும் கரோனா உருவாக்கிவிட்டது. 

விர்ச்சுவல் மீட்டிங் எனப்படும் மெய்நிகர் கூட்டங்கள் இப்போது சர்வ சாதாரணமாகி விட்டன. எந்த அலுவலக ஊழியரைக் கேட்டாலும் அது அரசு துறை என்றாலும் சரி, தனியார் நிறுவனங்கள் ஆக இருந்தாலும் சரி "வீசி" எனப்படும் வீடியோ கான்பரன்ஸ் அன்றாட நிகழ்வுகளாக மாறிவிட்டன.

தற்போது பொது முடக்கம் நிறைவடைந்து விட்டாலும் கூட பல நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை அலுவலகத்திற்கு அழைக்காமல் தொடர்ந்து வீட்டிலிருந்தே வேலை வாங்கி வருகின்றன. 

இங்கிலாந்தில் இது தொடர்பான ஆய்வு நடைபெற்றபோது மூன்றில் ஒரு பகுதியினர் அலுவலகத்துக்குச் சென்று வேலை செய்வதை விரும்புவது தெரிய 
வந்துள்ளது. 

வீட்டில் இருந்து வேலை செய்வது எல்லாருக்கும் பிடித்து போனாலும் கூட, அலுவலகத்திற்கு சென்று பணியாற்றும்போது, அது வேலை மற்றும் வாழ்க்கையைச் சரியாக கையாளுவதற்கு உதவுவதாகப் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். 

இப்படி பணியாளர்கள் அலவலகம் திரும்ப ஆசைப்பட்டாலும் கூட கரோனா குறித்த அச்சம் அவர்களை விட்டு நீங்கவில்லை என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

50 சதவீதத்திற்கும் அதிகமான பணியாளர்கள் அலுவலகத்திற்கு வருவதற்கு இதன் காரணமாகப் பயப்படுகிறார்கள் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

கழிப்பறை, குளியலறை, சிற்றுண்டி வளாகங்கள் என இதுவரை யோசிக்காத இடங்கள் குறித்தெல்லாம் யோசிக்கும் பணியாளர்கள் அங்கு சுத்தம் எவ்வாறு பேணப்படும் என்ற அச்சத்திலும் இருக்கின்றனர். இது கூட அவர்கள் அலுவலகத்திற்கு திரும்ப வருவதற்கு தடையாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

பணியாளர்களின் இந்த நியாயமான பயத்தை போக்குவதற்காக நிறுவனங்கள் சென்சார் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த தொடங்கி விட்டன. ஸ்மார்ட் அலுவலகமாக மாற்றும் செயலில் நிறுவனங்கள் இறங்கிவிட்டன. 

அலுவலகத்தின் கதவுகள் மற்றும் கைப்பிடிகளில் இத்தகைய சென்சார்கள் பொருத்தப்படுகின்றன. இதன் மூலம் எத்தனை முறை கதவு திறக்கப்படுகிறது அல்லது கைப்பிடி பயன்படுத்தப்படுகிறது என்ற தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. 

இதை கண்காணிக்கும் பணியாளர் தேவைக்கேற்ற வகையில் அதை சுத்தம் செய்ய முடியும். அல்லது அந்த சென்சார் மூலம் கிடைக்கும் தகவல்களைப் பயன்படுத்தி சம்பந்தப்பட்ட பணியாளர்களுக்கு குறுந்தகவல் அனுப்பி அந்த வேலையைச் செய்ய சொல்லும் தொழில் நுட்பமும் தற்போது வந்துவிட்டது. இதன் மூலம் வழக்கமாக இருமுறை மட்டுமே பாத்ரூம் சுத்தம் செய்யும் வழக்கம் இருந்தால் பயன்பாட்டுக்கு ஏற்றவாறு சுத்தம் செய்யும் நிலை இத்தகைய சென்சார் தொழில் நுட்பத்தால் உருவாகும். 

அதுபோல் பணியிடங்களில் அமரும் இருக்கைகளில் வெப்ப உணரிகள் அதாவது டெம்பரேச்சர் சென்சார் பொருத்தப்பட்டு அவை மூலம் வெப்பநிலை மாற்றங்கள் கணக்கிடப்பட்டு ஓர் ஊழியருக்கு திடீரென்று வெப்பநிலை உயர்ந்தால் அது குறித்த எச்சரிக்கை செய்தியை அனுப்பும். இதன் மூலம் உரிய மருத்துவச் சிகிச்சையை அவர் உடனே பெற முடியும். 

இதுபோல் சமூக இடைவெளியைப் பின்பற்றுவதற்காக இருக்கைகளில் அதற்குரிய சென்சார்கள் பொருத்தப்பட்டு தரவுகள் சேகரிக்கப்படுகின்றன. 

யாராவது இருக்கைகளை பக்கத்தில் கொண்டு சென்றால் அது குறித்த எச்சரிக்கை சமிக்கைகள் மேலாளருக்கு அனுப்பப்படும். அவர் உடனடியாக இருக்கைகளை சமூக இடைவெளியுடன் நகர்த்துவதற்கு அறிவுரை கூற முடியும். 

இது போல் குழாய்களைத் தொடாமலேயே கை கழுவுவது, கைகளைப் பயன்படுத்தாமலேயே வாய்ஸ் சென்சார் எனப்படும் குரல் சென்சார்கள் மூலம் ஒரு மின் விளக்கை எரியச் செய்வது என்பன போன்றவையும் இத்தகைய ஸ்மார்ட் அலுவலகத்தில் பொருத்தப்பட்டு, அதன் மூலம் பணியாளர்கள் பயமின்றி பணியாற்ற முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 

கரோனா தொற்றின் பயமின்றி பணியாற்றவே இத்தகைய சென்சார் தொழில் நுட்பங்களை நிறுவனங்கள் பயன்படுத்தி வந்தாலும் கூட பணியாளர்களின் தனிப்பட்ட உரிமைகளில் இத்தகைய தொழில்நுட்பம் பாதிப்பை ஏற்படுத்துவதாக பல பணியாளர்கள் கருதுகின்றனர். 

சென்சார் தொழில்நுட்பம் இல்லாத நிறுவனங்களில் பணியாற்றும் 65.6 சதவீதம் பேர் இத்தகைய சென்சார் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டால் மிக வசதியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர். 

 தங்களின் பாதுகாப்பிற்காகக் கொண்டு வரப்பட்டுள்ள இத்தகைய சென்சார் தொழில்நுட்பத்தால் தங்களின் தனியுரிமையில் பாதிப்பு எதுவும் இல்லை என 74.8 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். 

அதாவது கழிப்பறை பத்து முறை பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற தகவல் மட்டுமே இந்த சென்சார்கள் மூலம் தெரிய வரும். ஆனால் அந்த கழிப்பறையை யார்? பயன்படுத்தினார் என்ற விவரங்களை அது சொல்லப் போவதில்லை. இதனால் சென்சார் தொழில்நுட்பத்தை ஏற்பதற்கு எந்தவிதத் தயக்கமும் இல்லை என்கின்றனர் அவர்கள். 

அதேசமயம் இந்தத் தரவுகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதையும் அவர்கள் வலியுறுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

இன்றைய கரோனா நோய்த்தொற்று பயத்தில் இருந்து விடுபட்டு பணியிடங்களுக்குச் சென்று பணியாளர்கள் வேலை செய்ய வேண்டுமென்றால் அதற்கு நிறுவனங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அவசியமாகிறது.

அத்தகைய பாதுகாப்பினை இத்தகைய சென்சார் தொழில் நுட்பங்கள் வழங்கும் என்றால் அது மிகையல்ல.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com