சிக்கிக் கொள்ளாதீர்கள்!

எல்லாருக்குமே மிக அருமையான வாழ்க்கை கிடைத்திருக்கிறது. ஆனால் அந்த வாழ்க்கையை நல்லமுறையில் வாழ்ந்து பார்த்து இருக்கிறீர்களா? என்று கேட்டால், பலர் இல்லையென்றே சொல்கிறார்கள்.
சிக்கிக் கொள்ளாதீர்கள்!

எல்லாருக்குமே மிக அருமையான வாழ்க்கை கிடைத்திருக்கிறது. ஆனால் அந்த வாழ்க்கையை நல்லமுறையில் வாழ்ந்து பார்த்து இருக்கிறீர்களா? என்று கேட்டால், பலர் இல்லையென்றே சொல்கிறார்கள்.   

பெரும்பாலான மனிதர்களின் வாழ்க்கை சிக்கல் நிறைந்ததாகவே இருக்கும். இன்பம், துன்பம் இவை இரண்டும் சேர்ந்ததுதான் வாழ்க்கை என்று சொல்வார்கள். அதுபோல் சிக்கல் ஏற்படுவதும் வாழ்க்கையில் ஓர்அங்கம் தான். அத்தகைய சிக்கல் வாழ்க்கையில் வந்தாலோ, அல்லது வாழ்க்கையே சிக்கலாக மாறினாலோ, அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்பவர்கள் தான் அதிகம்.  

அதுபோல் சிலர் சிறிய அளவிலான சிக்கலைக் கூட மிக பெரிதாக நினைப்பார்கள். அதன் காரணமாக தேவையில்லாத பதற்றத்தையும் அவர்கள் 
தங்களுக்குத் தாங்களே உருவாக்கிக் கொள்வார்கள். 

இதனால் அந்த சிக்கல் குறித்த தெளிவான கண்ணோட்டம் அவர்களின் அறிவுக்கு எட்டாமல் போய் விடக்கூடும். எனவே கிடைத்த வாழ்க்கையை மகிழ்ச்சியானதாக ஆக்கிக் கொள்வது அவரவர்கள் சிக்கல்களை எவ்வாறு கையாளுகிறார்கள் என்பதைப் பொறுத்தே அமையும். 

கற்றுக் கொள்ளுங்கள்:  நீங்கள் பணியிடத்தில் ஒரு  வேலையில் ஈடுபட்டு உள்ளீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். அதுபோன்ற வேலையை வேறு பலரும் செய்து கொண்டிருப்பார்கள். அத்தகைய சூழலில், "பிறர் நன்றாக செய்துவிட்டார் நம்மால் முடியவில்லையே... இதுகுறித்து மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ?' என்று  நீங்கள் யோசித்தால் அந்த இடத்தில் அந்த பிரச்சனை ஒரு சிக்கலை உங்களுக்குள் உருவாக்கிவிடும். அதை யோசிப்பதை விட்டுவிட்டு நம்மால் முடியும் என்ற மன உறுதியுடன் அந்த வேலை குறித்து விவரங்களைத் தெரிந்து கொண்டு உங்களை மேம்படுத்த முயற்சி செய்தால், அந்த சிக்கல் உங்களுக்கு சிக்கலாகவே தோன்றாது. இன்னும் நாம் கற்க வேண்டியது அதிகம் உள்ளது என்பதை உணர்ந்து நீங்களும் கற்கத் தொடங்கி விடுவீர்கள்.  இது உங்கள் வேலையில் உங்களை முன்னேற்றிவிடும். 

நேர்மை...  சிக்கலைக் குறைத்துவிடும்!   சிலர் நேர்மையற்ற முறையில் செயல்பட்டு உயர்ந்த இடத்தில் கூட இருப்பார்கள். ஆனால் அவர்கள் தங்களை அறியாமலேயே தங்கள் வாழ்க்கையை மிகவும் சிக்கலாக்கிக் கொள்கிறார்கள் என்பதே உண்மை. சமூகம் அவர்களை மோசமாக நினைப்பது மட்டுமின்றி, நேர்மையற்ற முறையில் வாழக் கூடிய ஒவ்வொரு மனிதனும் தன் மனதிற்குள் அது குறித்து எப்போதும் சிந்தித்துக் கொண்டே இருக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டு விடும். நமது தவறை பிறர் கண்டுபிடித்து விடுவார்களோ? என்ற அச்சமே அவர்களுக்குள் பல விதமான சிக்கல்களை உருவாக்கி விடும்.  எனவே வாழ்க்கையில் சிக்கலைத் தவிர்க்க நேர்மையாக இருக்க பழக வேண்டும்.  

தெளிவாகப் பேசுங்கள்!  மற்றவருடன் தொடர்பு கொள்ளும்பொழுது தெளிவான கருத்துகளை முன்வைத்தால் சிக்கலை எளிதில் தவிர்த்துவிட முடியும். சிலர் சரியான விஷயங்களைக் கூட தெளிவாகச் சொல்ல முடியாமல் சிக்கலை உருவாக்கி விடுவார்கள். சொல்ல வேண்டிய விஷயங்களை அர்த்தம் மாறாமல் தெளிவாகச் சொல்லிப் பழகிவிட்டால் பல்வேறு பிரச்னைகளில் இருந்து விடுபட்டு விடலாம்.

திரைப்படங்களில் வருவது போல ,"நீ மைண்ட் வாய்ஸ்ன்னு நினைச்சு சத்தமா பேசிட்டு இருக்க. உன் மைண்ட் வாய்ஸ்-ஐ நான் கேட்ச் பண்ணிட்டேன்' என்பது போலெல்லாம் நடைமுறை வாழ்க்கையில் யாராலும் மற்றவர்களின் மைண்ட் வாய்ûஸ தெரிந்து கொள்ள முடியாது. எனவே சொல்ல வேண்டிய தகவல்களை தெளிவாகச் சொல்வதற்கான பயிற்சியை எடுத்துக்கொண்டால் சிக்கல்களைக் குறைக்க அது உதவும்.

தரமான உறவுகளே முக்கியம்! எனக்கு நண்பர்கள் மிக அதிகம் என்று சிலர் பெருமையாக சொல்வதுண்டு. எனக்கு முகநூலில் ஆயிரக்கணக்கான நண்பர்கள் இருக்கின்றனர். ஐம்பதுக்கும் மேற்பட்ட வாட்ஸ் அப் குழுக்களில் எனது நண்பர்கள் இருக்கின்றனர் என்று பெருமையாகச் சிலர் சொல்லிக் கொள்வதைப் பார்த்திருப்பீர்கள்.  இந்த எண்ணிக்கையால் என்ன பயன் என்பதை அவர்கள் உணர மாட்டார்கள். ஆனால் அவர்கள் அருகே உள்ள உறவினர்கள்,  ஏன் அவர்கள் வீட்டில் உள்ளவர்களின்  கஷ்டங்களைக் கூட கண்டுகொள்ளமாட்டார்கள்.

அதிக எண்ணிக்கையில் நண்பர்கள் இருப்பதாகச் சொல்லிக் கொள்வதில் எந்தப் பெருமையும் இல்லை. நல்ல, தரமான மனிதர்களிடம் நாம் பழகுகிறோமா, உறவு வைத்துக் கொண்டிருக்கிறோமா என்பதே முக்கியம். அப்படி நாம் உறவு வைத்துக் கொண்டால், வாழ்க்கையின் பல சிக்கல்களில் இருந்து நாம் எளிதாக விடுபட முடியும். 

உங்களைச் சுற்றி உள்ள சமூக உறவுகள் குறித்து தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருப்பது அவசியம். பொதுவாக உங்களைச் சுற்றியுள்ளவர்களில் சிலர் உங்களின் முன்னேற்றத்துக்கு உதவுவார்கள். சிலர் உங்களின் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பார்கள். தடையாக இருக்கும் நபர்களிடமிருந்து முடிந்த அளவிற்கு விலகி இருந்தால் அவர்களால் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்க முடியும்.

பிறரைத் திருத்த முயற்சி செய்யாதீர்கள்! உங்களைச் சுற்றியுள்ள பிறரிடம் குறைகள் இருக்கலாம். மேம்படுத்த வேண்டிய பலவற்றை அவர்கள் செய்யாமல் இருக்கலாம்.  அவற்றைச் சுட்டிக்காட்டி, அவர்களைத் திருத்த நினைத்தால், நீங்கள் தேவையில்லாத சிக்கல்களில் மாட்டிக் கொள்வீர்கள். எதை எதை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று ஒருவரை உணர வைத்தால், அதுவும் மிகவும் மென்மையாகக் கூறி உணர வைத்தால் போதுமானது. அவர்கள் தாங்களாகவே தங்களைத் திருத்திக் கொள்வார்கள். 

தள்ளிப் போடாதீர்கள்!  ஒரு விஷயத்தை கடைசி நிமிடம் வரை தள்ளிப் போடுவதை தவிர்த்தாலே பெருமளவு சிக்கல்களில் இருந்து விடுபட முடியும். ஒரு செயலைச் செய்வது தொடர்பான கால அட்டவணையை உருவாக்கி அந்த அட்டவணைப்படி செயல்களை துரிதமாகச் செய்து முடித்தால் சிக்கல் இல்லாத வாழ்க்கையை உருவாக்க முடியும். 

செய்ய முடிவதை ஏற்றுக் கொள்ளுங்கள்! ஒருவர் கூறும் செயலைச் செய்ய முடிந்தால் சரி என்று சொல்ல  வேண்டும். இல்லை என்றால் முடியாது என்பதை தெளிவாகச் சொல்லவேண்டும். அப்படி இல்லாமல் அவரிடம் செய்ய முடியாது என்று எப்படிச் சொல்வது என்று தயங்கி செய்ய முடியாத வேலையைச் செய்வதாகச்  சொல்லி விட்டால் அவர் நம்பிக்கையுடன் காத்திருப்பார். கடைசியில் முடியவில்லை என்று  சொன்னால் அது  சிக்கலை ஏற்படுத்தும். எனவே  பிறரிடம் இருந்தும் தேவையில்லாத விஷயங்கள் வருமானால் அதை வேண்டாம் என்று தைரியமாகச் சொல்லும் மனப்பக்குவமும் நமக்கு வேண்டும்.  
இவ்வாறு சிக்கல்களைத் தவிர்க்கப் பழகிவிட்டால்,  வாழும் வாழ்க்கை இன்பமானதாக மாறிவிடும்.  எனவே சிக்கல்களில் சிக்கிக் கொள்ளாதீர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com