இணையவழி விளையாட்டுகள்: தப்பிப்பது எப்படி?

பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் இடையே ஸ்மார்ட்ஃபோன் பயன்பாடு வெகுவேகமாக அதிகரித்து வருகிறது. கரோனா தொற்று பரவத் தொடங்கியபோது, பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது.
இணையவழி விளையாட்டுகள்: தப்பிப்பது எப்படி?


பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் இடையே ஸ்மார்ட்ஃபோன் பயன்பாடு வெகுவேகமாக அதிகரித்து வருகிறது. கரோனா தொற்று பரவத் தொடங்கியபோது, பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. அந்த காலகட்டத்தில் இளைஞர்கள் அதிகமாக ஸ்மார்ட் போனைப் பயன்படுத்தத் தொடங்கினர். முக்கியமாக இணையவழி விளையாட்டுகளை அதிகமாக ஆடத் தொடங்கினர்.
கரோனா தொற்று பரவலால் பொது இடங்களுக்கு அதிகமாகச் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டதால், வீட்டிலேயே முடங்கிக் கிடந்த இளைஞர்கள் இணையவழி விளையாட்டால் ஈர்க்கப்பட்டனர். இணையவழி விளையாட்டுகளுக்குப் பலர் அடிமைகளாகிவிட்டனர் என்றே கூட சொல்லலாம்.

பல இளைஞர்கள் இணையவழி விளையாட்டுகளில் பெரும் தொகையை இழந்தனர். பலர் சொந்த வீட்டிலேயே திருடர்களாக மாறினர். இணையவழி விளையாட்டுகளால் பணத்தை இழந்ததாலும், அதில் இருந்து மீள முடியாததாலும் சில இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டனர். புகைபிடிப்பது, மது அருந்துவது போன்றவற்றைப் போல இணையவழி விளையாட்டுகளும் இளைஞர்களை வெகுவாக அடிமைப்படுத்திவிட்டன.

அந்த அடிமைத்தனத்தில் இருந்து மீள முடியாமல் இளைஞர்கள் பலர் தவித்து வருகின்றனர். சில வழிமுறைகளைப் பின்பற்றி இணையவழி விளையாட்டு மோகத்தில் இருந்து எளிதில் மீள முடியும்.

முதலில் இணையவழி விளையாட்டுகளின் நோக்கம் என்ன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். உண்மையாகவே அந்த விளையாட்டை விளையாடினால் நமக்குப் பணம் கிடைக்குமா என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

விளையாட்டை நாம் விளையாடும்போது அதன் மூலமாக மனமகிழ்ச்சிதான் கிடைக்க வேண்டுமே தவிர, வெற்றி தோல்வி என்பது விளையாட்டுக்கு அடிப்படை அல்ல. சிறு வயதில் நாம் விளையாடும்போது நமக்கு மகிழ்ச்சிதான் முக்கியமாக இருந்தது. தற்போது இணையவழி விளையாட்டுகள் என்ற பெயரில் சூதாட்டமே நடைபெற்று வருகிறது.

சூதாட்டத்துக்கு வெற்றி பெறுவது மட்டுமே முக்கியமே. அப்போதுதான் லாபம் கிடைக்கும். மனமகிழ்ச்சிக்கும் சூதாட்டத்துக்கும் தொடர்பில்லை. பொழுதுபோக்குக்காக முதலில் இணையவழி சூதாட்டங்களில் ஈடுபடத் தொடங்குவோர், பின்பு அதற்கு அடிமைகளாகின்றனர். அதனால்தான் அதில் இருந்து அவர்களால் மீள முடிவதில்லை. இணையவழி விளையாட்டுகள் வெறும் சூதாட்டமே என்ற அடிப்படையை நாம் புரிந்து கொள்வது அவசியம்.

அடுத்ததாக, ஸ்மார்ட்போன் பயன்பாட்டை மெல்ல மெல்லக் குறைக்க வேண்டும். அதிக நேரத்துக்கு அதைப் பயன்படுத்துவது நமது உடல்நலத்துக்கு மட்டுமின்றி மனநலனுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். நமது சிந்தனைத்திறன் பாதிக்கப்படும். இளைஞர்களின் திறமைகளை மழுங்கச் செய்யும் பணியையே ஸ்மார்ட் ஃபோன்கள் செய்கின்றன.

நண்பர்களுடனும் குடும்பத்தினருடனும் அதிகமாக உரையாட வேண்டும். தற்போது பெரும்பாலான மாணவர்களும் இளைஞர்களும் தங்கள் ஸ்மார்ட் போன்களுடன் தனித் தீவுகளாகிவிடுகின்றனர். சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறிய விருப்பமின்றி ஸ்மார்ட் போன்களில் மூழ்கி விடுகின்றனர். இது மனநலத்தைக் கடுமையாக பாதிக்கும்.

ஸ்மார்ட் போன்களை சற்று ஓரமாக வைத்துவிட்டு, நண்பர்களுடன் நேரத்தைச் செலவிடலாம். தற்போது கரோனா தொற்று பரவல் வெகுவாகக் குறைந்துவிட்டதால், இணையவழி விளையாட்டுகளை ஓரங்கட்டிவிட்டு, மைதானங்களுக்கு நேரடியாகச் சென்று நண்பர்களுடன் இணைந்து விளையாடலாம். ஆனால், கரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.

குடும்பத்தினருடன் உரையாடுவதும் முக்கியம். நாட்டு நடப்புகள், அவை சார்ந்து நம் மனதில் தோன்றும் எண்ணங்கள், நம்முடைய பிரச்னைகள் உள்ளிட்டவற்றைக் குடும்பத்தினருடனோ அல்லது நண்பர்களுடனோ பகிர்ந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்கான வழிகள் தோன்றும். நாட்டு நடப்புகளும் எளிதில் புரியும்.

பொழுது போகவில்லை எனில் பல புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ள முயல வேண்டும். சமையல், வீட்டுத் தோட்டம் அமைப்பது, ஓவியம், புத்தகம் படிப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் உள்ளன. அவற்றில் நேரத்தைச் செலவிடலாம். பொழுதுபோக்குக்காக இணையவழி விளையாட்டுகளில் ஈடுபடுவது, காலவிரயத்தையும் மேலும் பல இழப்புகளையுமே ஏற்படுத்தும்.

காலத்தை சரியாகப் பயன்படுத்தி இணையவழி விளையாட்டுகளில் சிக்கிக் கொள்ளாமல் தப்பிவிடுவோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com