திருப்பங்களை உருவாக்கும் முடிவெடுக்கும் திறன்!

நாம் எதைச் செய்தாலும், எங்கிருந்தாலும், ஒவ்வொரு நாளும் சிறிய மற்றும் பெரிய எண்ணற்ற பிரச்னைகளை எதிர்கொள்கிறோம்.
திருப்பங்களை உருவாக்கும் முடிவெடுக்கும் திறன்!


நாம் எதைச் செய்தாலும், எங்கிருந்தாலும், ஒவ்வொரு நாளும் சிறிய மற்றும் பெரிய எண்ணற்ற பிரச்னைகளை எதிர்கொள்கிறோம். அவ்வாறு ஒவ்வொரு நாளும் எதிர்கொள்ளும் பல பிரச்னைகளை தீர்ப்பதற்காக சில முக்கிய முடிவுகளை எடுக்கிறோம்.

ஆனால், அந்த முடிவுகள் எதிர்கால இலக்கு நோக்கி எடுக்கப்படுகின்றனவா? அப்போதைக்கு அந்தப் பிரச்னையை தீர்க்கும் நோக்கில் மட்டும் எடுக்கப்படுகிறதா? அதன் பின்விளைவுகள் எவை? என்பதை பெரும்பாலானோர் ஆராய்ந்து பார்ப்பதில்லை. இதனால், பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைப்பதற்குப் பதிலாக புதிய பிரச்னைகள் உருவாகிவிடுகின்றன.

எனவே, எந்த ஒரு முடிவையும் எடுப்பதற்கு முன்பாக பலமுறை ஆழ்ந்து சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். வீட்டில் மட்டுமல்ல, பணிபுரியும் நிறுவனத்தில், வெளியிடங்களில் எல்லாம் ஆழ்ந்து சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.

எவ்வாறு, எந்த அடிப்படையில் சிந்தித்து முடிவெடுப்பது என்பது பிறரின் அனுபவங்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு இருக்க முடியாது. இருக்கும் சூழல்களை ஆய்வு செய்து, அறிவியல் அடிப்படையில் பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டும். அந்த நோக்கத்துடன் முடிவெடுக்க வேண்டும். அதற்கான செயல் திட்டத்தையும் உருவாக்க வேண்டும்.

சிக்கல்களைக் கண்டறிதல்:

எந்தவொரு பிரச்னையையும் தீர்ப்பதில் முதல் கட்டம் அதை அடையாளம் காணுவதாகும். பின்னர் அதனை பல கூறுகளாகப் பிரிப்பது. மிகப்பெரிய, தீர்க்க முடியாததாகத் தோன்றும் பல பிரச்னைகள் கூட, அவை சிறிய கூறுகளாகப் பிரிக்கப்பட்டுவிட்டால் மிகவும் எளிமையாக சமாளிக்க முடிவதாக மாறிவிடும். இவ்வாறு சிறிய கூறுகளாகப் பிரிக்கப்பட்ட சிக்கல்களின் மூலம் அவற்றுக்குத் தீர்வு காண்பதற்கான வழிகளை அடையாளம் காண முடிகிறது.

எப்படித் தீர்வு காண்பது?

பிரச்னையை தீர்க்கும் வழிமுறைகளில் சில நமக்கு விருப்பமானவையாக இருக்கலாம். சில நேரங்களில், சிக்கல்களைத் தீர்க்க பிறரைப் பயன்படுத்த வேண்டியிருக்கலாம். புதிய வழிமுறைகளின் மூலம் சிக்கல்களுக்குத் தீர்வு காண வேண்டியிருக்கலாம்.

தீர்வு காண்பதற்கான வழிமுறைகளைத் தேர்வு செய்வது:

தீர்வு காண்பதற்கான பல்வேறு வழிமுறைகளை உருவாக்கிய பிறகு, அவற்றில் எவற்றை உடனடியாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தீர்மானிக்க வேண்டும். அடுத்து அப்படி தீர்வு காண்பதற்காக நீங்கள் தேர்ந்தெடுத்த வழிமுறை, உண்மையில் செயல்படுகிறதா என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும். ஒருவேளை செயல்படாவிட்டால், தீர்வு காண்பதற்கான வேறு வழிமுறைகளைப் பற்றி உடனே யோசிக்க வேண்டும்.

புதிய பிரச்னைகள்:

தீர்வு காண்பதற்கான உங்கள் வழிமுறைகளைச் செயல்படுத்தும்போது, பல எதிர்பாராத புதிய பிரச்னைகள் தோன்றக் கூடும். புதிய பிரச்னைகள் எவையெல்லாம் தோன்ற வாய்ப்பிருக்கிறது என்று முன்கூட்டியே ஓரளவுக்கு தெளிவாக இருந்தால், புதிய பிரச்னைகள் வந்தால் அவற்றைச் சமாளிப்பதற்கான தயார்நிலையில் மன அளவிலும், செயல் அளவிலும் இருப்போம்.

நாம் மட்டுமே தீர்க்க முடியாது:

எந்தப் பிரச்னையையும் தனி ஒருவர் மட்டுமே தீர்க்க முடியாது. கதாநாயகன் பத்துக்கும் மேற்பட்ட எதிரிகளை அடித்துத் தூக்கி வீசியெறியும்போது அவனைச் சார்ந்தவர்கள் எதுவும் செய்யாமல் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது திரைப்படங்களில் வேண்டுமானால் சாத்தியமானதாக இருக்கலாம். ஆனால் நடைமுறை வாழ்க்கையில் எந்தவொரு பிரச்னையையும் தனி ஒருவர் தீர்க்க முடியாது. பலரின் ஒத்துழைப்போடு, செயல்பாட்டோடுதான் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியும்.

அப்படியானால் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்காகப் பிறரை அணுகுவது, அவருடனான தொடர்புகளை வலுப்படுத்திக் கொள்வதும் அவசியம். பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்கான முடிவெடுப்பதில் பிறரின் கருத்துகளைக் கேட்டு, அவற்றைப் பரிசீலித்துப் பார்த்து, சரியானவற்றை ஏற்றுக் கொண்டு அதன் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டும்.

வாழ்க்கையை மாற்றி அமைக்கும் முடிவெடுத்தல் திறன்:

நவீனமயமாகிவிட்ட இந்த உலகத்தில் நீங்கள் யாராக இருந்தாலும் சரி, சிக்கலைத் தீர்ப்பது அல்லது முடிவெடுப்பது என்பது ஒரு கடினமான செயல்முறையாகும். உங்கள் வாழ்வில் ஒவ்வொரு விஷயத்திற்கும், சிறிய விஷயமோ பெரிய விஷயமோ, நீங்கள் எடுக்கும் முடிவு, உங்களுடைய வாழ்க்கையின் தன்மையை-போக்கை மாற்றி அமைக்கும் சக்தி கொண்டது. எனவே முடிவெடுக்கும் திறனை வளர்த்துக் கொள்வது மிக மிக அவசியம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com