தேவையற்ற மன அழுத்தம்!

""நீங்கள் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறீர்களா?'' என்று கேட்பதற்குப் பதிலாக, இனி ""நீங்கள் நல்ல மனநலத்துடன் இருக்கிறீர்களா?'' என்றுதான் கேட்க வேண்டும்.
தேவையற்ற மன அழுத்தம்!

""நீங்கள் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறீர்களா?'' என்று கேட்பதற்குப் பதிலாக, இனி ""நீங்கள் நல்ல மனநலத்துடன் இருக்கிறீர்களா?'' என்றுதான் கேட்க வேண்டும். அந்த அளவுக்கு மனநலப் பிரச்னையால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்து வருகிறது.

மேலும் உடல்நலம் என்பது மனநலத்தைச் சார்ந்ததாகவும் இருக்கிறது. எனவே, மனதை மகிழ்ச்சியாக வைத்துக்கொண்டால் மட்டுமே உடல்நலமும் நன்றாக இருக்கும்.

முன்பெல்லாம் நடுத்தர வயதினர், வேலைக்குச் செல்வோர், குடும்பப் பொறுப்புகளை சுமந்து கொண்டிருக்கும் முதியோர்களுக்குத் தான் மனநலப் பிரச்னைகள் அதிகம் ஆட்கொள்ளும். ஆனால், இன்றைய நிலையோ தலைகீழாக மாறியுள்ளது.

கரோனா காலத்தில், மக்கள்தொகை அதிகம் கொண்ட இந்தியா "மிகவும் மனச்சோர்வடைந்த நாடு' என்றும் 10-19 வயதுக்குள்பட்டவர்களில் ஆறில் ஒருவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவதாகவும் உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

மேலும், உலகத்தில் இளைஞர்களிடையே ஒவ்வொரு மூன்று விநாடிக்கும் ஒரு தற்கொலை முயற்சியும் ஒவ்வொரு 40 விநாடிக்கும் தற்கொலை செய்துகொள்வது நிகழ்வதாகவும் உலக சுகாதார நிறுவனத் தரவுகள் கூறுகின்றன. இளைஞர்களின் இத்தகைய மனநிலை அடுத்த உலகளாவிய நெருக்கடியாக மாறப் போகிறது என்ற எச்சரிக்கையையே இந்த புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

தொழில்நுட்ப சாதனங்களின் பெருக்கம் மற்றும் அவற்றின் பயன்பாடு, தற்போதைய கல்விச் சூழ்நிலை, எதிர்காலத்தின் நிச்சயமற்ற தன்மை ஆகியவை குறித்தே மாணவர்கள், இளைஞர்கள் மன அழுத்தம் கொள்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கல்லூரி பட்டப் படிப்புகளை முடிக்க, வெளிநாடுகளில் பல்கலைக்கழகங்களில் சேர்க்கை பெற, புதிய வேலைகளை எதிர்நோக்க என பல்வேறு தேர்வுகளை எதிர்கொள்ளக் காத்திருக்கும் இளைஞர்கள், இன்று சிக்கலான மனநிலையிலேயே இருக்கின்றனர். போட்டிகள் அதிகமாகிவிட்ட சூழ்நிலை அவர்களிடையே ஒருவித மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. மன அழுத்தம், சந்தர்ப்ப சூழ்நிலைகள் காரணமாக சிலர் தவறான குறுக்குவழிகளிலும் செல்வதுண்டு.

மன அழுத்தம் ஏற்பட தனிமையும் ஒரு முக்கிய காரணமாகிவிடுகிறது. இக்கட்டான சூழ்நிலைகளில் ஆறுதலும் தேற்றுதலும் மனிதர்களுக்குத் தேவைப்படுகிறது. இளைஞர்களுக்கு இது அதிகமாவே தேவைப்படும்பட்சத்தில் அது கிடைக்காததால் தனிமை, சலிப்பினால் மனச்சோர்வு அடைகின்றனர்.

அடுத்ததாக மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப சாதனங்களின் பயன்பாடும் குழந்தைகள், இளைஞர்களிடையே அதிகரித்துக் காணப்படுவதும் மன அழுத்தத்திற்கு முக்கிய காரணமாகும். "மதுவுக்கு அடிமையாவதுபோல' இன்றைய இளைஞர்கள் மொபைல் போனுக்கும் சமூக வலைதளங்களுக்கும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கும் அடிமையாகிவிடுகின்றனர்.

சமூக ஒன்றிணைப்புக்காக உருவாக்கப்பட்ட தகவல் தொழில்நுட்பம் இன்று பலரும் சமூகத்திலிருந்து விலகவும் காரணமாக இருக்கிறது. இதன் பயன்பாட்டினால் அவர்கள் நிஜ உலகத்திலிருந்து வேறு உலகத்துக்குச் சென்று விடுகிறார்கள்.

இதனால் விளையாட்டு, உடற்பயிற்சி உள்ளிட்ட உடலியக்கம், தூக்கம், ஓய்வு, இதர செயல்பாடுகளில் பெரும் தொய்வு ஏற்படுகிறது. மேலும், ஆரோக்கியமற்ற உணவுகள், சுகாதாரம் உள்ளிட்டவற்றால் உடல்நலப் பிரச்னைகளும் ஏற்படுகின்றன. பல்வேறு காரணங்களால் உடற்
பருமன் ஏற்படுவோரும் அதிகரித்த வண்ணம் உள்ளனர்.

குடும்பத்தின் பொருளாதார நிலை, பெற்றோருக்கும் இளம் வயதினருக்குமான மோதல்கள், அவர்களின் வேலை தொடர்பான அழுத்தங்கள், மனித உறவுகளில் சரியான புரிதலின்மை உள்ளிட்டவை மனநலம் பாதிக்கப்பட காரணங்களாகின்றன.

வீட்டில் இருந்து வேலை செய்யும் பெற்றோர், வீட்டில் இருந்து ஆன்லைன் மூலமாகக் கற்கும் மாணவர்களின் சூழல் என இரு தரப்பினரிடமும் ஒருவித மன அழுத்தம் ஏற்படுகிறது.

என்ன செய்ய வேண்டும்?

மனநலம் என்பது ஒரு முக்கிய நெருக்கடியாக மாறிவரும் சூழ்நிலையில், பிள்ளைகள் மீதான பெற்றோர்களின் பொறுப்புகள் கூடுதலாகின்றன. பிள்ளைகள் மன அழுத்தத்தில் இருந்தால் சரியான நேரத்தில் தலையிட்டு பெற்றோர் அதைச் சரிசெய்ய வேண்டும்.

எக்காரணத்தைக் கொண்டும் பிள்ளைகளுக்கு மன அழுத்தம் ஏற்பட பெற்றோர்களாகிய நீங்கள் காரணமாகிவிடக் கூடாது. பதின்ம வயதில் உடலில் ஹார்மோன் மாறுபாடுகளினால் அவர்களது நடத்தைகளிலும் மாற்றம் ஏற்படும். எனவே, அவர்களிடம் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும்.

உணர்ச்சிபூர்வமான சிக்கல், சமூக சிக்கல் குறித்த உரையாடல்களை மேற்கொண்டு அவர்களுக்கு சரியான தீர்வை அளிக்க வேண்டியது பெற்றோர்களைவிட ஆசிரியர்களுக்கும் அதிகம். பாடத்துடன் கூடிய வழிமுறைகளை வழங்கும் பட்சத்தில் இளைஞர்கள் தெளிவடைவார்கள்.

மாணவர்களிடையே அறிவையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதே மனநலப் பாதிப்பிலிருந்து அவர்கள் விடுபட உதவும். சரியான முறையில் இணையத்தைப் பயன்படுத்த அவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதுடன் சில நேரங்களில் கண்டிப்புடனும் இருக்க வேண்டும். அறிவை விரைந்து பெற வேண்டியதன் அவசியத்தை இளைஞர்கள் உணரும்பட்சத்தில் தவறான பொழுதுபோக்குகளில் அவர்கள் நேரத்தை கடத்த மாட்டார்கள்.

இக்காலத்தில் உடலையும் மனதையும் சமநிலைப்படுத்துவது அனைவருக்கும் அவசியமான ஒன்று. ஆரோக்கியமான உணவுகள், உடற்பயிற்சி, தூக்கம் ஆகிய மூன்றும் இவற்றுக்கு மிக அவசியம். நேரம் கிடைக்கும்போதெல்லாம் மனதைப் புத்துணர்வாக்க உங்களுக்கான நேரத்தை பிடித்தவர்களுடன் செலவழியுங்கள். நண்பர்களுடம் மனம் விட்டு பேசுங்கள்.

வாழ்க்கை வாழ்வதற்கு மட்டும்தான். மனவலிமை இருக்கும்பட்சத்தில் எந்த பிரச்னையையும் எதிர்கொண்டு வெற்றி காணலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com