இணைய வெளியினிலே...

ஆழ்கடலில்நீந்தும் மீன்கள்...துள்ளுவதில்லை.
இணைய வெளியினிலே...

முக நூலிலிருந்து....விற்கப்படாத
காலிப் பானைகள் 
யாசிக்கின்றன...
குயவனின்
பசி போக்கும்
அட்சயப் பாத்திரத்தை.

தாணப்பன் கதிர்


ஆழ்கடலில்
நீந்தும் மீன்கள்...
துள்ளுவதில்லை.

இளமதி


மழை எப்போதும் நிற்பதில்லை...
இடம்தான் மாறுகிறது.
இப்போது
நமக்கிடையில்.

பழநிபாரதி

சுட்டுரையிலிருந்து...

நம் வாழ்க்கையில் ரொம்ப
த்ரில்லிங்கான பயணம்என்பது...
பெட்ரோல் எப்போது தீருமோ என
பயந்து பயந்து பைக்ஓட்டுறதுதான்.

யாழினி அப்பா

எதுவுமே சரியில்லாத போதும்,
எல்லாம் சரி ஆகிவிடும் என்று
நம்புவது தான் வாழ்க்கை.

ஆதர்ஷினி

அலை பாயும் மனதும்,
சட்டென முடிவெடுக்கும் அவசரமும் ,
எப்போதும் நல்ல முடிவைத் தருவதில்லை.

கலை


அறுவை சிகிச்சை இல்லாமல்
ஆண் பெண்ணாக மாறும் ஒரே இடம்,
பேஸ்புக், ட்விட்டர்தான்.
-ஃபேக் ஐடி


தமிழ்

வலைதளத்திலிருந்து...


நான் வாசல் பக்கம் வந்து மழையைப் பார்த்துக் கொண்டிருந்தேன். மழையைப் பார்க்கவும் செய்யலாம், கேட்கவும் செய்யலாம்...
வேறு யாரும் தெருவிலே இல்லை.
நான் எதிர்பார்த்தது மழையில் நனைகிற குழந்தைகளை.
வீட்டிற்குள்ளிருந்து தெருவிற்கு ஓடிவந்து கைகளை உயர்த்தி மழைநடனம் ஆடுகிற குழந்தைகளை.
அந்த நடனத்தில் மழை எப்போது குழந்தைகள் ஆகிறது என்றும், குழந்தைகள் எப்போது மழையாகிறார்கள் என்றும் நமக்குத் தெரியாது. ஆனால், ஆகிவிடுவார்கள்.
அன்று மழை மட்டுமே பெய்து கொண்டிருந்தது.
ஒரு தனித்த பூனைக்குட்டி போல மழை தன் வருத்தமான குரலில் குழந்தைகளையெல்லாம் கூப்பிட்டுக் கொண்டேயிருந்தது. தானியங்கள் இல்லாத இடத்திற்கு குருவிகள் வருவதில்லை. குழந்தைகள் நனையாத தெருவிற்கு மழை வராமல் போகும் சாத்தியங்களும் உண்டு.
ஒரே ஒரு காகிதக் கப்பல் விடுவதற்காகவும், அது சற்று தூரம் போய் சாய்ந்து விழுவதற்காகவுமாவது மழைத்தண்ணீர் தெருவில் ஓட வேண்டும்.
குழந்தைகளை மழையைப் பார்க்க சொல்லுங்கள். நீங்கள் அப்படிச் சொல்லவே வேண்டாம்.
எப்போதும்போல மழை பெய்யும் போதும் நீங்கள் அசையாமல் அமர்ந்து பார்க்கிற தொலைக்காட்சியை அணைத்துவிட்டு உங்கள் வாசலுக்கு அல்லது உங்கள் அடுக்ககங்களின் விளிம்புகளுக்கு எழுந்து வந்து நில்லுங்கள்.
குழந்தைகளும் உங்களோடு வந்து நின்று மழை பார்க்கத்து வங்கிவிடுவார்கள். உங்கள் கைகளை நீட்டி மழைத்தாரையை ஏந்துங்கள்.
ஒரு தலைவாழையின் பக்கக் கன்றுகள் போல உங்கள் குழந்தைகளும் தன்னுடைய கைகளை நீட்டி மழையை ஏந்தும். இதுவரையில் வந்த பண்டிகைகளில் கொளுத்திய மத்தாப்புகளைவிடவும் கூடுதலான அழகுடன் அந்த பிஞ்சு உள்ளங்கைகளில் மழைத்துளி விழுந்து தெறித்து பிஞ்சு வானவில்களை உண்டாக்கும்.
மழையைப் பாருங்கள்.
மழையும் உங்களைப் பார்க்க விரும்புகிறது.

https://vannathasan.wordpress.com/

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com