புதியன செய்தால் வாய்ப்பு!

""சொந்தத் தொழில் செய்ய விரும்பும் இளைஞர்கள் தயங்கிக் கொண்டே இருக்கக் கூடாது.
புதியன செய்தால் வாய்ப்பு!


""சொந்தத் தொழில் செய்ய விரும்பும் இளைஞர்கள் தயங்கிக் கொண்டே இருக்கக் கூடாது. செய்யத் தொடங்கி விட வேண்டும். அதிலிருந்து நிறைய கற்றுக் கொள்ளலாம்'' என்கிறார் வி.அரவிந்தன். கோவையில் புதுவிதமான இனிப்புகளைத் தயாரித்து ஆன்லைன் மூலம் விற்பனை செய்யும் அவர், தனது தொழில் வெற்றிக்கான அனுபவங்களை- வழிகளை நம்மிடம்பகிர்ந்து கொண்டார். அவர் தயாரிப்பது "நனி சைவ இனிப்பு'களை. அவரிடம் பேசியதிலிருந்து...

""நம்நாட்டில் உள்ள உணவுப் பழக்கங்களை சைவம், அசைவம் என்று பிரிப்பார்கள். நாங்கள் தயாரிப்பது "நனி சைவம்' இனிப்புகளை. அதென்ன நனி சைவம்? சைவ உணவு உண்பவர்கள் பிற உயிரினங்களின் இறைச்சியை உண்ணமாட்டார்கள். முட்டைகளைப் பயன்படுத்தமாட்டார்கள்.

ஆனால் பால் அருந்துவார்கள். பால் பொருள்களான நெய், வெண்ணெய் போன்றவற்றைப் பயன்படுத்துவார்கள். தோல் செருப்புகளை அணிவார்கள். பட்டு ஆடைகளை உடுத்துவார்கள். ஆனால் நனி சைவம் என்பது விலங்குகளில் இருந்து பெறப்படும் எந்தப் பொருளையும் பயன்படுத்தாதது.

நாம் விரும்பிச் சாப்பிடும் இனிப்பு வகைகள் எல்லாவற்றிலும் நெய் பயன்படுத்தப்படுகிறது. பால், நெய் போன்ற எதையும் பயன்படுத்தாமல் நாங்கள் தயாரிக்கும் இனிப்புகள் நனி சைவ இனிப்புகளாகும். இந்த இனிப்புகளை இந்திய அளவில் தயாரித்த முதல் நிறுவனம் எங்களுடையதுதான். ஏனென்றால் நாங்கள் நனி சைவ இனிப்புகளை 2017 -இல் தயாரிக்கத் தொடங்கியபோது, நாங்கள் எங்கள் இனிப்புகளைப் பிறவற்றோடு ஒப்பிட்டுப் பார்த்து, எங்களுடைய தயாரிப்பை மேம்படுத்த எந்த நனி சைவ இனிப்பும் மார்க்கெட்டில் கிடைக்கவே இல்லை. அதனால் எங்களுக்கு முன்மாதிரியாக எந்த நிறுவனமும் இல்லை.

எனது படிப்புக்கும் நான் செய்யும் தொழிலுக்கும் தொடர்பில்லை. நான் முதலில் பிபிஏ படித்தேன். கோவை கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் மாஸ்டர்ஸ் இன் பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் படித்தேன். படித்துவிட்டு பெங்களூருவில் உள்ள ஒரு நிறுவனத்தில் இரண்டு ஆண்டுகள் வேலை செய்தேன். ஆனால் அந்த வேலையில் மனம் ஒன்றவில்லை.

என்னுடைய அப்பா "விஜய் ஸ்வீட்ஸ்' என்ற பெயரில் செய்து வந்த இனிப்புத் தயாரிப்புத் தொழில்தான் எனக்கு ஆர்வம் இருந்தது. எனவே வேலையை விட்டுவிட்டு அப்பாவின் தொழிலைச் செய்யலாம் என்று கோவைக்கு வந்துவிட்டேன்.

ஆனால் எல்லாரும் தயாரிக்கும் இனிப்புகளைத் தயாரிப்பதில் எனக்கு ஆர்வம் இல்லை. புதிதாக எதையாவது தயாரிக்க வேண்டும் என்பதால் யாரும் தயாரிக்காத நனி சைவ இனிப்புகளைத் தயாரிக்க முடிவு செய்தேன்.

நான் சிறுவயதில் இருந்த பிராணிகளிடம் அன்பாக இருப்பேன். தெருவில் அடிபட்டு காயத்துடன் கிடக்கும் நாய்கள், பூனைகளுக்கு மருத்துவம் பார்க்க அவற்றை மருத்துவமனைக்குக்கு எடுத்துச் செல்வேன். அதனாலும் நனி சைவ இனிப்புகளைச் செய்யலாம் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது.

நெய்யைப் பயன்படுத்தாமல் இனிப்புகளைச் செய்வது என்று முடிவெடுத்த பிறகு, நெய்க்குப் பதிலாக எதைப் பயன்படுத்துவது என்ற சிக்கல் ஏற்பட்டது. நெய்க்குப் பதிலாக தேங்காய்ப் பால், முந்திரி பால், சோயா பால், வேர்க்கடலைப் பால் ஆகியவற்றைப் பயன்படுத்தினோம். எள்ளையும் பயன்படுத்தினோம். ஆனால் இந்த மாற்றுப் பொருள்களைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் இனிப்புகள் நெய் சேர்த்துத் தயாரிக்கப்பட்ட இனிப்புகளைப் போலவே மிருதுவாகவும், சுவையாகவும், மணமாகவும் இருக்க வேண்டும்.

அதற்காக பலதடவைகள் இனிப்புகளைத் தயாரித்து பிறருக்கு அவற்றை உண்ணக் கொடுத்து, அவர்கள் கூறும் குறைநிறைகளைக் கேட்டு, இனிப்புகளை மேம்படுத்தி, திரும்பவும் அவற்றைப் பிறருக்குக் கொடுத்து என பலமுறை முயற்சிகள் செய்து உருவாக்கியதுதான் எங்களுடைய நனி சைவ இனிப்புகள்.

கேரட் மைசூர் பாகு, பீட்ரூட் மைசூர் பாகு, தேங்காய்ப்பால் மைசூர் பாகு, கருப்பட்டி மைசூர் பாகு, பேரீச்சம்பழம் லட்டு, பூந்தி லட்டு, மோத்தி லட்டு, காஜு கத்லி, சோன்பப்டி என எல்லாவற்றையும் நெய்யைப் பயன்படுத்தாமல் செய்கிறோம். 2019- இல் கோகோலிசியஸ் என்கிற பெயரில் நனி சைவ ஐஸ்க்ரீம்களையும் தயாரித்தேன். கோவிட் காரணமாக ஐஸ் க்ரீம் தயாரிப்பைத் தற்போது நிறுத்தி வைத்திருக்கிறேன்.

இனிப்புகளை ஆன்லைன் மூலமாக விற்பனை செய்கிறேன். நிறைய கொரியர் நிறுவனங்களுடன் தொடர்பு வைத்திருக்கிறோம். ஆர்டர் கிடைத்த 4 நாள்களுக்குள் இந்தியாவின் எந்த மூலையில் உள்ள வாடிக்கையாளர்களுக்கும் எங்களுடைய இனிப்புகள் சென்றடைந்துவிடும். கொரியர் மூலமாக அனுப்புவதால் இனிப்பின் விலை கூடும் என்பது உண்மையே. என்றாலும், இனிப்புக் கடை திறந்து அதற்கு வாடகை கொடுத்து, பணியாளர்களுக்குச் சம்பளம் கொடுத்து நடத்தும் பல செலவுகள் ஆன்லைன் விற்பனையால் குறைந்துவிடுவதால், இனிப்பின் விலை மிக அதிகமாவதில்லை. இனிப்புகளை நான், என் மனைவி ரியா, எனது அப்பா, அம்மா என குடும்பத்தினரே செய்துவிடுவதால் இனிப்பு செய்வதற்காக பணியாளர்களுக்குக் கொடுக்க வேண்டிய சம்பளச் செலவும் இல்லை.

முதன் முதலில் தொழில் தொடங்க நினைக்கும் யாருக்கும் இதை நம்மால் செய்ய முடியுமா என்ற பயம் இருக்கும். சந்தேகம் இருக்கும். அதைப் போக்க ஒரே வழி துணிந்து செயலில் இறங்குவதுதான். சிலர் எதையும் பிளான் பண்ணிச் செய்ய வேண்டும் என்று தொழிலைத் தொடங்காமல் திட்டமிடுவதிலேயே காலத்தைக் கழித்துக் கொண்டிருப்பார்கள். முதலிலேயே திட்டமிடுவதற்குப் பதிலாக, தொழில் தொடங்கி நடத்தியதும் கிடைக்கும் அனுபவங்களில் இருந்து கற்றுக் கொண்டு தொழிலை மேம்படுத்த வேண்டும்.

அடுத்து தொழில் தொடங்கி நடத்த நினைக்கும் ஒருவர் தான் முதலாளி என்ற எண்ணத்துடன் இருக்கக் கூடாது.

நமக்குக் கீழே குறைந்தது 10 பேர் வேலை செய்ய வேண்டும் என்று நினைக்காமல், தொழில் தொடர்பான எல்லா வேலைகளையும் நாமே செய்வதற்குக் தயாராக இருக்க வேண்டும். அப்போதுதான் எந்தப் பிரச்னை வந்தாலும் சமாளிக்க முடியும்.

தொழில் தொடங்கி நடத்துபவர்கள் விளம்பரத்துக்காகப் பணம் செலவழிக்காமல் முகநூல், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி பைசா செலவில்லாமல் விளம்பரம் செய்ய வேண்டும். எனது முகநூல் பக்கத்தில் உள்ள சுமார் 1000 நண்பர்களும் எனது நனி சைவ இனிப்பு தொடர்பான தகவல்களைப் பிறரிடம் பகிர்ந்து கொண்டனர்.

ஒரு வாடிக்கையாளர் தனது வாய் வார்த்தை மூலம் இன்னொரு வாடிக்கையாளரை நமக்குப் பெற்றுத் தருவார், நமது தயாரிப்புகள் தரமானவையாக இருந்தால்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com