தூங்குங்க தம்பி... தூங்குங்க!

தினமும் காலையில் கண்ணாடி முன்பு சிரித்துப்பாருங்கள். உங்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை உணர ஆரம்பித்துவிடுவீர்கள்.
தூங்குங்க தம்பி... தூங்குங்க!


தினமும் காலையில் கண்ணாடி முன்பு சிரித்துப்பாருங்கள். உங்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை உணர ஆரம்பித்துவிடுவீர்கள்.

 - யோகோ ஓனோ

இந்திய குடிமைப் பணிகளுக்கான முதனிலைத் தேர்வு கடந்த வாரம் நடந்து முடிந்திருக்கிறது. இந்த தேசமெங்கும் இலட்சக்கணக்கானோர் பங்கெடுக்கும் இந்தத் தேர்வில் மூன்றடுக்கு தேர்வுக்குப் பிறகு இறுதியில் தேர்ச்சி பெறுவது என்னவோ ஒரு சில நூறு பேர் மட்டுமே. இங்கு கடின உழைப்பு மட்டுமல்ல,  சாதுர்யமான உத்திகள் மற்றும் உடல் ஆரோக்கியம் ஒருவரது வெற்றியில் பெரும்பங்கு வகிக்கின்றது. அப்படியான உடல் ஆரோக்கியத்தைத் தலையாய அம்சமாகத் தாங்கி நிற்கிறது ஒருவரது ஆழ்ந்த உறக்கம். துறை எதுவாகயிருந்தாலும் அதில் வெற்றி பெறுவதற்கான காரணிகளுள் தூக்கம் ஒரு பிரதான சூத்திரம். வாழ்க்கையில் வெற்றி பெற, உழைப்போடு  தூங்கவும் வேண்டும் என்று சொல்லுவது இன்றைய காலகட்டத்தில் அவசியமாகிறது. 

ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றிபெற்று இன்று மாநில தமிழக அரசின் உயர் பொறுப்பில் இருக்கும் அதிகாரி அவர். இந்த தேசத்தின் உச்ச பதவிகளுக்கான இந்த குடிமைப் பணி தேர்வுகளுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்பவர்கள் கையாளும் உத்திகள் மாணவருக்கு மாணவர் வேறுபடுவதோடு, சில நேரங்களில் அவை விசித்திரமானவையாகவும் இருக்கும். இப்படியான கடின, மாறுபட்ட, விசித்திர முயற்சிகளுள் ஒரு சில கலவையான உத்திகள் மட்டுமே மாணவர்களுக்கு வெற்றியைத் தேடித்தரும்.

நாம் இங்கு குறிப்பிட்டு பேசிக்கொண்டிருக்கும் இன்றைய அதிகாரி, தேர்வுகளுக்குப் படித்துக் கொண்டிருந்த மாணவராக இருந்தபோது வழக்கமான காலை உணவுக்கு அறையிலிருந்து ஒரு நாள் வெளியே வராமல் போகவே, ஏனைய மாணவர்கள் பதறிப்போய் அவரது அறைக்குள் எட்டிப் பார்க்க அவர் புத்தகங்களுக்கு இடையே மயங்கிய நிலையில் கிடந்தார். முதலுதவி பரபரப்புகளுக்குப் பின், மருத்துவமனையில் அவரது மயக்கத்திற்கான காரணமாக சொல்லப்பட்ட இரண்டு அம்சங்களில் முதன்மையானது, அவர் சரியாக தூங்காமல் இருந்தது. இரண்டாம் அம்சம் பசிக்கு போதிய உணவு எடுத்துக் கொள்ளாதது. 

தூங்கிக் கெட்டவர்கள் பற்றி கதைகளை நிறையவே நாம் படித்திருப்போம். ஆனால், சரியாகத் தூங்காமல் கெட்டவர்களின் கதையை நாம் அதிகம் பேசுவதில்லை. நம் எல்லாருடைய வாழ்விலும், உலகம் முழுவதும் "அலைக்கற்றை புரட்சி' பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, அதன் அசுரப்பிள்ளைகள்  3ஜி, 4ஜி, 5ஜி, 6ஜி   என்று நம் இளைஞர்களையும், மாணவர்களையும், நம்மில் பலரையும்தான், விடிய விடிய விழித்திருக்க வைத்திருக்கிறது. நமது அண்டவெளியில் பிராண வாயுவுக்குப் பதிலாக, அலைக்கற்றையே வியாபித்து... நாம் அதைத்தான் சுவாசித்துக்கொண்டிருக்கிறோமோ என்று அச்சம் ஏற்படுகிறது.

ஏதாவது  ஓர் இலக்கை நோக்கி பயணிக்க வேண்டிய நெருக்கடியில் இருக்கும் ஒவ்வொரு மாணவரையும், இளைஞரையும் அவர்களது அன்றாடப் பணிகளில் கவனம் செலுத்தவிடாமல் தடுக்கிறது அவர்களது முந்தைய இரவின் தொடுதிரை உறவின் கண்விழிப்புப் படலங்கள். மாணவர்களும், இளைஞர்களும் இன்று குற்றவழக்குகளில் அதிகமாகச் சிக்குவதற்கு பெருங்காரணமாக இருப்பது அலைபேசிகளும், அதன் கொடையாக ஊடறுத்து விளையாடும் தூக்கமின்மையுமே ஆகும். 

ஒரு நாள் தூக்கமில்லை என்றால் அது கண் எரிச்சலில் ஆரம்பித்து, அதுவே இரண்டு நாள்,  மூன்று நாள், நான்கு நாள் என்று தொடர்கதையாகின்ற பட்சத்தில்... கவனமின்மை, மனிதர்களிடையே எரிச்சல், உடல்சோர்வு, பசியின்மை, நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் என்று பெருகி மனநோய் வரைக்கும் இட்டுச் செல்கிறது. நமது உடலின் செல்களைப் புதுப்பிக்க வேண்டிய உதவிகளைச் செய்யும் மந்திர மருத்துவர், தூக்கம். 

ஒருவரது பணி, உழைப்பு, உடல்வாகு, வயது ஆகியவையே ஒருவர் எவ்வளவு நேரம் தூங்கவேண்டும் என்பதை தீர்மானிக்கிறது. எனவே, அந்த ஆற்றல் பெருக்கும் நேரத்தை "செல்'போன்களுடன் மல்லுக்கட்டுவதற்கு செலவிடுவது அழிவுக்கு நாமே தோரணம் கட்டுவதாக அமைந்துவிடும். தூக்கம் இல்லாதவரிடம்  ஊக்கமிருக்காது.  

தூக்கம்... நமது துக்கம், துயரம் அனைத்தையும் மறக்க உதவும் அருமருந்து. தொடுதிரை அலைபேசிகள் தாம் இரவில் நம்மிடமிருந்து தூரமாக இருக்க வேண்டுமே தவிர, தூக்கம் அல்ல. நம் தலையணையில் அமர்ந்து நம்மை தூக்கம் வருடினால் மட்டுமே, நமது விடியலும் வாழ்வும் வளமாக இருக்கும். யோகா,  பிராணாயமம், 

ஆசனம், தியானம்  செய்பவர்கள் குறைந்த நேரம் தூங்கினாலும் சோர்வில்லாமல் புத்துணர்வுடன் இருக்க முடிவதாக மருத்துவ ஆராய்ச்சிகள் சொல்கின்றன. 

நமது மூளையில் "பீனியல் சுரப்பி' என்று ஒரு பட்டாணி அளவிலான சுரப்பி, மிகப்பெரிய உயிர்காக்கும் வேலையை நமக்காகச் செய்துகொண்டிருக்கிறது."மெலடோனின்' என்ற திரவத்தைச் சுரக்கும் இச்சுரப்பிக்கு வெளிச்சம் பெரிய எதிரி. இரவில், இருட்டில் மட்டுமே சுரக்கும் இச்சுரப்பு இரத்தத்தில் கலந்து உடல் முழுவதும் பரவி நமக்குத் தூக்கத்தைத் தருவதோடு, புற்றுநோய் வராமலும் தடுக்கிறதாம். 

தூக்கத்தின், சோம்பலின் தீமை பற்றியே நிறைய கேள்விப்பட்டிருக்கிறோம். மடியின்மை (சோம்பலின்மை) என்று ஒரு அதிகாரத்தையே படைத்திருக்கிறார் 
வள்ளுவர்.

1958 -ஆம் வருடம் எம்.ஜி.ஆரின் நடிப்பில் வெளிவந்த "நாடோடி மன்னன்' திரைப்படத்தில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் எழுதிய "தூங்காதே தம்பி தூங்காதே, நீ சோம்பேறி என்ற பெயர் வாங்காதே' என்கிற பாடல் இன்றும் மிகப் பிரபலம். "நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள், நாட்டைக் கெடுத்ததுடன் தானுங்கெட்டார்' என்று பாடிய நிலை மாறி, இன்றைய காலகட்டத்தில் "தூங்குங்க தம்பி தூங்குங்க' என்று பாடல்கள் எழுத வேண்டிய  அவசியம் கவிஞர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com