கிளர்ந்தெழுங்கள் தோழர்களே! - 20: அறிவொளி இயக்கம்!

தேனீக்கள் தோட்டங்களில்  சுற்றிச் சுற்றி வந்து பூவின் மகரந்தத்திலிருந்து தேனை நுகர்ந்து தேன் கூட்டில் சேமிக்கிறது. சில வேளை 13 கிலோ மீட்டர் வரை அது இடைவிடாது பறந்து தேன் சேகரிக்கிறது.
கிளர்ந்தெழுங்கள் தோழர்களே! - 20: அறிவொளி இயக்கம்!

தேனீக்கள் தோட்டங்களில்  சுற்றிச் சுற்றி வந்து பூவின் மகரந்தத்திலிருந்து தேனை நுகர்ந்து தேன் கூட்டில் சேமிக்கிறது. சில வேளை 13 கிலோ மீட்டர் வரை அது இடைவிடாது பறந்து தேன் சேகரிக்கிறது. சராசரி ஒரு மணி நேரத்தில் பன்னிரண்டு கிலோ மீட்டர் வேகத்தில் தனது பணியை இடைவிடாமல் செய்கிறது. ஒரு தேன் கூட்டுக்குள் சுமார் முப்பதாயிரம் தேனீக்கள், குடியிருப்பு குழாமாக சேகரித்த தேனை கூட்டில் நிரப்புகின்றன. பல இடங்களிலிருந்து திரட்டி ஓரிடத்தில் சேர்க்கப்பட்ட அறுஞ்சுவையில் மதுரமான சுவை! 

""சுற்றுப்புறச் சூழல் பாதுகாவலர்கள் தேனீக்களும் பறவைகளும்'' என்கிறார் இயற்கை காப்பாளர்,  பறவையிலாளர் சலீம் அலி. 

""வனங்களை அழிக்கும் மனித இனம் இயற்கையின் எதிரி. மேல் பூச்சாக அவ்வப்போது மரங்கள் நடும் விழா நடத்தப்படுகிறது. ஆனால் அது தேனீக்களும் பறவைகளும் தாவர வகைகளைப் பரப்புவதில் இம்மியளவும் இல்லை. தேனீக்களும் பறவைகளும் அழிந்தால் மனித குலமே அழிந்து விடும்'' என்கிறார் சலீம் அலி. 

புத்தகாலயம் தேன் கூடு போன்றது. சுவையான சிந்தனைகளை உள்ளடக்கிய புத்தகங்களின் சங்கமம். நன்கு பராமரிக்கப்படும் நூலகங்கள் ஒரு நாட்டின் பண்பாட்டையும் கலாசாரத்தையும் பிரதிபலிக்கும். தேனீக்கள் தேனை சேகரிப்பது போல் தரமான புத்தகங்களை பல தரப்பட்ட படைப்பாளிகளின் புத்தகங்கள் நூலகங்களில் இடம் பெற வேண்டும். தேனீக்கள் இயற்கையைப் பாதுகாப்பது போல், நூலகங்கள் மனிதனின் அறிவை செப்பனிடுகின்றன;  சமுதாய நல்லுணர்வைப் புகட்டுகின்றன. 

பாரத நாட்டில் பல சமஸ்தான அரசர்கள் அக்காலத்தின் நூல்களை ஓலைச் சுவடிகளில் பாதுகாத்தனர். பாடலிபுத்திரத்தில் நாளந்தா பல்கலைக்கழகம் உலகிலேயே மிகத் தொன்மையானது.  ஐந்தாம் நூற்றாண்டு குப்த மன்னர் குமாரகுப்தாவால்  உருவாக்கப்பட்டு  ஹர்ஷவர்தன் மற்றும் பல மன்னர்களால் நன்றாகப் பேணப்பட்டது. அந்த அறிவுக்கூடத்தில் பல கலைகளுக்கான அரிய ஏடுகள், ஓலைச்சுவடிகள் பராமரிக்கப்பட்டன. வெளி நாடுகள் முக்கியமாக சீனா, கம்போடியா, கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து வந்து மாணவர்கள் இங்கு பயின்றனர்.  போட்டி நுழைவுத் தேர்வு வைத்து மாணாக்கர்கள் தெரிவு செய்யப்பட்டனர் என்பது இந்த பல்கலைக்கழகம் மீது அறிஞர்கள் வைத்திருந்த மதிப்பைப் பறைசாற்றுகிறது. 

நாளந்தாவின் சிறந்த நூலகம் பல்கலைக்கழகத்தின் மதிப்புக் கூட்டலுக்குக் காரணம். ஆனால் மொகலாய படையெடுப்பில் அழிந்தது. நூலகம் மட்டும் ஒன்பது மாதங்கள் எரிந்து தீக்கிரையானது. கேம்ப்ரிட்ஜ், ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகங்கள், நூலகங்கள் பத்தாம், பன்னிரண்டாம் நூற்றாண்டில் தொடங்கப்பட்டு தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. அத்தகைய பெருமை நாளந்தா பெற்றிருக்கும், தீய சக்திகளின் அழித்தொழிப்பு இருந்திராவிட்டால்!

நாளந்தாநூலகம், பல்கலைக்கழகத்தை மீட்டெடுக்க இந்திய அரசு 2010 -ஆம் ஆண்டு நாளந்தா பல்கலைக்கழக  சட்டத்தை நிறைவேற்றியது. முதல் துணை வேந்தராக நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் நியமிக்கப்பட்டார். சீனா, சிங்கப்பூர் அமெரிக்கா பல்கலைக்கழகத்திற்கு நிதியுதவி அளித்துள்ளனர். பழைய தரத்திற்கு இணையாக நாளந்தா உருவாக அரசியலுக்கு அப்பாற்பட்டு முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். 

சிறந்த நூலகங்களை நிறுவ எல்லா நாடுகளும் முயற்சி எடுக்கின்றனர். நூலகம் என்ற அர்த்தமுடைய "லைப்ரரி' என்ற வழக்கில் உள்ள ஆங்கிலச் சொல் "லைப்ரேரியம்' என்ற இலத்தீன் மொழியிலிருந்து பெறப்பட்டது. இதன் பொருள் நூற்பேழை. விலை உயர்ந்த பொருட்களின் இருப்பிடத்தைப் பேழை என்கிறோம். நூல்களின் இருப்பிடம் அந்த உயர்ந்த பெயரைப் பெற்றது நூல்களின் சிறப்பை உணர்த்துகிறது.

உலகிலேயே சீனாவில் தான் அதிகமாக 51, 311 நூலகங்கள் உள்ளன. அடுத்து ரஷ்யாவில் 46,000, மூன்றாவதாக இந்தியாவில் 29,800 நூலகங்கள். பொது நூலகங்கள் மக்களின் அறிவை வளர்க்க உலக நடப்புகள், கலாசாரத்தை தெரிந்து கொள்ள இன்றியமையாதவை. 

தமிழ்நாட்டில் மொத்தம் 19 நூலக மாவட்டங்கள் உள்ளன. அந்த மாவட்டங்களில் 1545 கிளை நூலகங்களும் ஒன்பது மொபைல் நூலகங்கள் 1069 பகுதி நேர நூலகங்கள் இயங்குகின்றன. 

தமிழ்நாட்டில் 1948 -இலேயே மதராஸ் நூலக சட்டம் இயற்றப்பட்டு அமலுக்கு வந்தது. நூலகங்களை அமைப்பது, நிர்வகிப்பது, அந்தந்தப் பகுதி மக்கள் நூலக நிர்வாகத்தில் பங்கு போன்ற ஷரத்துக்கள் அடங்கிய முற்போக்கு சட்டம் மற்ற மாநிலங்களுக்கு முன் உதாரணமாக அமைந்தது. அதன் அடிப்படையில் மற்ற  மாநிலங்களும் நூலக நிர்வாகச் சட்டங்களை இயற்றின.  

சமுதாயத்தில் அறிவாளிகளின் சிந்தனைகள் மூலம் விளையும் அறிவுக் களஞ்சியம் தனி நபர் சொத்தல்ல; அது பொதுச் சொத்து, எல்லாரும் அறிந்து வளர்ச்சி பெற வழி வகுக்க பொது நூலகங்கள் ஒரு பாலமாக அமைய வேண்டும் என்பது தான் நூலகச் சட்டங்களின் முக்கிய நோக்கம்.

சுதந்திர இந்தியாவின் முதல் பொது நூலகம் சென்னையில் உள்ள கன்னிமாரா நூலகம்  ஆகும். பல பிரபலங்கள், உயர் அதிகாரிகள், நடுநிலை பிறழாத அரசியல் வாதிகள்  அவர்தம் சிந்தனையை செதுக்கிய  நூலகம் என்ற பெருமை பெற்றது. இந்திய அரசு 1954- இல் இயற்றிய நூலக சட்டப்படி இந்தியாவில் யார் நூல் எழுதினாலும், கல்கத்தா தேசிய நூலகம், சென்னை கன்னிமாரா, மும்பை ஆசியவியல் நூலகங்களுக்கு நூற்படியை அனுப்ப வேண்டும். 

கேரளாவிலும் ஒரு தொன்மையான நூலகம் திருவனந்தபுரத்தில் உள்ளது. திருவாங்கூர் மன்னர் சுவாதி திருநாள் அவர்களால் 1829 -ஆம் வருடம் நிறுவப்பட்டது. பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தை உருவாக்கிய சர் ஹான்ஸ் ஸ்லோன் பேரனும் திருவாங்கூர் நிர்வாக ஆலோசகர் எட்வர்ட் காடகானின் முழு பொறுப்பில் நூலகம் சிறப்பாக அமைக்கப்பட்டது.

நூலகங்கள் சார்ந்த சட்டங்கள் இயற்றப்படவும், நிர்வாக அமைப்புகள் சார்ந்த தரவுகள் உருவாகக் காரணமாக இருந்தவர்  எஸ்.ஆர். ரங்கநாதன். நூலகங்களின் தந்தை என்று எல்லாராலும் போற்றப்படுபவர். 

நூலகப் படிப்பு என்ற கலையை உருவாக்கியவர். ஆராய்ச்சி முறைகளை வகுத்து அவர் ஆற்றிய  அரும் பணிகள் உலக அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.  

நூலக விஞ்ஞானம் என்பது நூலகங்கள், அவற்றின் பொருளாதாரக் கட்டமைப்பு, புத்தகங்களின் வரிசைக் கிரமம் , தகவல் தொடர்பு வகைகள் ஆகிய பல பொருண்மைகள், ஆளுமைகளை உள்ளடக்கிய பிரதான படிப்பாக உலக அளவில் உருவாக   எஸ்.ஆர்.ரங்கநாதனின் ஆராய்ச்சி அடிப்படையாக அமைந்தது.

நூலகங்களில் புத்தகங்களின் வரிசை கிரமத்தை ஜெர்மானியர் மார்டின்ஷெரட்டிங்கர் முதலில் வகுத்தார். அதற்கு பிறகு பலர் அதை விரிவுபடுத்தினர். அதில் பிரதான பங்கு எஸ்.ஆர்.ரங்கநாதன் வகுத்த வழிமுறைகள். 

தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்த ரங்கநாதன் பிறந்தது சீர்காழியில். மெட்ராஸ் கிருஸ்துவ கல்லூரியில் கணிதத்தில் பட்டப் படிப்பு முடித்து ஆசிரியர் பணிக்கு மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் விண்ணப்பித்தார். ஆனால் அவருக்குக் கிடைத்ததோ நூலக நிர்வாகப் பொறுப்பு! முதலில் வேறு வழியில்லாமல் பணியில் சேர்ந்தாலும் நூலக நிர்வாக மேல் படிப்பிற்கு இங்கிலாந்திற்கு செல்லும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி தனது கணித அறிவை வைத்து நூலகத்திற்கு வரும் புத்தகங்களை வரிசைப்படுத்துதல்,  தகவல் தொடர்புகளைப் பகிரும் பரிமாணங்களுக்கான நூதன விதிமுறைகளை வகுத்து பல மேல் நாட்டு அறிஞர்களின் பாராட்டுதலைப் பெற்றார். அவர் வகுத்த "கலோன்' முறை இப்போது உலகில் உள்ள எல்லா நூலகங்களாலும்  நடைமுறைப் படுத்தப்படுகிறது. 

ஒரு பணியை எடுத்துக் கொண்டால் "வேலைப் பித்து' பிடித்தவர் போல் அயராது உழைப்பவர் என்ற பெயர் எடுத்த  எஸ்.ஆர்.ரங்கநாதனின்   வாழ்க்கை, இளைஞர்களுக்கு ஒரு வழிகாட்டி.   எஸ்.ஆர்.ரங்கநாதன் லைப்ரரி விஞ்ஞான ஆராய்ச்சியில் இருந்த போது அவருக்குத் திருமணம் நடந்தது. முற்பகலில் திருமணம் முடித்த கையோடு பிற்பகல் பணிக்கு வந்து தனது ஆராய்ச்சியைத் தொடர்ந்தார் என்பது அவரது அயராத ஈடுபாட்டிற்கு ஓர் எடுத்துக்காட்டு.

உலக அளவில் பல பாராட்டுகளும் கௌரவங்களும் கிடைத்தாலும் மதராஸ் பல்கலைக்கழக நிர்வாகத்தோடு  சில முரண்பாடுகளால் தமிழகத்தை விட்டு பனாரஸ், தில்லி பல்கலைக்கழகங்களில் பேராசரியராகப் பணியாற்றினார்.

1931 -ஆம் வருடம் அவர் எழுதிய  லைப்ரரி விஞ்ஞானத்தில் ஐந்து விதிகள் நூலக உலகில் பைபிளாக கருதப்படுகிறது.

நூலகங்களில் தமிழ் புத்தகங்கள் அலங்கரிக்க காரணமாக இருந்த "தமிழ் தாத்தா' என்று எல்லாராலும் அழைக்கப்படுகிற  உ.வே.சாமிநாதையரை மறக்கலாகாது. கும்பகோணம் அருகில் உத்தமதானபுரத்தில் பிறந்த சாமிநாதன் இளம் வயதில் தமிழ் அறிஞர் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் தமிழ் பயிலும் பாக்கியம் பெற்றார். திருவாவாடுதுறை சன்னிதானத்தின் அருளாசியோடும், பேராசிரியர் தியாகராஜ செட்டியாரின் வழிகாட்டுதலில் தமிழ் இலக்கியத்தின் பாரம்பரியத்தைக் கற்றறிந்தார். செட்டியாரின் ஆதரவில் கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியில் பேராசிரியராகப் பணி புரிந்தார். அப்போது சேலத்தில் முன்சீப்பாக இருந்து கும்பகோணத்திற்கு மாற்றலில் வந்த ராமசாமி முதலியாரோடு நட்பு ஏற்பட்டது. அதுவே மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

அந்தக் காலத்தில்   பாரபட்சமின்றி ஜாதி பேதமின்றி தமிழன்னைக்குச் சேவை செய்தார்கள். புராதன தமிழ் நூல்களை தொகுத்து அச்சிட வேண்டிய முக்கிய பணியினை சாமிநாதையர் மேற்கொள்ள வேண்டும் என்று ராமசாமி தொடர்ந்து வற்புறுத்தி வந்தார். சீவக சிந்தாமணி நூலின் எழுத்துப் பிரதியையும் அளித்தார். அதில் தொடங்கிய சாமிநாதையரின் தமிழ்ப் பணி ஓய்வில்லாமல் தொடர்ந்தது. சீவக சிந்தாமணி நூலை முதலில் 1887-ஆம் ஆண்டு அச்சிட்டு வெளியிட்டார். அதன் பிறகு சங்க இலக்கியங்கள் தேடலில் முழுமையாக ஈடுபட்டார். எங்கெல்லாம் ஓலைச் சுவடிகள் உள்ளன என்பதைக் கண்டறிந்து மடிப்பிச்சை  கேட்பது போல அவற்றைப் பெற்று அரிய சங்க காலத் தமிழ் இலக்கியங்களை தமிழ் கூறும் நல்லுலகிற்கு சமர்ப்பித்தார். சிலப்பதிகாரம், மணிமேகலை, புறநானூறு ஆகிய இலக்கியங்கள் மக்களிடையே பேராதரவு பெற்றன. பல இல்லங்களிலும் மடங்களிலும் முடங்கிய அரும் காப்பியங்கள் உயிர் பெற்று நூலகங்களை இப்போது அலங்கரிக்கின்றன. 

"கொண்டதெலாம் கொண்டதெலாம் கொண்டு கொண்டு மேலும் கொள்வதற்கே இடம் கொடுத்துக் கொண்டு' என்ற வள்ளலார்  பாடலின்படி, தமிழர்களின் தொன்மையான நாகரிகத்தை உணர்த்தும் சங்க இலக்கியங்களில் மேலும் ஆராய்ச்சி  மேற்கொள்வதற்கு அரிய பல விடயங்கள் அட்சய பாத்திரம் போல் ஊற்றெடுக்கின்றன.

நன்றி மறவாத தமிழ் மக்கள் அவரது சேவையை இளைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். அவர் எழுதிய "என் சரித்திரம்' நூலின் ஓர் அத்தியாயமாவது பள்ளி பாடப் புத்தகத்தில் இடம் பெற வேண்டும்.

பல மாநிலங்கள் பொது நூலகங்களை சிறப்பாக மேம்படுத்தியுள்ளன. அதற்கான வரிகளை அரசு விதிக்கிறது. ஆனால் அந்தத் தொகை உரிய நேரத்தில் நூலக மேம்பாட்டிற்கு மாற்றம் செய்யப்படுவதில்லை. நூலக ஆளுமையில் முன்னோடியாக இருந்தது தமிழகம் . ஆனால் இப்போது நூலக நிர்வாகத்தில் பல பிரச்னைகள். முழுமையான இயக்குநர் இல்லாமல் அறிவொளி இயக்கம் முடங்கியிருக்கும் நிலை மாற வேண்டும். புதிய இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்க வேண்டும். புத்தகங்களை அரசு கொள்முதல் செய்தால் தான் புத்தக வெளியீட்டாளர்கள் மேலும் புத்தகங்களை அச்சிட முன் 
வருவார்கள். 

சட்டமன்றத்  தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டாய செலவினத்தில் நூலக மேம்பாடு மற்றும் அரசால் தெரிவு செய்யப்பட்ட புத்தகங்களை வாங்கி நூலகங்
களுக்கு வழங்கிட ஆணை பிறப்பித்தால் நூலகங்களின் பராமரிப்பு மேம்படையும். படைப்பாளிகளுக்கும் உந்துதலாக இருக்கும்.

அரங்கின்றி வட்டாடியற்றே நிரம்பிய நூலின்றிக் கோட்டி கொளல் என்ற வள்ளுவர் இடித்துரையை நினைவில் கொண்டு நூலகங்களை முழுமையாகப் பயன்படுத்துவோம். 

சென்ற வார கேள்விக்குப் பதில்: நோபல் பரிசு வேதியியல்,இயற்பியல், இலக்கியம், உலக அமைதி, மருத்துவம் ஆகிய ஐந்து பிரிவுகளுக்கு வழங்கப்படு
கிறது. பொருளாதாரத்திற்கு 1968 ஆம் வருடத்திலிருந்து நோபல் பரிசில் சேர்ந்திராத தனி பரிசும் அறிவிக்கப்படுகிறது. 

இந்த வாரக் கேள்வி: தேசிய நூலக தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?

(விடை அடுத்த வாரம்)

கட்டுரையாளர்: மேனாள் காவல்துறைத் தலைவர்
மேனாள் சட்டமன்ற உறுப்பினர்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com