பழகுவதற்கும் எல்லை உண்டு!

ஒவ்வொருவரும் தனிமனிதர்கள்தான் என்றாலும் பிறர் இல்லாமல் யாரும் வாழ முடியாது. தனி மனிதர்கள் சமூகத்தின் அங்கமாக இருக்கிறார்கள். சமூகமின்றி தனி மனிதனாக யாரும் வாழ முடியாது. 
பழகுவதற்கும் எல்லை உண்டு!

ஒவ்வொருவரும் தனிமனிதர்கள்தான் என்றாலும் பிறர் இல்லாமல் யாரும் வாழ முடியாது. தனி மனிதர்கள் சமூகத்தின் அங்கமாக இருக்கிறார்கள். சமூகமின்றி தனி மனிதனாக யாரும் வாழ முடியாது. 

ஆனால் சமூகத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு வாழ்வதிலும், பல சிக்கல்கள் எழுகின்றன.  

பிறருடன் பழகும்போது ஒவ்வொருவருக்குமான எல்லைகளை வகுத்துக் கொண்டு பழக வேண்டியிருக்கிறது. சூழ்நிலையின் மாற்றங்களுக்கு ஏற்ப இந்த எல்லைகளிலும் மாற்றம் செய்ய வேண்டியிருக்கிறது. 

இளைஞர்கள் சிலர் எல்லாரிடமும் நன்றாகப் பழகும் தன்மை உடையவர்களாக இருப்பார்கள்.  வீட்டில் இருப்பதை விட வெளியே ஊர்சுற்று வதையே எப்போதும் வழக்கமாக்கிக் கொண்டிருப்பார்கள். அவர்களைத் தனி ஆளாக யாரும் பார்க்க முடியாது. எப்போதும் நான்கைந்து பேருடனேயே இருப்பார்கள். 

ஆனால் சிலரோ  யாரிடமும் முகம் கொடுத்துப் பேசமாட்டார்கள். பழகமாட்டார்கள்.  தங்களுடைய கருத்துகளை, உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளமாட்டார்கள்.  இந்த இரண்டு நிலைகளில் எது நல்லது? எது கெட்டது? என்று யோசிப்பதைவிட,  சமூகத் தொடர்பை ஒருவர் எந்த அளவுக்கு வைத்துக் கொள்ள வேண்டும் என்று யோசிப்பதே சிறந்தது. 

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும் என்கிறது ஒரு முதுமொழி. அதற்கு ஏற்ப இந்த சமூகத்துடன் பழகும்போது அதற்கும் ஓர் எல்லையை வகுத்துக் கொண்டு பழக வேண்டும் என சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அளவுக்கு அதிகமான சமூக தொடர்புகளும்  கூட  நமக்கு தீங்கு விளைவிக்கலாம் என்கின்றன சில ஆராய்ச்சி முடிவுகள். 

அளவுக்கு அதிகமான  சமூகத்தொடர்பு பல சமயங்களில்   அதிக மன அழுத்தம் ஏற்பட காரணமாகி விடுகிறது; சில சமயங்களில் இழப்புக்களைக் கூட ஏற்படுத்திவிடுகிறது என்கின்றன சில ஆய்வுகள். சமூகத் தொடர்பால் ஏற்படும் பிரச்னைகளைச் சமாளிக்கும் வகையில் சமூகத் தொடர்பிற்காகச் செலவழிக்கும் நேரத்தை சரியாகக் கணக்கிட்டு அதற்கான எல்லைகளை வகுக்க வேண்டும் என்கின்றனர் உளவியல் ஆய்வாளர்கள். 

அப்படி என்றால் தனிமைதான் நல்லதா?  அல்லது சமூகத்தை விட்டு விலகி இருப்பது நல்லதா? என்று யோசிக்க வேண்டாம். அப்படி இருப்பது ஆரோக்கியத்திற்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். சமூகத்துடன் நல்லுறவு வேண்டும். அது அளவோடு இருக்க வேண்டும். அப்படி இருந்தால் எந்தப் பிரச்னையும் வராது. 

ஐரோப்பாவை சேர்ந்த ஓர் ஆய்வு நிறுவனம் 2002 முதல் 2018 வரை சுமார் 3 லட்சத்து 92 ஆயிரத்து 195 பேரிடம் சமூகத் தொடர்பு குறித்த ஆய்வை மேற்கொண்டது. அவர்களிடம் சமூகத்தில் உள்ள நண்பர்கள், உறவினர்கள், உடன் பணியாற்றுபவர்கள் உள்ளிட்டோருடன் உள்ள தொடர்பு, எத்தனை முறை சந்திக்கிறார்கள், அவர்களின் உடல்நலம் குறித்த விவரங்கள் உள்ளிட்டவை சேகரிக்கப்பட்டன. தொடக்கத்தில் மாதம்தோறும் சில முறை தொடர்பில் இருந்தவர்களில் உடல் ஆரோக்கியம் அதிகரித்ததும், அதன்பின் வாரத்தில் சில முறை தொடர்பில் ஈடுபட்டபோது அந்த அளவிற்கு உடல் ஆரோக்கியம்  முன்னேறாததும் தெரிய வந்தது. 

அதேபோல் ஜெர்மனி சேர்ந்த நிறுவனம் ஒன்று  49 ஆயிரத்து 675 பேர்களிடம் சமூகத் தொடர்பு குறித்து ஆய்வு மேற்கொண்டது அதில் தினமும் அதிக நேரம் சமூகத்துடன் தொடர்பு கொள்பவர்களுக்கு இறப்பிற்கான சாத்தியக்கூறு அதிகம் என தெரிய வந்துள்ளது. வலுவான சமூக உறவுகளைக் கொண்டவர்கள் தங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் உடற்பயிற்சிகள் செய்வதற்கும், நல்ல சத்தான உணவை உண்பதற்கும், தேவையான மருத்துவ ஆலோசனைகள் பெறுவதற்கும் அதிக வாய்ப்பு உள்ளது. அதே சமயம் சமூகத்துடன் இணையாமல் தனிமையில் இருப்பவர்களால் இத்தகைய நன்மைகளைப் பெற முடியாமல் போய்விட வாய்ப்புகள் உள்ளதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.

இப்படி அதிகமான நேரத்தை சமூகத் தொடர்புக்காகச் செலவிடும்போது அது மிகப் பெரும் மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது என ஆய்வுகள் தெரிவித்தாலும் கூட , பலர் சமூகத் தொடர்புகளை விட்டுவிட முடியாமல் தவிக்கின்றனர்.

பணிச்சூழல் கூட இதற்குக் காரணமாக இருக்கலாம்.  சில நிறுவனங்களின் ஊழியர்கள் தங்களின் வேலை காரணமாக இந்த சமூகத்துடன் அதிக நெருக்கத்தை காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். இதன் காரணமாக அவர்கள் நிச்சயம் பாதிக்கப்படக் கூடும். அத்தகையோர் இந்த ஆய்வு முடிவுகளை கண்டிப்பாக கவனத்தில் கொள்ள வேண்டும். 

அப்படி என்றால் என்ன தான் இதற்கு தீர்வு என்றொரு கேள்வி எழத்தான் செய்யும். வேலை காரணமாக சமூகத்துடன் அதாவது நண்பர்கள், உறவினர்கள், உடன் பணிபுரிபவர்கள், வணிகர்கள், விற்பனைப் பிரதிநிதிகள் என இருபத்தி நான்கு மணி நேரமும் பிஸியாக இயங்கிக் கொண்டிருப்பவர்கள் இங்கு அதிகம். 

அவர்கள் சமூகத் தொடர்புக்காக செலவழிக்கும் நேரத்தில் எதைக் குறைக்க முடியும் என்று யோசித்து அந்த நேரத்தை தியானம் செய்யவோ, வீட்டில் தனிமையில் இருந்தோ சமநிலைப்படுத்தலாம். அதற்கு வாய்ப்பில்லை என்றால் குறிப்பிட்ட நேர இடைவெளியில் பணிச்சூழலில் உருவாக்கிக் கொள்ள முயல வேண்டும்.

"எல்லாம் கடந்து போகும்' என்று இதையும் கடந்து விடாமல், உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த சமூகத் தொடர்பை தேவையான அளவுக்கு மட்டுமே பேண வேண்டிய அவசியம் இப்போது ஏற்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com