அறிமுகப்படுத்திக் கொள்வது... ஒரு கலை!

நேர்காணல்கள் அனைத்திலும் பெரும்பாலும் எழுப்பப்படும் முதல் கேள்வி - "டெல் மி அபெüட் யுவர்செல்ஃப்' (உங்களைப் பற்றி கூறுங்கள்).
அறிமுகப்படுத்திக் கொள்வது... ஒரு கலை!


நேர்காணல்கள் அனைத்திலும் பெரும்பாலும் எழுப்பப்படும் முதல் கேள்வி - "டெல் மி அபெüட் யுவர்செல்ஃப்' (உங்களைப் பற்றி கூறுங்கள்). இதுதான் முதல் கேள்வி என்று நேர்காணலுக்குச் செல்லும் அனைவருக்குமே தெரியும். அதற்கான பதிலை முன்கூட்டியே பலர் தயாரித்து வைத்திருப்பார்கள். 

அந்த பதிலை ஏற்கெனவே நண்பர்கள் பலரிடம் கூறி எப்படி இருக்கிறது என்ற அது குறித்த கருத்தையும் தெரிந்து கொண்டிருப்பார்கள்.  ஆனால், தங்களைப் பற்றி அவர்கள் கூறுவது எதிரில் உள்ளவர்களைக் கவர்கிறதா என்பது அவர்களுக்குத் தெரியாது. 

நம்மைப் பற்றி மற்றவர்களுக்குத் தோன்றும் முதல் அபிப்ராயமே என்றும் நிலைத்திருக்கும். எனவே, வேலைக்காக நம்மை நேர்காணல் செய்பவர்களுக்கு  நம்மைப் பற்றி நல்ல அபிப்ராயம் தோன்ற வேண்டுமானால், நம்மை 
எப்படி அறிமுகம் செய்து கொள்ள வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். 

நம்மை அறிமுகப்படுத்திக் கொள்வது என்பது, நம்மைப் பற்றித் தெரியாதவர்களிடம் நம்மைப் பற்றி எடுத்துரைப்பதே. எனவே, அறிமுகப்படுத்திக் கொள்வதற்கு அதிக அச்சம் கொள்ளத் தேவையில்லை. நாம் யார், நம் பொழுதுபோக்குகள் எவை, நம்மிடம் உள்ள நல்ல குணங்கள் எவை, பணிச்சூழலுக்கு ஏற்ற வகையில் நமக்குள்ள தகுதிகள் எவை என்பனவற்றை எடுத்துரைத்தாலே போது மானது. 

அறிமுகப்படுத்திக் கொள்வது என்பது ஒவ்வொரு இடத்தைப் பொருத்தும் மாறுபடும். நேர்காணலில் பேசுவதைப் போன்று கருத்தரங்கில் அறிமுகப்படுத்திக் கொள்ள முடியாது. எனவே, எந்த இடத்தில் எவ்வாறு நம்மை அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் இளைஞர்கள் அதிக கவனம் 
செலுத்த வேண்டும். 

நேர்காணலுக்குச் செல்லும்போது சிறிய பதற்றம் காணப்படுவது இயல்பே. ஆனால், நேர்காணல் அறைக்குள் சென்றவுடன் பதற்றம் அனைத்தும் தணிந்து இயல்புநிலைக்குத் திரும்பிவிடுவோம். எனவே, பதற்றம் குறித்து அச்சப்படத் தேவையில்லை. நேர்காணல் அறைக்குள் நுழைந்தவுடன், அங்கிருப்பவர்களிடம் "வணக்கம். இந்நாளில் தங்களைச் சந்திப்பதற்கு நன்றி' என்று கூறலாம். 

இத்தகைய முதல் அபிப்ராயங்கள் நம்மைப் பற்றிய நன்மதிப்பை நேர்காணல் நடத்துபவர்களிடம் அதிகரிக்கும். 

அவர்களிடம் கைகுலுக்கும்போது உங்களது மனதில் உள்ள தைரியம் வெளிப்பட வேண்டும். சோர்ந்து கிடப்பவர்களைப் போல கைகுலுக்கக் கூடாது. கைகுலுக்கும்போதே உங்களைப் பற்றிய நேர்மறை எண்ணம் அவர்கள் மனதில் தோன்ற வேண்டும். 

அதையடுத்து, உங்களைப் பற்றிய அறிமுகத்தைத் தொடங்கலாம். உங்கள் படிப்பு குறித்த தகவல்கள், பணிக்குத் தேவையான திறன்கள், ஏற்கெனவே பணியாற்றிய அனுபவங்கள், புதிய நிறுவனத்தின் மீதுள்ள எதிர்பார்ப்புகள் உள்ளிட்டவற்றை அறிமுகத்தின்போது கூறலாம். முடிந்தால், நேர்காணல் நடத்தும் நிறுவனத்தின் கொள்கைகள் குறித்து வலைதளம் வாயிலாகத் தெரிந்துகொண்டு அவற்றைப் பற்றியும் அறிமுகத்தில் குறிப்பிட்டுப் பேசலாம். இவ்வாறு அறிமுகப்படுத்திக் கொள்வது நேர்காணல் நடத்துபவர்களிடம் உங்களைப் பற்றிய சிறந்த அபிப்ராயத்தை ஏற்படுத்தும். 

கல்லூரிகள், தொழில் நிறுவனங்களில் நடைபெறும் கருத்தரங்கு, கூட்டம் உள்ளிட்டவற்றில் பங்கேற்கும்போதும் உங்களைப் பற்றி அறிமுகம் செய்து கொள்வது முக்கியம். 

அக்கருத்தரங்கில் பங்கேற்கும் பலருக்கு உங்களைப் பற்றிய விவரங்கள் ஏற்கெனவே தெரிந்திருந்தாலும், கருத்தரங்கைத் தொடங்கும் போது உங்கள் பெயர், 

கல்லூரியில் என்ன படிக்கிறீர்கள் அல்லது எந்த நிறுவனத்தில் எந்த அதிகாரியாகப் பணியாற்றுகிறீர்கள் என்ற விவரங்களைத் தெரிவித்து அறிமுகம் செய்து கொள்ளலாம். 

அதையடுத்து எதைப் பற்றிப் பேசப் போகிறீர்கள், எவ்வளவு நேரம் பேசப் போகிறீர்கள் என்று தெரிவிப்பதோடு, "கேள்விகள் தோன்றும்பட்சத்தில் இறுதியில் கேட்கலாம்' என்றும் கூறுவது, உங்களைப் பற்றிய நன்மதிப்பை கருத்தரங்கில் பங்கேற்பவர்களுக்கு ஏற்படுத்தும். 

இதே அணுகுமுறையைக் கூட்டங்களில் பங்கேற்கும்போதும் நீங்கள் கடைப்பிடிக்கலாம். மற்றவர்களிடம் நம்மைப் பற்றி ஏற்படும் முதல் அபிப்ராயம் பல்வேறு தருணங்களில் நிலைத்து நிற்கும். நம்மை சரியான முறையில் அறிமுகப்படுத்திக் கொண்டால், அவ்வாறான அபிப்ராயத்தை மற்றவர்களிடம் எளிதில் தோற்றுவிக்க முடியும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com