அடுத்தது 1001

சூரிய மண்டலத்தில் பெரிய கிரகங்களைப் போலவே ஏராளமான சிறுகோள்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன.
அடுத்தது  1001

சூரிய மண்டலத்தில் பெரிய கிரகங்களைப் போலவே ஏராளமான சிறுகோள்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன. அவற்றில் சில அவ்வப்போது பூமியை மோதுவதுபோல நெருங்கி வருவதுண்டு. சிறிய அளவிலான விண்கற்கள் பூமியில் மோதிய நிகழ்வுகளும் நடந்துள்ளன.

பூமியை நெருங்கி வரும் இத்தகைய சிறுகோள்களைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் ஜெட் புரபல்ஸன் லேபரட்டரி, அதுபோன்ற ஆயிரமாவது சிறுகோளை கடந்த ஆகஸ்ட் மாதம் கண்டறிந்தது.

"2021 பிஜெ1' எனப் பெயரிடப்பட்டுள்ள அந்தச் சிறுகோளானது பூமியிலிருந்து உத்தேசமாக 17 லட்சம் கி.மீ. தொலைவில் கடந்து சென்றது. அதனால் பூமிக்கு ஆபத்து இல்லை என்றாலும் அது ஒரு வரலாற்று நிகழ்வாகும்.

""20 முதல் 30 மீட்டர் விட்டம் கொண்ட அந்தச் சிறுகோளானது மிகவும் சிறியது என்பதால், தெளிவான ரேடார் படம் கிடைக்கவில்லை'' என ஜெட் புரபல்ஸன் லேபரட்டரியின் சிறுகோள் ரேடார் ஆராய்ச்சித் திட்டத் தலைவர் லான்ஸ் பென்னர் தெரிவித்துள்ளார்.

அவரது தலைமையிலான குழுவினர் 70 மீட்டர் உயரம் கொண்ட "டீப் ஸ்பேஸ் ஸ்டேஷன்' என்ற ஆன்டெனா மூலம் ரேடார் பிரதிபலிப்பான்கள் வாயிலாக அச்சிறுகோளைக் கண்டறிந்துள்ளனர்.

""கிரகங்களைக் கண்டறியும் ரேடாரானது தொலைதூரத்தில் உள்ள சிறுகோளைக் கண்டறிந்து அதன் வேகத்தை அதிக துல்லியத்துடன் அளவிடும் அளவுக்கு சக்தி வாய்ந்தது'' எனவும் லான்ஸ் பென்னர் தெரிவித்தார்.

1000-ஆவது சிறுகோள் கண்டறியப்பட்ட 7-ஆவது நாளில் 1001-ஆவது சிறுகோளான "2016 ஏஜெ193' ஆக. 22-ஆம் தேதி பூமியை 34 லட்சம் கி.மீ. தொலைவில் கடந்து சென்றதையும் இக்குழுவினர் கண்டறிந்துள்ளனர்.

நகரும் இதுபோன்ற சிறுகோள்களை ரேடார் மூலம் கண்டறியும் நடவடிக்கை 1968-இல் தொடங்கியது. இதன்மூலம் பூமிக்கு அருகே வரும் சிறுகோள்களைப் பற்றி வானியலாளர்கள் புரிந்து கொள்ள முடிகிறது. மேலும், இந்தக் கண்டறிதலானது குறிப்பிட்ட சிறுகோள் பூமியைத் தாக்குமா அல்லது கடந்து போகுமா என்பதையும் துல்லியமாகக் கணிக்க உதவுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com