வீட்டிலிருந்து வேலை... சில படிப்புகள்!

வீட்டிலிருந்து வேலை... சில படிப்புகள்!

கரோனா பெருந்தொற்று காலத்தில் சமூகத்தில் மிகப் பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ள வேலைவாய்ப்பின்மை போக்கும் வகையில் வீட்டிலிருந்தபடி ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்க முடியுமா?


கரோனா பெருந்தொற்று காலத்தில் சமூகத்தில் மிகப் பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ள வேலைவாய்ப்பின்மை போக்கும் வகையில் வீட்டிலிருந்தபடி ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்க முடியுமா? அதற்கு எதுபோன்ற கல்விகள் உதவி புரியும், அது சாத்தியமா என்ற கேள்விக்கு செல்வதற்கு முன்பு, உலகம் முழுவதும் தினமும் அலுவலகத்துக்கு சென்று வேலை செய்தவர்களில் கோடிக்கணக்கானோர் தற்போது வீட்டிலிருந்து பணிபுரிந்து வருகிறார்கள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பெருந்தொற்று பரவலின் காரணமாக முதலில் பரிசோதனையின் அடிப்படையில் வீடுகளிருந்து வேலை செய்ய தொடங்கிய கூகுள், முகநூல், ஆப்பிள் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது ஊழியர்கள் இந்த ஆண்டு இறுதிவரை தொடர்ந்து வீடுகளிருந்தே பணியாற்றுவார்கள் என்று அறிவித்துள்ளன.

எனவே, ஏற்கெனவே இருக்கும் பணியை வீட்டிலிருந்தே செய்வது சாத்தியமானபோது புதியதொரு பணியைக் கண்டறிந்து வீட்டிலிருந்து வேலை செய்வது சாத்தியமே.

சில படிப்புகள் தொழில் வாய்ப்புகளுக்கும் அவை சார்ந்த வேலைகளுக்கும் உங்களைச் சிறப்பாக தயார்படுத்தும். அந்த வகையில் வீட்டிலிருந்து ஒரு தொழிலைத் தொடங்குவதற்கு உதவும் வகையில் உங்கள் திறமைகளுக்கும் விருப்பங்களுக்கும் பொருந்தக்கூடிய சில படிப்புகளை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.

வீட்டிலிருந்து வேலை செய்வதற்கு உதவும் படிப்புகள் எவை என்பதை எப்படிக் கண்டறிவது?

வீட்டிலிருந்து வேலை செய்வதற்கு வசதியாக பல படிப்புகளை பல்கலைக்கழங்கள் வழங்கி வருகின்றன. அவை அவை பெரும்பாலும் ஆன்லைன் தளங்களைப் பயன்படுத்தி மற்றவர்களுடன் இணைந்து, வேலைப் பொறுப்புகளை நிறைவேற்றுவதை உள்ளடக்கியதாக இருக்கின்றன.

சில தொழில் படிப்புகள் வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான பொதுவான திறன்களை வளர்க்க உதவுகின்றன.

வீட்டிலிருந்து வேலை செய்ய உதவும் சில படிப்புகள்:

1. இணையதள வடிவமைப்பு மற்றும் மேம்பாடு

வலைதள வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு படிப்புகள் வாடிக்கையாளர்களுக்கு வலைப்பக்கங்களை உருவாக்கவும் மற்றும் புதுப்பிக்கவும் கற்றுத் தருகின்றன.

நீங்கள் இந்த தொழில் படிப்பில் ஆர்வம் உள்ளவராக இருந்தால், ஒரு நிறுவனத்தில் வேலை செய்யலாம் அல்லது தங்கள் வேலையை ஆன்லைனில் உங்கள் வீட்டிலிருந்தே செய்யலாம். பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது வலைதளத்தினை முழுமையாக வடிவமைக்கவோ அல்லது பயன்பாட்டு மேம்பாட்டிற்கான சிறிய மாற்றங்களைச் செய்யவோ இவர்களைப் பயன்படுத்துகின்றனர்.

அனுபவம் வாய்ந்த வலைதள வடிவமைப்பாளர்களையே பெரிய நிறுவனங்கள் விரும்புகின்றன. வலைதள வடிவமைப்பாளர்கள் நிறுவனங்களுக்கான தொலைநிலை ஃப்ரீலான்ஸராகத் தொடர்கிறார்கள்.

2. தகவல் தொழில்நுட்பம்

தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல், தகவல் அமைப்புகள் படிப்புகள் மூலம், வீட்டில் இருந்தே வேலை செய்ய முடியும். இந்தப் பணியில் உங்களின் அனுபவம் அதிகரிக்க அதிகரிக்க, தகவல் தொழில்நுட்பம் தொடர்பான தனிப்பட்ட ஆலோசகராகவும் பணியைத் தொடர முடியும். வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் தகவல் மற்றும் நெட்வொர்க் பாதுகாப்பு அமைப்புகளை நிர்வகிக்கவும், ஆலோசனைகள் வழங்கி உதவிட முடியும்.

3. வணிக மேலாண்மை

வணிக மேலாண்மை அல்லது தொழில் முனைவோர் படிப்புகள் மாணவர்களுக்கு இலாப நோக்கமுள்ள நிறுவனங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைக் கற்பிக்கின்றன. இது சொந்தமாக தொழில் தொடங்குவதற்கும், மற்ற நிறுவனங்களுக்கு ஆலோசனையை வழங்கவும், தொலைதூரத்தில் இருந்து கொண்டே நிர்வாகப் பணிகளைச் செய்யவும் உதவுகிறது. தேவைக்கேற்ப வாடிக்கையாளர்களை நேரில் சந்திப்பதைத் தவிர, மற்ற சூழ்நிலைகளில் பெரும்பாலான வேலைகளை வீட்டிலிருந்து சரியாகத் திட்டமிட்டுச் செய்ய செய்ய உதவுகிறது.

4. மொழிகள்

உங்களுடைய தாய்மொழி தவிர, பிற மொழிகளையும் கற்றுக் கொள்வது உங்களுக்கு வீட்டிலிருந்தே வேலை செய்யும் பணி வாய்ப்புகளை அதிகப்படுத்தும்.

ஸ்பானிஷ் அல்லது பிரெஞ்சு போன்ற கூடுதல் மொழி படித்திருந்தால், அந்த மொழியை நீங்கள் சரளமாக பேசவும், படிக்கவும், எழுதவும் உதவும். நிறைய மொழிபெயர்ப்புப் பணிகள் பல்வேறு துறைகளில் காத்திருக்கின்றன. கூடுதல் மொழியை கற்றிருந்தால் வீட்டிலிருந்து கொண்டே ஆவணங்களை வாடிக்கையாளர்களுக்கு அல்லது நிறுவனங்களுக்கு மொழிபெயர்த்து தரலாம். கற்பிப்பதில் ஆர்வமும் அனுபமும் இருந்தால், வீட்டிலிருந்து கொண்டே ஆன்லைன் மூலம் மொழிகளைக் கற்றுத் தரும் ஆசிரியராகப் பணி செய்யலாம்.

5. கணக்கியல்

கணக்கியல்துறை சார்ந்த படிப்புகள் நிதி பதிவுகளை பகுப்பாய்வு செய்வதற்கான அடிப்படை திறன்களை உங்களுக்குத் தரும். நிகழ்கால நிதிப் பரிவர்த்தனைகளை அறிய உதவும். சான்றளிக்கப்பட்ட பொது கணக்காளர் அல்லது நிதி ஆலோசகர் போன்ற வேலைவாய்ப்புகளைப் பெற முடியும்.

6. விருந்தோம்பல் மற்றும் சுற்றுலா

உலக அளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் துறையாகவும், பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் துறையாகவும் திகழ்கிறது விருந்தோம்பல் மற்றும் சுற்றுலாத் துறை.

தகவல் தொடர்புத்திறன், ஆளுமை மேம்பாடு, பயண நிறுவன மேலாண்மை, உலகச் சுற்றுலாத் தலங்களைப் பற்றிய அறிவு, விருந்தோம்பல் மேலாண்மை, நிகழ்வு மேலாண்மை, சந்தைப்படுத்தல் மேலாண்மை. விமான மற்றும் விமான நிலைய மேலாண்மை, வாடிக்கையாளர் சேவை மற்றும் பல்வேறு வகையான தங்குமிடங்கள் மற்றும் பயண வசதிகளை நிர்வகிப்பது பற்றி விருந்தோம்பல் மற்றும் சுற்றுலாத்துறை படிப்புகளில் கற்பிக்கப்படுகின்றன.

வீட்டில் இருந்து கொண்டே செய்ய ஆன்லைன் மூலம் சுற்றுலா வழிகாட்டிகள், பயண ஆலோசகர், பயண முகவர்கள், பயண பதிவர்கள் போன்ற பணிகளைச் செய்யலாம்.

7. சமையல் கலை படிப்புகள்

இந்தப் படிப்பின் மூலம் சமையல் கலைஞராக ஒருவர் வேலை செய்ய முடியும். ஊட்டச்சத்து ஆலோசகராகவும் வேலை செய்ய முடியும். வீட்டிலிருந்து கொண்டே உணவை வாங்கிச் சாப்பிடும் பழக்கம், கரோனா காலத்தில் அதிகரித்துவிட்டது.

இந்தப் படிப்பு படித்தவர்கள் இணையதளங்களின் மூலம் வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொண்டு, அவர்களுக்குத் தேவையான உணவு வகைகளைத் தயாரித்து வழங்கலாம்.

8. இசை தொடர்பான படிப்புகள்

இசை தொடர்பான படிப்புகளைப் படித்தவர்கள், வீட்டில் இருந்து கொண்டே ஆன்லைன் மூலம் இசை வகுப்புகளை நடத்தலாம். இசைப்பள்ளிகளை வீட்டின் அருகே ஏற்படுத்தி நடத்தலாம். இசை ஆல்பங்களை உருவாக்கி வலைதளங்களில் வெளியிட்டு வருமானம் ஈட்டலாம். குறும்படம், ஆவணப்படம் போன்றவற்றுக்கான பின்னணி இசை போன்றவற்றை வீட்டில் இருந்தே அளிக்கலாம்.

9. கிராஃபிக் வடிவமைப்பு

வரைகலை வடிவமைப்பாளர் படிப்பு ஒரு வாடிக்கையாளரின் கருத்துகளை ஒரு காட்சி உருவாக்கமாக மாற்றுவது எப்படி என்று கற்பிக்கிறது. அதாவது இது ஒரு காட்சித் தகவல் தொடர்பு ஆகும்.

எழுத்தாளர்களைப் போலவே, வரைகலை வடிவமைப்பாளருக்கும் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. ஃபோட்டோஷாப் மற்றும் பலகிராபிக்ஸ் மென்பொருள்கள் பற்றி தெரிந்த படைப்பாற்றல் கொண்டவராக ஒருவர் இருந்தால், வீட்டிலிருந்து கொண்டே வேலை செய்வதற்கான நிறைய வாய்ப்புகள் காத்திருக்கின்றன.

இன்று சமூக ஊடகங்களில் பல படைப்புகள் மக்களின் கவனத்தை ஈர்க்கின்றன. விளம்பரங்கள், விளம்பரப் பொருள்கள் அல்லது ஆக்கபூர்வமான படைப்புகளை வடிவமைக்க எழுத்துரு மற்றும் வண்ணக் கூறுகளைக் கையாள இந்த வரைகலை வடிவமைப்பாளர்கள் பயன்படுகின்றனர்.

10. கவுன்சிலிங் படிப்பு:

சமுதாயத்தில் மக்கள் சந்திக்கும் அடிப்படைச் சிக்கல்களுக்கு ஆலோசனைச் வழங்கவும், மனரீதியாக அவர்களைச் சிரமங்களில் இருந்து விடுபடச் செய்வதற்கும் இந்த படிப்பு கற்றுத் தருகிறது.

இந்த துறையைச் சேர்ந்தவர்கள் தங்கள் வீடுகளிலேயே நேரடியாக ஆலோசனைகளை வழங்க முடியும். கல்வி ஆலோசகர்கள், ஆசிரியர்கள், வர்த்தக பயிற்சியாளர்கள் போன்றவர்கள் இந்த படிப்பை படிப்பதால் பயனடைகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com