வங்கிப் பணி... பனைத் தொழில்!

எந்தவொரு வேலையாக இருந்தாலும் அதை மனதளவில் விருப்பப்பட்டு செய்தால் அது எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் மனதளவிலும், உடல் அளவிலும் சோர்வை ஏற்படுத்தாது என்பதற்கு பல்வேறு உதாரணங்களை
வங்கிப் பணி... பனைத் தொழில்!

எந்தவொரு வேலையாக இருந்தாலும் அதை மனதளவில் விருப்பப்பட்டு செய்தால் அது எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் மனதளவிலும், உடல் அளவிலும் சோர்வை ஏற்படுத்தாது என்பதற்கு பல்வேறு உதாரணங்களை கூறிக் கொண்டே செல்லலாம். ஆடையில் அழுக்குப்படியாமல் வேலை செய்ய வேண்டும் என இன்றைய இளைஞர்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில், அப்படியொரு வேலையை துச்சமென தூக்கி எறிந்துவிட்டு பனை ஏறும் தொழிலைக் கையிலெடுத்து பலருக்கும் முன்னோடியாக திகழ்ந்து வருகிறார் தூத்துக்குடி மாவட்டம், அடைக்கலாபுரம் பகுதியைச் சேர்ந்த 28 வயது இளைஞர் அன்டோ பிரைட்டன்.

வங்கிப் பணியில் இருந்து பனை ஏறும் தொழிலாளியாக மாறியதைப் பற்றி அன்டோ பிரைட்டன் பேசியதிலிருந்து...

""எனது தாத்தா குழந்தைசாமி ஒரு மரம் ஏறும் தொழிலாளி. அவர் தன்னோடு சில தொழிலாளிகளை வைத்துக் கொண்டு பனை மரம் ஏறும் தொழில் செய்து வந்தார். ஆனால், எனது தந்தை தேவதாஸ் அந்த தொழிலில்ஈடுபடவில்லை. இருப்பினும், மரம் ஏறும் தொழிலாளர்களை வைத்துக் கொண்டு எங்களுக்கு சொந்தமான 500-க்கும் மேற்பட்ட பனை மரங்களைப் பாதுகாத்து வந்தார்.

நான் பள்ளிப் படிப்பை முடித்ததும் காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் பிடெக் தகவல் தொழில்நுட்ப பிரிவு படிப்பில் சேர்ந்தேன். படிப்பு முடிந்ததும் கோவை, தூத்துக்குடியில் வங்கியில் சேல்ஸ் மேனேஜர் பொறுப்பு வகித்தேன்.

சிறு வயதில் இருந்தே பனை மரங்கள் மீது எனக்கு தீராத பற்று உண்டு. நாம் எந்தவொரு உரமும் இடாமல், சரியாக பராமரிக்காமலும் இருந்தாலும் நமது உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் பதநீர், பனை வெல்லம், பனங்கற்கண்டு போன்ற உணவுப் பொருள்களையும், பனை நார், பனை ஓலை போன்ற பயனுள்ள பொருள்களையும் தரும் மரமாக பனை மரம் இருந்து வருகிறது. ஆனால் அத்தொழில் இன்று கவனிக்கப்படாத நிலையில் உள்ளது.

தற்போது, தமிழகத்தில் பனை மரங்களை வெட்டுவதற்கு அரசு தடை விதித்துள்ளது. மத்திய அரசும் பனை விதைகளை அதிக அளவு நட வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

கரோனா பரவல் தொடங்கியதால் வங்கிப் பணிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்த எனக்கு பனை மரம் ஏறும் தொழிலில் ஈடுபட்டால் என்ன? என்று தோன்றியது.

எங்களுக்கு சொந்தமாக 500 பனை மரங்கள் உள்ளன. கூடுதலாக 150 மரங்கள் அடங்கிய தோப்பை குத்தகைக்கு எடுத்தேன். இந்த பனை மரங்களைப் பாதுகாக்கும் தொழில்நுட்பங்களைத் தெரிந்து கொள்ள, சென்னை மாதவரத்தில் உள்ள பனைத் தொழில்நுட்ப பயற்சி நிலையத்தில் சேர்ந்து 4 மாதங்கள் பயிற்சி பெற்றேன்.

பனை மரம் ஏறுவது எப்படி? பனை மரங்களில் இருந்து கிடைக்கும் பொருள்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்வது எப்படி? என கற்றுக் கொண்டேன். மேலும், எனது பாட்டி மூலம் பனை ஓலையில் இருந்து 60 வகையான கலைப் பொருள்கள் தயாரிப்பது எப்படி? என்றும் கற்றுக் கொண்டேன்.

ஆண்டுக்கு 6 மாதம் மட்டுமே பனை மரத்தில் இருந்து பதநீர் கிடைக்கும். அதுவும் ஒரு மரத்தில் தினமும் இரண்டு முறை ஏறி உரிய முறையில் பராமரிக்க வேண்டும் என்பதால் நான் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் 20 பனை மரங்களில் ஏறி இறங்குவேன். என்னோடு சில மரம் ஏறும் தொழிலாளர்களையும் சேர்த்துக் கொண்டு அந்த தொழிலில் கவனம் செலுத்தி வருகிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தத் தொழிலை செய்து வருகிறேன்.

தற்போது பதநீர் பருவகாலம் முடிவடைந்த நிலையில் பனை ஓலை மூலம் கைவினைப் பொருள்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கு எங்களது கைவினைப் பொருள்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

இதுதவிர, விருப்பம் உள்ள மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு பனை ஓலை மூலம் கலைப்பொருள்கள் செய்வது குறித்தும் பயிற்சி அளித்து வருகிறோம். வரும் காலத்தில் இளைஞர்களை ஒன்றுதிரட்டி பனைத் தொழில் அழிந்துவிடாமல் பாதுகாக்க வேண்டியதையே நோக்கமாக கொண்டு செயல்படுகிறேன்.

எந்த வேலையாக இருந்தாலும் அதை மனதாரச் செய்தால் அதுவே முழு திருப்தியைத் தரும் என்ற நோக்கத்தோடு தான் இந்த வேலையைச் செய்கிறேன். பனை மரங்களைப் பாதுகாக்க அரசு பல நடவடிக்கை எடுத்தாலும் பனை ஏறும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான சில திட்டங்களை அரசு கொண்டு வர வேண்டும்.

அப்படி செய்தால் இன்னும் பல இளைஞர்கள் பாரம்பரியமான பனைத் தொழிலை செய்ய முன்வருவார்கள். ஒரே இடத்தில் உட்கார்ந்து செய்யும் வங்கிப் பணியை விட உடல் உழைப்பைச் செய்யும் இந்த வேலை எனக்குப் பிடித்திருக்கிறது'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com