மாறாதீர்கள்... இயந்திரமாக!

நீங்கள் ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்கிறீர்களா? என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்? ஒரு சிலர் மட்டுமே வாழ்க்கை நிம்மதியாக சந்தோஷமாக இருக்கிறது என்று கூறுவதுண்டு.
மாறாதீர்கள்... இயந்திரமாக!


நீங்கள் ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்கிறீர்களா? என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்? ஒரு சிலர் மட்டுமே வாழ்க்கை நிம்மதியாக சந்தோஷமாக இருக்கிறது என்று கூறுவதுண்டு. நல்ல வாழ்க்கை என்பது இங்கு பணம் நிறைந்த ஆடம்பர வாழ்க்கை என்பதில்லை. மாறாக, வாழ்க்கையை எந்த அளவுக்கு ரசித்து வாழ்கிறீர்கள் என்பதே முக்கியமானது.

வாழ்வதற்குப் பணம் வேண்டும்தான். ஆனால் நிம்மதியான வாழ்க்கை, சில நேரங்களில் மகிச்சியான தருணங்கள் தேவையாகிறது. சிலர் அலுவலகத்தில் 8 மணி நேரம் வேலை செய்துவிட்டு பின்னர் பகுதிநேர வேலையிலும் ஈடுபடுவார்கள். சிலர் அலுவலக நேரங்களுடன் கூடுதல் நேரங்கள் பணிபுரிவர். சில நேரங்களில் இவ்வாறு செய்யலாம். ஆனால், வாழ்க்கையின் முக்கிய தருணங்களை இழக்கக் கூடாது.

தனக்கான நேரத்தை ஒதுக்கிக்கொள்ள முடியாதவர்கள் வாழ்வின் முக்கிய தருணங்களை இழக்கிறார்கள்.

பணத்துக்காக ஓடி ஓடி உழைக்கும் உங்கள் வாழ்க்கையில் இனிமையான தருணங்கள் என்று எவ்வளவு இருக்கின்றன? இதற்காக நீங்கள் உங்கள் வீட்டை விட்டு சுற்றுலா போக வேண்டும் என்று அவசியமில்லை.

வேலைக்குச் சென்று வீட்டுக்கு வந்தபின்னர் உங்கள் குடும்பத்தினருடன், குழந்தைகளுடன் நேரம் செலவழிப்பது, வேலையை பிடித்தமான முறையில் செய்வது, அனைவரையும் இன்முகத்துடன் அணுகுவது, சிக்னலில் காத்திருக்கும்போது சுற்றிலும் யார் இருக்கிறார்கள் என்று நோட்டமிடுவது... இந்த சின்ன சின்ன விஷயங்கள் கூட உங்கள் வாழ்க்கையை அழகாக்கும்.

குடும்பம், நண்பர்கள், உறவினர்களை மறந்து சரியாக சாப்பிடாமல், தூங்காமல் 24 மணி நேரமும் சிலர் வேலை, வேலை என அலைவார்கள். சாதனை, பணம் இவற்றைத் தாண்டி வாழ்க்கையில் இவர்கள் எந்த அளவுக்கு மகிழ்ச்சியை எதிர்கொண்டார்கள்?

வாழ்க்கையை அவசரமாக வாழ்வதற்குப் பதிலாக நிதானமாக ரசித்து வாழுங்கள். சில தருணங்கள் வாழ்க்கையை அழகாக்குகின்றன. அந்த தருணங்களை நாம் கட்டமைக்க முடியாது. போகிற போக்கில் அவை நடந்தேறுபவை. எனவே, வாழ்க்கையை அதுபோக்கில் செல்லவிட்டு பின்செல்ல வாழ்க்கை நன்றாகவே இருக்கும்.

நாள் ஒன்றுக்கு 24 மணி நேரம். இதில் 8 மணி நேரம் தூக்கம் என்று வைத்துக் கொள்வோம். எஞ்சிய நேரத்தில் நீங்கள் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டுக்கொள்ளுங்கள். அதிகபட்சமாக உங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை ரசிக்க சில மணி நேரம் ஒதுக்கிக் கொள்ளுங்கள்.

வார இறுதி நாள்களில் குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்க முடிவெடுத்துவிட்டால் எந்தச் சூழ்நிலையிலும் மற்ற வேலையை ஒத்துக்கொள்ள வேண்டாம்.

ஒருகாலத்தில் வாய்ப்புகளை நாம் தேடிச் சென்ற நிலை இருந்தது. இன்று வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. ஆம், வாழ்க்கை முழுவதும் வாய்ப்புகளால் நிறைந்துள்ளது. ஒன்றுமே செய்யாவிட்டாலும் நாள் முழுவதும் நேரமின்றி ஓடிக்கொண்டிருப்பவர்கள் பலர்.

இந்த வாய்ப்புகள் நம்மைத் தேடி வரும் பட்சத்தில் "எஸ்' என்று சொல்லவே முற்படுகிறோம். "நோ' என்று சொல்வதைப் பெரும்பாலும் யாரும் விரும்பவில்லை. அப்படியே சொல்ல விரும்பினாலும் பலரும் ஒருவித தயக்கத்துடனே அதனைச் சொல்கின்றனர்.

நவீனமயமாகிவிட்ட இந்த உலகத்தில் நீங்கள் மாணவராக இருந்தாலும் சரி, வேலைக்குச் செல்வோராக இருந்தாலும் சரி, வீட்டில் இருந்தாலும் சரி நேரம் போதவில்லை என்றே கருத்தே பொதுவாக உலவுகிறது.

மாணவர் என்றால் பள்ளிக்குச் செல்வது, வீட்டுப் பாடம் செய்வது, வேலைக்குச் செல்பவர்கள், அலுவலக வேலை, வீட்டிற்கு வந்ததும் குடும்பத்தினருடன் நேரம் செலவழித்தல், இதர வேலைகள் என அனைவருக்கும் வாழ்க்கை ஏதோ ஒருவகையில் சென்று கொண்டிருக்கிறது.

சற்று யோசித்துப் பாருங்கள். அன்றாட அடிப்படை வாழ்வுக்காக ஏன் இவ்வளவு பரபரப்பாக இயங்க வேண்டும்? எல்லாவற்றையும் நம் தலையில் ஏன் போட்டுக்கொள்ள வேண்டும்? உங்களைத் தேடி வரும் வாய்ப்புகள், வேலைகள் அனைத்துக்கும் "எஸ்' என்று சொல்வதுதான் இதற்குக் காரணம். திறனறிந்து உடலறிந்து செயல்படாமல், அனைத்தையும் செய்து கொள்ள ஒப்புக் கொள்வதே இந்த பரபரப்புக்குக் காரணம்.

உங்களிடம் வேலைகள், பொறுப்புகள் சேர்ந்து கொண்டிருக்கும்போது வாழ்வதற்கு நேரமின்றி நீங்கள் பரபரப்பான சூழ்நிலைக்குத் தள்ளப்படுவீர்கள். அந்த அழுத்தம் உங்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும்.
நீங்கள் நாள் முழுவதும் பிஸியாக இருக்கிறீர்கள். ஏதோ ஒரு வேலையைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறீர்கள். ஆனால், எதையும் முழுமையாகச் செய்து முடிக்காத திருப்தியின்மை உங்களுக்கு ஏற்பட்டால், தகுதிக்கு மீறிய நிறைய வேலைகளைச் செய்ய நீங்கள் ஒப்புக்கொண்டுள்ளீர்கள் என்பதே உண்மை.
எல்லாவற்றுக்கும் "எஸ்' என்று சொல்ல வேண்டிய கட்டாயமில்லை. "நோ' என்றும் சொல்லலாம்.

தேவைப்படும் நேரத்தில் தேவைப்படும் இடத்தில் இந்த சொற்களை சரியாகப் பயன்படுத்தினால் இந்த வாழ்க்கை உங்களுக்கு மறக்கமுடியாத தருணங்களைக் கொடுக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com