அரசுப் பணி... தனியார் நிறுவனப் பணி... நீங்கள்!

படித்த இளைஞர்கள் மத்தியில் அரசுப்பணியில் சேர்வதா? இல்லை தனியார் நிறுவனப் பணியில் சேர்வதா? என்ற குழப்பம் அவ்வப்போது எழுவது உண்டு.
அரசுப் பணி... தனியார் நிறுவனப் பணி... நீங்கள்!


படித்த இளைஞர்கள் மத்தியில் அரசுப்பணியில் சேர்வதா? இல்லை தனியார் நிறுவனப் பணியில் சேர்வதா? என்ற குழப்பம் அவ்வப்போது எழுவது உண்டு. இரண்டிலுமே சாதக, பாதக அம்சங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

ஒரு சில இளைஞர்கள் அரசுப் பணியில்தான் நீடித்து நிலைத்து இருக்க முடியும் என்று நினைக்கிறார்கள். வேறு சிலரோ தனியார் நிறுவனப் பணிகளில் நுழைந்து வாய்ப்புகளைப் பயன்படுத்தி உயர்வடைய முடியும் என்று நினைக்கிறார்கள்.

இந்திய அளவில் நடைபெற்ற ஓர்ஆய்வில் சுமார் 1.76 கோடி பேர் அரசுப் பணிகளில் இருப்பது தெரிய வந்துள்ளது. அதுபோல் சுமார் 25 கோடி பேர் தனியார் நிறுவனப் பணிகளில் இருப்பதும் தெரிய வந்துள்ளது.

அரசுப் பணி அதிக பணி பாதுகாப்பைத் தரும் என்று கருதுகிறார்கள். அரசுப் பணிகளைப் பொறுத்தவரை நினைத்த நேரத்தில் பணியாளர்களை நீக்கிவிட முடியாது. அதேசமயம் தனியார் நிறுவனப் பணிகளில் எந்தச் சூழ்நிலையில் வேண்டுமென்றாலும் பணியை விட்டு நீக்கப்படலாம். தனியார் நிறுவனப் பணிகளைப் பொறுத்தவரை திறமையும், உழைப்பின் தன்மையும், நிறுவனம் அளித்துள்ள இலக்கை எட்டக் கூடிய உழைப்பும் இருந்தால் தொடர்ந்து பணி செய்ய வாய்ப்பு கிடைக்கும். இதில் ஏதேனும் குறைந்தாலும் அல்லது நிறுவனத்தின் பொருளாதாரம் குறைந்தாலும் கூட பணி நீக்கம் செய்யப்படலாம்.

அரசுப் பணிகளைப் பொறுத்தவரை பதவி உயர்வு என்பது உடனடியாக கிடைத்துவிடாது .

பல ஆண்டுகள் கடந்த பின்பு தான் பதவி உயர்வை நினைத்து பார்க்க முடியும். அதே நேரத்தில் தனியார் நிறுவனப் பணிகளில் முழுத் திறனையும் வெளிப்படுத்தக்கூடியவர்களுக்கு உடனடியாக பதவி உயர்வு கிடைத்துவிடும் .

அரசுப் பணிகளைப் பொறுத்தவரை குறிப்பிட்ட ஊதியம் மட்டுமே மாதந்தோறும் வழங்கப்படும். அதேசமயம் தனியார் நிறுவனப் பணிகளில் மாதந்தோறும் ஊதியம் வழங்கப்படுவதைப் போல ஊழியர்களின் திறமைக்கும், தகுதிக்கும் ஏற்றவாறு அப்போது ஊக்கத்தொகை வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. அதையும் தாண்டி ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்து முடித்தவுடன் அவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் நிறுவனங்களும் உள்ளன.

அரசுப் பணிகளைப் பொறுத்தவரை பேகமிஷன் அறிவிக்கப்பட்டால் மட்டுமே அவர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்கும் . ஆனால் தனியார் நிறுவனங்களில் வேலை செய்வதைப் பொருத்து ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

அரசுப்பணிகளில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பணியாற்ற வேண்டிய வாய்ப்பு இருக்கும். பதட்டமில்லாமல் பணிகளைச் செய்ய முடியும்.

அதோடு செளகரியமான சூழலில் பணியாற்றக் கூடிய வாய்ப்பும் அரசு பணியிடத்தில் தான். ஆனால் தனியார் நிறுவனங்களில் பணி நேரம் என்பது குறிப்பிட்ட காலமாக இருக்காது. காலை முதல் இரவு வரை ஏன் மறுநாள் காலை வரை கூட விழித்திருந்து பணியாற்ற வேண்டிய சூழலும் இருக்கும்.

அரசுப் பணிகளில் ஒரே ஒரு காலி இடத்திற்கு ஆயிரக்கணக்கானவர்கள் போட்டியிடும் சூழல் இருக்கும். மேலும் அரசின் கொள்கைரீதியான முடிவுகளும் இதில் இடம் பெற்றிருக்கும். இதனால் கடினமான தேர்வுகள் மூலம் பணியாளர்கள் தேர்வு நடக்கும். அதேசமயம் திறமையும், தகுதியும் இருந்தால் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பைப் பெற்றுவிட முடியும்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அரசுப் பணிகளில் சேர்ந்தவர்களுக்கு ஓய்வு ஊதியம் உள்ளிட்ட பணப்பலன்கள் வழங்கப்பட்டு வந்தன. இந்த காரணத்திற்காக பெரும்பாலோனோர் அரசுப் பணிகளில் ஆர்வம் காட்டியதுண்டு. ஆனால் தற்போது தனியார்நிறுவனப் பணிகளைப் போல அரசுப் பணிகளில் உள்ளவர்களுக்கும் ஓய்வு ஊதியம் வழங்கப்படுவதில்லை. இதன் காரணமாக குறிப்பிட்ட சதவீத இளைஞர்கள் தனியார் பணிகளில் ஆர்வம் காட்டத் தொடங்கிவிட்டனர்.

எனவே நாம் எந்தப் பணியில் சேர வேண்டும் என்பதை முடிவு செய்வதற்கு முன் தீர ஆய்வு செய்து இரண்டு பணிகளிலும் உள்ள சாதக பாதக அம்சங்களை அலசி ஆராய்ந்து செய்வது நலம் பயக்கும். இன்னும் சொல்லப்போனால் அரசு பணிகளில் சில குறிப்பிட்ட செக்டார்களில் தனியார் நிறுவன பணிகளை விட இரவு, பகல் பாராமல் உழைக்க வேண்டிய சூழலும் தற்போது நிலவி வருகிறது.

உதாரணமாக கரோனா போன்ற பெருந்தொற்று காலங்களில் சுகாதாரத்துறை மற்றும் மருத்துவத் துறை ஊழியர்கள் விடுப்பே இன்றி பணியாற்றி வருவது அனைவருக்கும் தெரிந்த விஷயம். அதுபோல தேர்தல் உள்ளிட்ட காலங்களில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் குறிப்பாக வருவாய்த்துறை ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் கால நேரமின்றி உழைப்பதும் கவனிக்கத்தக்க ஒன்று.

எனவே நம் திறமைக்கு எது சவாலான பணியாக இருக்கிறதோ அதை தேர்வு செய்து பணியாற்றினால் எத்துறையிலும் நம்மால் மிளிர முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com