இணைய வெளியினிலே...

நண்பா, அதிகாரம் என்பது ஒரு பொருளல்ல, அது யாருக்கும் உரியதும் அல்ல. அதிகாரம் என்பது சீருடையில், ஒரு சொல்லில், ஒரு பொருளில், ஏன் ஒரு பார்வையில்... என பல தளங்களில் விரிகிறது.
இணைய வெளியினிலே...

முக நூலிலிருந்து....


நகரம் கிராமத்தை 
விழுங்கியது போக மீதியாய் 
ஒரு  சுமைதாங்கிக் கல்  
வரலாறைச் சுமந்து கொண்டு
நிற்கிறது.
இன்னுமொரு முறை  
விரிவாக்கும் சாலைக்காக
அந்தக் கல்லை 
பக்கத்தில் புதைப்பார்கள்,
அந்த ஊரில் வாழ்ந்த 
கடைசி முதியவனை
புதைத்ததுபோல். 
நாளை...
மண்ணுக்குள் கிடக்கும் கிராமம்.

குமரன்விஜி

வார்த்தைகளை  
எந்த அளவுக்குத் 
துறக்கிறோமோ...
அந்த அளவுக்கு
அது மேலான 
கவிதையாகி விடுகிறது.

--நா.வே.அருள்

சுதந்திரம் சொல் அல்ல,
வேட்கையெனக் கற்றான் மனிதன்...
கூண்டுக்கிளியிடம். 
வீரசோழன்.

க.சோ. திருமாவளவன்  

சுட்டுரையிலிருந்து...


"பழம்' பெருமை 
பேசுவதையே
தொழிலாக 
வைத்திருக்கிறது 
மரம்.

காளையன்

அவ்வளவுதானென முடிவெடுத்து 
எதையும் தூக்கியெறியவோ ஒதுக்கி வைக்கவோ செய்யாதீர்கள்...
விழுந்த இடத்திலிருந்து
விருட்சமென அது  வளரவும் வாய்ப்புள்ளது.

அழகிய கவிதை 

உணவோடு 
நிலவைச் சுட்டுகிறது  
அம்மாவின் விரல்... 
நிலவையே 
கவளமாக்குகின்றன 
குழந்தையின் கண்கள்...
இருவரையும் ருசிக்கிறது 
அந்தரத்தில் நிலவு.

லக்ஷ்மிவ்வா

வாழ்க்கை என்பது ஒரு ரயில் பயணம் மாதிரி 
நிறைய நிறுத்தங்கள்... நிறைய வழித்தடமாற்றங்கள்...
வித விதமான மனிதர்களுடன் பயணங்கள்...
சில நேரம் விபத்துகளும் கூட...
இப் பயணத்தில்
ரசிக்க வேண்டியதை ரசித்து சகிக்க வேண்டியதை சகித்து
பயணிக்கக் கற்றுக் கொள்வோம்!

கவிதா ராணி 

வலைதளத்திலிருந்து...

நண்பா, அதிகாரம் என்பது ஒரு பொருளல்ல, அது யாருக்கும் உரியதும் அல்ல. அதிகாரம் என்பது சீருடையில், ஒரு சொல்லில், ஒரு பொருளில், ஏன் ஒரு பார்வையில்... என பல தளங்களில் விரிகிறது. போலீசாரின் சீருடையைப் பார்த்ததும் வரும் பயத்தை ஓர் உதாரணமாகக் கொண்டால், அதிகாரம் சீருடையில் இருப்பது புரியும். சாதாரண லத்தியைப் பார்த்ததும் ஏற்படும் பயம் கூட அதிகாரத்தின் விளைவை விளக்குவதுதான். ராமாயணத்தில் ராமரின் காலணிகளைச் சிம்மாசனத்தில் வைத்து பரதன் ஆட்சி செய்ததாக வருவதை இங்கு நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.
ஆக, அதிகாரம் பல துறைகளில், நிறுவனங்களில், குழுக்களில், சார்பான உறவுகளில் இயங்கி கொண்டிருக்கிறது. ஒரு நுனியிலிருந்து இன்னொரு நுனிக்கு வழிந்து கொண்டிருக்கிறது. அதாவது இடம் மாறிக் கொண்டிருக்கிறது. உதாரணத்துக்கு மன்னராட்சியில் அதிகாரம் மன்னர்களிடம் இருந்தது. அதுவே மன்னராட்சி முடிவுக்கு வந்ததும் அதிகாரம் வழிந்தோடி வேறோர் இடத்துக்கு சென்றது. 
ஆக, ஒற்றைத்தன்மை கொண்டதாக ஆதியில் இருந்த அதிகாரம், இன்று பன்மைத் தன்மை கொண்டதாக மாறியிருக்கிறது. அதுவும் முக்கியமாக தொழில்நுட்பம் வாய்ந்ததாக இருக்கிறது. சட்டமாக இயங்காமல் சகஜமாக இயங்குவதில் வெற்றி பெற்றிருக்கிறது. தண்டனையைத் தீர்வாக்காமல் கட்டுப்பாட்டை முன்வைக்கிறது. சரி - தவறு, நல்லது - கெட்டது ஆகியவை இன்று நுட்பமான குறிகளின் வழியே உணர்த்தப்படுகிறது.
அதாவது உடம்பில் வசிப்பவர்கள் மனிதர்கள் என்று பார்க்காமல், உடல்களாக மனிதர்களை பார்ப்பதுதான் அதிகாரம். அரசாலும், அரசு சார்ந்த நிறுவனங்களாலும் உடல்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன.

http://tamilbodypolitics.blogspot.com/

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com