சோர்வுக்கு விடைகொடு!

அன்றாட நிகழ்வுகளின் ஓட்டம் வாழ்க்கையின் முக்கிய அங்கமாகத் திகழ்கிறது. வாழ்க்கையில் தினமும் உழைக்க வேண்டியது அவசியம்.
சோர்வுக்கு விடைகொடு!

அன்றாட நிகழ்வுகளின் ஓட்டம் வாழ்க்கையின் முக்கிய அங்கமாகத் திகழ்கிறது. வாழ்க்கையில் தினமும் உழைக்க வேண்டியது அவசியம். ஆனால், ஒரு சில நேரங்களில் உடலுக்கும் மனதுக்கும் ஓய்வு மிகவும் அவசியமாகிறது. ஓய்வின்மையே சோர்வாக வெளிப்படுகிறது. குறிப்பிட்ட செயலைச் செய்வதற்கு உடலும் மனமும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அதில் ஏதேனும் ஒன்று வலுவாக இல்லாமல் சோர்வை வெளிப்படுத்தினால் அந்தச் செயலில் ஈடுபட முடியாது. அப்படியே ஈடுபட்டாலும் அச்செயல் திருப்திகரமாக முற்றுப் பெறாது.

சோர்வு ஒவ்வொருவரையும் வெவ்வேறு விதங்களில் தாக்குகிறது. நம்முடைய சூழல், வாழ்க்கை நிகழ்வுகள் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு சோர்வு நம்மைத் தாக்குகிறது. இந்தச் சோர்வு சில மணி நேரங்களுக்கோ சில நாள்களுக்கோ சில வாரங்கள் வரை கூடவோ நீடித்திருக்க வாய்ப்புள்ளது.

சோர்வு நீங்க சிறிது ஓய்வு எடுத்துக் கொண்டால் போதுமானது. ஆனால், சில சமயங்களில் சோர்வு நாம் நிர்ணயித்துள்ள பெரும் இலக்கை அடைவதற்குத் தடையாக மாறுவதற்கு வாய்ப்புள்ளது. அன்றாட நிகழ்வுகளின் பெரும் பகுதியை சோர்வு ஆக்கிரமித்துக் கொள்ளவும் செய்யும். அத்தகைய சமயங்களில் வெறும் ஓய்வு மட்டுமே சோர்வில் இருந்து நமக்கு விடுதலை அளிக்காது.

ஆனால், ஒரு சில விஷயங்களைக் கடைப்பிடிப்பதன் வாயிலாக சோர்வில் இருந்து நம்மை நாமே விடுவித்துக் கொள்ள முடியும். முதலில், சோர்வு குறித்த எதிர்மறை கருத்துகளைக் காதில் வாங்கக் கூடாது. நாம் சோர்வாக இருப்பதை வைத்து பிறர் நம்மைச் "சோம்பேறி' என்று சொன்னால் அதைப் பொருட்படுத்தக் கூடாது.

சில நாள்களில் சிறப்பாகப் பணிபுரியும் நாம், வேறு சில நாள்களில் உடல் ரீதியிலோ, மனரீதியிலோ சோர்வை எதிர்கொள்ள நேரிடும். அது மிகவும் இயல்பானது என்ற புரிதல் அவசியம். அத்தகைய புரிதல் இருந்தாலே சோர்வில் இருந்து நாம் விடுபடுவதற்கான தீர்வுகள் நமக்குக் கிடைக்கும்.

நாம் சோர்வாக இருந்தால் பிறர் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்பதில் கவனம் செலுத்தத் தொடங்கினால், அது தாழ்வு மனப்பான்மையை அதிகப்படுத்தும்; அன்றாட நிகழ்வுகளின் மீதான கவனம் சிதறும். மற்றவர்களின் அதிருப்திக்கும் ஆளாக வேண்டிய சூழல் உருவாகும்.

சுறுசுறுப்பாக இருப்பதைப் போலவே சோர்வாக இருப்பதுவும் இயல்பானது. எனவே சோர்வாக இருக்கும்போது எதிர்மறையான கருத்துகள் மனதில் தோன்றினால், அதை நாள்குறிப்பில் எழுதி வையுங்கள். நம் எண்ண ஓட்டங்களை எழுதி வைக்கும்போது அதனால் ஏற்படும் மனஅழுத்தம் நமக்குச் சிறிது குறையும்.

நமது உடலையும் மனதையும் சோர்வு நெருங்கிவிடாதவாறு பார்த்துக் கொள்ளலாம். காலையில் எழுந்தவுடன் சில உடற்பயிற்சிகள் மேற்கொள்வது, சூரியஒளியைப் பெறுவது போன்றவை நம்மை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். முக்கியமாக வெந்நீரில் குளிப்பதை அறவே தவிர்க்க வேண்டும். அது குளிக்கும்போது சற்று இதமான உணர்வைத் தந்தாலும், சுறுசுறுப்பைத் தருவதில்லை. தண்ணீரில் குளிப்பது உடலையும் மனதையும் வழக்கத்தை விட சுறுசுறுப்பாக்கும்; அன்றாட நிகழ்வுகளைத் திறம்பட மேற்கொள்ளவும் உதவும்.

ஓய்வெடுப்பதற்கென்றும், பணியை மேற்கொள்வதற்கென்றும் தனித்தனி இடங்களை வைத்துக் கொள்வது நல்லது. படுக்கை, சோஃபா உள்ளிட்டவற்றை ஓய்வெடுப்பதற்காக வைத்துக் கொண்டால், அவற்றில் அமர்ந்து பணியை மேற்கொள்ள வேண்டாம். அது பணி மீதான ஆர்வத்தைத் தடுக்கும்; ஓய்வை நோக்கி உங்களை இழுக்கும். எனவே, ஓய்வெடுக்கும் இடங்களில் பணிசார்ந்த விஷயங்களை மேற்கொள்வதைத் தவிர்க்கலாம்.

அன்றாடப் பணிகளில் எளிமையாக உள்ளவற்றை முதலில் முடித்துவிடலாம். அது அடுத்த பணியைச் செய்வதற்கான ஊக்கத்தை நமக்கு அளிக்கும். எடுத்தவுடன் சற்று கடினமான பணியை மேற்கொள்வது சோர்வை ஏற்படுத்தக் கூடும்.

பணியை முடித்துவிட்டால் சிறிய பரிசுகளை நமக்கு நாமே அளித்துக் கொள்ளலாம். ஆனால், அந்தப் பரிசு உணவாகவோ, ஓய்வளிப்பதாகவோ இருக்க வேண்டாம். பணியை முடித்தாலும் முடிக்காவிட்டாலும் உணவும் ஓய்வும் நமக்குக் கிடைக்கும் என்பதால் அவற்றைப் பரிசாக அளிக்க வேண்டாம்.

ஊக்கமுடன் செயல்படும் நபர்களுடனோ நம்மைப் போன்று இலக்குகளை நிர்ணயித்து செயல்படும் நபர்களுடனோ தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். நாம் சோர்வடையும்போது அவர்கள் நம்மை ஊக்குவிப்பார்கள். அவர்கள் சோர்வடையும்போது நாம் ஊக்குவிக்கலாம். இது பரஸ்பர நல்லுறவை வலுப்படுத்தும்; சோர்வையும் போக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com