நிலவில் பனிக்கட்டிகளைத் தேடி...

நிலவின் தென் துருவத்தில் தண்ணீர், பனிக்கட்டிகள் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்வதற்காக வைபர் என்ற ரோவரை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா 2023-ஆம் ஆண்டு இறுதியில் அனுப்பவுள்ளது. 
நிலவில் பனிக்கட்டிகளைத் தேடி...

நிலவின் தென் துருவத்தில் தண்ணீர், பனிக்கட்டிகள் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்வதற்காக வைபர் என்ற ரோவரை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா 2023-ஆம் ஆண்டு இறுதியில் அனுப்பவுள்ளது.

அந்த ரோவர் நிலவின் தென் துருவத்தில் அமைந்துள்ள "நோபிள் கிரேட்டர்' என்ற பள்ளத்தாக்கு பகுதியில் தரையிறங்கி ஆய்வுப் பணியில் ஈடுபடும் என நாசா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வைபர் திட்ட இயக்குநர் டேனியல் ஆண்ட்ரூஸ் கூறுகையில், ""வைபர் தரையிறங்கும் பகுதியைத் தேர்வு செய்வது ஓர் அற்புதமான, முக்கியமான முடிவாகும். எதிர்கால விண்வெளித் திட்டங்களுக்கான முக்கியமான தகவல்களை வைபர் சேகரிக்கும்'' என்றார்.

நாசாவின் லூனார் ரெகொனாய்சன்ஸ் ஆர்பிட்டர் மற்றும் பிற விண்கலங்களின் கணிப்புப்படி நிலவில், குறிப்பாக அதன் துருவப் பகுதிகளில் உள்ள நிரந்தர நிழல் பகுதிகளில் பனிக்கட்டிகள் ஏராளமாக உள்ளதாகத் தெரிய வந்துள்ளது. நோபிள் பகுதியானது 93 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. 450 கிலோ எடை கொண்ட, சூரிய சக்தியில் இயங்கும் வைபர் ரோவர் நோபிள் பகுதி முழுவதும் ஆய்வுப் பணியில் ஈடுபடும். 

குறிப்பாக ஒட்டுமொத்த சூரிய மண்டலத்திலும் குளிர்ச்சியான பகுதியாகக் கருதப்படும் நிலவின் தென்துருவ நிரந்தர நிழல் பகுதிகளில் தரைக்கு அடியில் பனிக்கட்டிகள் உள்ளனவா என்பதைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபடும்.

வைபர் ரோவர் மூன்று ஸ்பெக்ட்ரோ மீட்டர்கள் மற்றும் துளையிடும் கருவியைப் பயன்படுத்தி சுமார் 100 நாள்கள் இந்தப் பணியில் ஈடுபடும். 

அதன் துளையிடும் கருவியானது 3.3 அடி ஆழம் வரை தோண்டும்திறன் கொண்டது. வைபர் வழங்கும் தகவலானது உலகெங்கும் உள்ள விஞ்ஞானிகளுக்கு நிலவின் தோற்றம், பரிணாமம் குறித்த புதிய புரிதலை ஏற்படுத்தும். 

மேலும், நிலவுக்கு மனிதர்களை அழைத்துச் செல்லும் நாசாவின் ஆர்ட்டெமிஸ் திட்டத்துக்கும் உதவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com