Enable Javscript for better performance
கிளர்ந்தெழுங்கள் தோழர்களே! - 16:  அரவிந்திர லோகம்!- Dinamani

சுடச்சுட

  கிளர்ந்தெழுங்கள் தோழர்களே! - 16:  அரவிந்திர லோகம்!

  By -ஆர். நடராஜ்  |   Published on : 28th September 2021 06:00 AM  |   அ+அ அ-   |    |  

  im1


  எல்லைகள், கட்டுப்பாடுகள் இல்லாத இடம், எல்லாத் தரப்பட்ட மக்களும் ஒன்று கூடி வாழ, கீழோர் மேலோர் என்ற பாகுபாடின்றி பரஸ்பர மனித நேயத்தோடு பழக ஓர் இடம் இருந்தால் எப்படி இருக்கும்?

  "காற்றுக்கென்ன வேலி' என்று சுதந்திரமாக மனித குலம் வாழ வேண்டும் என்ற சித்தாந்தத்தை அளித்தவர் அமரர் அரபிந்த கோஷ். பாண்டிச்சேரி அருகில் அரோவில் என்ற சர்வதேச மக்கள் குடியிருப்பை அரபிந்தோவுடன் மெய்ஞ்ஞான பணியில் சேவையாற்றிய "மதர்' என்று எல்லோராலும் அழைக்கப்படும் பிரெஞ்ச் நாட்டை சேர்ந்த மிர்ரா அல்பாசா அரபிந்தோவின் கனவை நனவாக்கினார்.

  வங்காளத்தில் பிறந்த அரபிந்த கோஷின் அன்னை தனது மகன் ஐசிஎஸ் பரீட்சையில் வெற்றி பெற்று உயர் அரசு அதிகாரியாக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அதற்கு அரபிந்தோவை லண்டனுக்கு மேற்படிப்பிற்கு அனுப்பினார். எழுத்துத் தேர்வில் 12 - ஆவது ரேங்கில் தேர்ச்சி பெற்றாலும் குதிரைச் சவாரி தேர்வில் அவரால் பங்கு பெற முடியவில்லை. அதனால் ஐசிஎஸ் பணியில் சேர இயலவில்லை. அவரது பெற்றோர் கனவு பொய்த்தது. ஆனால் அரபிந்தோ தனக்கு விடுதலை கிடைத்தது போல் மகிழ்ச்சியடைந்தார். ஏனென்றால், அவருக்கு நிர்வாக பணியில் நாட்டமில்லை.

  அதுவும் பிரிட்டிஷ் அரசுக்கு ஏன் அடிமை வேலை என்று ஒதுங்கினார்.

  பரோடா ராஜா சமஸ்தானத்தில் சில வருடம் அரசுப் பணி, மஹாராஜா கல்லூரியில் மேற்படிப்பு, பின்பு கல்கத்தாவில் நேஷனல் கல்லூரியில் ஆசிரியர் பணி, அதே நேரத்தில் நாட்டின் விடுதலைதான் தன் மூச்சு என்று ஓர் அமைப்பை ஏற்படுத்தி முழுமையாக விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

  அலிப்பூர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளியாக பிரிட்டிஷ் அரசால் கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்தார். சிறை வாசத்தின் போது அவருக்கு ஆன்மீகத் தாக்கம் ஏற்பட்டது. விவேகானந்தரின் அமுத மொழிகளால் ஆன்மீக வேட்கை மேலும் வலுப்பட்டது.

  எப்போதுமே அவருக்குக் கவிதைகள், இலக்கியம், மொழி, மனித தத்துவ விஷயங்களில் ஒரு ஈர்ப்பு இருந்தது. வழக்கில் விடுதலை பெற்று பிரிட்டிஷ் அரசாங்க கெடுபிடியிலிருந்து அமைதியாக ஞான வாழ்க்கை தொடங்க பிரான்ஸ் நாட்டின் ஆளுகையில் இருந்த பாண்டிச்சேரிக்கு 1910- இல் குடியேறினார். யோக கலையிலும் தியானத்திலும் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அவரது ஆன்மீகப் பயணத்தில் பல பக்தர்கள் இணைந்தனர் . அவரது சிறிய ஆசிரமம் பத்து வருடங்களில் விரிவடைந்தது. அதற்கு முக்கிய காரணம், அவரது ஆன்மீகத் தத்துவங்களை மக்களிடம் எடுத்துச் சென்று பல்வகை சமூகப் பணி கல்வி, மருத்துவம், யோக கலை என்ற வகையில் திட்டமிட்டு விரிவாக்கம் செய்த மிர்ரா அல்பாசா ஆவார்.

  மனிதனின் படைப்பு உயர்ந்த பரம்பொருளை அடைவதற்கான ஒரு மார்க்கம் என்பது அரவிந்தரின் ஆத்ம தத்துவம். இதைத்தான் வள்ளுவர் இரண்டே வரியில், "பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவனடி சேராதார்' என்றார்.
  அவரது ஒருங்கிணைந்த யோக முறையில் உடல் அசைவுகள் இல்லை. ஆனால் மனதை ஒருமுகப்படுத்த உபாயம் வகுத்துள்ளார். மனோதர்மம் அடிப்படையில் நாம் ஆற்றும் அன்றாடப் பணிகளை உயிரோட்டத்துடன் செய்வது கர்ம யோக கலை. அடுத்து வித்ய யோகா -பார்த்தல், படித்தல் உணர்தல் மூலமாக அறிவை வளர்க்கும் கலை. பரம்பொருளை உள்வாங்கி தியானத்தில் ஈடுபடுதல் தியான யோகா. நான்காவது நம்மை உயர்த்திக் கொள்ள நம்முள் குடியிருக்கும் ஆன்மாவை உணர்தல். அதன் மூலம் ஆத்ம சக்தியை வெளிப்படுத்துதல். இதைத்தான் பாரதியார் "தெய்வம் நீ என்றுணர்' என்றார். காலப்போக்கில் மனிதன் இந்த உயர்ந்த நிலையை எய்துவான்; அதையே பயிற்சி மூலம் நாம் இப்பிறப்பிலேயே ஆத்ம பலம் பெறலாம் என்கிறார் அரபிந்தோ. இந்த குண்டலினி சக்தியை அடைய அரவிந்தரின் ஆத்ம யோகா அன்றாடப் பணிகள் மூலமாகவே பெறலாம் என்ற எளிய பாதையை வகுக்கிறது.

  1914-ஆம் வருடம் அரபிந்தோ பற்றி கேள்விப்பட்டு மிர்ரா அல்பாசா பாண்டிச்சேரி வந்து அவரது ஆன்மீகப் பணியில் தன்னை இணைத்துக் கொண்டார். அரபிந்தோவின் உரைகள், கடிதங்களைத் தொகுத்து புத்தகங்களாக வெளியிட்டார். புதிய கல்வி முறையை இளைஞர்களுக்கு உருவாக்கினார். அரபிந்தோவை வெளியுலகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியதால் ஆசிரமத்தில் பல்லாயிரக்கணக்கான சீடர்கள் குவிந்தனர். அவரது ஆன்மீகச் சிந்தனைகள் மேற்கத்திய தத்துவவாதிகளோடு ஒத்திருந்தது இதற்கு ஒரு காரணம் . தெய்வீக வாழ்க்கை ( லைஃப் டிவைன் ) மற்றும் "சாவித்திரி' என்ற இரு புத்தகங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. இருமுறை உலக அமைதி, இலக்கியத்துக்கான நோபல் விருதிற்குப் பரிந்துரைக்கப்பட்டார். ஆனால் கிடைக்க வில்லை.

  1950 - ஆம் வருடம் அரபிந்தோ இயற்கை எய்தினார். சுமார் ஒரு லட்சம் மக்கள் அவரது பூத உடலைப் பார்த்து அஞ்சலி செலுத்தினர். அவரது மறைவிற்குப் பிறகு அன்னை மிர்ரோ ஆசிரமப் பணிகளை தொடர்ந்து செய்து மக்கள் சேவையில் ஈடுபட்டார். அவரது எளிமை, ஈடுபாடு எல்லாரிடமும் அன்பு பாராட்டியது, மக்களை வெகுவாகக் கவர்ந்தது. அவரை உரிமையோடு "மதர்'என்று அழைக்கத் தொடங்கினர் .

  உலக அமைதியின்மை காரணமாக மக்கள் படும் துன்பங்களினால் பிறவியின் பயனை முழுமையாக அனுபவிக்க முடியாமல் வாழ்க்கை விரயமாகிறது. இதனைத் தடுக்கவும் உலக அமைதிக்கு அரபிந்தோ அவர்கள் உபதேசித்த வாழ்க்கை நெறிகளை நடைமுறைப்படுத்தவும் முயற்சிகள் எடுத்தார். மனவிசாலம் உயர் நோக்கத்தோடு உச்சத்தை அடைய வேண்டும். மாணிக்கவாசகர்

  திருவாசகத்தில்,
  புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
  பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
  கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
  வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
  செல்லா நின்ற இத் தாவர சங்கமத்துள்

  என்று பிறவிகளின் பரிணாமங்களை டார்வினின் விஞ்ஞான கண்டுபிடிப்பிற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மெய்ஞான அறிவு பூர்வமாக உணர்த்தியுள்ளார்.

  ஜீவராசிகளின் உருவாக்கத்தில் மனிதனுக்கு அடுத்த ஓர் உயர் நிலை உருவாகும். அதற்கு நம்மைத் தயார் செய்து கொள்ள வேண்டும் என்பதுதான் அரபிந்தோவின் தத்துவம். அரபிந்தோவின் எண்ணங்களின் செயல் வடிவம் தான் சர்வதேச நாடுகளின் குடியிருப்பு அரோவில் என்ற பெயரில் பாண்டிச்சேரியிலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் உருவானது.

  "ஆண்டான் அடிமை மேலோர்
  கீழோர் என்பது மாறாதோ
  அரசன் இல்லாமல் ஜனங்கள்
  ஆளும் காலமும் வாராதோ'

  என்ற கண்ணதாசன் பாடலுக்கு இணங்க நாடு, இனம், சாதி, மதம், மொழி இவற்றிற்கு அப்பாற்பட்டு ஒரு வேற்றுமையும் இல்லாமல் எல்லாரும் ஒற்றுமையாக வாழ உருவானதுதான் அரோவில்.

  1968 - ஆம் வருடம் பிப்ரவரி 28- ஆம் தேதி அரோவில் அறக்கட்டளையின் நான்கு குறிக்கோள் அடங்கிய பிரகடனத்தை அன்னை மிர்ரோ வெளியிட்டார்கள். அந்த சரித்திர புகழ் வாய்ந்த நிகழ்வில் 124 தேசங்கள், இந்தியாவின் 23 மாநிலங்களிலிருந்து இளைஞர்கள் நாட்டின் ஒரு பிடி மண் கொண்டுவந்து பெரிய கலசத்தில் கலந்து அரோவில் ஸ்தாபனத்தை உறுதி செய்தார்கள். ஐக்கிய நாடுகள் சபை யுனெஸ்கோ நான்கு முறை சபை தீர்மானம் மூலம் அரோவில்லுக்கு அங்கீகாரம் அளித்துள்ளது.

  அரோவில் டவுன்ஷிப் அருகில் திண்டிவனம் - புதுச்சேரி சாலையில் உள்ள இரும்பை கிராமத்திற்கும் அரோவில்லுக்கும் ஒரு புராதன தொடர்பு உள்ளது. காளேஷ்வர் முனிவரால் பல நூற்றாண்டுகளுக்கு முன் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்ட மஹாகாளேஷ்வர் கோயில் உள்ளது.

  "இரும்பைதனுள் வண்டு கீதம் முரல்பொழில் சுலாய் நின்ற மாகாளமே' என்று சம்பந்தர் தேவாரப் பாடல் பெற்ற தலம். மூன்றாவது குலோத்துங்க சோழன் கோயிலைக் கட்டியதாக வரலாறு.

  இலுப்பை மரங்கள் நிறைந்ததால் இலுப்பூர் என்பது மருவி இரும்பை ஆயிற்று. "காடுவெளி சித்தர்' இங்கு கடுமையாக சிவ பெருமானை துதித்து தியானத்தில் இருந்ததாகவும், பூஜையின் உக்கிரம் அதிக உஷ்ணத்தை ஏற்படுத்த அக்கம் பக்கம் நிலங்களெல்லாம் காய்ந்தன. கோட்டக் கரையில் ஆட்சி புரிந்த குலோத்துங்க அரசனுக்கு விஷயம் தெரிய வர சித்தரின் தவத்தைக் கைவிட செய்பவருக்கு சன்மானம் என்று அறிவித்தான். சித்தரின் கோபத்துக்கு ஆளாகக் கூடாது என்பதால் பலர் முன் வரவில்லை. வள்ளி என்ற சிவன் கோயில் நர்த்தகி சித்தரின் தவத்தை பிரச்னையில்லாமல் கலைத்தார். மன்னர் மகிழ்ச்சியுற்று கோயிலில் சிறப்பு பூஜை ஏற்பாடு செய்து சித்தரை கௌரவித்தார். வள்ளியின் சிவதாண்டவ தெய்வாம்ச நாட்டியமும் இருந்தது. சித்தர் நாட்டிய நிகழ்ச்சியில் பங்கு கொண்டதை சிலர் கொச்சைப்படுத்த, கோபமுற்ற சித்தர் அந்த பகுதி "பாலைவனமாகக் கடவ' என்ற சாபம் இட, மன்னன் அவரிடம் சென்று சாபத்தை திரும்ப பெற கோரியதாகவும் அதற்கு சித்தர் பல வருடங்களுக்குப் பிறகு வேற்று நாட்டவர் வந்து இந்த இடத்தில் பசுமை மீண்டும் கொண்டு வருவார்கள் என்று அருளியதாக புராணம். அதன்படியே அரோவில் இங்கு நிறுவப்பட்டு ஒரு புல் கூட முளைக்காத பாலைவனத்தில் பசுமை திரும்பி வந்தது என்று அப்பகுதி மக்கள் சந்தோஷப்படுகிறார்கள்!

  அரோவில் யாருக்கும் சொந்தமில்லை. அங்கு வசிக்க வருபவர்கள் தொண்டாற்ற வேண்டும். அரோவில் ஒரு தொடர் கல்வி பயிலும் மையம். இளமை குன்றாத வாழ்வு, பழமைக்கும் புதுமைக்கும் அரோவில் ஒரு பாலமாக அமையும். ஆன்மீகத் தேடல், வாழ்வாதாரப் பொருண்மைகள் பற்றிய ஆராய்ச்சி ஆகியவை அரோவில்லின் முக்கிய குறிக்கோள்கள்.

  சர்வதேசக் குடியிருப்பின் பரப்பளவு சுமார் 25 சதுர கிலோமீட்டர். இப்போது சுமார் 3000 அரோவில்லியினர்கள் 50 நாடுகளிலிருந்தும் இந்தியர்கள் சுமார் 1000 பேர் உட்பட குடியிருக்கிறார்கள். சுற்றுவட்டாரத்தில் 13 கிராமங்கள். அதில் நாற்பதாயிரம் கிராம மக்கள். அவர்களின் முன்னேற்றம் அந்த மக்களோடு கைகோர்த்து அவர்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது, தரமான கல்வி கொடுப்பது, கலைகள் கற்பிப்பது ஆகிய உயரிய நோக்கங்களைச் செயலாக்குவதில் மதர் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

  அரோவில் டவுன்ஷிப் பணிகளால் சுற்றுவட்டார மக்களுக்கு வேலை வாய்ப்பும் அது அவர்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வழி வகுத்தது. இளையோருக்கு கல்வி, பல மொழிகள் கற்பதற்கு வசதி, அவர்களது ஆளுமையை உயர்த்தியது. பல மொழிகள் ஹிந்தி, பிரெஞ்சு சரளமாகப் பேசுகிறார்கள்.

  தமிழை தேனொழுகப் பேசுகிறார்கள். சுயநல மொழி போராளிகளின் தொந்தரவு இல்லை. பாடத் திட்டத்தைக் குறைத்து இளைஞர்களைப் பாழடிக்கும் அணுகுமுறை இல்லை. ஜாதி ஒழிப்பு என்ற வெளி வேஷம்; ஆனால் ஜாதியை வைத்து மக்களைப் பிரித்தாள்பவர்களுக்கு இடமில்லை. சுய முயற்சி செய்தால் வெற்றி அடையலாம் என்ற நம்பிக்கையைத் தருகிறார்கள்.

  அப்துல் கலாம் 2004- ஆம் வருடம் அரோவில் வந்தபோது, "மனிதம் திகழும் இடம்' என்று பாராட்டி மகிழ்ந்தார்.

  தமிழ் புண்ணிய பூமியில் இந்திர லோகம் அரோவில். சென்ற வார கேள்விக்குப் பதில்: சுவாமி விவேகானந்தர்அமெரிக்கா சிகாகோ நகரில் செப்டம்பர் 11 - ஆம் தேதி 1893 -ஆம் ஆண்டு உலக மதங்கள் மாநாட்டில் உரையாற்றினார்.

  இந்த வார கேள்வி: அரோவில்லை வடிவமைத்த கட்டட நிபுணர் யார்?

  (விடை அடுத்த வாரம்)

  கட்டுரையாளர்:

  மேனாள் காவல்துறைத் தலைவர் மேனாள் சட்டமன்ற உறுப்பினர்
   


  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  kattana sevai
  ->
  flipboard facebook twitter whatsapp