அச்சமே நமது எதிரி!

கல்லூரி மாணவர்களிடத்தில் தற்போது பல்வேறுவிதமான அச்சங்கள் காணப்படுகின்றன. அது பெரும்பாலும் எதிர்கால வாழ்க்கையைக் குறித்தாகவே இருக்கிறது.
அச்சமே நமது எதிரி!

கல்லூரி மாணவர்களிடத்தில் தற்போது பல்வேறுவிதமான அச்சங்கள் காணப்படுகின்றன. அது பெரும்பாலும் எதிர்கால வாழ்க்கையைக் குறித்தாகவே இருக்கிறது. வேலைவாய்ப்பு, சமூகச் சூழல், பணியிடச் சூழல்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் மாணவர்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்துகின்றன. பெற்றோர் அளிக்கும் அழுத்தமும் மாணவர்களுக்கு ஒருவித அச்சத்தை ஏற்படுத்துகிறது. 

அந்த அச்சம் படிப்படியாக அதிகரித்து ஒருகட்டத்தில் மனஅழுத்தமாக உருவெடுக்கிறது. அத்தகைய சூழலில் பாடங்களை முறையாகக் கற்க முடியாத சூழல் ஏற்படுகிறது. தற்காலத்தில் எதிலும் முழுமையாக கவனம் செலுத்த முடியாத நிலைக்கு மாணவர்கள் தள்ளப்படுகின்றனர். இதுபோன்ற அசாதாரண சூழல்களைக் கல்லூரி மாணவர்களால் எளிதில் எதிர்கொண்டுவிட முடியும். 

முதலில் அச்சமோ மனஅழுத்தமோ ஏற்படுவதற்கான காரணங்களைக் கண்டறிதல் அவசியம். பிரச்னைக்கான வேரைக் கண்டறிந்தால்தான் அதற்குத் தீர்வு காண்பது எளிதாகும். அதைக் கண்டறிந்த பிறகு அப்பிரச்னை மீண்டும் எழாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். எதிர்காலத்தைப் பற்றிய அதீத சிந்தனைகளே பல்வேறு பிரச்னைகளுக்கு வழிவகுக்கின்றன. எனவே, அதைப் பற்றி அதிகமாக சிந்திக்க வேண்டாம். 

அச்சமோ மனஅழுத்தமோ ஏற்பட்டால், கண்களை மூடி மூச்சை ஆழமாக இழுத்து மெதுவாக விடுங்கள். மூக்கின் வழியே மூச்சை இழுத்து வாயின் வழியே காற்றை வெளியேற்றுங்கள். இது அச்சத்தைப் போக்கி நரம்புகளைத் தளர்த்தும்; மனதில் நல்ல எண்ணங்கள் தோன்ற வழிவகுக்கும்; அழுத்தத்தைப் பெருமளவில் குறைக்கும். 

அதையடுத்து உங்களுக்குப் பிடித்தமான செயலில் சிறிது நேரத்துக்கு ஈடுபடுங்கள். இசை கேட்கலாம்; இயற்கையை ரசிக்கலாம்; கதை படிக்கலாம். அதன் பிறகு ஏற்கெனவே பார்த்த வேலையைத் தொடரலாம். எத்தகைய பிரச்னை ஏற்பட்டாலும் அது குறித்து உடனடியாகச் சிந்திக்காமல் சிறிது நேரம் அதைத் தள்ளிவைத்துவிட்டு பின்னர் முடிவெடுத்தல் சிறந்தது. ஏனெனில் பிரச்னை ஏற்பட்டவுடன் நமக்கு ஏற்படும் பதற்றமான சூழலால், சரியான முடிவை எடுக்க முடியாது. 

அந்தச் சூழலில் நாம் எடுக்கும் பெரும்பாலான முடிவுகள் தவறாக முடியவே வாய்ப்புகள் அதிகம். எனவே, சிறிது நேரத்துக்கு அப்பிரச்னையை ஆறப் போடலாம். பின்னர் ஆரவாரம் ஏதுமற்ற மனநிலையில் அப்பிரச்னை குறித்து பலதரப்பட்ட கோணங்களில் சிந்திப்பதற்கான வாய்ப்புகள் அமையும். அப்போது நாம் எடுக்கும் முடிவுகள் சரியானவையாக இருக்கும். 

உங்களிடம் நீங்களே கனிவாக நடந்து கொள்ளுங்கள். பெரும்பாலான சமயங்களில் நமக்கும் நம் மனதுக்கும் இடையேயான உரையாடல்கள் அதிகமாக இருக்கும். அந்த உரையாடல்கள் நம்மை ஊக்கப்படுத்துவதாக, மிருதுவானதாக இருத்தல் அவசியம். எதிர்மறையான எண்ணங்களை நமக்குள் விதைத்துக் கொள்ள வேண்டாம். நம் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அதற்கு மதிப்பளிக்க வேண்டும். கோபம் உள்ளிட்ட எத்தகைய உணர்வையும் முற்றிலுமாகத் தடுப்பது கடினம். 

அவற்றைக் கட்டுப்படுத்துவது எளிது. உணர்வுகளைக் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்துவது அவசியம். அது மனஅழுத்தத்தையும் அச்சத்தையும் போக்குவதற்கு வழிவகுக்கும். 

நாம் எதிர்கொள்ளும் பிரச்னைகள் அனைத்தும் தற்காலிகமானவையே என்பதைப் புரிந்து கொள்ளுதல் அவசியம். நிச்சயம் அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும். எத்தகைய பிரச்னையாக இருந்தாலும் அதை நம்மால் கடந்து செல்ல முடியும். அந்த தைரியத்தை மனதில் வளர்த்துக் கொள்ள வேண்டும். 

மனதின் எண்ணவோட்டங்கள் உடலைப் பெருமளவில் பாதிக்கும். எனவே, மனதைக் கட்டுக்குள் வைப்பதற்கு சிறந்த பழக்கவழக்கங்களில் கவனத்தைச் செலுத்தலாம். புத்தகம் படித்தல், ஓவியம் வரைதல், இசைக் கருவிகளை இசைக்கக் கற்றல் உள்ளிட்டவை மனதை எப்போதும் ஏதாவதொரு வேலையில் ஈடுபடுத்திக் கொண்டே இருக்கும். அது அழுத்தத்தில் இருந்து பெருமளவில் நம்மைக் காக்கும். 

அத்தகைய வேலைகளில் தனியாக ஈடுபட வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பர்களையும் இணைத்துக் கொண்டு குழுவாகச் செய்யுங்கள். உடற்பயிற்சி, இரவில் சீக்கிரம் தூங்கி சீக்கிரம் எழுந்து கொள்வது அவசியம், ஊட்டச்சத்தை சரியான அளவில் பெறுவதற்கான உணவுகளை உட்கொள்ளுதல் உள்ளிட்டவற்றையும் நண்பர்களுடன் இணைந்து மேற்கொள்ளலாம். 

அச்சமோ மனஅழுத்தமோ ஏற்பட்டால் புகைப்பிடிப்பதையும் மது அருந்துவதையும் சிலர் வழக்கமாக்கிக் கொண்டு உள்ளனர். அத்தகைய உணர்வுகளில் இருந்து தப்புவதற்காகவே அப்பழக்கங்களைக் கைக்கொள்வதாக அவர்கள் காரணம் கூறுவர். ஆனால், அந்தப் பழக்கவழக்கங்கள் கூட மனஅழுத்தத்தை மேலும் அதிகரிக்கும். எனவே, மற்றவர்களைப் பார்த்து அதுபோன்ற பழக்கவழக்கங்களைக் கைக்கொள்ளக் கூடாது. 

வாழ்க்கை மிகவும் அழகானது. எதிர்காலத்தைப் பற்றி அதிகம் சிந்திக்காமல் நிகழ்காலத்தைப் பயனுள்ளதாகக் கழிக்க வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்தால், எத்தகைய பிரச்னைகளும் நம்மை ஒன்றும் செய்துவிட முடியாது. அச்சமே நமது எதிரி என்பதே உண்மை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com