கிளர்ந்தெழுங்கள் தோழர்களே! - 44: நல்லதொரு ஆட்சி 

எந்த அரசு மக்களின் அன்றாட வாழ்க்கையில் தலையிடாமல் சமுதாயம் அமைதியாக இயங்கிட வழி வகுக்கிறதோ அதுவே நல்லரசு.
கிளர்ந்தெழுங்கள் தோழர்களே! - 44: நல்லதொரு ஆட்சி 

எந்த அரசு மக்களின் அன்றாட வாழ்க்கையில் தலையிடாமல் சமுதாயம் அமைதியாக இயங்கிட வழி வகுக்கிறதோ அதுவே நல்லரசு. ஆனால் மக்கள் வாழ்க்கையில் குறுக்கிடுவதே தொழிலாக கொண்டு பல அரசுகள் இருப்பதால் தான் எங்கும் ஓர் அதிருப்தி நிலவுகிறது.

நல்லரசின் குணாதிசயங்களை நிபுணர்கள் பட்டியலிடுகிறார்கள். சட்டப்படி நடவடிக்கைகள், மனித உரிமைகள் மதித்தல், ஊழலை அறவே ஒழித்தல், வெளிப்படைத்தன்மை , சட்டம் ஒழுங்கு சீராக இயங்குதல், தரமான பொது சேவைகள் மக்களுக்கு சென்றடைய உறுதி செய்தல், ஆகியவை நல்லரசின் அடையாளங்கள்.

நாடு என்பது புனிதமானது. அதை பக்தியோடு தாய்மண் என்கிறோம். ஆனால் அரசாங்கம் வேறு. 

ஜனநாயக நாட்டில் அரசியல் சாசனப்படி மக்களால் அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சி அமைக்கப்படுகிறது . ஆட்சி அமைக்க மாநிலங்களில் வாய்ப்பு பெற்றவர்கள் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு ஆட்சி நடத்த வேண்டும். அவர்களது அரசாங்கம் தற்காலிகமானது என்பதை உணர்ந்து இந்திய நாட்டின் இறையாண்மையை காப்பாற்றும் விதத்தில் நடைமுறைகள் சிறப்பாக இருக்க வேண்டும்.

ஆனால் மக்கள், நாட்டையே அரசாங்கத்திடம் ஒப்படைத்தது போல், என்ன நடக்குமோ என்று அஞ்சி நடுங்கி கேள்வி கேட்க பயப்படுகிறார்கள். ஆட்சியாளர்களும் ஏதோ நாட்டையே குத்தகை எடுத்தது போல் குறுகிய நோக்கத்தோடு  திட்டங்கள் வகுக்கிறார்கள்!

நல்லாட்சி தத்துவத்தைப் பற்றி பல ஆராய்ச்சியாளர்கள் கல்வியாளர்கள் சிந்தித்து அது எவ்வாறு சமுதாயத்திற்கு பயனுள்ளதாக அமைய வேண்டும் என்பதை பற்றி விரிவான கருத்துக்களை பதிவு செய்துள்ளார்கள்.

"நாயஃப் அல் ரோதான்' என்ற சவுதி  அரேபிய அறிஞர் "நிலையான சரித்திரத்தில்  மனிதனின் கண்ணியம்' என்ற தனது புத்தகத்தில் நல்லாட்சிக்கு எட்டு முக்கிய விதிகளை பற்றி விவரித்துள்ளார். எல்லோருக்கும் பங்களிக்கும் சமத்துவம், சட்ட மேலாண்மை, அதிகாரங்களின் பங்கீடு, சுதந்திரமான பொறுப்புள்ள ஊடகம், சட்டப்படி அமைக்கப்பட்ட அரசாங்கம், பொறுப்பேற்றல் முறை, வெளிப்படைதன்மை, இறுதியாக மிகவும் முக்கியமாக அரசியலில் பண ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் நடைமுறைகள் என்ற எட்டு அம்சங்கள் நல்லாட்சிக்கு அஸ்திவாரம் வகுக்க வேண்டும்.

"நல்ல அரசாங்கம் அமைவது ஆட்சியாளர்களால் மட்டும் முடியாது. மக்களை இணைத்து சமுதாய நல்லிணக்கத்தோடு திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும். சிவில் சொசைடியின் பங்களிப்பு மிக முக்கியம்' என்கிறார் பேராசிரியர் சுரேந்திர முன்ஷி. 

வளர்ந்த நாடுகளால் வகுக்கப்பட்ட நல்லாட்சி வழிமுறைகளை பின் தங்கிய நாடுகளில் அப்படியே நடைமுறை படுத்துவதில் சிக்கல்கள் இருக்கும் என்று வேறு சில அறிஞர்கள் வாதாடுகிறார்கள். ஒவ்வொரு நாட்டின் கலாசார வேற்றுமைகளை கவனத்தில் கொண்டு நல்லாட்சி வழிகளை அறிவுறுத்தலாம்.


மேலை நாடுகளில் சீரான வெளிப்படையான நிர்வாகத்தை உறுதி செய்ய பல கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவை ஒரே நாளில் வந்தவையல்ல, காலப்போக்கில் மக்களின் உரிமைகளை பற்றிய விழிப்புணர்வு, நாட்டு நடப்பு பற்றிய புரிதலுக்கு ஏற்ப அவை அமைக்கப்பட்டு சமுதாயத்தின் அங்கீகாரத்தை பெற்றுள்ளது. ஆனால் அவற்றை வளரும் நாடுகளில் முதலிலேயே திணித்தால் முன்னேற்றத்திற்கு இடையூராக மாறும் என்கிறார்கள் சில ஆராய்ச்சியாளர்கள். 

உலக வங்கி வளர்ந்து வரும் நாடுகளுக்கு நிதி உதவி அளிக்கிறது.நிதி அளிப்பது பல கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது. உலக வங்கி தலைவராக இருந்த பால் உல்போவிட்ச் 2005 -இல் பல சீர்திருத்தங்களை கொண்டு வந்தார். ஊழலில் திளைத்த ஆப்ரிக்க நாடுகளில் ஊழலை அகற்றவும் மக்களின் ஏழ்மையை ஒழிக்க நடவடிக்கை எடுப்பதில் நல்ல முயற்சிகள் மாற்றங்கள் இருந்தால் தான் உலக வங்கியின் கடன் அளிக்கப்படும் என்ற விதியை அமல் படுத்தினார். அதோடு பின்தங்கிய   நாடுகளில் நேர்மையற்ற ஆட்சியாளர்களால் கொள்ளையடிக்கப்பட்ட சொத்துக்களை மீட்பதற்காக நடவடிக்கை மேற்கொண்டார். ஊழல் ஒழிப்பை பிரதானமாக வைத்து அதன் நிறைவேற்றம் தான் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும் என்பதை ஆப்ரிக்க நாடுகளின் ஆட்சியாளர்களுக்கு அறிவுறுத்தினார், அதில் வெற்றியும் கண்டார். 

அவரது அதிரடி நடவடிக்கை வங்கி ஊழியர்களிடம் அதிருப்தியை அளித்தது. கடுமையான கட்டுப்பாடுகளை ஊழலில் ஊறிப்போன நாடுகளில் முழுமையாக அமல்படுத்த முடியாத நிலையில் களத்தில் உள்ள வங்கி ஊழியர்கள் சிரமப்பட்டனர். திட்டங்கள் நிறைவேற்றுவதில் சுணக்கம் ஏற்பட்டது . உள்ளூர் அதிகாரிகளின் ஒத்துழையாமை  போன்ற பல சிக்கல்கள் நிர்வாகத்தை முடக்கியது. ஆனால் உல்போவிட்ச் தனது கொள்கையில் உறுதியாக இருந்தார்.

நேர்மையான ஆட்சிக்கு இத்தகைய சவால்கள் இருக்கும். நேர்மையில் உறுதியாக இருக்க வேண்டுமா? 

அல்லது நடைமுறைக்கு ஏற்றவாறு வளைந்து கொடுத்து  வறுமை ஒழிப்பு போன்ற மக்கள் பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு காண வேண்டுமா? என்பது நல்லாட்சி தத்துவத்திற்கு நெருடலான கேள்வி.

ஏழ்மையான நாடுகளில் எவ்வளவோ பிரச்னைகள் வளர்ச்சிக்கு தடங்கலாக இருக்கையில் ஊழலை மட்டும்  முன்னிலை படுத்துவது சரியல்ல என்பது சில நிபுணர்களின் கருத்து. அதற்கு உதாரணமாக 1978 - லிருந்து சைனா மற்றும் தெற்கு கொரியா நாடுகளின் வானளாவிய வளர்ச்சியை சுட்டிக்காட்டுகிறார்கள். அந்நாடுகளில் ஊழலை பிரதானப்படுத்தாது எப்படியாவது வளர்ச்சிப் பணிகள் உரிய காலத்தில் நிறை வேற்றப்பட வேண்டும் என்பதையே குறிக்கோளாக வைத்து அபரிதமான வளர்ச்சி  எய்தப்பட்டது. ஆனால் ஊழல் என்ற அரக்கன் கட்டுப்படுத்த முடியாத அளவில் வளர்ந்தான் . அதன் கொட்டத்தால் பணக்காரர்கள் ஏழைகளின் இடைவெளி பெருகியது. பல கோடி மக்கள் ஏழ்மை நிலையில் வாடுகிறார்கள்.அத்தகைய வளர்ச்சி நல்லாட்சிக்கு உகந்தது அல்ல என்பது தெளிவு.

பல வளர்ந்து வரும் ஆப்ரிக்க, மத்திய கிழக்காசிய  நாடுகளில்  மக்கள் நலனைப் பாராது சர்வாதிகார முறையில் ஆட்சி நடைபெறுகிறது என்பதை காண முடிகிறது. அந்த நாடுகளில் உலக வங்கி மற்றும் சர்வதேச நிதியகம் (ஐ எம் ஃப்) மக்கள் நலன் கருதி நிதியுதவி அளிக்கிறது. ஆனால் அங்கு நல்லாட்சி கட்டமைப்புகள் இல்லாதலால் கொடுக்கப்பட்ட நிதி சரியாக செலவு செய்யப்படுவதில்லை. மாறாக கொடுங்கோல் ஆட்சியாளர்கள் தங்கள் சுகத்திற்காக அபகரித்து விடுகிறார்கள். இதை தடுப்பதற்காகத்தான் பால் உல்போவிட்சின் ஊழல் ஒழிப்பு சித்தாந்தம் கடுமையாக நடைமுறையானது. 

வளரும் நாடுகளுக்கு கடனாக கொடுக்கப்படுவது நிர்வாக திறமையின்மையாலும், ஊழல் ஊடுருவலால் வட்டி கட்டமுடியாமல் போகும் நிலையில் சுமார் 6000 கோடி டாலர் வரை ஒரு வருடத்தில் உல்போவிட்ச் உலக வங்கி தலைவராக இருந்த போது 15 ஆப்ரிக்க நாடுகளின் கடன் தள்ளுபடி செய்யும் கட்டாயம் ஏற்பட்டது. வருங்காலத்தில் பெறக்கூடிய கடன் சுமையை சமாளிக்க போதிய வலிமை பெறுவதற்கு கடந்த கால கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது. 

நிதியுதவி அளிப்பதற்கு போடப்படும் கட்டுப்பாடுகள் ஜனநாயக நாடுகளில் வெளிப்படை தன்மை கட்டமைப்புகளை பிரதிபலிக்கும். அது சர்வாதிகார ஆட்சிப் பிடியில் இருக்கும் நாடுகள் கடன் பெறுகையில் ஏதோ ஜனநாயக அரசியல் சித்தாந்தத்தை திணிப்பது போல் கம்யூனிச அரசியல் விமர்சகர்கள் குறை கூறுவார்கள்.

அமரிக்காவின் மேனாள் வெளிவிவகார அமைச்சர் ஹில்லரி கிளிண்டன் கூறுவார், வளர்ந்து வரும் நாடுகளுக்கு தேவை வலிமையான மனிதர்கள் அல்ல திறன் மிக்க வெளிப்படையான சுதந்திர கட்டமைப்புகள். இதுதான் நல்லாட்சியை உறுதி செய்ய முடியும். இயற்கை வளங்கள் நிறைந்த ஆப்ரிக்க நாடுகளில்  வெளிநாடுகளின் நிதியுதவி அல்லது அத்தியாவசிய பொருட்களுக்கு மான்யம் இவை மட்டும் வளர்ச்சிக்கு வித்திடாது. மக்கள் நலம் சார்ந்த நல்லாட்சி தான் நிரந்தர சுபிட்சம் நாட்டுக்கு அளிக்கும்.

நல்லாட்சி என்பது தனியார் துறைகளிலும்  திறமையான நிர்வாகம் அமைய வேண்டும். அதனை கண்காணிப்பதற்கு கம்பனி லா போர்ட், நிறுவனங்கள் பதிவாளர், கலால் வரி கட்டமைப்புகள், தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் போன்றவை ஏற்படுத்தப்பட்டுள்ளன. தனியார் நிறுவனங்கள் பங்குகள் மூலம் மக்களிடம் பணம் திரட்டி வங்கிகளிடமிருந்து கடன் உதவி பெற்று தொழில் செய்கின்றனர். வேலை வாய்ப்பு உருவாக்கத்திலும் நாட்டின் வளர்ச்சியுலும் தனியார் துறைகளின் பங்களிப்பு மகத்தானது. அதே சமயம் மோசடிகளும் கடன் ஏய்ப்பும் பல நிறுவனங்களை செயல் படாத சொத்துக்களாக திவாலான நிலைக்கு தள்ளப்படுகின்றது.

நிறுவனங்கள் பொறுப்போடு செயலாற்ற கம்பனி ஆணை குழுவில் சுதந்திர இயக்குநர்கள் நியமிக்க வேண்டும் என்ற விதி கொடுக்கப்பட்டுள்ளது.நிறுவன கணக்காயர்கள் நிறுவனங்களின் வருடாந்திர  நிகர லாப நஷ்ட கணக்கினை நேர்மையான முறையிலும் வெளிப்படை தன்மையோடு ஆய்வு செய்து வெளியிட்டால் தவறுகள் நிகழாது என்பது நிச்சயம்.

விஞ்ஞான ஆராய்ச்சியிலும் நிர்வாக திறமை மற்றும் ஆராய்ச்சி முடிவுகளின் நோக்கம் கடைபிடிக்க வேண்டும். பல்கலைக்கழகங்களில் பலர் ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்கிறார்கள். ஆராய்ச்சியின் முடிவுகள் எந்த அளவிற்கு விஞ்ஞான உலகில் வரவேற்பைப் பெற்றது என்பது கேள்விக்குரியாகவே இருக்கிறது. அதே சமயம் "நியூட் ரினோ' ஆராய்ச்சிக்கு பொருத்தமான இடம் தேனி மாவட்ட மலைப் பகுதி என்று விஞ்ஞான ரீதியாகதேர்வு செய்யப்பட்டாலும் குறுகிய அரசியல் தன்னார்வர்களின் குறுக்கீடு காரணமாக நல்ல விஞ்ஞான திட்டம் முடங்கியிருக்கிறது.

கொடூரமான ஆட்சியால் பொருளாதாரம் குலைந்த நிலையில் அண்டை நாடுகளான இலங்கையும் பாகிஸ்தானும் தத்தளிக்கின்றன. இனப்போராட்டத்தில் தமிழினத்தை அழிப்பதில் குறியாகவும் அதற்கு ராணுவத்தை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்திய இலங்கை அரசு தொழில் கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வில்லை. சுற்றுலா ஒன்றையே நம்பி இருந்த பொருளாதாரம் கரோனா தொற்று நோய் பாதிப்பால் சுற்றுலா பயணிகளின் வரவு நிர்மூலமாகி அன்றாட தேவைகளையே பூர்த்தி செய்ய முடியாமல் தவிக்கிறது. 

"பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னாபிற்பகல் தாமே வரும்' 

என்ற வள்ளுவர் வாக்கிலிருந்து தப்ப முடியாது. இலங்கை மக்கள் நலன் கருதி இந்தியா அதிக அளவில் உதவி செய்து வருகிறது.

பாகிஸ்தானில் அரசு ராணுவத்தின் கைப்பாவையாக நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து அதன் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. மதவெறி பிடித்த நாடாகவும் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் அளிக்கும் நாடாகவும் உருவெடுத்துள்ளது. இந்திய எல்லையில் உள்ள காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதத்தை தூண்டிவிட்டு அசாதாரண நிலையை 1990 - லிருந்து ஏற்படுத்தியது. மக்களிடம் இன வெறியை வளர்த்து அதன் விளைவாக "பண்டிட்' சமூகத்தைச் சேர்ந்த ஹிந்துக்கள், சீக்கியர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடு சொத்துக்களை விட்டு உயிர் தப்பினால் போதும் என்று மாநிலத்தை விட்டே வெளியேறி சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். வன்முறை நம்மை தீண்டாதவரை பயங்கரவாதிகள் பற்றி கண்டுகொள்வதில்லை. நாட்டு மக்களுக்கு நினைவூட்டும் வகையில் காஷ்மீர் பண்டிட்டுகள் இனப்படுகொலையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட "தி காஷ்மீர் ஃபைல்ஸ்' என்ற திரைப்படம் மனதை பதபதைக்க வைக்கிறது. ஆட்சியாளர்களின கையாலாகாத நிலையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. 

எல்லா தரப்பட்ட மக்களுக்கும் பாதுகாப்பு அளிப்பது அரசின் தலையாய கடமை. வன்முறையை கட்டுப்படுத்த முடியாத வலுவிழந்த ஆட்சி கொடுங்கோல் ஆட்சியை விட கொடியது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

போனவார கேள்விக்கு பதில்: காமன்வெல்த் நாடுகள் கூட்டமைப்பு நவம்பர் 19, 1926 -ஆம் வருடம் பால்ஃபர் பிரகடனம் அடிப்படையில் அமைக்கப்பட்டது . இந்தியா உட்பட 54 உறுப்பின நாடுகள். தலைமையிடம் லண்டன் இங்கிலாந்து.

இந்த வார கேள்வி:  உல்ஃபோவிட்ச் கோட்பாடு என்பது என்ன? 

(விடை அடுத்த வாரம்)

கட்டுரையாளர்: மேனாள் காவல்துறைத்தலைவர்
மேனாள் சட்டமன்ற உறுப்பினர்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com