வழக்குரைஞர் இல்லாமல் வாதாடலாமா?

காவல் துறையில்  அனைவரும் கெட்டவர்கள் அல்ல. அதே  சமயத்தில் நல்லவர்களும்  இல்லை.
வழக்குரைஞர் இல்லாமல் வாதாடலாமா?

காவல் துறையில் அனைவரும் கெட்டவர்கள் அல்ல. அதே சமயத்தில் நல்லவர்களும் இல்லை. பொய் வழக்கு அவ்வப்போது மக்கள் மீது போடப்பட்டு வருகிறது. அனுபவமுள்ள வழக்குரைஞரின் உதவியுடன் முறையாக எதிர் கொண்டால் மட்டுமே தண்டனையிலிருந்து தப்ப முடியும். இல்லையென்றால் செய்யாத குற்றத்திற்காகத் தண்டனையை அனுபவித்ததாக வேண்டும்.

பொய்க் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சரவணன் வழக்குரைஞர் உதவி இல்லாமல் எப்படி வழக்கு நடத்தி, தன் மேல் போடப்பட்டது பொய் வழக்கு என்று நிரூபித்து தண்டனையிலிருந்து தப்பினார் என்பதை விவரிக்கிறார்:

""இந்த சம்பவம் 22.05.2012 -இல் நடந்தது. நான் திருப்பூர் நல்லத்துப்பாளையம் ஸ்ரீநகரைச் சேர்ந்தவன். பணி செய்யும் இடத்திற்கு செல்வதற்கு திருப்பூர் சந்தைப்பேட்டை புதூர் தாண்டி செல்ல வேண்டும். அன்று மாலை சுமார் 5.20 இருக்கும் சந்தை பேட்டை புதூர் செக்போஸ்டில் காவலர்கள் ஐந்து பேர் இருந்தார்கள் அதில் ஒரு காவலர் எனது பைக்கை நிறுத்தச் சொன்னார். வண்டியை நிறுத்திய உடன் எதுவும் கேட்காமல் எனது பைக் சாவியை எடுத்துக் கொண்டார். "எதற்கு சார் சாவியை எடுத்தீர்கள்' என்றேன். "வண்டிய ஓரமா நிறுத்துடா' என்றார். "டாக்குமென்டுகளை காண்பி' என்றதும் காண்பித்தேன். பயிற்சி உதவி ஆய்வாளரிடம் இந்தக் காவலர் குசுகுசுத்தார். தன் பங்கிற்கு ஆய்வாளர் ஆவணங்களை சரிபார்த்து "வண்டிக்கு இன்சூரன்ஸ் இல்லையே' என்றார். வண்டி ஆவணங்கள் எல்லாவற்றையும் காவலரிடம் கொடுத்தேன்... "அதில் வண்டிக்கான காப்பீடும் இருக்கிறது' என்றேன்.

"வண்டிக்கு இன்சூரன்ஸ் இல்லை' என்று சொன்னவாறு அபராதம் இருநூறு ரூபாய் கேட்டார்கள். பணம் என்னிடம் இல்லை என்றேன். அபராதம் கட்டினால்தான் வண்டியைக் கொண்டு போகமுடியும் என்றார்கள். அரை மணி நேரம் காத்திருந்தேன். பிறகு உதவி காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் கொடுத்தேன். அவர் வண்டியை என்னிடம் ஒப்படைக்குமாறு சொல்லவே, வண்டியை என்னிடம் ஒப்படைத்தார்கள். வண்டி எடுக்கும் போது ‘இதெல்லாம் ஒரு பொழப்பா..' என்று முணுமுணுத்தவாறு வண்டியை நகர்த்தினேன். அதைக் கேட்ட காவலர் ஆய்வாளரிடம் போட்டுக் கொடுக்க... கைது செய்யப்பட்டேன். தகாத வார்த்தைகளால் பேசுதல், அரசு ஊழியரைப் பணி செய்யவிடாமல் தடுத்தல், அரசு ஊழியரை மிரட்டுவது போன்ற குற்றங்களை செய்ததாக "எஃப் ஐ ஆர்' போட்டார்கள். டாக்டரிடம் அழைத்துச் சென்று பரிசோதனை செய்தார்கள். நீதிமன்ற நடுவரிடம் அழைத்துச் சென்றார்கள். நான் நடந்ததைச் சொன்னேன் . மெளனமாக இருந்த நடுவர் என்னை 15 நாள் ரிமாண்ட் செய்தார்.

முதல் முதலாகச் சிறைக்குப் போவது வருத்தமாக இருந்தது. கோயம்புத்தூர் மத்திய சிறைச்சாலையில் அடைத்தார்கள். நான் உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினேன். "உன்னை பாளையங்கோட்டை ஜெயிலுக்கு அனுப்புவோம்' என்று காவலர்கள் பயமுறுத்தினார்கள். அடுத்த அரை மணி நேரத்தில் காவலர்கள் யார் யாரிடமோ பேசினார்கள். சிறைச்சாலையில் பிடிக்காத ஒரே ஒரு சொல் "உண்ணாவிரதம்'. என்னை கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார்கள்.

நான் கைதானத்தைக் கேள்விப்பட்ட எனது துணைவி 25.05.2012 -இல் தெரிந்தவர் ஒருவர் உதவியுடன் என்னை ஜாமீனில் வெளியே கொண்டு வந்தார். வழக்கு நடந்தது. எனக்காக நானே வாதிடுவதை நடுவர் விரும்பவில்லை. அதனால் நான் சமர்ப்பிக்கும் மனுக்களை பரிசீலனை செய்யவில்லை. மனு செய்ததன் பேரில் காவலர்கள் என்னிடம் எடுத்துக்கொண்ட பொருள்களைத் திருப்பித் தந்தார்கள். மூன்று ஆண்டுகளாகியும் வழக்கு நிலுவையில் வைக்கப்பட்டது. வழக்கின் நிலைமையை அறிய மாவட்ட தலைமை நீதிபதி, திருப்பூர் நடுவர் நீதிமன்றம், திருப்பூர் காவல் ஆய்வாளருக்கு பதிவுத் தபால் அனுப்பினேன். அதன் பிறகுதான் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

வண்டிக்கு உள்ள இன்சூரன்ஸை நீதிமன்றத்தில் காட்டி என் மேல் போடப்பட்டிருப்பது பொய் வழக்கு என்பதை நிரூபித்தேன். வழக்கு 2018 ஜனவரி தள்ளுபடியானது. இந்த வழக்கை நானே எனக்காக நடத்தினேன். இப்போது தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் சமூக பிரச்னைகளின் தீர்வுக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு பொது மக்கள் குறைகளைத் தீர்த்து வருகிறேன்' என்கிறார் சரவணன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com