மூழ்குவோம் புத்தகங்களில்... 

நொடிக்கு நொடி உலகம் மாறிக் கொண்டே இருக்கிறது. வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பம், உலகத்தின் இயக்கத்தை இன்னும் வேகமாக்கியுள்ளது.
மூழ்குவோம் புத்தகங்களில்... 


நொடிக்கு நொடி உலகம் மாறிக் கொண்டே இருக்கிறது. வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பம், உலகத்தின் இயக்கத்தை இன்னும் வேகமாக்கியுள்ளது. எத்தனையோ மாற்றங்களைத் தொழில்நுட்பங்கள் அன்றாட வாழ்வில் ஏற்படுத்தியுள்ளன; ஏற்படுத்தி வருகின்றன. அதே வேளையில், தொழில்நுட்பங்களால் நாம் பெற்றவையும் பல, இழந்தவையும் பல.

நவீன தொழில்நுட்பங்களால் அன்றாட வாழ்க்கை பெருமளவில் மாறியுள்ளது. பல்வேறு நன்மைகளைப் பெற்றுள்ளோம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

தொழில்நுட்பங்களால் நாம் இழந்த பழக்கங்களில் ஒன்று புத்தகம் வாசிப்பது. முன்பெல்லாம் தேவையான புத்தகத்தைத் தேடி அலைய வேண்டிய காலம் இருந்தது. அப்படி கண்டுபிடித்து புத்தகங்களை வாசிப்பதில் அதீத ஈடுபாடு இருந்தது.

இன்று உலகின் எந்த மூலையில் இருந்தாலும், தேவையான புத்தகங்களை அதிகபட்சமாக ஒரு மாதத்துக்குள் பெற்றுவிட முடியும். தொழில்நுட்பம் அத்தகைய வசதியை ஏற்படுத்தித் தந்திருக்கிறது. ஆனால், புத்தக வாசிப்புப் பழக்கத்தை இளைஞர்கள் பெரும்பாலும் கைவிட்டுவிட்டனர்.

ஸ்மார்ட்ஃபோனும் இணையமும் இளைஞர்களின் பெரும்பாலான நேரத்தைக் கபளீகரம் செய்து கொண்டிருக்கின்றன. 

பாடப் புத்தகங்களைப் படிப்பது, பணியில் ஈடுபடுவது போக மீதியிருந்த நேரத்தில் புத்தகங்களை வாசித்தவர்கள் தற்போது ஓடிடி பக்கமும் யூடியூப் விரித்த வலையிலும் சிக்கியுள்ளனர். ஸ்மார்ட்ஃபோனுக்கு அடிமையாகிவிட்டோம் என்ற உண்மை இளைஞர்கள் பலருக்குத் தெரியாமல் இருப்பதே, இதில் பெரும் துரதிருஷ்டம்.

புத்தகங்களை ஏன் படிக்க வேண்டும்? 

ஒரு திரைப்படத்தைவிட புத்தகத்தில் சுவாரஸ்யங்கள் இருந்துவிடுமா? என இளைஞர்கள் யாராவது கேள்வி எழுப்பினால், "ஆம்' என்றே பதிலளிக்கலாம். நிச்சயமாக, நூறு திரைப்படங்கள் தரும் சுவாரஸ்யத்தை ஒரு நல்ல புத்தகம் வழங்கிவிடும். புத்தகங்களால் அதற்கும் மேலும் வழங்க முடியும்.

வெறும் சுவாரஸ்யத்தை மட்டுமல்லாமல் புத்தகங்களால் பல்வேறு நன்மைகள் ஏற்படுகின்றன. மனதை ஒருமுகப்படுத்துவதற்கு புத்தகங்கள் உதவுகின்றன. நினைவாற்றலை புத்தகங்கள் மேம்படுத்துகின்றன. புத்தகங்களைப் படிப்பவர்களுக்குக் கற்பனைத்திறன் எல்லை கடந்து விரிவடைகிறது. புத்தகங்களைப் படிக்கும்போது அதுதொடர்பான காட்சி நம் மனத்திரைக்குள் ஓடிக்கொண்டிருக்கும். இது பல்வேறு தளங்களில் நம் கற்பனையைத் தூண்டிவிடுகிறது.

புத்தகங்களைத் தொடர்ந்து வாசிப்பது, நம்முடைய சமூகத் திறனை மேம்படுத்துகிறது. ஆளுமை வளர்ச்சியை மேம்படுத்துவதோடு, மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளும் திறனையும் சீர்படுத்துகிறது. புத்தகங்கள் வாயிலாக உலக அறிவைப் பெற முடிகிறது. பல்வேறு சமுதாயங்கள், கலாசாரங்கள், மக்களின் உணர்வுகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைப் புத்தகங்கள் கற்றுத் தருகின்றன.

சுயமுன்னேற்றப் புத்தகங்கள் தன்னம்பிக்கையை ஊட்டி வளர்க்கின்றன. ஒவ்வொரு நாவலும் பலருடைய வாழ்க்கையை வாழ்ந்து பார்க்கும் அனுபவத்தை வழங்குகிறது. நமக்கு ஒரே ஒரு வாழ்க்கை மட்டுமே கிடைத்துள்ளது. ஆனால், புத்தகங்களைப் படிப்பதன் வாயிலாகப் பலருடைய வாழ்க்கையைக் கண்கூடாக அனுபவிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. திரைப்படங்களில்கூட இத்தகைய அனுபவம் கிடைக்காது என்பதே நிதர்சனமான உண்மை.

சிறுகதைகள் பல்வேறு உண்மைகளைத் தெளியவைக்கின்றன; வாழ்க்கையின் யதார்த்தங்களைத் தெளிவுபடுத்துகின்றன. மனஅழுத்தம், தனிமையுணர்வு, தொடர் தோல்விகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்குத் தீர்வாகப் புத்தகங்கள் விளங்குகின்றன. உறவுகளிடையேயான தொடர்பை புத்தகங்கள் வலுப்படுத்துகின்றன. பணியில் சிறப்பாகச் செயல்படவும் புத்தகங்கள் துணைநிற்கின்றன.

நாம் படிக்கும் புத்தகங்கள் நமக்குள் எண்ணற்ற மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. அவற்றை நாமே கூட அறியமாட்டோம். ஆனால், புத்தகங்கள் வாயிலாக நம்முடைய ஆளுமைத் திறன் மேம்படுவதை நம்முடன் பழகுவோர் கண்கூடாகக் காண்பர். தொழிலுக்காகவும் பணிக்காகவும் பாடபுத்தகங்களைப் படிப்பது மட்டுமே வாழ்க்கையாகிவிடாது.

இந்த சமுதாயத்தைக் கற்றுக் கொள்வதற்கு பலதரப்பட்ட புத்தகங்களை வாசிப்பது மிகவும் அவசியம். 

அறிவைத் தொடர்ந்து வளர்த்துக் கொண்டால் மட்டுமே தற்போதுள்ள பணியைத் தக்கவைத்துக் கொண்டு முன்னேற முடியும். அதற்குக் கூட புத்தக வாசிப்பு அவசியம். புத்தகத்தால் இவ்வளவு பலன்கள் இருப்பதைத் தெரிந்துகொண்ட பிறகும், அதை வாசிக்க நேரத்தை ஒதுக்காமல் இருப்பது அறியாமை.

கடந்தகாலம் கடந்ததாகவே இருக்கட்டும். உலக புத்தக தினம் (ஏப். 23) நெருங்கிக் கொண்டிருக்கிறது. புதிய பயணத்தைத் தொடங்குவோம். புத்தகங்களில் மூழ்கிக் கிடப்போம். புத்தகங்களைக் கொண்டாடுவோம். வாழ்வைப் பெருமகிழ்ச்சிக்கு உரியதாக்குவோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com