பூமி பந்தின் மூன்றாவது கண்!

செயற்கைக்கோள் நேரடி வீடியோ ஒளிபரப்பு தொழில்நுட்பம் இன்றைய தகவல் தொழில்நுட்பத்தின் வியத்தகு வளர்ச்சி என்பது பூமி பந்தை மூன்றாவது கண்ணாக வலம் வந்து பாதுகாப்பு அரணாக விளங்குவதில் செயற்கைக்
பூமி பந்தின் மூன்றாவது கண்!

செயற்கைக்கோள் நேரடி வீடியோ ஒளிபரப்பு தொழில்நுட்பம் இன்றைய தகவல் தொழில்நுட்பத்தின் வியத்தகு வளர்ச்சி என்பது பூமி பந்தை மூன்றாவது கண்ணாக வலம் வந்து பாதுகாப்பு அரணாக விளங்குவதில் செயற்கைக் கோள்கள் அளப்பரிய பங்களிப்பை வழங்கி வருகிறது.

நாம் அன்றாடம் பயன்படுத்தும் கைப்பேசியை இயக்க வைப்பது முதல், பூமியை படம் பிடித்தல், வானிலை முன்னெச்சரிக்கைக்கு அறிக்கை தயாரித்தல், இயற்கை பேரிடர்களை கண்காணித்தல், நீர் நிலைகளில் வெள்ளப் பெருக்கு, கனிம வளம் கண்டறிதல், பெரு நகரங்களில் கட்டட குவியல்கள் கணக்கெடுத்தல் என அனைத்து பயன்பாடுகளுக்கும் செயற்கைக்கோள் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

விண்வெளி தொழில்நுட்பத்தில் வல்லரசு நாடுகளுக்கு இணையாக தன்னிறைவு பெற்ற நாடாக இந்தியா உள்ளதும் நாம் அனைவரும் அறிந்ததுதான். 

விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவை மிக முக்கியமான நாடுகளில் ஒன்றாக மாற்றியதில் கடந்த 50 ஆண்டுகளாக இஸ்ரோ சிறப்பான பணியை செய்துள்ளது. பல்வேறு தொழில்நுட்ப மைல்கற்களை எட்டிய பிறகு, விண்வெளி ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு நடவடிக்கைகளில் பங்கேற்க தனியார் நிறுவனங்களை இந்திய அரசு ஊக்குவித்து வருகிறது.

அந்தவகையில், சேலம் கன்னங்குறிச்சியைச் சேர்ந்த வி.ரமேஷ்குமார், செயற்கைக்கோள்களில் இருந்து நேரடி வீடியோ ஒளிபரப்பு தொழில்நுட்பத்துக்கென தனியாக "கிரகா ஸ்பேஸ்' நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார்.

செயற்கைக்கோள் நேரடி வீடியோ ஒளிபரப்பு தொழில்நுட்பம் குறித்து "கிரகா ஸ்பேஸ்' நிறுவனத்தின் இணை நிறுவனர் வி.ரமேஷ்குமார் கூறியது:

""உலகளவில் விண்வெளி தொழில்நுட்பத்தின் வர்த்தகம் தற்போது 380 பில்லியன் டாலராக உள்ளது. அடுத்த 20 ஆண்டுகளில் 1 டிரில்லியன் டாலருக்கு (சுமார் ரூ.1 லட்சம் கோடி) வர்த்தகம் உயரும் என மோர்கன் ஸ்டான்லி என்ற வர்த்தக ஏஜென்சி கணித்துள்ளது. எனவே விண்வெளி தொழில்நுட்பத்தில் அரசு சாரா நிறுவனங்களின் வருகை அதிகரித்துள்ளது. இதன் மூலம் விண்வெளி தொழில்நுட்ப வேலைவாய்ப்பு அதிகரிக்கும்.

குங்குமச்சிமிழ் அளவு முதல் பிரமாண்ட விமான அளவு வரை உள்ள பல்வேறு செயற்கைக்கோள்கள் பூமியை சுற்றி வருகின்றன. இதில் சிறிய அளவு செயற்கைக்கோள்கள் மூலம் காற்றின் மாசு, வளிமண்டலத்தில் உள்ள கதிர் வீச்சு, தட்ப வெட்ப அளவு பற்றிய பல்வேறு தகவல்களை பெற இயலும்.

பெரிய அளவிலான செயற்கைக்கோள்கள் புவியிடங்காட்டுதல் (ஜி.பி.எஸ்), கைப்பேசி தொழில்நுட்பம், நேரடி ஒளிபரப்பு உள்ளிட்டவைகளுக்கும், ராணுவ பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தப்படுகிறது. 

நிலம், கடல், மலைகள், மேக கூட்டம், சூறாவளி, பாலைவன ஆய்வு என பல தரப்பட்ட ஆய்வுகளுக்கு செயற்கைக்கோள்கள் மூலம் சேகரிக்கப்படும் புகைப்படங்கள் உதவுகின்றன.

உலகளவில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் விண்வெளி தொழில்நுட்பத்தில் தன்னிறைவு பெற்றுள்ளன. இந்தியாவும் உலக நாடுகளுக்கு இணையாக விண்வெளி தொழில்நுட்பத்தில் தன்னிறைவு பெற்றுள்ளது.

விண்வெளி தொழில்நுட்பத்தை வணிக ரீதியில் பயன்படுத்தும் வகையில் உலக நாடுகள் தனியார் நிறுவனங்களை ஊக்குவித்து வருகின்றன. அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளில் உள்ள தனியார் நிறுவனங்கள் ராக்கெட் தயாரித்து ஏவுதல், செயற்கைக்கோள்களை தயாரித்து விண்ணுக்கு ஏவுதல், விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு வீரர்களை அனுப்புதல், பொது மக்களை விண்வெளி சுற்றுலா அனுப்புதல் போன்றவற்றை செயல்படுத்தும் அளவு திறன் பெற்றுள்ளன.

இந்தியாவைப் பொருத்தவரை கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்ரோ மட்டுமே செயற்கைக்கோள்களை ஏவி வருகிறது. இந்தியாவிலும் விண்வெளி தொழில்நுட்பத்தில் தனியார் துறையை ஊக்குவிக்கும் வகையில் கொள்கை மாற்றங்கள் மத்திய அரசால் சென்ற ஆண்டு கொண்டு வரப்பட்டுள்ளன.

இதன் காரணமாக, இந்தியாவிலும் ராக்கெட் ஏவுதல், செயற்கைக்கோள் மற்றும் அதன் பாகங்கள் தயாரிப்பு என விண்வெளி சார்ந்த துறையில் அக்னிகூல், ஸ்கை ரூட், பிக்ஸல், பெல்லாட்ரிக்ஸ், காலாக்ஸை, துருவா ஸ்பேஸ் உள்ளிட்ட ஸ்டார்ட்டப் எனப்படும் தனியார் நிறுவனங்கள் கால் பதிக்க துவக்கியுள்ளன.  

இன்று வரை, கூகுள் மேப்ஸ் போன்ற செயலிகள் செயற்கைக்கோள் படங்களை மட்டுமே வழங்குகின்றன. இத்தகைய செயலிகள் நாஸா, ஏர்பஸ், ஈசா (ESA) போன்ற பல்வேறு நாடுகளின் செயற்கைக்கோள்களின் உதவியுடன் செயற்கைக்கோள் படங்களை நமக்கு வழங்குகின்றன.

இப்புகைப்படங்கள், மூன்று முதல், ஆறு மாதங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்டவையாகவோ, சில வருடங்களுக்கு முந்தையதாகவோ இருக்கலாம். ஆனால் வளர்ந்த நாடுகளின் ராணுவத்தினர் ஒவ்வொரு நாளும் படங்களை எடுக்க முடியும்.

தற்போது உக்ரைன் மீதான ரஷிய தாக்குதலில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட சம்பவங்கள் குறித்த போர் குற்றங்களுக்கு செயற்கைக்கோள் படங்கள், வீடியோக்கள் மறுக்க முடியாத ஆதாரமாக உள்ளன. இலங்கையில் ஈழத்தமிழர்கள் மீதான இனப்படுகொலை ஆதாரங்களுக்கு சாட்சியாக இருந்தது செயற்கைக்கோள் புகைப்படங்கள் என்பது முக்கியமானது.

இஸ்ரேல் - பாலஸ்தீன யுத்தம், சிரியா, ஈராக், தென்கொரியா-வடகொரியா பிரச்னைகள் போன்ற உலக நிகழ்வுகளை அறிந்து கொள்ள முக்கிய ஆதாரங்களாக விளங்குபவை செயற்கைக்கோள் புகைப்படங்களே. செயற்கைக்கோள்களைப் பயன்படுத்தி நிலையான படங்களை எடுப்பது மிகவும் எளிதானது.

ஆனால், ஒரே நேரத்தில் பூமியும் சுழல்கிறது, செயற்கைக்கோளும் சுற்றி வருவதால், செயற்கைக்கோள்களைப் பயன்படுத்தி நேரடி வீடியோக்களை நேரலை செய்வது தொழில்நுட்ப ரீதியாக சவாலானது. 

இப்போது அமெரிக்கா, ரஷியா, சீனா உள்ளிட்ட வெகு சில நாடுகளே செயற்கைக்கோள்களில் இருந்து நேரடி வீடியோ ஒளிபரப்பு செய்யும்தொழில்நுட்பத்தை வைத்துள்ளன. இதன்மூலம் பருவநிலை மாற்றம், எதிரிநாடுகளின் விமான நிலையங்கள், துறைமுகங்கள், ராணுவ கட்டமைப்புகள், நாட்டின் எல்லைகளில் என்ன நடக்கிறது போன்றவற்றை நேரடியாக வேவு பார்க்க்கின்றன.

நாங்கள் தொடங்கியுள்ள  "கிரகா ஸ்பேஸ்' நிறுவனத்தின் மூலம், பூமியில் இருந்து சுமார் 500 கிலோ மீட்டர் தூரத்தில் (லோ எர்த் ஆர்பிட் எனப்படும் குறு வட்ட பாதையில்) செயற்கைக்கோள்களை ஏவி, அவற்றின் மூலமாக, பூமியின் எந்த இடத்தையும் நேரலையாக பார்க்கக் கூடிய வகையில் வீடியோ ஒளிபரப்பு செய்ய முயற்சி எடுத்து வருகிறோம். என்னுடன் இஸ்ரோவில் 36 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து ஓய்வு பெற்ற விஞ்ஞானி எம்.லோகநாதன் என்பவர் திட்ட இயக்குநராக உள்ளார். 2011- இல் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் சார்பில் "எஸ்ஆர்எம்சாட்'  செயற்கைக்கோள் வடிவமைப்பில் தலைமை இயக்குநராக பதவி வகித்தவர்.

செயற்கைக்கோள்கள் வடிவமைப்பு மற்றும் செயற்கைக்கோள்களில் இருந்து நேரடி வீடியோ ஒளிபரப்பு திட்டங்களை இவரும் நானும் சேர்ந்து கவனித்து வருகிறோம். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு செயற்கைக்கோள் நேரடி வீடியோ ஒளிபரப்பு தொழில்நுட்பத்துக்கு காப்புரிமைக்கு விண்ணப்பித்துள்ளோம்.

எங்கள் நிறுவனத்தின் மூலம் நூற்றுக்கணக்கான நானோ செயற்கைக்கோள்களை பூமியின் குறுக்கு வட்ட பாதையில் ஏவி நேரடி வீடியோ ஒளிபரப்ப செய்ய முயற்சித்து வருகிறோம்.

ராணுவ பயன்பாடு, எல்லைகளை கண்காணித்தல், கட்டமைப்பு மேம்படுத்தல், இந்திய கடல் பரப்புகளை கண்காணித்தல், வெள்ளம், வனப்பகுதிகளில் தீ கட்டுப்படுத்தல் ஆகியவை உள்ளிட்ட பயன்பாடுகளுக்கு உபயோகப்படுத்த முடியும். மேற்கூறிய அனைத்து பயன்பாடுகளுக்கும் ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ட்ரோன்கள் பேட்டரி மூலம் 1 மணி நேரம் மட்டுமே இயக்க முடியும். மனிதனை கொண்டு ரிமோட் மூலம் இயக்கப்படுகிறது.

இதற்கு மாற்றாக செயற்கைக்கோள் நேரடி வீடியோ ஒளிபரப்பு பெரிய திருப்புமுனையாக இருக்கும். செயற்கைக்கோள் நேரடி வீடியோ ஒளிபரப்புக்கு முதற்கட்டமாக ஒரு செயற்கைக்கோள் ஏவ உள்ளோம். செயற்கைக்கோளில் இருந்து கிடைக்கும் தரவுகளை பெற்று ஆய்வு செய்ய உள்ளோம்.

பின்னர் அடுத்தடுத்து நூற்றுக்கணக்கான செயற்கைக்கோள்களை ஏவ திட்டமிட்டுள்ளோம். எங்களது தொழில் நுட்பத்தை பாராட்டி தெற்கு ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம் எங்களுக்கு தொழில் மானியம் வழங்க முன்வந்துள்ளது. தற்போது செயற்கைக்கோள் விண்ணில் செலுத்துவதற்கு தேவையான நிதியைப் பெற தனியார் முதலீட்டு நிறுவனங்களை அணுகியுள்ளோம்'' என்றார். 

படங்கள் - வே .சக்தி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com