நாமே நமது வாழ்க்கையின் சிற்பி!

பள்ளிகளில் படிக்கும்போது,  நமது கற்றல் திறன்,  விளையாட்டுத் திறன், சக மாணவர்களோடு பழகும் முறை, மற்றவர்களோடு குழுவாக இணைந்து செயலாற்றும் திறன், தலைமைப் பண்பு, நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கும்
நாமே நமது வாழ்க்கையின் சிற்பி!


பள்ளிகளில் படிக்கும்போது, நமது கற்றல் திறன், விளையாட்டுத் திறன், சக மாணவர்களோடு பழகும் முறை, மற்றவர்களோடு குழுவாக இணைந்து செயலாற்றும் திறன், தலைமைப் பண்பு, நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கும் திறன், சிக்கல்களைக் கையாளும் திறன், தோல்வி வெற்றிகளைக் கையாளும் பாங்கு, நட்பைப் பேணும் முறை, கொடுத்த வேலையை முடிக்கும் திறன்... இவ்வாறு நம்மிடம் ஒளிந்திருக்கும் அல்லது வெளிப்படும் எண்ணற்ற திறன்களைக் கண்டறிந்து அவற்றை நெறிப்படுத்தும் வேலையை ஆசிரியர்களும் பெற்றோரும் செய்தவண்ணம் இருப்பார்கள்.

ஒரு வகுப்பில் இருந்து மற்றொரு வகுப்புக்குத் தேர்ச்சி பெற மதிப்பெண்கள் அளவுகோலாகச் செயல்படும். அது நமது திறன்களைச் சீர்தூக்கி எடை போடவும், குறைவுள்ளவற்றை மேம்படுத்திக் கொள்ளவும், சிறப்பாக உள்ளவற்றை மேலும் சிறப்பாக்கிக் கொள்ளவும் உதவியாக இருக்கும். ஆனால், பள்ளி, கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு தொழில் அல்லது வேலைக்கு வந்த பிறகு, நமது திறமைகளை அளவிடுவதற்கு யார் இருக்கிறார்கள்?

வேலை செய்யும் நிறுவனத்தின் மேலதிகாரிகள் திறமைகளைக் கண்டறிந்து, அதை வளர்த்தெடுப்பார்கள் என்று யாரும் நம்பிவிடக் கூடாது. பணியிடத்தில் பொறாமை காரணமாக நம்மை சிறுமைப்படுத்தும் வேலைகளில் பலர் ஈடுபடக் கூடும். இதில் கவனமாக இருப்பது நல்லது. அப்படியானால், நமது தொழில் அல்லது பணி வாழ்க்கையில் உயரத்தைத் தொட நமக்கு வழிகாட்டுவது யாராக இருக்க முடியும்?

உண்மையில், அதற்கு நம்மைத் தவிர, வேறு ஆள் பொருத்தமாக இருக்க மாட்டார்கள்.

மாறாநிலை: கல்லூரிப் படிப்பை முடித்த கையோடு, ஒரே நிறுவனத்தில் ஒரே நாளில் வேலையில் சேர்ந்திருப்போம். 10 ஆண்டுகள் கழித்து திரும்பிப் பார்த்தால், நம்மோடு பணியில் சேர்ந்த பலர் பெருநிறுவனங்களுக்குத் தாவி இருப்பார்கள்; துறைசார்ந்த வல்லுநர்களாக உயர்ந்திருப்பார்கள். 10 ஆண்டுகளில் 20 நிறுவனங்களுக்குத் தாவி, நிறுவனத்தின் உயர்ந்த இடத்தைப் பிடித்திருப்பார்கள். நமக்கு பணி நியமன ஆணையைக் கொடுத்த உயரதிகாரி, பணி ஓய்வு பெற்று சமூகப்பணிகளுக்குச் சென்றிருப்பார். அப்படியானால், நாம் மட்டும் ஏன் இருந்த இடத்திலேயே இருக்கிறோம்?

அடுத்து என்னதான் செய்ய வேண்டும்? நமது தொழில் அல்லது பணி வாழ்க்கையை எப்படிக் கட்டமைத்துக் கொள்வது? இந்தக் கேள்விக்கு நாம் தான் விடை காண வேண்டும்.

பின்னூட்ட வழிமுறை: ஆனாலும், நவீன மேலாண்மை அறிஞரான பீட்டர் டிரக்கர்,' தன்னைத்தானே நிர்வகிப்பது' (Managing Oneself) என்ற தனது நூலில் தொழில் அல்லது பணி வாழ்க்கையில் (Career Life) நம்மை நாமே நிர்வகித்துக்கொள்வது எப்படி என்பதை விளக்கி உள்ளார். அவரது கூற்றுப்படி, முதலில் நமது "பலம்' எவை என்பதை அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டும். பெரும்பாலானோரின் தொழில் அல்லது பணி வாழ்க்கை "பலம்' என்ற அடிக் கட்டுமானத்தின் மீது கட்டமைக்கப்படுகிறது. ஆனால், நம்மில் பலருக்கு நமது "பலம்' எது என்பதைக் கண்டறிய முடிவதில்லை. நமது திறன்கள், விருப்பங்கள் எது என்பதும் தெரிவதில்லை. இதை கண்டறிவதற்கு "பின்னூட்ட முறை'யைக் (Feedback) கையாளுவது நமது "பலம்' எது என்பதை துல்லியமாகக் கண்டறிய உதவும் என்கிறார் பீட்டர் டிரக்கர்.

பலம்- பலவீனம் பகுப்பாய்வு: பின்னூட்டப் பகுப்பாய்வு முறையைக் கையாளும்போது, உங்கள் வாழ்க்கையில் "முக்கியமான முடிவு'களை எடுக்கும்போதும், வேலையில் "முக்கியமான நடவடிக்கை'யில் ஈடுபடும்போதும் உங்களது எதிர்ப்பார்ப்புகள் என்ன என்பதை வரிசைப்படுத்தி எழுதி வைத்துக்கொள்ள வேண்டும். 10 மாதங்கள் அல்லது ஓராண்டுக்குப் பிறகு, உங்கள் முடிவுகள் அல்லது நடவடிக்கைகளுக்குக் கிடைத்துள்ள பலன்களை, நீங்கள் எழுதி வைத்துள்ள உங்கள் எதிர்பார்ப்புகளோடு பொருத்திப் பாருங்கள். இப்படியே செய்து வந்தால், 2- 3 ஆண்டுகளில் உங்கள் "பலம்' மற்றும் "பலவீனம்' என்ன என்பதை உங்களால் எளிதில் கணித்துவிட முடியும்.

பலவீனங்களைச் சீர்செய்ய முயற்சிப்பதோடு, "பலம்' எதுவோ அவற்றில் கவனம் செலுத்துகையில், உங்கள் தொழில் அல்லது பணியில் திறமையை வெளிப்படுத்த வாய்ப்புக் கிடைக்கும். பலவீனங்களைச் சரிசெய்ய முயன்று பாருங்கள். முடியாவிட்டால், அதில் அதிக நேரத்தைச் செலவழிக்காமல், பலமானவற்றில் கவனம் செலுத்துங்கள். பலவீனங்கள் வெற்றிக்குத் துணை நிற்காது என்பதால், அவற்றைப் பற்றி அதிக கவலை அடையக் கூடாது.

அடுத்ததாக, உங்களை நீங்கள் ஆழமாக "அறிந்து' கொள்வது அவசியமாகும். இதற்கு சுயபகுப்பாய்வில் (self-analysis) ஈடுபட வேண்டும். மேலும், உங்களது குறிக்கோள்கள், மதிப்பீடுகள், நோக்கங்கள் மீது தொழில் அல்லது பணி ஏற்படுத்தும் தாக்கங்கள் என்ன என்பதை ஆராய வேண்டும். உங்கள் நிறுவனத்தின் இலக்குகளும், உங்கள் தனிப்பட்ட நெறிமுறை கண்ணோட்டமும் ஒத்துப்போகிறதா என்பதை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

அது பொருத்தமற்றதாக இருக்கும்பட்சத்தில் வேறு வேலை அல்லது தொழிலுக்கு மாறுவதே நல்லது. அப்படியில்லாமல், அதே நிறுவன வேலையில் நீடிப்பது ஏமாற்றம் மற்றும் விரக்திக்கு வழிவகுத்துவிடும். உங்கள் மனத்திறன் செயல்படுவதற்குத் தகுந்தபடி அறிவு விழிப்புணர்வை வளர்த்துக்கொள்வது மிக முக்கியம்.

நீங்கள் எப்போது சிறப்பாகச் செயல்படுகிறீர்கள்? தனியாக இருக்கும்போதா, அல்லது குழுவாக செயல்படும்போதா, ஒரு குழுவிற்குத் தலைமையேற்க விரும்புகிறீர்களா அல்லது குழுவில் அங்கம் வகித்து செயல்பட விரும்புகிறீர்களா? நெருக்கடியான கால கட்டத்தில் முக்கியமான முடிவுகளைத் துணிந்து எடுப்பதில் இயல்பாக இருப்பீர்களா, அல்லது முடிவெடுக்கும் நடைமுறையில் அங்கம் வகிக்காமல் பிறருக்கு ஆலோசனை கூறுவதில் மட்டும் சிறந்து விளங்குவீர்களா? மிகப் பெரிய நிறுவனத்திற்கு பணியாற்றும்போது ஆற்றல் ததும்புவதாக உணர்வீர்களா, அல்லது சிறிய நிறுவனத்தில் பணியாற்றுவதில் திருப்தியாக உணர்வீர்களா? இந்த எல்லாக் கேள்விகளுக்கும் விடை தெரிந்துகொள்ள வேண்டும்.

இதுதவிர, தற்போது பணியாற்றும் வேலை உங்கள் மதிப்பீடுகளோடு ஒத்துப்போகிறதா, உங்கள் பலங்களை பன்மடங்காக பெருக்குகிறதா, உங்களது பங்களிப்பை அதிகப்படுத்த அனுமதிக்கிறதா என்ற கேள்விகளுக்கு பதில் "ஆம், எல்லாம் ஒத்துப்போகிறது' என்று இருந்தால், ஒரு சாதாரண மனிதர் கூட "சிறந்த செயல்திறன்' உள்ளவராக மாற்றிக்கொள்ள முடியும்.

மகத்தான மனித உறவு: பணியிடத்தில் வெற்றிகரமான மனிதரான வெளிப்படுவதற்கு, சக ஊழியர்கள் அல்லது அதிகாரிகளோடு சிறந்த மனித உறவைப் பராமரிப்பது முக்கியம். நீங்கள் தனியாக வேலை செய்வதாக இருந்தாலும், சக ஊழியர்கள் அல்லது அதிகாரிகளைப் புரிந்துகொண்டு செயல்பட்டால், அது ஆக்கப்பூர்வமானதாக மாறிவிடும். இதன்மூலம், சக ஊழியர்கள் அல்லது அதிகாரிகளின் பலம், விரும்பும் வேலை, மதிப்பீடுகளை அறிந்துகொள்ள இயலும்.

குழு அல்லது அணித் தலைவராக இருந்துவிட்டால், குழுவில் அங்கம் வகிப்போர் குறித்து அறிந்து வைத்திருப்பது, அவரவர் திறமைகளை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவும், வேலைகளை எளிதாக முடிக்கவும் உதவும். சக மனிதர்களோடு இயல்பாகப் பேசக் கூடியவர்கள் மற்றும் தனது உயரதிகாரியைப் போலச் செயல்படும் ஆற்றல் கொண்டவர்களால் சாதனையை நோக்கிப் பயணிப்பது எளிதாகிவிடும்.

உங்கள் சக ஊழியர்களைப் புரிந்துகொள்வதற்கு, அவர்களின் பலம், முன்னுரிமைகள், மதிப்பீடுகள் குறித்து கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். உங்களது திறன்கள், அணுகுமுறைகள் குறித்து அவர்களோடு கலந்தாலோசிக்கத் தவறிவிடாதீர்கள்.

நாமே நமக்கு சிற்பி: உங்கள் தொழில் அல்லது பணி வாழ்க்கையை உங்களது சக பணியாளர்கள், உயரதிகாரிகள், முதலாளிகள் அல்லது நிறுவனம் வகுத்துக் கொடுக்கும் என்று எதிர்பார்க்காதீர்கள். உங்கள் தொழில் அல்லது பணி வாழ்க்கையை நாமே நமக்கு சிற்பியாக இருந்து செதுக்கிக்கொள்ள வேண்டும். கண்ணுக்குத் தெரியும் மாற்றங்களை எந்த வேலை அல்லது தொழில், எப்படி நிகழ்த்திக் காட்ட முடியும் என்பதை உங்களிடம் கேள்வியாகக் கேட்டு பதிலைத் தெரிந்துகொள்ளுங்கள்.

அதேபோல, குறிக்கோள் எது என்பதை முடிவு செய்துகொள்ளுங்கள். சாத்தியமானதை குறிக்கோளாக எடுத்துக் கொள்ளுங்கள். சிறியதா, பெரியதா என்பது முக்கியமல்ல, எது சாத்தியம் என்பதே முக்கியமானது. உங்களது "குறிக்கோள்' ஆக்கப்பூர்வமானதாகவும், உங்களை எப்போதும் இயக்கும் ஆற்றலாகவும் இருக்க வேண்டும்.

சாதிக்க விரும்பும் இலக்கு, கண்ணுக்குத் தெரியக் கூடியதாகவும், கணக்கிடக் கூடியதாகவும் இருக்க வேண்டும். மொத்தத்தில், உங்கள் தொழில் அல்லது பணி வாழ்க்கைக்கு "நீங்களே தலைமை செயல் அதிகாரி' என்பதை நினைவில் கொண்டு செயல்பட்டால், நினைப்பது முடியும், வானம் வசப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com