கரோனா... எதிர்கொண்ட தொழில்நுட்பங்கள்!

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கரோனா எனும் பெருந்தொற்று உலகையே ஆட்டிப் படைத்து வருகிறது. தொடர்ந்து
கரோனா... எதிர்கொண்ட தொழில்நுட்பங்கள்!

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கரோனா எனும் பெருந்தொற்று உலகையே ஆட்டிப் படைத்து வருகிறது. தொடர்ந்து அடுத்தடுத்த அலைகளால் 
உலகம் முழுவதுமுள்ள மக்கள் உடைந்துதான் போனார்கள். கரோனாவால் தங்களுக்கு நெருக்கமானவர்களை இழந்ததுடன் பொருளாதாரரீதியாகவும் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

கரோனா அலைகளில் இருந்து மக்களைக் காப்பாற்ற உலக நாடுகள் தடுப்பூசி கண்டறியும் ஆய்வுகளில் தீவிரமாக ஈடுபட்டு, ஓராண்டிலேயே தொற்றுக்கு எதிரான தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு தற்போது முழுவதுமாக பயன்பாட்டிலும் இருந்து வருகின்றன. கரோனாவின் அடுத்தடுத்த உருமாறிய வகைகளும் அதனைக் கண்டறியும் மற்றும் தடுக்கும் ஆய்வுகளும் தொடர்கின்றன. 

இன்னும் எத்தனை அலைகள், எந்த மாதிரியான தாக்கங்கள் இருக்கும் எனத் தெரியவில்லை. ஒவ்வோர் அலையும் ஒவ்வொருவிதமான பாதிப்பை ஏற்படுத்திச் சென்றுள்ளன.   

கரோனா பாதிப்பு என்பது உலகிற்குப் புதிதாக இருந்தாலும் அறிவியல் தொழில்நுட்பத்தால் மட்டுமே எளிதாக அதன் தாக்கத்தைக் கட்டுப்படுத்த முடிந்திருக்கிறது.   கரோனா காலத்தில் தொற்றில் இருந்து தப்பிக்கவும், நிலைமையைச் சமாளித்து மீண்டு வருவதற்கும், இதர சேவைகளை மக்கள் தொடர்வதற்கும் தொழில்நுட்பம் மட்டுமே கைகொடுத்தன. 

கரோனா பாதிப்பைக் கண்டறிதலில் தொடங்கி, வீட்டில் முடங்கியிருந்த மக்களுக்கு தகவல் தொடர்பு ஏற்படுத்தித் தந்தது வரை அனைத்திற்கும் தொழில்நுட்பமே  உதவியாக இருக்கிறது . 

ஆன்லைன் கல்வியும், ஆன்லைன் உரையாடலும், ஆன்லைன் வேலை என தகவல் தொழில்நுட்பத்தால் நமது அன்றாட  வாழ்க்கைமுறையே மாறிப் போனது.

அனைத்துத்துறைகளிலும் புதுமை ஏற்பட்டு வரும் சூழலில் சுகாதாரத்துறை யிலும் பல தொழில்நுட்ப மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. அதிலும், கரோனா காலத்தில் தொழில்நுட்ப உதவியின்றி இவ்வளவு பெரிய பேரிடரை சமாளித்திருக்க முடியாது. 

தொற்றைக் கண்டறிதல், அதனைக் கண்காணித்தல், தகவல் தொடர்பு மூலமாக நோயாளிகளை ஒரேநேரத்தில் கண்காணித்து ஒருங்கிணைத்தல், தடுப்பூசி கண்டுபிடிப்பு, அதனைச் செயல்படுத்துதல், பாதிக்கப்பட்டோர் விவரங்களைக் கையாளுதல்,  தடுப்பூசிகள் செலுத்திக் கொண்டவர்களின் விவரங்கள் என அனைத்தும் தொழில்நுட்பத்தின் வாயிலாக அரங்கேறின. 

அதற்கும் அடுத்தபடியாக சுகாதாரத் துறையில் சில முக்கிய தொழில்நுட்ப மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. 

கரோனா பற்றிய  தகவல்கள்:  உலக சுகாதார அமைப்பு தொடங்கி மத்திய, மாநில அரசுகள், உள்ளூர் அமைப்புகள் வரை அதிகாரப்பூர்வ பக்கங்களில் சரியான தகவல்களை வெளியிட்டு மக்களைச் சென்றடையச் செய்தது மிக முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. 

டிஜிட்டல் தகவலில் நம்பிக்கையை உருவாகுதல் என்பது இந்த கரோனா காலத்தில் சாத்தியமாயிற்று. 

டெலிமெடிசின்: சமூக இடைவெளி, ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களினால் மக்களால் வெளியில் செல்ல முடியாத பேரிடர் சூழ்நிலையில், பெரும்பாலான மருத்துவ ஆலோசனைகள் தொலைபேசி வழியாக நடைபெற்றது மருத்துவத் துறையில் முக்கியமான ஒன்று. 

கடந்த இரு ஆண்டுகளில் மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கே பெரும் அளவில் முக்கியத்துவம் கொடுத்த நிலையில், இதர உடல்நலப் பிரச்னை கொண்டவர்களுக்கு கடும் சிரமம் ஏற்பட்டது. 

அந்த நேரத்தில் தொலைபேசி வழியாக மருத்துவரிடம் ஆலோசனை பெற்று மருந்துகள் மூலமாக சிகிச்சை எடுத்துக் கொள்ளும் நிகழ்வுகளும் நடந்தன. இன்று அனைவரது கையிலும் மொபைல் போன் இருக்கும் காரணத்தினால் இது மிகவும் எளிதாக நிகழ்ந்துவிட்டது.

செவிலியர் சேவை: வயதானவர்களுக்கும் தீவிர நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும் அவசியம் தேவைப்படுவது செவிலியரின் சேவை. 

கரோனா ஆரம்பித்த காலத்தில் செவிலியர்கள் பற்றாக்குறை என்பது உலகம் முழுவதுமே பெரும் பிரச்னையாக இருந்தது. இப்படி ஒரு பேரிடர் வரும் என்று யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை. இதனால் தனிப்பட்ட பணியில் இருந்த செவிலியர்களும் தற்காலிக அடிப்படையில் மருத்துவமனைகளில் பணிபுரிய நேரிட்டதால் வீட்டில் இருக்கும் வயதானவர்களுக்கும், நோயாளிகளுக்கும் செவிலியர் பற்றாக்குறை ஏற்பட்டது. 

கரோனாவின் அடுத்தடுத்த அலைகளில் செவிலியர் பற்றாக்குறை ஓரளவு சரிசெய்யப்பட்டது என்றாலும் வேலைப்பளுவால் செவிலியர்களும் மன அழுத்தத்திற்கு ஆளாகி இருந்தனர். 

எனினும், செவிலியர்களும் காணொலி மூலமாக நோயாளிகளுக்கு ஆலோசனை வழங்குகின்றனர். வரும் ஆண்டுகளில் காணொலி வழி மருத்துவ ஆலோசனை இன்னும் அதிகரிக்கலாம் என்று கருதப்படுகிறது. 

மருத்துவர் ஆலோசனை : செவிலியர் சேவை எந்த அளவுக்கு முக்கியமோ மருத்துவரின் ஆலோசனையும் நோயாளிகளுக்கு மிகவும் முக்கியமானது. செவிலியர்களை ஒப்பிடுகையில் மருத்துவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. எனவே, இந்த கரோனா காலத்தில் நேரில் வர முடியாத நோயாளிகளுக்கு ஆன்லைன் காணொலி காட்சி வாயிலாக மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன. 

மருத்துவர்கள் பலரும் கரோனா குறித்த தங்கள் ஆலோசனைகளை யூ ட்யூப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் வாயிலாகவும் வெளியிட்டனர். மேலும், தொழில்நுட்பத்தின் மூலமாக நோயாளிகளை எளிதாக கையாள முடிந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்: பல்வேறு துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கரோனா காலத்தில் சுகாதாரத்துறையிலும் அதிகப்படியான நேர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. 

தொற்று அபாயத்தை விரைவில் கண்டறிதல், நோயாளிகளின் நிலைகளைக் கண்காணித்தல், தடுப்பு நடவடிக்கைகள் என பலவற்றிலும் உதவியுள்ளது. கரோனா பரிசோதனை முடிவுகளை மொபைல்போனில் பெறுதல், ஆலோசனை பெறுதல், கரோனா நோயாளிகளை நிர்வகித்தல் என முன்னேற்றம் கண்டு வருகிறது. 

அடுத்தகட்டமாக தற்போது ஸ்கேன், எக்ஸ் ரே முடிவுகளைக் கூட நேரடியாக மொபைல் வாட்ஸ் ஆப் செயலியில் அனுப்பும் அளவுக்கு கருவிகளும் வந்துவிட்டன. 

இறுதியாக, எந்தவொரு தொழில்நுட்பத்தின் அடுத்தகட்ட வளர்ச்சியிலும் சில குறைகளும் இருக்கலாம். ஆனால், பலவித நோய்கள் இன்று எளிதாக கண்டறியப்பட்டு எளிதாக சிகிச்சைகளும் கிடைக்கின்றன. தொழில்நுட்பத்தின் மூலமாக மருத்துவத் துறை இன்று வளர்ச்சி கண்டிருக்கிறது. அதிலும், எதிர்பாரா இந்த கரோனா பேரிடர் காலத்தில் மருத்துவ சேவையில் தொழில்நுட்பத்தின் அவசியத்தை, அதன் வளர்ச்சியை அனைவருமே உணர்ந்திருக்க முடியும்.  
- கோமதி எம்.முத்துமாரி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com