நீரிழிவு நோய்...: தொடர்ச்சியான கண்காணிப்பு... வழிகாட்டல்!

நீரிழிவு நோய் அதிகமுள்ள நாடுகளில் உலக அளவில் நாம் இரண்டாம் இடத்தைப் பிடித்து இருக்கிறோம். ஏறக்குறைய 7 கோடியே 70 லட்சம் பேர் இந்தியாவில்நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
நீரிழிவு நோய்...: தொடர்ச்சியான கண்காணிப்பு... வழிகாட்டல்!

நீரிழிவு நோய் அதிகமுள்ள நாடுகளில் உலக அளவில் நாம் இரண்டாம் இடத்தைப் பிடித்து இருக்கிறோம். ஏறக்குறைய 7 கோடியே 70 லட்சம் பேர் இந்தியாவில்நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஏழு பேரில் ஒருவருக்கு நீரிழிவு நோய் வருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன என்கிறது ஓர் ஆய்வு.

நீரிழிவு நோய்க்காக தினமும் ஊசிமருந்தை உடலில் செலுத்திக் கொள்வதுடன் பலர் தங்களுடைய பணி முடிந்துவிட்டதாகக் கருதுகிறார்கள். முறையாக உடல் நலனைப் பேணாமல் இருப்பதால், நீரிழிவு நோய் குணப்படுத்த முடியாத ஒரு நோயாகவே இருக்கிறது.

குறைந்தபட்சம் நீரிழிவு நோயின் பாதிப்புகளைக் குறைக்க என்ன செய்ய வேண்டும் என்று நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பலருக்கும் தெரியாது. இப்படிப்பட்ட நிலையில் நீரிழிவு நோயாளிகளின் உடல்நிலையைக் கண்காணித்து, அவர்களுடைய உணவு, உறக்கம், உடற்பயிற்சி, மருத்துவம் ஆகியவற்றுக்கு ஆலோசனை தரும் நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வருகிறார் பெங்களூருவைச் சேர்ந்த இளைஞர் மதன் சோமசுந்தரம். பெங்களூருவைத் தலைமையகமாகக் கொண்டுள்ள அந்நிறுவனத்தின் பெயர் சுகர்.ஃபிட். இந்த நிறுவனம் தற்போது அகமதாபாத், ஜெய்பூர், இந்தூர், லக்னெü, ஹைதராபாத், சென்னை, பெங்களூர், டெல்லி, கொல்கத்தா, புணே ஆகிய நகரங்களில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, நீரிழிவு நோயாளிகளுக்கான ஆலோசனைகள், மருத்துவ வழிகாட்டல்களை இந்நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

இது குறித்து மதன் சோமசுந்தரம் கூறியதிலிருந்து...

""நீரிழிவு நோயை மூன்று வகையாகப் பிரிக்கலாம். டைப் 1 நீரிழிவு நோய் என்பது பரம்பரையாக வருவது. அதைக் குணப்படுத்துவது எளிதல்ல. டைப் 2 நீரிழிவு நோய் உள்ளவர்கள் தகுந்த, முறையான வாழ்க்கை முறைகளைப் பின்பற்றுவதன் மூலம், அவர்களுக்கு உள்ள நீரிழிவு நோயின் பாதிப்பை வெகுவாகக் குறைக்கலாம். அதுமட்டுமல்ல, அவர்களுக்கு உள்ள நீரிழிவு நோயின் அளவையும் குறைக்கலாம்.

மூன்றாவதாக உள்ளது, நீரிழிவு நோய் வருவதற்கான அறிகுறிகள் இருப்பது. நீரிழிவு நோய் வருவதற்கான அறிகுறிகள் உள்ளவர்களுக்குத் தகுந்த, முறையான வாழ்க்கை நடைமுறைகளைக் கற்றுக் கொடுத்து, அவர்களைப் பின்பற்ற வைப்பதன் மூலம் நீரிழிவு நோய் அவர்களுக்கு வராமலேயே தடுத்து
விடலாம்.

நாங்கள் எங்கள் நிறுவனத்தின் மூலம் டைப் 2 நீரிழிவு நோய் உள்ளவர்கள் மற்றும் நீரிழிவு நோய் வருவதற்கான அறிகுறிகள் உள்ளவர்களுக்கு முறையான வழிகாட்டுதல்களைக் கொடுத்து, நீரிழிவு நோயின் பாதிப்பிலிருந்து அவர்களைப் பாதுகாக்கிறோம்.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு ரத்தத்தில் குளுக்கோஸின் அளவு எவ்வளவு இருக்கிறது என்பதைக் கண்டறிவது அவசியம். இதற்கு இரண்டு வழிமுறைகள் உள்ளன. உடலில் உள்ள ரத்தத்தில் ஒரு துளி எடுத்து அதைச் சோதனை செய்து பார்த்து, குளுக்கோஸின் அளவு எவ்வளவு இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்கலாம்.

இந்த முறையில் சில குறைகளும் உள்ளன. ரத்தம் எடுத்த அந்த நிமிடத்தில் ரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை மட்டுமே இதன்மூலம் தெரிந்து கொள்ள முடியும். ஆனால் மனிதர்களின் உடலில் ரத்தத்தில் குளுக்கோஸின் அளவு அடிக்கடி மாறிக் கொண்டே இருக்கும். சாப்பிட்டவுடன் ரத்தத்தில் குளுக்கோஸ் இருக்கும் அளவுக்கும், சாப்பிட்டு சிறிது நேரம் கழித்து பசியாக இருக்கும்போது இருக்கும் அளவுக்கும் வேறுபாடு இருக்கும். அப்படி என்றால் ரத்தத்தில் குளுக்கோஸின் அளவைத் துல்லியமாகக் கணக்கிடுவது எப்படி? ஒரு நாளில் எந்த எந்த நேரங்களில் குளுக்கோஸின் அளவு மாறுகிறது என்பதைக் கண்டுபிடிப்பது எப்படி? அதற்கேற்ப உணவுமுறைகளையும், வாழ்க்கை நடவடிக்கைகளையும் மாற்றிக் கொள்வது எப்படி? என்பன போன்ற பல கேள்விகள் எழ வாய்ப்புகள் இருக்கின்றன.

எனவே நாங்கள் ரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவைக் கண்டுபிடிப்பதற்காக வேறு ஒரு முறையைக் கையாள்கிறோம். தொடர்ச்சியாக ரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவைக் கண்டுபிடிக்கும் முறையே (கன்டினியஸ் குளுக்கோஸ் மானிட்டரிங்) அது. இதற்காக ஒரு சிறிய கருவியை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் முழங்கைக்கு மேலே பொருத்துகிறோம். இந்தக் கருவியில் நுனியில் உள்ள ஊசி உடலில் மெல்லிதாக குத்தும். உடலில் திசுக்களுக்கு இடையே உள்ள திரவத்தை இந்த ஊசி உறிஞ்சி அதிலிருந்து ரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவைக் கண்டுபிடிக்கும்.

இந்தக் கருவியில் உள்ள சென்சார்கள் குளுக்கோஸின் அளவைக் கண்டுபிடித்து, இணையத் தொழில்நுட்பத்தின் மூலம் கருவியுடன் இணைக்கப்பட்டுள்ள ரிசீவருக்கோ அல்லது ஸ்மார்ட் போன் செயலிக்கோ அனுப்பி வைத்துவிடும்.

பின்னர் அந்த தகவல்கள் ரிசீவரின் திரையிலோ, ஸ்மார்ட் போன் திரையிலோ வெளியிடப்படும். ஒவ்வொரு நிமிடமும் ரத்தத்தில் குளுக்கோஸின் அளவு எந்த அளவுக்கு இருந்தது என்பதைத் துல்லியமாகக் காட்டும். எந்த அளவுக்கு, எப்போது, குளுக்கோஸின் அளவு அதிகமானது, குறைந்தது என எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள முடியும்.

இந்தத் தகவல்களின் அடிப்படையில் ஒருவரின் ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவு, என்ன மாதிரியான உணவை உட்கொண்டால் அதிகரிக்கிறது? அல்லது குறைகிறது? எவ்வளவு நேரம் தூங்கினால், எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்தால் குளுக்கோஸின் அளவில் மாற்றம் நிகழ்கிறது என்பதைக் கண்டுபிடிக்க முடியும்.

இந்த அடிப்படையில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உடனே என்ன செய்ய வேண்டும்? மருத்துவரைச் சந்திக்க வேண்டுமா? எந்த உணவை உட்கொள்ள வேண்டும்? என்ன உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்? எவ்வளவு நேரம் ஓய்வெடுக்க வேண்டும்? என்பன போன்ற ஆலோசனைகளை எங்களுடைய நிறுவனத்துடன் தொடர்பில் உள்ள நீரிழிவு நோய் மருத்துவர்கள் அவர்களுக்குத் தெரிவிப்பார்கள். அதற்கு வாட்ஸ்அப் வீடியோ கால் மூலம் பேசலாம்.

தேவைப்பட்டால் நோயாளியின் உடல் நிலைக்கேற்ப எங்களுடன் தொடர்பில் உள்ள ஆய்வுக்கூடங்களில் ரத்த, சிறுநீர் பரிசோதனைகளையும் மேற்கொள்ளலாம்.

தொடர்ச்சியாக ரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவைக் கண்டுபிடிக்கும் எங்களுடைய இந்த முறையினால், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் நீரிழிவு நோய்க்கான முன் அறிகுறிகள் உள்ளவர்கள் தங்களுடைய வாழ்க்கைமுறையை முற்றிலும் மாற்றிக் கொள்ள முடியும். அதன் மூலம் நீரிழிவு நோயின் பாதிப்புகளைக் குறைக்க முடியும் ஏன், நீரிழிவு நோயையே குறைக்க முடியும். நீரிழிவு நோய் வருவதற்கான அறிகுறிகள் உள்ளவர்கள் நீரிழிவு நோய் வராமல் தடுக்க முடியும்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com