மருந்தியல் படிப்புகள்...  அதிகரிக்கும் தேவைகள்!

இன்றைக்கு புதுப்புது நோய்களின் தாக்கம் பெருகியுள்ளது. நோயில்லாத மனிதர்களைக் காண்பது அரிதாகியுள்ளது.
மருந்தியல் படிப்புகள்...  அதிகரிக்கும் தேவைகள்!

இன்றைக்கு புதுப்புது நோய்களின் தாக்கம் பெருகியுள்ளது. நோயில்லாத மனிதர்களைக் காண்பது அரிதாகியுள்ளது. உணவை போல மருந்தும் அத்தியாவசியமாகிவிட்டது. உணவில்லாமல் இருக்கலாம்; மருந்தில்லாமல் இருக்க முடியாது என்ற நிலை உருவாகிவிட்டது.  இங்கு தான் மருந்துகளின் முக்கியத்துவத்தை உணரமுடியும். மருந்துகளைப் பற்றி படிப்பது தான் மருந்தியல் கல்வி:

பல்வேறு நிலைகளில் மருந்தியல் படிப்புகள் உள்ளன. இந்தியாவில் ஆண்டுதோறும் 300 மருந்தியல் கல்வி நிறுவனங்களில் 20 ஆயிரம் மாணவர்கள் மருந்தியல் படிப்புகளைப் படித்து வருகிறார்கள். மருந்தியல் துறையில் வேலைவாய்ப்புகள் அதிகரித்துவருவதால், மருந்தியல் படிப்புக்கும் மவுசு கூடி வருகிறது.

இந்தியாவில் மருந்தியல் படிப்புகளை, இந்திய மருந்தியல் கவுன்சில் , அகில இந்திய தொழில்நுட்பக்கல்வி கவுன்சில் ஆகியவை கட்டுப்படுத்தி வருகின்றன. இந்தியாவில் செயல்பட்டுவரும் மருந்தியல் கல்லூரிகளில் பல்வேறு நிலைகளில், பட்டய மருந்தியல் படிப்பு (டி.ஃபார்ம்), இளநிலை மருந்தியல் பட்டப்படிப்பு (பி.ஃபார்ம்), முதுநிலை மருந்தியல் பட்டப்படிப்பு (எம்.ஃபார்ம்), மருந்தியல் மருத்துவர் பட்டப்படிப்பு (ஃபார்ம்-டி), மருந்தியல் முனைவர் பட்டப்படிப்பு (பிஎச்.டி பார்மஸி) ஆகிய படிப்புகள் வழங்கப்பட்டுவருகின்றன.

தகுதி

10+2 அல்லது இரண்டாமாண்டு பியூசி அல்லது 12-ஆம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், கணிதம்/உயிரியல் பாடங்களை எடுத்து படித்திருக்கும் மாணவர்களால் பி.ஃபார்ம். படிப்பில் சேரலாம். இந்தப் படிப்பில் சேர்வதற்கு நடத்தப்படும் தகுதித் தேர்வில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். ஒரு சில மாநிலங்களில் மருந்தியல் கல்வியை அளிப்பதற்கு தகுதியான மாணவர்களைத் தேர்வு செய்ய தகுதித் தேர்வும் நடத்தப்படுகிறது. டி.ஃபார்ம் படித்திருக்கும் மாணவர்கள், நேரடியாக பி.ஃபார்ம் பட்டப்படிப்பின் இரண்டாம் ஆண்டில் சேர முடியும். 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் நேரடியாக டி.ஃபார்ம் பட்டயப் படிப்பில் சேரலாம். 

பாடத் திட்டம்

மருந்தியல் பாடத் திட்டம், பல்துறை சம்பந்தப்பட்டதாகும். பாடத் திட்டங்கள் கல்வி நிறுவனங்களுக்குத் தகுந்தபடி மாறுபடும். 4 ஆண்டுகால பி.ஃபார்ம் படிப்பில் கரிம வேதியியல், கனிம வேதியியல் உள்ளிட்ட பொது மருந்தியல் பாடங்கள் இடம் பெற்றுள்ளன. உயிரி - வேதியியல், சுகாதார கல்வி, மனித உடற்கூறியல் போன்றவையும் கற்றுத் தரப்படுகின்றன. வேதிப்பொருள்களை மருந்தாக மாற்றும் கல்வியை பி.ஃபார்ம் பட்டப் படிப்பில் கற்றுத் தருகிறார்கள். இதை மருந்து மற்றும் மருந்தியல் தொழில்நுட்பம் என்று கூறுகிறார்கள். இதுதவிர, மூலிகைகளில் இருந்து எடுக்கப்படும் மருந்துகள், அதன் பயன்கள், விளைவுகள், உடல்மீது மருந்தின் தாக்கம், மருந்து உயிரிதொழில்நுட்பம், மருந்து தயாரிப்பு தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்ப மருந்து பதிவு, மருந்தியல் சட்டங்கள், மருந்து வணிக மேலாண்மை ஆகிய அம்சங்கள் பட்டப்படிப்பில் கற்றுத் தரப்படுகின்றன.

முதுநிலை பட்டப்படிப்பு

முதுநிலை மருந்தியல் பட்டப்படிப்பு பயிலும் மாணவர்கள், மருந்தியல், மருந்து திறனாய்வு, மருந்தியல் உயிரிதொழில்நுட்பம், மருந்தியல் நடைமுறைகள், தொழிலக மருந்தியல், மருந்தின் விளைவுகள், மருந்து வேதியியல், சட்டங்கள், தரக்கட்டுப்பாடுகள் உள்ளிட்ட 10 சிறப்புப் பாடப்பிரிவுகளில் இருந்து ஒன்றை தேர்ந்தெடுத்துப் படிக்க வேண்டும். 2008-ஆம் ஆண்டு முதல் ஃபார்ம்.டி. எனப்படும் 6 ஆண்டு கால பட்டப் படிப்பை இந்திய மருந்தியல் கவுன்சில் அறிமுகம் செய்தது. இதன் பாடத் திட்டம் உலகத் தரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 10, +2 படித்த மாணவர்கள் இப்படிப்பில் சேர்ந்து படிக்கலாம்.

ஆய்வுகள்

இந்திய மருந்தியல் சந்தை, உலக அளவில் மிகப்பெரியதாகும். மருந்தியல் சார்ந்த வேலைவாய்ப்புகளுக்கு இந்தியாவில் குறைவில்லை. மருந்தியல் பட்டதாரிகளுக்கு இந்தியாவில் மட்டுமல்ல, உலக அளவில் ஏராளமான வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. புதிய மருந்துகளைக் கண்டுபிடித்தல், மருந்து சூத்திரங்களை உருவாக்குதல், திறனாய்தல், நச்சுயிரியியல் ஆய்வுகள் போன்ற ஆய்வில் ஈடுபடும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறை தான் மருந்தியல் தொழிலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். இவை போன்ற ஆராய்ச்சிகள் அல்லது திறனாய்வுகள் அனைத்தும் அதிநவீன-ஆற்றல் வாய்ந்த இயந்திரங்கள் அல்லது கருவிகளின் உதவியுடன் நடத்தப்படுகின்றன. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபடுவதற்கு எம்.ஃபார்ம் அல்லது பிஎச்.டி. படித்துள்ள திறன்வாய்ந்த ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில்நுட்பவல்லுநர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன. 

வேலைவாய்ப்புகள்

இந்தியாவில் மருந்தியல் துறை வேகமாக வளர்ந்து வருவதால், அதற்கேற்ப வேலைவாய்ப்புகளும் பெருகி வருகின்றன. மருத்துவமனை மருந்தாளுநர் பணி முதல் சமுதாய மருந்தாளுநர் வரையில் மருந்து ஆய்வாளர் போன்ற வேலைவாய்ப்புகள் தாராளமாக உள்ளன. மருந்துகளின் தேவை பெருகுவதும் மருந்தியல் துறையின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம். அந்தவகையில், மருந்துகளைச் சந்தைப்படுத்தவும், விற்பனை செய்யவும் ஏராளமான ஆள்கள் தேவைப்படுகிறார்கள். இவர்களுக்கு கைநிறைய ஊதியமும் கிடைப்பது, மருந்தியல் துறை நோக்கி இளைஞர்களை தள்ளி வருகிறது.

மருத்துவமனைகள், மருந்து நிறுவனங்கள், ஆராய்ச்சிக் கூடங்கள் என்று மருந்தியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகள் ஏராளம். மருந்தை கொள்முதல் செய்து, கிடங்கில் பாதுகாத்து, மருந்துகளை விநியோகம் செய்வது அரசு அல்லது தனியார் மருத்துவமனைகளில், மருந்தாளுநரின் முக்கிய பணியாக  இருக்கும். 

மருந்துகளின் பயன்பாடு, கலவை, விளைவுகள் உள்ளிட்ட தகவல்களை மருந்து பரிந்துரைக்கும் மருத்துவர்களுக்கு கற்றுத் தருவதும் முக்கியப் பணியாகும். ஒவ்வொரு மருந்தின் பக்கவிளைவுகளையும் எடுத்துக்கூறுவது அவசியமாகும்.
மருந்து நிறுவனங்களிலும் ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன. சீரானமுறையில் வேதிப்பொருள்களைக் கலந்து மருந்துகளை உருவாக்கும் ஆர்வம் கொண்டோருக்கு மருந்தியல் நிறுவனங்களில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன. 

மருந்தியல் அறிஞர்களின் ஆராய்ச்சிகளின் அடிப்படையில் தான் உடல் ஆரோக்கியத்திற்கான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.

உயர்தரத்தில் மருந்துகளைத் தயாரிக்கும் கட்டாயத்தில் மருந்தியல் நிறுவனங்கள் இருப்பதால், அதற்கேற்ற ஆர்வமுள்ள பணியாளர்களுக்கான தேடுதலில் நிறுவனங்கள் ஈடுபட்டுக்கொண்டே இருக்கின்றன. 

மருத்துவரின் துணையுடன் மனித உடலில் மருந்துகளின் செயல்பாடுகள், விளைவுகளைத் துல்லியமாகக் கணிக்கும் வேலையே ஆய்வுக்கூட ஆராய்ச்சிநிபுணர்  வேலையாகும். தயாரித்த மருந்துகளைச் சந்தையில் கொண்டு சேர்த்து, அவற்றை விற்பனை செய்வதில் கவனம் செலுத்துவது ஒழுங்குமுறை அதிகாரியின் வேலையாகும். சந்தையில் மருந்துகளை அறிமுகம் செய்வதற்கு முன்பாக, அதற்கான வியூகங்களை வகுக்கும் பணியில் ஈடுபடுவதே வணிக அல்லது ஆராய்ச்சி திறனாய்வாளரின் பணியாகும். நோயாளிகளிடம் அளிப்பதற்காக மருத்துவர்களிடம் மருந்துகளை அறிமுகம் செய்வதே சந்தைப்படுத்துதல் அல்லதுவிற்பனை அதிகாரியின் வேலையாகும். இப்படி, மருந்தியல் துறையில் பல தரப்பட்ட வேலைவாய்ப்புகள் உள்ளன.

இந்தியாவில் மருந்து உற்பத்திச் செலவு அமெரிக்காவை விட 33 சதவீதம் குறைவாகும். மேற்கத்திய நாடுகளை ஒப்பிடுகையில் ஊழியர்களின் ஊதியம் 50-55 சதவீதம் இந்தியாவில் குறைவாகும். மேலும் இந்தியாவில் மருந்து தயாரிப்பு நிறுவனத்தை அமைப்பது 40 சதவீத செலவு குறைவாகும். உலக அளவிலான பொதுவான மருந்துகள் உற்பத்தியில் இந்தியா முன்னணியில் உள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்துகளில் 20 சதவீதம் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மருந்தியல் துறைசார் வேலைவாய்ப்புகள் குவிந்துள்ள சூழலில், மருந்தியல் படிப்புகளில் இளைஞர்கள் சேர்வது,  நல்ல எதிர்காலத்திற்கு வித்திடுவதாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com