கிளர்ந்தெழுங்கள் தோழர்களே! - 34

"நான் அரசியல் சாசன உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்தேன், உண்மை.
கிளர்ந்தெழுங்கள் தோழர்களே! - 34

"நான் அரசியல் சாசன உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்தேன், உண்மை. ஆனால் சாசனத்தை கொளுத்த நினைக்கிறேன்' - சொன்னவர் அண்ணல் அம்பேத்கர். அவர் மனம் வெதும்பி கூறியதற்கு காரணத்தை பாராளுமன்ற விவாதத்தில் விளக்கியுள்ளார். 

ஓர் அழகான கோயிலைக் கட்டி பிரதிஷ்டை செய்து புனித சிலையை வைப்பதற்குள் அசுரன் வந்து ஆக்கிரமித்தால் எப்படியிருக்கும்? கோயிலைத் தகர்ப்பதைத் தவிர வேறு என்ன வழி? அம்பேத்கரின் கவலை, பெரும்பான்மையினரின் ஆட்சியில் சிறுபான்மையினர் முக்கியமாக ஷெட்யூல் வகுப்பினர், பழங்குடியினர்  உரிமைகள் பாதிக்கப்படும்; அதற்கு அரசியல் சாசனத்தை  நடைமுறைப்படுத்தலில் போதிய பாதுகாப்பு கொடுக்கப்பட வேண்டும் என்பதாகும்.

72 -ஆவது குடியரசு தினம் கொண்டாடும் வேளையில் இந்திய அரசியல் சாசனத்தின் அருமை பெருமைகள் குறைகளை அறிய வேண்டும். "வீ  த பீப்பிள்' என்று மக்களை முன்னிறுத்தி அரசியல் சாசனம் தொடங்குவது இந்தியா - அமெரிக்கா இரு நாடுகளின் அரசியல் சாசனத்தில் மட்டும் தெய்வாதீனமாக அமைந்துள்ளது. 

சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகியவற்றின் முக்கியத்துவம் பற்றி மும்பாய் நகரில் இளைஞர்களிடம்  நடத்திய திடீர் பேட்டியில் ஒருவருக்கும் இரு தினங்களும் எந்த நாளில் வருகிறது என்று கூட தெரியவில்லை. பொதுவான கேள்விகளுக்கும் "திரு திரு' என்ற விழிப்புதான் பதில், பார்க்க பரிதாபமாக இருந்தது! 

இந்திய அரசியல் சாசனத்தின் முதல் கட்ட வடிவமைப்பை உலக நாடுகளின் அரசியல் சாசனங்களை ஆராய்ச்சி செய்து கொடுத்தவர்   பெனகல் நரசிங்க ராவ், ஐசிஎஸ் அதிகாரி, சட்ட வல்லுநர். அவர் கொடுத்த முதல் வடிவத்தின் அடிப்படையில் "அரசியல் சாசன வரைவு கமிட்டி' அம்பேத்கர் தலைமையில் அமைக்கப்பட்டது.

உலகிலேயே  நீளமான இந்திய சாசனம் 1,17,369 வார்த்தைகள் கொண்டது. மொத்தம் 470 உறுப்புகள்  25 பகுதிகள், 17 ஷெட்யூல் பிரிவுகள், 104 திருத்தங்கள் உள்ளன. ஆங்கிலத்தில் கையினால் ப்ரேம் பிஹாரி நாராயண் ரைசாதா அவர்களால் சாய்வு எழுத்துகள் -காலிக்ராபி அலங்காரத்தோடு எழுதப்பட்டது. எழுதி முடிக்க ஆறு மாத காலமானது. "தனக்கு சன்மானம் எதுவும் வேண்டாம்; ஆனால் தனது பெயரும் தன்னை வளர்த்த தாத்தா பெயர் கடைசி பக்கத்தில் பதிக்க வேண்டும்' என்ற வேண்டுகோள் மட்டும் வைத்தார்.  சாந்திநிகேதன் கல்விகூடத்திலிருந்து  ஓவியக் கலைஞர்கள் ராம் மனோஹர், நந்தலால் போஸ் தங்கள் கைவண்ணத்தினால் ஒவ்வொரு பக்கத்தையும் அலங்கரித்தனர். ஹிந்தியில் வசந்த் கிஷன் வைத்யா எழுதினார். இவ்வாறு கையினால் எழுதப்பட்ட பிரதிகள் பாராளுமன்ற நூலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

1946 -ஆம் வருடம் அரசியல் சாசனத்தை தயாரிப்பதற்கு  இந்தியாவின் பல்வேறு மாகாணங்களின் பிரதிநிதிகள் மறைமுகத் தேர்தல் வழியில் தேர்ந்தெடுக்கப்பட்டு , டிசம்பர் 9,1946- இல்  டாக்டர் சச்சிதானந்த சின்ஹா தலைமையில் கூடினார்கள். 

மொத்தம் 389 அங்கத்தினர்கள் மாகாணங்களிலிருந்து 296, மன்னர்கள் ஆளுகையில் உள்ள பகுதிகளிலிருந்து 93.  இதற்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் 208 இடங்களையும்,  முஸ்லிம் லீக் 73 இடங்களையும்  பெற்றன. ஆனால் முஸ்லிம் லீக் தனி நாடு வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து சபையில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தது. 

இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபைஇரண்டு வருடங்கள் பதினொரு மாதங்கள் பதினெட்டு நாட்கள் விவாதம் செய்து முதல் கட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதன் மீது தொடர் விவாதம் பதினொரு  அமர்வுகளில் நடைபெற்றது. சபை விவாதத்தின் அடிப்படையில் சுமார் இரண்டாயிரம் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. 

அரசியலமைப்பு சாசனம் உருவாக்கத்தில் காங்கிரஸ் கட்சி முக்கிய பங்கு வகித்தது. சிறந்த நிபுணர் குழு காங்கிரஸ் கட்சியில் அமைக்கப்பட்டு அந்த குழு எல்லாத் தகவல்களை சேகரித்து சாசனத்தில் அமைய வேண்டிய உறுப்புகளைப் பற்றி விரிவான விவாதம் தொடர்ந்து நடத்தப்பட்டது. ஜூலை 1946 -இல் அமைக்கப்பட்ட இந்த கமிட்டியில் முக்கிய தலைவர்கள் காட்கில், கே எம் முன்ஷி, ஹுமாயுன் கபிர், சந்தானம், கோபால்சாமி அய்யங்கார் அங்கத்தினர்களாக இருந்து பல்வேறு கூறுகளை சட்டரீதியாக ஆராய்ந்து பொது விதிகள் அடங்கிய முன்மொழிதல்களை முறைப்படுத்தினர். எல்லா விவாதக் கூட்டத்திலும் பண்டிட் நேரு கலந்து கொண்டு கமிட்டியின் செயல்பாடுகளை வழி நடத்தினார். இந்த முக்கிய கமிட்டி சாசன சட்டம் நிறைவேற்றும் வரையில் விவாதங்களைத் தொடர்ந்து நடத்தியதால் சபை விவாதத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளை ஆணித்தரமாக எடுத்துரைக்க உதவியது. மெச்சத்தக்க இந்த ஈடுபாடு, அரசியலமைப்பு நிர்ணய சபையின் சுமையை வெகுவாகக் குறைத்து லகுவான  முடிவிற்கு வர உதவியது. 

ஒவ்வோர் அரசியல் கட்சியும் இவ்வாறு சட்ட உருவாக்கத்தில் ஈடுபாட்டோடு தங்களது செயற்குழுவில் விவாதித்தால் மாமன்ற விவாதங்கள் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் இப்போது வருடத்திற்கு 120 நாட்கள் நடக்க வேண்டிய பாராளுமன்ற கூட்டமே   சராசரி  70 நாட்கள் தாம் நடக்கின்றன. சட்டம் இயற்றுவதுதான் சட்டமன்ற,  பாராளுமன்றங்களின் முக்கியப் பணி. அதில் செலுத்த வேண்டிய கவனம் குறைந்து கொண்டே வருவது வேதனை.

நிர்ணய சபையின் பதினோராவது அமர்வு 1949 நவம்பர் 14 முதல் 26 வரை நடைபெற்று நவம்பர் 26 -இல் இந்திய அரசியல் சாசன முழு வடிவு நிறைவேற்றப்பட்டு  ஒப்புதல் அளிக்கப்பட்டது. 1950 ஜனவரி 24 -ஆம் நாள் சபை தலைவர் ராஜேந்திர பிரசாத் முதல் கையொப்பம் இட்டார். தொடர்ந்து மற்ற 284 அங்கத்தினர்கள் கையெழுத்திட்டனர். 

ஜனவரி 26- ஆம் நாள்இந்திய அரசியல் சாசனம் அமலுக்கு வந்தது. இந்தியா சுதந்திர  குடியரசு நாடாக உலக அரங்கில் பாதம் பதித்தது.  

1930 -ஆம் வருடம் ஜனவரி 26- இல்  காங்கிரஸ் மாநாட்டில் பூரண ஸ்வராஜ் - முழுமையான சுதந்திரம் என்ற இலக்கு வைக்கப்பட்டது.  அந்த நாளைப் போற்றும் விதமாகவும், மக்களாட்சி அரசியல் சாசனம் மூலம் உறுதி செய்யப்பட்டதைக்  கொண்டாடும் விதமாகவும் ஜனவரி 26 குடியரசு தினமாக அறிவிக்கப்பட்டது.

அரசமை சாசனத்தில் மூன்று பகுதிகள் முக்கியமானவை: முறையே முகவுரை, அடிப்படை உரிமைகள், அரசாளுமைக்கான கொள்கை வழிகாட்டுதல். இந்திய மக்களின் பிரதிநிதிகள் கொண்ட பாராளுமன்றம் அதன் மூலம் அதிகாரம் பெறும் அரசாங்க நிர்வாகம், நீதித்துறை இவை வலிமையான தூண்கள். ஒவ்வொரு பிரிவின் அதிகாரங்களும்  சாசன உறுப்பு எண்கள் 50, 53, 121, 23, 154, 211, 361 -இல் வரையறுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அதிகாரங்களைப் பிரித்தல், எந்த ஒரு பிரிவும் எதேச்சதிகாரமாக செயல்படக் கூடாது என்ற அடிப்படையில் "ச்செக்ஸ் அண்ட் பாலன்சஸ்' -சோதித்து நிறுவுதல் என்பதை உறுதி செய்கிறது. 

அரசியல் சாசனம் கூட்டாட்சி, சுயாட்சித் தத்துவங்களை உள்ளடக்கி அதே சமயம் மத்தியில் வலுவான அரசமைப்பிற்கு வழிசெய்கிறது. உறுப்பு 356- இன் படி சில விதிகளுக்கு உட்பட்டு மாநில அரசைக் கலைத்து நேரடி ஜனாதிபதி ஆட்சி கொண்டு வரலாம்.

சாசனத்தில் திருத்தங்கள் கொண்டு வருவதற்கு உறுப்பு 368 வழி வகுக்கிறது. இதுவரை 104 திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில் 42, 44 ஆவது திருத்தங்கள் முக்கியமானவை. காலத்திற்கு ஏற்றவாறு  திருத்தங்கள் தேவை. ஆனால் அவை சில வரம்புக்குள் இருக்க வேண்டும், இல்லாவிடில் பாராளுமன்றத்தில் அசுர பலம் பெற்ற அரசியல் கட்சிகள் தன்னிச்சையாக செயல்படக்கூடும். 

1966- 77 ஆம் ஆண்டுகளில் இந்திரா காந்தி அம்மையார் பிரதமராக இருந்த போது பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. தனியார் வங்கிகள் தேச உடமையாக்கப்பட்டன. மன்னர்களுக்கு கொடுக்கப்பட்ட மானியங்கள் நிறுத்தப்பட்டன. சொத்துரிமையில் பல திருத்தங்கள், அதனால் நீதிமன்ற வழக்குகள் தொடர்ந்த  வண்ணம் இருந்தன. இதில் முக்கியமான வழக்கு  கேஷவானந்த் எதிர் கேரளா அரசு. 

காசர்கோட் மாவட்டம் எட்னீர் என்ற இடத்தில் கேஷவானந்த் பாரதி சங்கராச்சாரியர் ஹிந்து மத மடம் ஒன்றை நிர்வகித்து  வந்தார். கேரள அரசு நிலசீர்திருத்தச் சட்டம் மூலம் மடத்தின் நில மேலாண்மையில் கட்டுப்பாடு விதித்ததை எதிர்த்து 1970 -இல் வழக்கு தொடர்ந்தார். பிரபல வழக்குரைஞர் பால்கிவாலா அரசியல் சாசனம் 26- இன்படி மதம் சம்பந்தபட்ட  தனியுரிமை விஷயங்களில் அரசு தலையிடக் கூடாது என்பதை வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர ஆலோசனை வழங்கினார். 

உச்சநீதிமன்றத்தில் அரசியல் சாசன அடிப்படை உரிமைகள் வழக்காக எடுக்கப்பட்டு  13 நீதிபதிகள், 68 நாட்கள்  விவாதங்களை கேட்டு மார்ச் 1973 -ஆம் 
வருடம் தீர்ப்பு வழங்கினர். அதன்படி அரசியல் சாசனத்தின் அடிப்படைக் கட்டமைப்பை பாராளுமன்றம் திருத்தம் செய்ய முடியாது. அடிப்படை உரிமை
களைக் காப்பதில் இது மைல்கல் தீர்ப்பாக கருதப்படுகிறது. 

அரசு நிர்வாகத்தில் ஊழல், வேலையின்மை, அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு என்று பல்வேறு சமூகப் பிரச்னைகளை முன்னிறுத்தி 1974- ஆம் வருடம் ஜெய பிரகாஷ் நாராயண் பிஹார், 

குஜராத் மாநிலங்களில் "நவ  நிர்மாண்' என்ற போராட்டத்தைத் தொடங்கினார். மத்திய அரசுக்கு எதிராக புரட்சி என்று அறிவித்தார். அதற்கு பல மாநிலங்களில் ஆதரவு கிடைத்தது. இதை முறியடிக்க மத்திய அரசு 1975 -இல் அரசியல் சாசனம் 352 பிரிவுபடி உள்நாட்டுக் கலவரம் என்ற  காரணத்தைக் காட்டி அவசர நிலையைப் பிரகடனப்படுத்தி பல தலைவர்களைக் கைது செய்தது. பத்திரிகை சுதந்திரம், குடிமை உரிமைகள் முடக்கப்பட்டன. 25 ஜூன் 1975 முதல் 21 மார்ச் 1977 வரையில் அவசர நிலை தொடர்ந்தது. 

அரசமை சாசனத்தில் இன்னொரு முக்கிய உறுப்பு 142. இதன்படி சட்ட நடைமுறையில் சிக்கல் இருந்தால் அதனைச் சமன் செய்ய, தீர்வினை தனது ஆணைகள் மூலம் உச்ச நீதிமன்றம் அளிக்கலாம். 

உதாரணமாக தர்ம வீரா கமிட்டி பரிந்துரைப்படி காவல்துறை சீர்திருத்தம் நிறைவேற்றவேண்டும் என்று 1995- இல் தொடுக்கப்பட்ட  பொதுநல வழக்கில் 2006 -ஆம் வருடம் உச்ச நீதிமன்றம் உறுப்பு 142 - இன் கீழ் ஏழு ஆணைகள் பிறப்பித்தது. மத்திய அரசும் மாநில அரசுகளும் காவல் சட்டம் இயற்றின. 

""ஜனநாயகத்திற்கு எதிரான விவாதம் வேண்டுமென்றால், பத்து நிமிடம் சராசரி வாக்காளரிடம் பேசினால் போதும், விளங்கிவிடும்'' என்றார் பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில்!

1952, 1954, லோக்சபா தேர்தலில் அண்ணல் அம்பேத்கர் வெற்றி பெற இயலவில்லை, ராஜ்யசபாவில் அங்கத்தினராகி அமைச்சரவையில் இடம் பெற்றார். கர்ம வீரர் காமராஜருக்கு 1967 சட்டசபை தேர்தலில் தமிழக மக்கள் வெற்றியைத் தரவில்லை. ஜனநாயகத்தில் கூழாங்கற்கள் மினுக்கப்படுகின்றன; வைரக்கல் மழுங்கடிக்கப்படுகின்றன என்பதற்கு இந்த இரு உதாரணம் போதும்! 

அரசியல் சாசன முகப்புரையில் இந்திய மக்களாகிய நாம், இந்திய நாட்டின் இறையாண்மையையும், சமநலச்சமுதாயமும், சமயச்சார் பின்மையும் மக்களாட்சி முறையும் அமைந்ததொரு குடியரசாக நிறுவஅனைவரும்  உறுதி கொடுத்துள்ளோம். 

ஜனநாயகத்தைப் பேணவும் பாதுகாக்கவும்  பிரிவு 51 அ - பிரிவில் கொடுத்துள்ளபடி நமது கடமைகளை நிறைவேற்ற வேண்டும்.

சென்ற வாரக் கேள்விக்குப் பதில்: ராமகிருஷ்ணா மிஷன் மே 1, 1897 -ஆ ம் ஆண்டு சுவாமி விவேகானந்தரால் துவங்கப்பட்டது.

இந்த வாரக் கேள்வி: இந்திய அரசியல் சாசன தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?

(விடை அடுத்த வாரம்)

கட்டுரையாளர்: மேனாள் காவல்துறைத்தலைவர் மேனாள் சட்டமன்ற உறுப்பினர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com