மன அழுத்தம் இணைய வழி விளையாட்டுகள்!

இளைஞர்கள் மனஅழுத்தத்தால் பாதிக்கப்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மன அழுத்தம் இணைய வழி விளையாட்டுகள்!

இளைஞர்கள் மனஅழுத்தத்தால் பாதிக்கப்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. போதிய நேரடி சமூகத் தொடர்பு இல்லாமை, உடலுழைப்பு குறைந்துபோனது, பணிநேர மாற்றங்கள், வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இளைஞர்களுக்கு மனஅழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. 

இணையவழி விளையாட்டுகளுக்கு அடிமையானோரும் மனஅழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். இணையவழி விளையாட்டுகளை விளையாடும் அனைவருக்கும் மனஅழுத்தம் ஏற்படுவதில்லை என்பதே உண்மை. அந்த விளையாட்டுகளுக்குத் தீவிரமாக அடிமையானவர்கள் மட்டுமே மனஅழுத்தத்துக்கு உள்ளாவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். 

வெகுநேரம் இணையவழியில் விளையாடுவது தீவிர மனநிலை மாற்றம், தூக்கமின்மை, செயல்திறன் குறைவு, கண்களில் எரிச்சல் உள்ளிட்ட பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. எனினும், இணையவழி விளையாட்டுகளுக்கும் மனஅழுத்தத்துக்கும் உள்ள தொடர்பு குறித்த உறுதியான முடிவுகளை இன்னும் கூட வந்தடைய முடியவில்லை. அது தொடர்பாக  ஆய்வாளர்கள் தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றனர். 

மனஅழுத்தம் ஏற்படும்போதும், இணையவழி விளையாட்டுகளுக்கு அடிமையானவர்களுக்கு மனநிலை சார்ந்த பிரச்னைகள் ஏற்படும்போதும், மூளையில் உள்ள "அமிக்டலா' என்ற பகுதியே பாதிப்புக்கு உள்ளாவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதுவே இணையவழி விளையாட்டுகளுக்கும் மனஅழுத்தத்துக்கும் இடையேயான தொடர்பைக் கண்டறிவதில் பிரச்னையாக இருக்கிறது. 

ஒரு சிலர் இணையவழி விளையாட்டுகளுக்கு அடிமையாவதால் அவர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படுகிறது. வேறு சிலர் பல்வேறு பிரச்னைகளால் மனஅழுத்தம் ஏற்படுவதன் காரணமாக, அதிலிருந்து தப்பிக்க இணையவழி விளையாட்டுகளை விளையாடுகின்றனர். இணையவழி விளையாட்டுகளுக்கு அடிமையாவதால் மனஅழுத்தம் ஏற்படுகிறதா அல்லது மனஅழுத்தம் ஏற்படுவதால் இணையவழி விளையாட்டுகளுக்கு அடிமையாகிறார்களா என்பதை ஆய்வாளர்களால் இதுவரை தெளிவாகக் கண்டறிய முடியவில்லை. 

எனினும், இரண்டில் ஏதேனும் ஒரு பிரச்னைக்குத் தீர்வு காணத் தொடங்கினால் மற்றொரு பிரச்னைக்கும் தீர்வை அறிய முடிவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இணையவழி விளையாட்டுகளை அதிக நேரம் விளையாடுவதால் மனஅழுத்தம் ஏற்படுவதாக உணர்ந்தால், படிப்படியாக அந்த நேரத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும். 

புத்தகம் படித்தல், வீட்டை அலங்கரித்தல், சமையல் கற்றல், இசைக் கருவிகளை இசைத்தல், ஓவியம் வரைதல், வீட்டுத் தோட்டம் அல்லது மாடித் தோட்டம் அமைத்தல் உள்ளிட்ட  பிற செயல்களில் கவனம் செலுத்தத் தொடங்கினால் மனஅழுத்தத்தில் இருந்து எளிதில் தப்பிக்க முடியும். சமூகத் தொடர்பின்றி தனியாக இருக்கும்போதுதான் இணையவழி விளையாட்டுகள் மீது கவனம் செல்லும். எனவே, நண்பர்களுடன் எப்போதும் தொடர்பிலேயே இருப்பது நல்லது. 

கரோனா பரவல் சூழலில் அடிக்கடி சந்தித்துக் கொள்ள முடியவில்லை என்றாலும் நண்பர்களைக் காணொலி வாயிலாகச் சந்திக்கலாம். வீட்டில் தனித் தீவைப் போலச் செயல்படாமல் குடும்பத்தினருடன் பேசுவது நல்லது. குறைந்தபட்சம் ஒரு வேளையாவது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து உணவு அருந்தலாம். அந்த சமயங்களில் தொலைக்காட்சி பார்க்காமல் இருப்பதும் அவசியம். விருப்பமான விஷயங்களை சகோதரர்களிடம் பகிர்ந்து கொண்டு அரட்டை அடிக்கலாம். மனதை படிப்படியாக திசைதிருப்பினால் மனஅழுத்தத்தில் இருந்து விடுபட முடியும். 

""தீவிர மனஅழுத்தம் ஏற்படுவதால்தான் இணையவழி விளையாட்டுகளை விளையாடுகிறேன்'' என்று கூறுபவர்களும் மேலே கூறிய முறைகளை தாராளமாகக் கடைப்பிடிக்கலாம். இணையவழி விளையாட்டுகளில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக முயன்று வெளியே வந்தால், நிச்சயம் அதன் அடிமைத்தனத்தில் இருந்து விடுபட முடியும். 

இவற்றை முயன்று பார்த்த பிறகும் மனஅழுத்தம் தீரவில்லை எனில், தகுந்த மனநல மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுவது அவசியம். உண்மையில் பார்க்கப் போனால் நமக்கு மனஅழுத்தம் ஏற்படுவதற்கான அவசியமே இல்லை. இன்னும் வாழ்க்கையில் எவ்வளவோ சந்திக்க வேண்டியிருக்கிறது. சின்ன சின்ன விஷயங்களைப் பற்றியெல்லாம் அதிகமாக யோசித்து, நமக்கு நாமே தேவையில்லாத அழுத்தங்களை ஏற்படுத்திக் கொள்கிறோம். 

வாழ்க்கை மிகவும் அழகானது.   கடந்தகால நினைவுகளோ, எதிர்கால கனவுகளோ எதுவும் நம்மைத் தொந்தரவு செய்ய அனுமதிக்கக் கூடாது. தற்போது கையில் உள்ள காலத்தை அனுபவித்துக் கொண்டே மகிழ்ச்சியாக வாழ்வோம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com