கரோனா தொற்று... பணியாளர் உறவு!

கோவிட் தொற்றால் உலக இயக்கம்  தடுமாறி போய்க்கொண்டிருக்கின்றது. வேலை வழங்கும் நிறுவனங்களும், வேலைபார்க்கும் ஊழியர்களும் எண்ணற்ற மாற்றங்களை எதிர்கொண்டு வருகிறார்கள்.
கரோனா தொற்று... பணியாளர் உறவு!

கோவிட் தொற்றால் உலக இயக்கம் தடுமாறி போய்க்கொண்டிருக்கின்றது. வேலை வழங்கும் நிறுவனங்களும், வேலைபார்க்கும் ஊழியர்களும் எண்ணற்ற மாற்றங்களை எதிர்கொண்டு வருகிறார்கள். பல புதிய பிரச்னைகள் உருவாகி வருகின்றன.

ஊழியர்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்பட்டு, ஊழியர்கள் மகிழ்ச்சியாக செயல்பட்டால்தான் நிறுவனங்களின் செயல்திறனும் மேம்படும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதற்கான வழிமுறைகளை பல்வேறு ஆய்வு நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன.

கோவிட் தொற்றால் ஏற்பட்டுள்ள மன உளைச்சலால், ஸ்திரத்தன்மையற்றதாக உலகம் மாறிக் கொண்டிருக்கிறது. வேலை மற்றும் வாழ்க்கையில் சீரானநிலையை ஏற்படுத்தினால் தான் ஊழியர்கள் சிறப்பாகச் செயல்படமுடியும். அதற்கு வேலை வழங்கும் நிறுவனங்கள் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

நிறுவனங்களில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு உடல் ஆரோக்கியம் தொடர்பான ஆலோசனைகளையும் அதற்கான உதவிகளையும் நிறுவனங்கள் இலவசமாக வழங்குவதுடன் தொற்று நோய் ஏற்படும்போது உருவாகும் மன மாற்றம் மற்றும் உடல் மாற்றங்கள் குறித்த விழிப்புணர்வை அவர்களுக்கு வழங்க வேண்டும். அத்துடன் அவர்களுக்குத் தேவையான அத்தனை ஆதரவையும் அளிக்க வேண்டும். அதற்கென்று நிறுவனங்களில் உதவி மையங்களைத் தொடங்கி ஊழியர்கள் கேட்கும் சந்தேகங்களுக்கு உரிய விளக்கம் அளிப்பதுடன் அவர்கள் கேட்கும் உதவிகளையும் செய்வதற்கு நிறுவனங்கள் தயாராக வேண்டும்.

பணியாளர்கள் தெரிவிக்கும் கருத்துகளைக் கேட்கும் வகையிலான சிறந்த தகவல்தொடர்பு அமைப்பு நிறுவனங்களில் இருந்தால், அது அவர்களின் வேலையைச் சிறப்பானதாக ஆக்கும். ஒரு பிரச்னை குறித்து நம்மால் நிறுவனங்களின் உயர்மட்ட அலுவலர்களுடன் கலந்தா லோசிக்க முடியும் என்ற நிலை இருந்து விட்டாலே, அங்கு வெளிப்படைத்தன்மை வந்துவிடும். அதனால் பணியாளர்கள் மகிழ்ச்சியுடன் பணிசெய்யும் சூழல் உருவாகிவிடும். அத்துடன் வேலை குறித்த பின்னூட்டம் அதாவது ஃபீட்பேக் வசதியையும் எளிமைப்படுத்தி செயல்படுத்தினால் சிறந்த பலனைத் தரும்.

ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் குறித்த விவரங்கள் அவர்களின் குடும்பப் பின்னணி போன்றவை ஏற்கெனவே நிறுவனத்தின் மூலம் சேகரிக்கப்பட்டு இருக்கும். நிறுவனத்தின் உரிமையாளர்கள் அல்லது உயர் மட்டஅதிகாரிகள் அந்த தகவல்களை உள்வாங்கிக் கொண்டு ஒவ்வோர் ஊழியரின் பிரச்னைகளையும் அடையாளம் கண்டு அதற்கான தீர்வினை அவர்கள் கேட்காமலேயே செயல்படுத்தும்போது அந்தப் பணியாளர்கள் மகிழ்ச்சியுடன் அந்த நிறுவனத்தில் வேலை பார்க்க தொடங்குவார்கள்.

அவ்வப்போது பணியாளர்களின் மன ஆரோக்கியத்தையும்,உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதற்கான பொழுதுபோக்கு அம்சங்களை நிறுவனங்கள் செயல்படுத்தலாம். அத்துடன் அறிவுத் திறனை மேம்படுத்துவதற்கான பயிற்சிகளையும் அவ்வப்போது வழங்கலாம்.

கரோனா தொற்றின் காரணமாக ஏராளமான பணியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இது அவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தி இருக்கக் கூடும். சில நிறுவனங்கள் பணியாளர்களைப் பணியில் இருந்து விடுவிக்கவும் செய்தன; அல்லது ஊதியக் குறைவை அறிவித்தன. இது கூட மிகப்பெரும் மன பாதிப்பை ஊழியர்களுக்கு ஏற்படுத்தி இருக்கக் கூடும்.

இந்நிலையில் அத்தகைய ஊழியர்கள் மீண்டும் பணிக்கு வரும்போது அவர்களின் பாதிப்புகளை உணர்ந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு நிறுவனங்கள் திட்டமிட்டுச் செயல்பட வேண்டும். குறிப்பாக நெகிழ்வுத் தன்மையுடன் ஊழியர்களை அணுகும் முறையை நிறுவனங்கள் கையாண்டால் நல்லது. விரும்பும் விடுப்புகளை ஊழியர்களுக்கு தருவதில் கடினத் தன்மையுடன் நிறுவனங்கள் நடக்காமல் இருத்தல், பணியாளர்களின் மன அழுத்தத்தை சமாளிக்க நிறுவனங்கள் மூலம் உதவி செய்தல், கடுமையாக உழைக்கும் ஊழியர்களுக்கு பரிசுகள் வழங்குதல், அவர்களுக்கு கூடுதல் ஓய்வு நேரத்தை வழங்குதல் போன்றவற்றை நிறுவனங்கள் செய்தால், ஊழியர்களின் வாழ்க்கை வேலை நிலை சீராக்கப்பட்டு அவர்கள் உற்சாகமாக பணி செய்யும் நிலை உருவாகும்.

ஓர் ஊழியர் கொடுக்கும் பின்னூட்டத்தை நிறுவனத்தின் உயர் அதிகாரி அவ்வப்போது கவனித்து அதற்கான தீர்வினை வழங்க முன்வரவேண்டும். இது ஊழியருக்கும் நிறுவனத்துக்குமான நல்லுறவை வளர்க்க உறுதுணையாக இருக்கும். தங்களை நிறுவனத்தின் உரிமையாளர் பாதுகாப்பார் என்ற நம்பிக்கை ஊழியர்களுக்கு ஏற்படும்போது, அது சிறப்பான வெற்றியை நிறுவனத்துக்கு ஈட்டித் தரும் என்பதில் சந்தேகமில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com