ஒழுக்கம் எனும் தடுப்பூசி!

"வெற்றி என்பது தோல்வியின் முன்னேற்றம். தோல்வி அடையாத யாரும் உண்மையில் வெற்றி பெற்ற மனிதராக முடியாது.
ஒழுக்கம் எனும் தடுப்பூசி!

"வெற்றி என்பது தோல்வியின் முன்னேற்றம். தோல்வி அடையாத யாரும் உண்மையில் வெற்றி பெற்ற மனிதராக முடியாது.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் திருமண சந்தையில் பொதுவாக மணமகன், மணமகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பற்றிய குணநலன்களை விசாரித்து அறிந்து கொள்ள வெவ்வேறு வழிமுறைகளை ஒவ்வொரு சமூகமும் அவரவர் பாரம்பரியத்திற்கு உட்பட்டு காலங்காலமாக செய்துகொண்டிருக்கின்றனர். இது தொடர்பான உரையாடல்களில், ஒரு பிரபலமான நகைச்சுவை ஒன்று பொதுவாக பகிரப்படுவதுண்டு. 

""என்னங்க... மாப்பிள்ளைக்கு எதுவும் கெட்ட பழக்கமிருக்கா?''
""அப்படியெல்லாம் ஒன்னுமில்லீங்க... டீ, காபிக் கூட குடிக்கமாட்டாரு. ஆனா...'' என்று இழுத்துக் கொண்டே, ""என்ன.... அப்பப்ப புகை பிடிப்பாரு'' என்று முதல் குண்டை போட்டுவிட்டு, அவை  எந்தெந்த நேரங்களில் செய்யப்படுகிறது என்பதை அடுத்தடுத்த கெட்ட பழக்கங்களோடு இணைத்து ஒவ்வொன்றாக அறிமுகம் செய்து... கடைசியில், உலகில் உள்ள அனைத்து தீய பழக்கங்களுக்கும் சொந்தக்காரனாக அந்த மாப்பிள்ளையைக் கொண்டு வந்து நிறுத்தி கதையை முடிப்பார்கள். இதுபோன்ற கதைகளை இலக்கை நோக்கிய 
பயணத்தைத் தொடங்கிவிட்டு தங்களது தீய பழக்கங்களால்  இடையிலேயே தோற்றுப் போனவர்களின் வாழ்க்கையிலும் நாம் பார்க்கலாம். 

இவ்வுலகம் போட்டிகள் நிறைந்தது என்பதில்   யாருக்கும் சந்தேகமிருக்காது. பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிலையங்கள், அலுவலகங்கள், அரசியல் களங்கள் என்று எல்லா இடங்களிலும், ஏதாவது ஒரு விதமான போட்டியை நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றோம். 

"வெற்றியாளராக வாழ வேண்டும்; அதன் மூலம் பெயரும், புகழும், பணமும் பெறவேண்டும்' என்பது இப்புவியில் பலரது விருப்பமாக இருக்கிறது. உள்ளார்ந்த விருப்பமும், தேர்ந்தெடுத்த இலக்கை நோக்கி நெருப்பாய் கனன்று கொண்டிருக்கும் ஆர்வமுமே ஒரு மாணவரையோ, பெரியவரையோ வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் மகத்தான வெற்றியை நோக்கி முன்னேற வைக்கிறது.

நாம் ஒவ்வொருவரும் எடுக்கின்ற முயற்சியில் வெற்றி கிடைக்காவிட்டால், நாம் ஏமாற்றம் அடைந்து, தாழ்வு மனப்பான்மை கொள்கிறோம். சீரான, ஈடுபாடு மிக்க முயற்சிகள் அலட்சியம் செய்யப்பட்டு, தோல்வி மட்டுமே ஊக்குவிப்பட்ட மனிதர்கள் மத்தியில், இந்த எதிர்மறையான, மந்தமான நிலையைக் காணலாம். இன்று உலகில் வெற்றியாளராக, பலருக்கு முன்னுதாரணமாக திகழ்கின்றவர்களின் வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் சோதனைகளை எதிர்கொண்டுள்ளனர். இருப்பினும், அவர்கள் வெற்றிக்கான பாதையில் தொடர்ந்து ஒழுக்கத்தோடு முயற்சித்து, தங்கள் துறைகளில் மகத்தான வெற்றி பெற்றுள்ளனர். 

கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் ஒரு புகைப்படம் தீயாகப் பரவியது. இளையராஜா பியானோ வாசிக்க... ஓர் இளைஞன் அவரது அருகிலேயே கீழே அமர்ந்து கிடார் வசிக்கும் புகைப்படம் தான் அது. யார் அந்த 
இளைஞன்? 

தனது 13 வயதிலேயே சிபிஎஸ் என்ற தொலைக்காட்சியில் "தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட்' என்கிற நிகழ்ச்சியில் பங்கேற்று, தனது பியானோ இசை மூலமாக உலக அளவில் பிரபலமான "லிடியன் நாதஸ்வரம்'தான் அவர். அந்த நிகழ்ச்சியில் வென்றதன் மூலமாக கிட்டதட்ட 6 கோடியே 96 லட்சம் பரிசையும் வென்று, இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் முதல் இந்தியாவின் கடைக்கோடி இசை 
ரசிகன் வரை கவனம் ஈர்த்தார் லிடியன்.

முதல் நாள் இளையராஜாவின் ஸ்டூடியோவிற்குள் நுழையும் போது லிடியன் நாதஸ்வரத்தைப் பார்த்து உற்சாகமான இசைஞானி, பிரகாசமான புன்னகையுடன் "என்னுடைய முதல் மாணவனும் நீ தான்... கடைசி மாணவனும் நீ தான்' எனக்கூறி ஆசி வழங்கி லிடியனை தனது மாணவராக ஏற்றுக் கொண்டிருப்பது நிகழ்கால வரலாறாகியிருக்கிறது. 

வரலாற்றின் புகழ் பெற்ற கார்ட்டூன் படைப்பாளியாகவும், மிக்கி மவுஸ் மற்றும் டொனால்ட் டக் ஆகிய புகழ் பெற்ற பாத்திரங்களை உருவாக்கியவராக அறியப்படும் வால்ட் டிஸ்னி, மிசவ்ரி நியூஸ் பேப்பரில் வேலைக்குச் சேர்ந்த போது படைப்பாற்றல் இல்லை என நீக்கப்பட்டவர். அறிவியல்துறையில் மகத்தான கண்டுபிடிப்புகளுக்காக உலகம் முழுவதும் அறியப்படும் மேதையான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சிறுவயதில் பல தோல்விகளைச் சந்தித்தவர். ஒன்பது வயது வரை அவரால் சரளமாக பேசக் கூட முடியாது. அதே மனிதர்தான் பின்னர் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உலகில் தனது திறமையை நிருபித்து, 1921 இல் இயற்பியல் துறையில் நோபல் பரிசு வென்றார் என்பது வரலாறு. புகழ் பெற்ற இயக்குநரான ஸ்பீல்பெர்க் பள்ளி படிப்பில் பெரிதாக சோபிக்காதவர். ஆனால், அதன் பிறகு தனது கலை ஆர்வத்தால் சினிமா உலகில் சிகரம் தொட்டார்.

இங்கு நாம் பார்த்த சாதனையாளர்கள் அனைவரும், என்னதான் அவர்களது இலக்கு சார்ந்த பயணத்தில் முயற்சியும், பயிற்சியும், உழைப்பையும் கொட்டி கொடுத்திருந்தாலும், 

இவர்கள் அனைவரும் எங்குமே அவர்களது சுயவொழுக்கத்தில், கட்டுப்பாட்டில் தவறியதேயில்லை. புகழ் பெற்ற எழுத்தாளரான ஸ்டீபன் கிங் சிறுவயதில் மிகுந்த வறுமையில் நாட்களை கழித்ததோடு பின்னர் போதை  பழக்கத்திற்கும் அடிமையாகியிருந்தார். போதை பழக்கத்தை அறவே நிறுத்திய பின்னரே எழுத்தில் கவனம் செலுத்தத் தொடங்கி புகழ் பெற்ற எழுத்தாளராக உருவானார் என்பது பேருண்மை.

ஒழுக்கம் எப்போதும் மேன்மையைத் தருவதாகும். அந்த ஒழுக்கமே உயிரினும் மேலாகக் கருதப்பட வேண்டும் என்று சொல்லும் வள்ளுவர், பொறாமை உடையவனிடத்தில் எப்படி ஆக்கம் அமையாதோ, அப்படி ஒழுக்கம் இல்லாதவன் வாழ்வில் உயர்வு கிடைக்காது என்பதையும் திண்ணமாகக் கூறுகிறார். 

எனவே, ஒழுக்கம் எனும் தடுப்பூசி செலுத்திக் கொண்டு தடைகள் எனும் நோய்கள் தாக்காமல் நமது இலக்குகள் நோக்கி பயணிப்போம்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com