17 ஆண்டு சாதனை... முறியடித்த பெர்செவரன்ஸ்!

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பியுள்ள பெர்செவரன்ஸ் விண்கலத்தின் ஆய்வு வாகனம் (ரோவர்) புதிய சாதனையைப் படைத்துள்ளது.
17 ஆண்டு சாதனை... முறியடித்த பெர்செவரன்ஸ்!

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பியுள்ள பெர்செவரன்ஸ் விண்கலத்தின் ஆய்வு வாகனம் (ரோவர்) புதிய சாதனையைப் படைத்துள்ளது.

அந்த ரோவர் ஏற்கெனவே பல சாதனைகளைச் செய்திருந்தாலும், ஒரு "சூரிய நாளில்' அதிக தொலைவு பயணம் செய்த புதிய மைல்கல்லை எட்டி, 17 ஆண்டுகளுக்கு முன்னர் "ஆப்பர்சூனிட்டி' விண்கலத்தின் ரோவர் ஏற்படுத்திய சாதனையை முறியடித்துள்ளது. 

பூமியில் ஒரு சூரிய நாள் என்பது 24 மணி நேரம். செவ்வாயில் ஒரு சூரிய நாள் என்பது 24 மணி, 39 நிமிடம், 35 விநாடிகள் ஆகும்.

செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக நாசா அனுப்பிய பெர்செவரன்ஸ் விண்கலம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம்,  18-ஆம் தேதி அந்தக் கிரகத்தில் தரையிறங்கியது. செவ்வாய்கிரகத்தில் பாறை மாதிரிகளை சேகரித்துக் கொண்டு பூமிக்கு திரும்புவதுதான் அதன் பிரதான பணி.

இந்நிலையில், பெர்செவரன்ஸ் ரோவரின் இரு சாதனைகளை நாசா ட்விட்டரில் பகிர்ந்துள்ளது. முதல் சாதனை ஒரு சூரிய நாளில் செவ்வாயில் அதிக தொலைவு 
பயணம் செய்ததாகும். ஏற்கெனவே ஆப்பர்சூனிட்டி ரோவர் 228 மீட்டர் பயணம் செய்திருந்த நிலையில், பெர்செவரன்ஸ் 245.7 மீட்டர் தொலைவு பயணம் செய்துள்ளது.

இரண்டாவது- அதன் "ஆட்டோ நேவ்' என்ற இயக்கத்தின்போது நீண்ட தொலைவு பயணத்தையும் நிகழ்த்தியுள்ளது. முதல் முறையாக இந்தத் தொழில்நுட்பத்தை பெர்செவரன்ஸ் ரோவரில் நாசா ஏற்படுத்தியுள்ளது. "ஆட்டோ நேவ்' இயக்கத்தின்போது, 3டி வரைபடங்கள், மென்பொருள் உதவியுடன் வழிகளில் உள்ள தடைகளைத் தவிர்த்து ரோவர் தானாகவே முன்னேறிச் செல்லும். இதனால், விஞ்ஞானிகளால் ரிமோட் மூலம் இயக்கப்படும்போது உள்ள வேகத்தை விட அதிக வேகத்தில் ரோவர் செல்ல முடியும்.

பெர்செவரன்ஸ் 6 பாறைத் துண்டுகளைச் சேகரித்துள்ளது. அவற்றை ஆராய்வதற்காக விண்கலம் பூமிக்கு கொண்டு வருவது இத்திட்டத்தின் சிறப்பாகும். மேலும், 50 ஜிபி அளவிலான அறிவியல் தரவுகளை பெர்செவரன்ஸ் ரோவர் சேகரித்துள்ளது. ஒரு லட்சத்துக்கும் அதிகமான புகைப்படங்களை ஏற்கெனவே அனுப்பியுள்ளது.

செவ்வாய் கிரகத்தில் பழங்காலத்தில் நுண்ணுயிர்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் உள்ளனவா என இந்த ரோவர் ஆய்வு செய்து வருகிறது. அடுத்ததாக செவ்வாய் கிரகத்தில் பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் உருவானதாக கருதப்படும் "ஜெசேரோ' என்ற பள்ளத்தாக்கு பகுதியில் பெர்செவரன்ஸ் ஆய்வில் ஈடுபடும். இப்பகுதியில்தான் பெர்செவரன்ஸின் லேண்டர் தரையிறங்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com