கோப மேலாண்மை!

அறிவுத்திறனை மழுங்கடித்து மேலெழுந்து வரும் உணர்வே கோபம். ஒருவரை கோபம் ஆட்கொண்டு விட்டால் அவர் என்ன செய்கிறார் என்பதை அவராலேயே உணர முடியாது.  
கோப மேலாண்மை!


அறிவுத்திறனை மழுங்கடித்து மேலெழுந்து வரும் உணர்வே கோபம். ஒருவரை கோபம் ஆட்கொண்டு விட்டால் அவர் என்ன செய்கிறார் என்பதை அவராலேயே உணர முடியாது.  அதற்காக கோபம் தீங்கானது என்று சொல்லிவிட முடியாது.

கோபத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவது தான் நமது நோக்கமாக இருக்க வேண்டும். அதற்கு கோபத்தை நெறிப்படுத்த வேண்டும். கோபத்தை கட்டுப்படுத்தி, அவசியத்திற்கு பயன்படுத்துவது முக்கியம். அதை தான் கோப மேலாண்மை என்கிறார்கள்.  

கோபமேலாண்மை:

ஒருவரின் சிந்தனைகள், உணர்வுகள், நடத்தைகளை ஒருமுகப்படுத்தி, ஆரோக்கியமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் கோபத்தை செலவிடும் நுட்பம் தான் கோப மேலாண்மை.

நிர்வகிக்க வேண்டும்:

கோபம் என்பது எரிச்சலூட்டும் உணர்வு.   ஒருவரை வாய்க்கு வந்தபடி திட்டுவது; பிறரின் உடைமைகளை மனம்போன போக்கில் உடைத்து நொறுக்குவது; 
கழிவிறக்கத்தை ஏற்படுத்துவது அனைத்தும் கோபத்தின் வெவ்வேறு பரிணாமங்கள்.

முறையற்ற முறையில் வெளிப்படுத்தப்படும் கோபம், உடல், மன, சமூகரீதியான விளைவுகளை  ஏற்படுத்தும்.  கோபத்தை கையாள அறிவுசார் நடத்தை கைகொடுக்கும். அது தான் ஆக்கப்பூர்வமாகவும், பயனுள்ளவகையிலும் கோபத்தை ஆற்றுப்படுத்தும். கோபத்திற்கு தூபம் போடும் சிந்தனை மற்றும் நடத்தையை நெறிப்படுத்த வேண்டும். இதற்கு சில வியூகங்களை பின்பற்றலாம். காரணம் அறி:

கோபத்தின் தூண்டுகோலாக அமைந்திருப்பது எது என்பதைக் கண்டறியுங்கள். பிறரின் நடவடிக்கைகள், போக்குவரத்து நெரிசல், குழந்தைகளின் மோசமான படிப்பு, மேலதிகாரிகளின் முறையற்ற நடத்தை போன்றவை கோபத்திற்கு அடித்தளமாக அமையலாம். இவற்றுக்காக கோபப்படுவதைக் காட்டிலும், அதற்கான காரணத்தை கண்டறிந்து  கோபத்தை அடக்கலாம்.

எதிரியா? நண்பனா? 

உங்கள் கோபம் எந்த தன்மையைக் கொண்டது என்பதை ஆராய வேண்டும். கோபம் உங்களின் எதிரியா? தோழனா? நம்முடைய, நம்மைச் சுற்றியுள்ளவர்களின்  உரிமை பறிபோகும்போது, கண்ணுக்கு தெரிந்து அநியாயம் நடக்கும்போது, நீங்கள் கோபப்பட்டால்,  அது சரியான கோபம்.   இந்தவகை கோபத்தால் பிறருக்கு நன்மை கிடைக்கலாம். மோசமான சூழ்நிலையில் மாற்றம் காணலாம். இந்த கோபம் உங்களுடைய நண்பன். உங்களுடைய  கோபம், பிறரின் மனதை வாட்டுகிறதா? உறவைத் துண்டிக்கிறதா? உங்கள் அன்றாட வாழ்க்கையில் இழப்பை ஏற்படுத்துகிறதா?  அந்த கோபம்   உங்களின் உண்மையான எதிரி.  

தவிர்த்திடு:

மனதில் கோபம் ஏற்படுவதை உணர்ந்தால், அது எத்தன்மையது என்பதை ஆராயலாம். அதன் அடிப்படையில், அந்த கோபத்தை வெளிப்படுத்த வேண்டுமா? தணிக்க வேண்டுமா? என்பதை முடிவு செய்யலாம். 
உடலிலும் உள்ளத்திலும் கோபம் கிளர்ந்தெழுவதை உணர்ந்துக்கொண்டால், அதை தவிர்த்துவிடலாம். அதுநமக்கும் பிறருக்கும் நல்லது.

விலகிவிடு:

நண்பர்கள், சக ஊழியர்கள் அடிக்கடி வாதம் செய்து கொள்வதையும், அந்த வாதம் கோபமாக மாறி, அடக்க முடியாத வெறியாட்டமாக மாறுவதையும் பார்த்திருக்கலாம். கோபத்திற்கான சூழல் உருவாகிவிட்டதை உணர்ந்துவிட்டால் அங்கிருந்து விலகிவிடுவது தான் மிகச்சிறந்த செயல். வாக்குவாதங்கள் உச்சங்களைத் தொடும்போது, அது கோபமாக வெளிப்படுவதற்கு முன்பு அங்கிருந்து கிளம்பிவிடுவது நல்லது. அப்படி விலகிசெல்வது பிரச்னையை தீர்க்க அல்லது புரிய வைக்க உதவாமல் இருக்கலாம். ஆனால், கோபத்தைத் தணிக்க உதவும்.  நண்பர்களோடு பிரச்னைகளை பகிர்ந்துகொள்வது கோபத்தை மட்டுப்படுத்தும்.  

கட்டுப்படுத்தலாம்:

கோபமாக உணரும்போது வேகநடை அல்லது சுறுசுறுப்பான உடற்பயிற்சி ஆகியவற்றைச் செய்தால்,  அது  மனதையும் உடலையும் செம்மைப்படுத்தும். சீரான உடற்பயிற்சியில் ஈடுபடுவது மன அழுத்தத்தை தணித்து, கோபத்தைக் கட்டுப்படுத்த உதவும். 

கோபத்தை மடை மாற்றம் செய்ய, நமக்குப் பிடித்தமான வேலைகளில் மூழ்க வேண்டும். வீட்டிலோ, அக்கம்பக்கத்திலோ குழந்தைகளோடு விளையாட வேண்டும்.  

கட்டுப்படுத்தப்படாத கோபம், உடல், உள்ளம், உறவுகள் அனைத்தையும் வெகுவாக பாதிக்கும். கோபம் வரும்போது மூச்சுப்பயிற்சியில் ஈடுபடுவது, கோபத்தை தணிக்க உதவும். வேலையில், வீட்டில் எங்கு கோபம் வந்தாலும் மூச்சுப்பயிற்சி கைகொடுக்கும்.

உணர்வை அறி:

சங்கடங்கள், மன உளைச்சல், குழப்பம், சோகம், ஏமாற்றம், தடுமாற்றம், அழுத்தம், நெருக்கடி, வெறுப்பு, வஞ்சம், பழிவாங்கும் எண்ணம், பாதுகாப்பின்மை, தனிமை, தன்னலம் போன்ற பல உணர்வுகள் கோபத்தின் ஊற்றுக்கண்ணாக இருக்கலாம்.   கோபத்திற்கான உணர்வுகளை கண்டறிந்து, அதை தீர்த்துக்கொள்வது தான் புத்திசாலித்தனம். உணர்வுகளை நேர்மையாக ஆராய்ந்தால் தீர்வுகளும் நியாயமாகவே அமைந்து, கோபத்தை புதைத்துவிடும்.

மனதைக் குளிர்வி:

வேலையால் ஏற்படும் கோபத்தைத் தணிக்க,  வீட்டில் இருப்போரிடம் சிலர் கோபப்படுவார்கள். இது சரியான அணுகுமுறை அல்ல. கோபம் வரும்போது சிலர் வயலின் இசைப்பதைப் பார்த்திருக்கிறேன். திரைப்படம் பார்ப்பது, நண்பர்களோடு உணவகத்திற்குச் செல்வது, காலார நடப்பது, பிடித்த பாடல்களைக் கேட்பது, புத்தகங்களை வாசிப்பது...இப்படி உங்கள் மனதிற்கு பிடித்த எதையாவது செய்தால், வந்த வேகத்தில் கோபம் பறந்தோடும். கோபத்தை காட்ட தெரிந்தவர்களை விட ஆள தெரிந்தவர்களால் மட்டுமே அதை பயனுள்ள ஆற்றலாக மாற்றிக் கொள்ள முடியும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com