செல்லிட பேசி... கையில் இருக்கும் நெருப்பு! 

இன்று  குழந்தைகளே  மிகவும் எளிதாக செல்லிடபேசிகளைக்   கையாள்கின்றனர்.
செல்லிட பேசி... கையில் இருக்கும் நெருப்பு! 

இன்று  குழந்தைகளே  மிகவும் எளிதாக செல்லிடபேசிகளைக் கையாள்கின்றனர். நவீனத்தை குழந்தைகளிடம், இளம் வயதினரிடம் புகுத்துவதால் பல நன்மைகள் இருந்தாலும் தீய விளைவுகளும் பல இருக்கின்றன. 

இளம் வயதினர் செல்லிடபேசியை வைத்திருப்பது அவர்களைத் தொடர்புகொள்ள பாதுகாப்பு என்றாலும் ஆண்ட்ராய்டு போன்களை கொடுக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? எது நல்லது, எது கெட்டது என்று அறியாத வயதில், நல்லதும் கெட்டதுமான  ஒட்டுமொத்த உலகத்தை  அவர்கள் கையில் கொடுத்தது போன்றதாகிவிடுகிறது இது. 

"பியூ ரிசர்ச் சென்டர்' என்ற நிறுவனம் நடத்திய கணக்கெடுப்பின்படி, 12 வயது முதல் 17 வயதுக்குள்பட்ட பதின்ம வயதினரில் 1000க்கு 785 பேர் செல்லிடபேசிகளை வைத்திருக்கிறார்கள். அதுபோன்று பதின்ம வயதினரில் நான்கில் ஒருவர் இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள். 

இளம்பருவத்தினரிடம் செல்லிடபேசி என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பது குறித்துப் பார்க்கலாம். 

தசைகளில் வலி:

இளம்பருவத்தினர் தொடர்ந்து செல்லிடபேசியை உபயோகிக்கும்போது குறிப்பாக "சாட்' செய்யும்போது  கைகள், முதுகு மற்றும் கழுத்தில் வலி ஏற்படுகிறது. இது  தசைநாண் அழற்சி (டீன் டென்டோனிடிஸ்) எனப்படுகிறது. ஆய்வின்படி, அதிகப்படியான செல்லிடபேசி பயன்பாடு தசைநாண் அழற்சி மற்றும் கை மற்றும் கட்டைவிரலில் கீல்வாதம் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. 

மன அழுத்தம்:   

இளம்வயதினர் தொடர்ந்து செல்லிடபேசியைப் பயன்படுத்தும்போது மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். செல்லிடபேசிகளில் அதிக நேரத்தை செல
விடும் பதின்வயதினர் மன அழுத்தம், பதற்றம் மற்றும் மனச்சோர்வுக்கு ஆளாகிறார்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன. 

தூக்கமின்மை:

நல்ல உடல் ஆரோக்கியத்துக்கும் மனநலனுக்கும் ஒருநாளைக்கு 7 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை தூக்கம் அவசியம். இன்று பெரும்பாலானோர் தூக்கத்தைத் தொலைப்பதற்கு செல்லிடபேசிகள்தான் முக்கிய காரணமாக இருக்கின்றன. 

இரவில் தூங்கும் நேரத்தில் செல்லிடபேசியைப் பயன்படுத்தும்போது, மூளைச் செல்கள் தூண்டப்பட்டு, தூங்கவிடாமல் செய்கின்றன. "தூக்கம் வரவில்லை என்பதால் மொபைல் பயன்படுத்துகிறேன்' என்று கூறுவார்கள். உண்மையில் அவர்களுடைய தூக்கம் தொலைந்ததற்கே   செல்லிடபேசிதான் காரணம். 

தூங்கும்போதும் சிலர் அருகிலேயே செல்லிடபேசியை வைத்திருக்கிறார்கள். அது மிகவும் தவறு. ஏனெனில், அதில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சுகள் மூளையை பாதிக்கக் கூடியவை. 6 அடி தூரமாவது செல்லிடபேசியைத் தள்ளி வைத்துவிட்டு தூங்க வேண்டும். 

விபத்துகள்:

செல்லிடபேசியால் வரும் விபத்துகள் குறித்து சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதிலும் இளம் வயதினர், புதிதாக செல்லிடபேசியைப் பயன்படுத்தும்போது வேறோர் உலகத்தில் இருக்கிறார்கள். சாலையில் செல்லும்போது, பேருந்தில் பயணிக்கும்போது, வாகனம் ஓட்டும்போதும் என எப்போதும் அதனுடன் தொடர்பில் இருக்கிறார்கள். இதனால் அதிக விபத்துகள் நடக்கின்றன.

கவலை:

செல்லிடபேசியில் ஒரு குறுஞ்செய்திக்கு உடனடியாகப் பதில் வரவில்லை என்றால் கவலைப்படும் இளம்வயதினர் அதிகம். பதில் வந்துள்ளதா என்று அடிக்கடி செல்லிடபேசியை எடுத்துப் பார்க்கும் பழக்கம் மனரீதியாகப் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

புற்றுநோய் ஆபத்து

செல்போன் பயன்பாட்டிற்கும் புற்றுநோய்க்கும் இடையே என்ன தொடர்பு என்று கேட்கலாம். இதுகுறித்த தெளிவான சான்றுகள் இல்லை என்றாலும், புள்ளிவிவர ரீதியாக சில தகவல்கள் உள்ளன. 

அதன்படி, 5 ஐரோப்பிய நாடுகளில் இருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளின்படி, 10 வருடங்களுக்கு மேல் செல்போனை பயன்படுத்துபவர்களுக்கு ஒலி சார்ந்த நரம்பு மண்டலம்  பாதிக்கப்படுவதாகத் தெரிய வந்திருக்கிறது. இது புற்றுநோய் தொடர்பான நோய்களை ஏற்படுத்தும். 

இணைய மிரட்டல் (சைபர்புல்லியிங்)

காக்ஸ் கம்யூனிகேஷன்ஸ் என்ற அமைப்பு 13-18 வயதுடையவர்களிடம் மேற்கொண்ட ஆய்வில், 15% குழந்தைகள் ஆன்லைனிலும், 10% பேர் செல்லிடபேசி மூலமும் இணைய மிரட்டலுக்கு ஆளாகியுள்ளனர்.  5% பேர் செல்லிடபேசி மூலம் மற்றொரு நபருக்கு மிரட்டல் விடுத்துள்ளனர். 

இணையமிரட்டல் பிரச்சையால் மாணவர்கள் பள்ளிக்குச் செல்வதை விரும்புவதில்லை. ஒருவித பயம், தலைவலி, தூக்கமின்மை உள்ளிட்ட பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர். மனச்சோர்வு, பதற்றம் ஆகியவையும் அதிகம் இருக்கிறது.  

உணர்ச்சிவசப்படுதல் 

செல்லிடபேசியும் இணையமும் இன்று எந்தவொரு விஷயத்தையும் எளிதாக அணுக வைக்கின்றன. 

அவ்வாறு சமூக வலைதளங்களில் ஏதேனும் ஒரு விஷயத்தைப் பார்க்கும்போது இளம்வயதினர் எளிதாக உணர்ச்சிவசப்படுகின்றனர். அந்தத் தகவல் தவறாகக் கூட இருக்கலாம். ஆனால் அதன் உண்மைத் தன்மையை அவர்கள் அறிய முற்படுவதில்லை. இன்று சமூக வலைதளங்களில் மிகைப்படுத்தப்பட்ட பதிவுகள் அதிகம் இருக்கும் சூழ்நிலையில்,  உணர்ச்சிவசப்பட்டு குற்றச் செயல்களில் கூட ஈடுபட வாய்ப்புகள் உள்ளன. 

உடல் பருமன்

செல்லிடபேசிகளை தொடர்ந்து பயன்படுத்துவதால், பதின்ம வயதினருக்கு உடல் பருமன் ஏற்படும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஒரு நாளைக்கு ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக செல்லிடபேசி திரைகளின் முன் இருக்கும் இளம்வயதினருக்கு தூக்கமின்மை, உடற்பயிற்சியின்மை உள்ளிட்ட காரணங்களால் உடல் பருமன் ஏற்படும். 

பார்வைக் குறைபாடு 

செல்போனில் இருந்து கதிர்வீச்சுகள் நேரடியாக உங்கள் கண்களைப் பாதிக்கின்றன. செல்லிடபேசியை கண்ணுக்கு மிக அருகில் வைத்துதான் பயன்படுத்த முடியும் என்பதால் நாள் ஒன்றுக்கு ஒரு சில மணி நேரங்கள் பயன்படுத்துவதே ஆபத்து என்கின்றனர் மருத்துவர்கள். இவ்வளவு பாதிப்புகள் இருந்தபோதிலும் செல்லிட பேசிகள் இல்லாமல் உலகம் இயங்குமா என்பது இனி வரும் காலத்தில் ஐயமே. செல்லிடபேசிகளை பாதிப்புகள் இல்லாமல் பயன்படுத்த இளம்வயதினர் மட்டுமல்ல, எல்லாரும் தெரிந்து கொள்ள வேண்டும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com