திரைப்படங்கள்...  மலை உச்சியும் படுபாதாளமும்!

சமூகத்தில் கலைக்கு எப்போதுமே தனி முக்கியத்துவம் இருந்து வருகிறது. தற்காலத்தில் திரைப்படங்களுக்கு அதிக அளவிலான வரவேற்பு காணப்படுகிறது.
திரைப்படங்கள்...  மலை உச்சியும் படுபாதாளமும்!


சமூகத்தில் கலைக்கு எப்போதுமே தனி முக்கியத்துவம் இருந்து வருகிறது. தற்காலத்தில் திரைப்படங்களுக்கு அதிக அளவிலான வரவேற்பு காணப்படுகிறது. முக்கியமாக இளைஞர்கள் மத்தியில் திரைப்படங்களுக்குப் பெரும் ஆதரவு உள்ளது. முக்கியமான பொழுதுபோக்கு அம்சமாகத் திரைப்படங்கள் திகழ்ந்து வருகின்றன. 

தியேட்டர்களில் திரைப்படங்களைக் காண்பதற்கு இளைஞர்கள் கூட்டம் அலைமோதியது. கரோனா தொற்று பரவலுக்குப் பிறகு தியேட்டர்கள் மூடப்பட்டதால், இளைஞர்களின் கவனம் ஓடிடி பக்கம் திரும்பியது. பலமொழிப் படங்களும் ஒரே தளத்தில் கிடைப்பது இளைஞர்களுக்கு வசதியாகப் போனது.

அதில் சென்று திரைப்படங்களை மட்டுமல்லாமல், தொடர்களையும் இளைஞர்கள் காணத் தொடங்கினர். பல்வேறு மொழித் திரைப்படங்களையும் தொடர்களையும் காண்பதற்கு "சப்டைட்டில்' உதவுகிறது.

இளைஞர்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு சாதனமாகத் திரைப்படங்கள் திகழ்கின்றன. திரைப்படங்கள் சமூகத்தில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. சுதந்திரப் போராட்ட வீரர்கள், சமூக சீர்திருத்தவாதிகள் உள்ளிட்டோர் குறித்த படங்கள், மக்களிடையே எழுச்சியையும் நாட்டுப்பற்றையும் தூண்டுகின்றன.

சமூக சீர்திருத்தம், ஏற்றத்தாழ்வு, சாதிபிரிவினை, தீண்டாமை உள்ளிட்டவை சார்ந்த திரைப்படங்கள் மக்களிடையேயும் இளைஞர்கள் மத்தியிலும் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றன. வரலாற்றுச் சம்பவங்களை மக்களுக்கு எளிதில் புரியவைக்கின்றன. குறிப்பிட்ட விஷயத்தை எளிதில் கற்றுக் கொள்ள திரைப்படங்கள் உதவுகின்றன.

புதிய விஷயங்களையும் நவீன தொழில்நுட்பங்களையும் அறிந்து கொள்வதற்கான கருவியாகவும் திரைப்படங்கள் திகழ்கின்றன. மனஅழுத்தத்தில் இருந்து விடுபடுவதற்கு மட்டுமல்லாமல் புத்துணர்ச்சி பெறவும் படங்கள் உதவுகின்றன. வரலாற்றுக் கதைகளைப் புரிந்து கொள்வதற்கும் படங்கள் உதவுகின்றன.

பலதரப்பட்ட மனிதர்கள், அவர்களின் பலதரப்பட்ட வாழ்நிலைகள்,  அவை தரும் பல தரப்பட்ட அனுபவங்கள் எல்லாவற்றையும் உலகில் பிறந்த ஒவ்வொருவரும் பெற்றுவிட முடியாது. மனிதர்கள் சமூகமாக வாழ்வது என்பதைத் தவிர்க்க முடியாது என்ற நிலை உள்ளது.  எனவே பிற மனிதர்களின் வாழ்க்கையை, அவர்களின் அனுபவங்களை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது.  நல்ல திரைப்படங்கள் காட்டும் மனிதர்களின் உண்மையான அனுபவங்கள்,  திரைப்படங்களைப் பார்க்கும் இளைஞர்களின் மனதில்  அத்தகையை அனுபவங்களை ஏற்படுத்துகின்றன. பிற மனிதர்களின் வாழ்க்கையைப் புரிந்து கொள்ள, உணர திரைப்படங்கள் உதவுகின்றன.   சமூக மனிதனாக வாழ திரைப்படங்கள் தூண்டுகின்றன.  ஒட்டுமொத்தத்தில் அறிவாற்றலை வளர்த்துக்கொள்வதற்குத் திரைப்படங்கள் முக்கியக் கருவியாகத் திகழ்கின்றன. 

அதேசமயத்தில் திரைப்படங்களில் எதிர்மறையான விஷயங்களும் மலிந்திருக்கின்றன. படங்களில் தோன்றும் கதாநாயகர்களின் ஒவ்வோர் அசைவையும் இளைஞர்கள் உன்னிப்பாகக் கவனிக்கின்றனர். அவர்கள் கடைப்பிடிக்கும் அனைத்தையும் பின்பற்றினால் நாமும் கதாநாயகர்களாக மாறலாம் என கனவு காண்கிறார்கள். திரைப்படக் கதாநாயகர்கள் போல முடிவெட்டிக் கொள்ளுதல்,  உடைகளை அணிந்து கொள்ளுதல், பேசும்போது திரைப்பட வசனங்களைப் பயன்படுத்துதல்  ஆகியவற்றைச் சொல்லலாம். 

கோடிகோடியாக சம்பாதிக்கும் திரைப்பட நடிகர் திரைப்படத்தில் குடிசையில் வாழும் இளைஞனாக நடிப்பார்.  அவர் நடிப்பை உண்மையென்று நம்பும் குடிசை வாழ் இளைஞர்கள் நடிகரைத் தம்முள் ஒருவராகக் கருதிக் கொள்கிறார்கள்.  

அவருக்கு ரசிகர் மன்றங்கள் அமைப்பது தொடங்கி,  அவர் நடித்து வெளிவரும் திரைப்படங்களின் முதல் திரையிடலைப் பார்க்க அதிகக் கட்டணம் கொடுப்பது,  நடிகரின் கட்அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்வது, அவருடைய பெயரை உடம்பில் பச்சை குத்திக் கொள்வது என  அன்றாட வாழ்க்கையில் உள்ள சிரமங்களைப் பொருட்படுத்தாது  தமது சிந்தனைகளைத் திசைதிருப்பி பொழுதை வீணாகக் களிக்கிறார்கள்.  

திரைப்படமும் நிஜ வாழ்க்கையும் வெவ்வேறு என்பதை இளைஞர்கள் உணர்ந்து கொள்வதில்லை.  வாழ்வில்  முன்னேற என்ன செய்ய வேண்டும் என்ற சிந்தனையின்றி, அதற்கான எந்த முயற்சியும் இன்றி கிடைக்கும் குறைந்த பணத்தையும் திரைப்படங்களுக்காக வீண் செலவும் செய்யும் இளைஞர்களும் இருக்கிறார்கள். 

மது அருந்துதல், புகைப்பிடிக்கும் பழக்கம் போன்றவற்றுக்கு திரைப்படங்கள் மூலம் அடிமையான இளைஞர்கள் பலர் உண்டு. காதலில் தோல்வி ஏற்பட்டால், போதைப் பொருள்களைப் பயன்படுத்த வேண்டும், தாக்குதலில் ஈடுபட வேண்டும் என்பன போன்ற விஷயங்களைத் திரைப்படங்கள் தவறாகக் கற்பித்து வருகின்றன. 

இவை தவிர, திரைப்படங்கள் பெற்று வரும் பேராதரவு காரணமாக புத்தகம் படிக்கும் பழக்கம் இளைஞர்களிடையே குறைந்து வருகிறது. புத்தகம் படிப்பது இளைஞர்களின் கற்பனைத் திறனை வெகுவாக வளர்க்கும். திரைப்படங்கள் உள்ளிட்ட காட்சி ஊடகங்கள் அவ்வாறு இல்லாமல், இதுதான் காட்சி எனக் கண்முன்னே காட்டி விடுவதால்,  இளைஞர்களின் கற்பனைத்திறன் வளர்ச்சிக்குப் பெரிய அளவிலான பங்களிப்பை காட்சி ஊடகங்கள் செய்வதில்லை.  

திரைப்படங்களில் வரும் காட்சிகள் மனதில் ஆழமாகப் பதிவதால், அவை இளைஞர்களின் பழக்கவழக்கங்களில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. திரைப்படங்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு அடிமையாவது அன்றாட வாழ்க்கையில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. 

திரைப்படங்களில் நல்லதும் கெட்டதும் சேர்ந்தே காணப்படுகின்றன. அவற்றுள் எதை எடுத்துக் கொண்டு கடைப்பிடிக்க வேண்டும் என்பதை இளைஞர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.  வன்முறை, தீய பழக்கவழக்கங்களைக் கைக்கொள்வது சமூகத்தில் தேவையில்லாத பிரச்னைகளையே ஏற்படுத்தும். திரைப்படங்களில் இடம்பெற்றுள்ள நல்ல விஷயங்களைத் தேர்ந்தெடுத்து கடைப்பிடிப்பது சமூகத்திலும் நல்ல விதமான மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. 

நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் வாழ்க்கையில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. முடிவெடுப்பதில் தெளிவாக நடந்து கொண்டு வாழ்விலும் இளைஞர்கள் வெற்றி காண வேண்டும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com