2021... மாறிய பணிச்சூழல்!

2021-ஆம் ஆண்டில் செய்தி ஊடகங்களின் தலைப்புச் செய்தி: உருமாறிய கரோனா.
2021... மாறிய பணிச்சூழல்!

2021-ஆம் ஆண்டில் செய்தி ஊடகங்களின் தலைப்புச் செய்தி: உருமாறிய கரோனா. கடந்த ஆண்டு முழுவதும் நேரடியாகவும் மறைமுகமாகவும் தீநுண்மியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைச் சொல்லி ஓயாது. தனிமனிதர்களின் வாழ்வாதாரத்தையும் முழுமையாக நசுக்கிவிட்டது கரோனா. 

பணிச்சூழலின் போக்கையே புரட்டிப் போட்டுவிட்டது கரோனா. உருமாறிய கரோனாவின் அச்சுறுத்தல் 2022-ஆம் ஆண்டிலும்  தொடரும் நிலை உள்ளது. அப்படியானால், கரோனாவால் பணியிடங்களில் ஏற்பட்ட  மாற்றங்களும் அப்படியே தொடரும் என்பதுதான் உண்மை.   

வீட்டில் இருந்து வேலை:  பொதுமுடக்கத்தின்போது அறிமுகமான "வீட்டில் இருந்து வேலை' நடைமுறை, கரோனா தாக்கம் குறைந்த பிறகும் முடிவுக்கு வரவில்லை. ஊழியர்கள் மீண்டும் அலுவலகம் வருவதை தாமதப்படுத்தவே நிறுவனங்கள் விரும்புகின்றன.  

வீட்டில் இருந்து வேலை செய்வதால் பயணநேரம், போக்குவரத்து நெரிசல், மன அழுத்தம் போன்றவற்றிலிருந்து விடுதலை கிடைத்துள்ளது. அதேசமயம், வழக்கமான வேலை நேரம் இரவு வரை நீள்வது கொஞ்சம் கடினமாக இருக்கிறது. வேலைக்கும் தனிமனித வாழ்க்கைக்கும் இடையே எல்லைக்கோடு இல்லாமல் போவது தற்போது மனஅழுத்தத்திற்கு வழிவகுக்கிறது. 

வேலையைத் தவிர, குழந்தைகள் பராமரிப்பு, இணையவழிக் கல்வி போன்றவை சேர்ந்துவிட்டதால், பெண்களுக்கு ஏற்பட்டுள்ள மன அழுத்தம் கொஞ்சம் அதிகம் தான். 

புதிய மன அழுத்தங்கள்: பலரது வாழ்க்கையில் முன்னுரிமைகள் மாறியுள்ளன. இதனால், தற்போதுள்ள வேலையைத் துறக்க நேர்கிறது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு விலைவாசி உயர்வு, நிலையற்ற வேலைவாய்ப்பு காணப்படும் சூழலில், செய்துவரும் வேலையை விடுவது சிக்கலைத் தீவிரமாக்கியுள்ளது. வேலைக்கும் வாழ்க்கைக்கும் உள்ள இடைவெளி கரைந்துபோனதால், கோபம் கொப்பளித்து வேலைக்கு ஓய்வளிக்கும் சூழல் உருவெடுத்துள்ளது.

அலுவலகக் கூட்டங்கள், கருத்தரங்குகள், நேர்முகங்கள் அனைத்தும் இணைய வழியைத் தேடிக் கொண்டுள்ளன. ஜூம், டீம்ஸ், ஸ்கைப், ஸ்லாக் போன்ற செயலிகள் இல்லாமல் கூட்டங்கள் நடப்பதில்லை. தொடரும் இணையக் கூட்டங்கள் மனச்சோர்வை ஏற்படுத்தியுள்ளதால், இதில் இருந்துவிடுபடும் நேரத்துக்காக பலரும் காத்திருக்கிறார்கள்.

அப்படியானால், புதிய ஆண்டு எப்படி இருக்கும்? நிச்சயமற்ற தன்மை நிச்சயம் நிலைத்திருக்கும். கரோனா தீநுண்மி உருமாறி சுழன்றுகொண்டே இருப்பதால், அந்தச் சூழலுக்குத் தகுந்தபடி ஒத்துழைக்க நிறுவனங்கள் விரும்புகின்றன.

இந்தச் சூழலை எதிர்கொள்ள பெற்றுக் கொள்ள வேண்டிய திறமைகள் எவை?

நிறுவன முன்னுரிமைகள்: நேரடி ஆய்வுக் கூட்டங்கள் இல்லாத நிலையில், மேலதிகாரிகள் முன்வைக்கும் நிறுவனத்தின் முன்னுரிமைகளை அறிந்துகொள்வது நல்லது. ஆண்டறிக்கைகள், செய்தி அறிக்கைகள், இணையதளம், உள்பகிர்வு ஆவணங்கள் உள்பட, நிறுவனம் வெளியிடும் சின்னஞ்சிறு செய்திகளைக்கூட தெரிந்து கொள்ளாமல் இருந்துவிடக் கூடாது. வாய்ப்புக் கிடைத்தால், நிறுவனத்தின் முன்னுரிமையை மேலதிகாரிகள் மூலம் அறிந்துகொள்ளலாம். நிறுவனத்தின் முன்னுரிமை அடிப்படையிலான திட்டங்களைச் செயல்படுத்த முனைப்புக் காட்டுவது அவசியம். 

சீரான தகவல் பரிமாற்றம்: சீரான தகவல் பரிமாற்றம் செய்பவர்களுக்கு எப்போதும் மதிப்பு அதிகம். "வீட்டில் இருந்து வேலை' மற்றும் இணையவழிக் கூட்டங்கள் நிலைத்திருப்பதால், தகவல் பரிமாற்றம் முக்கியத்துவம் பெறுகிறது. தகவல் பரிமாற்றங்களை சீராகவும், நிலையாகவும் வைத்திருப்பது நல்லது. 

நீண்ட, பொருளற்ற மின்னஞ்சல்களைத் தவிர்க்கலாம். சுருங்கச்  சொல்லி, தெளிவாகப் புரிய வைக்க வேண்டும். சிறப்பாக தகவல்களை பரிமாறிக்கொள்ள, தொடர்ச்சியான பயிற்சி தேவை. எழுதியதை பிறரிடம் காட்டி, கருத்துப் பெற்று, அதன் பிறகு மேலதிகாரிகளுக்கு அனுப்பிவையுங்கள். நேர்மறை நோக்கம்: நேரடியாகப் பேசாமல் மின்னஞ்சல், குறுந்தகவல்கள் வாயிலாக தகவல்களைப் பரிமாறும்போது, அவற்றின் நேர்மறை நோக்கங்களைப் புரிந்து கொள்வது நல்லது. எதிர்வினையாற்றும்போது தெளிவான அணுகுமுறை தேவை. எதிர்வினைக்கான சூழல்களை துல்லியமாக விளக்க வேண்டும்.  

காலக்கெடுவுக்குள் வேலை: உறுதி அளித்தபடி, காலக்கெடுவுக்குள் வேலையை முடிக்க வேண்டும். முடிக்காவிட்டால், அதற்கான சரியான காரணத்தை தாமதமில்லாமல் மேலதிகாரிகளுக்குத் தெரிவித்துவிட வேண்டும். சிக்கல்களை மட்டும் தூக்கிப் பிடிக்காமல், அவற்றுக்கான தீர்வுகளை முன்வைப்பது உங்கள் மீதான பார்வையை உயர்த்தும்.  

குழு மனப்பான்மை: குழுவாகச் செயல்படுவது முக்கியம். குழுவில் இடம் பெற்றிருப்போரைப் புரிந்துகொள்வது அதைவிட முக்கியம். குழுவினரின் முன்னுரிமைகளை அறிந்து கொள்வதும் அவசியம். எதையும் பெறுவதற்கு முன்பு, கொடுக்கக் கற்றுக்கொள்ள தவறக் கூடாது.  

பணி உயர்வு: மேலதிகாரிகளோடு பராமரிக்கப்படும் நல்லுறவு, பணி உயர்வுக்கு உதவியாக இருக்கும். வீட்டில் இருந்து பணியாற்றுவதால் எல்லோரையும் ஒரே கண்ணோட்டத்தில் தான் காண முடியும். மேலதிகாரிகளை நேரில் சந்திக்கும் அளவுக்கு திறமை வாய்ந்தவராக இருந்தால், அது பணி உயர்வுக்குக் கைகொடுக்கும். எப்போதும் பண்பட்ட பணியாளராக, ஒத்துழைக்கக் கூடியவராக, நம்பகத் தன்மையுள்ளவராக இருக்கப் பழகுங்கள்.  

புதிய வாய்ப்புகள்: எங்கிருந்து வேலை செய்கிறோம் என்பதைவிட, எப்படிவேலை செய்கிறோம் என்பது முக்கியமாகிவிடும். எனவே, உலக அளவிலான பணிகளுக்கு ஆசைப்படலாம். இதைச் சாதிக்க, வேலைச் சந்தையில் பரிசாக மாறக் கூடிய அசாதாரணத் திறன்களை வளர்த்துக் கொள்வது நல்லது. 

இந்தக் கசப்பான காலகட்டம் தவிர்க்க முடியாதது என்றாலும், இது புதிய பணிச்சூழலுக்கும், வாழ்க்கைச்சூழலும் வழிவகுக்கும்.   2022-ஆம் ஆண்டு புதியன சமைத்து, நல்லன வழங்கும் என நம்புவோம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com