வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 323

ஊரடங்கு பிரகடனம் செய்யப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான மன்னர் வீரபரகேசரியின் அரண்மனைக்குச் சென்றிருக்கிறார்கள்.  அங்கு அமைச்சரவைக் கூட்டம் நடக்கிறது.
வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 323


ஊரடங்கு பிரகடனம் செய்யப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான மன்னர் வீரபரகேசரியின் அரண்மனைக்குச் சென்றிருக்கிறார்கள்.  அங்கு அமைச்சரவைக் கூட்டம் நடக்கிறது. அப்போது மனிதவளத்துறை அமைச்சரும் அவருடைய மகனுமாக நாற்பது போராட்டக்காரர்கள் மீது தேர்களை ஏற்றிக் கொன்றதாக குற்றச்சாட்டு எழுகிறது. மன்னர் வீரபரகேசரி அமைச்சரின் மகனிடம் இதைப் பற்றி விசாரிக்கிறார். அப்போது சில ஆங்கிலச் சொற்கள் குறித்த விளக்கங்களை அவர்கள் 

விவாதிக்கிறார்கள். அதை ஒட்டி shampoo என்பது எப்படி ஓர்  இந்திய சொல்லில் இருந்து பிறந்த வார்த்தை என ஜூலி விளக்குகிறது. அப்போது அயல்நாட்டு மொழிகளில் உள்ள சொலவடைகளைப் பற்றிய விவாதம் தோன்ற slide in on a shrimp sandwich எனும் சொலவடை குறிப்பிடப்பட, அது என்ன என கணேஷ் கேட்கிறான். தெரிந்து கொள்வோமா?

மன்னர் வீரபரகேசரி: அதாவது, நீ பெரிசாய் உழைக்காமலேயே ஒரு இடத்தை, ஒரு வசதியை, ஒரு அதிகாரத்தை அடைகிறாய் என்றால் அது தான் sliding in on a shrimp sandwich. 

கணேஷ்: நான் உங்களுடைய மகனாக இருந்தால் நான் உடனடியாக அமைச்சர், துணை முதல்வர், மன்னர் என்று அடுத்தடுத்து அறிவிக்கப்படுவேன். அதைத் தானே சொல்றீங்க? 

மன்னர் வீரபரகேசரி: என்னுடைய நாட்டில் திறமைக்குத் தான் மதிப்பு. 

கணேஷ்: அப்படியென்றால் உங்களுடைய மகன் அடுத்த மன்னர் அல்லவா? 
மன்னர் வீரபரகேசரி: இல்லை, எனக்கு மொத்தமாக 18 மகன்கள். அவர்களில் யார் திறமைசாலியோ அவரே அடுத்த அரியணை ஏறுவார். நான் ஒரு ஜனநாயகவாதி.

கணேஷ்: அடடா! மன்னா, ஒருவேளை உங்களுடைய தளபதியாரின் மகன் உங்கள் மகன்களை விட திறமைசாலியாக இருந்தால்? 

மன்னர் வீரபரகேசரி: That is easy - I will give him pumpkins.  அதன் பிறகு அவனுடைய தலையைத் துண்டித்து விடுவேன்.  

கணேஷ்: எனக்குப் புரியல மன்னா. தளபதியாரின் மகனின் தலையை அவன் உங்கள் மகன்களுக்கு போட்டியாக வருவதனால் துண்டிக்கிறீர்கள். அப்படித்தானே? 

மன்னர் வீரபரகேசரி: இல்லை, எப்போதும் என் மகன்களே திறமைசாலிகளாக இருத்தல் வேண்டும். திறமைசாலியே அரியணை ஏற வேண்டும். இந்த ஜனநாயக விதியை அவன் உடைப்பதால் அவன் தலையைத் துண்டிக்கிறேன். மறந்திடாதே நான் ஒரு ஜனநாயகவாதி. 

கணேஷ்: அருமை மன்னா... ஆனால் தளபதியாரின் மகனுக்கு ஏன் பரங்கிக்காய் கொடுக்கப் போவதாக சொல்றீங்க? அதை அவன் சாப்பிட்ட பிறகு அவருடைய தலையை வெட்டி விடுவீங்களா? 

மன்னர் வீரபரகேசரி சிரிக்கிறார்: அப்படி அல்ல கணேஷ். To give someone pumpkins என்பது ஒரு ஸ்பானிய சொலவடை. அதன் பொருள் ஒருவரை நாம் நிராகரிக்கிறோம் என்பது. உதாரணமாக நீ என்னுடைய நாட்டிய மணி மண்டபத்தில் ஆடுகிற ஆயிரம் ரம்பையருள் ஒருத்தியிடம் போய் உமது காதலை சொல்லுகிறீர். அப்பெண்ணோ இல்லை, நான் எமது மன்னரையே காதலிக்கிறேன், I will give you pumpkins  என்று சொல்லுகிறாள். உடனே சரி கொடு என்று கேட்டு விடக் கூடாது. 

கணேஷ்: புரிகிறது. என்னை நிராகரிப்பதைத் தான் அவள் அப்படிச் சொல்லுகிறாள். அப்படித்தானே? ஆனால் மன்னா, ஆயிரம் ரம்பையர்களில் ஒருத்தி கூட என்னைக் காதலிக்கக் கூடாதா? இத்தனை பேரும் உம்மையே ஏன் காதலிக்க வேண்டும்? 

மன்னர் வீரபரகேசரி மீண்டும் சிரிக்கிறார்: இல்லாவிட்டால் நான் அவர்களுடைய தலையைக் கொய்து விடுவேனே. அது மட்டுமல்ல, என்னைக் காதலிப்பதால் they all live like a maggot in a bacon. 

கணேஷ்: ஆங்?

(இனியும் பேசுவோம்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com