கிளர்ந்தெழுங்கள் தோழர்களே! - 30: வறுமையின் நிஜங்கள் 

"ஏழை படும் பாடு பற்றி பேசுபவர்களுக்கு ஏழைகள் படும் பாடும் தெரியாது ஏழைகளுக்கும் இவர்களைத்  தெரியாது' என்றார் மகாத்மா காந்தி. 
கிளர்ந்தெழுங்கள் தோழர்களே! - 30: வறுமையின் நிஜங்கள் 

"ஏழை படும் பாடு பற்றி பேசுபவர்களுக்கு ஏழைகள் படும் பாடும் தெரியாது ஏழைகளுக்கும் இவர்களைத்  தெரியாது' என்றார் மகாத்மா காந்தி. 
எவ்வளவு உண்மை! பொது வாழ்வில் உள்ளவர்கள் ஏழைகளின் கஷ்டத்தைத் தீர்ப்போம் என்றுதான் சூளுரைக்கிறார்கள். ஆனால்  ஏழைகளின் வறுமை தீர்ந்தபாடில்லை.
ஏழ்மை நிலையைக் கணக்கிடுவது நிர்வாகத்தில் முக்கியமானது. ஏனெனில் அதன் அடிப்படையில்தான் ஏழ்மையை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் நிர்ணயிக்கப்பட வேண்டும்.
பாராளுமன்றம், சட்டமன்றத்தில் விவாதங்களைப் பார்த்தால் ஒவ்வொருவரும் தங்கள் தொகுதி பின் தங்கியது; சாலைகள் சரியில்லை; மின்வசதியில் குறைபாடு; குடிநீர் வழங்கப்படுவதில்லை; சாக்கடை வசதியில்லை என்று சதா இல்லை பாட்டுதான்! சுதந்திரம் அடைந்து  75 வருடங்கள் ஆகப் போகிறது. இன்னும்  வறுமையை முன்நிறுத்தியே பேசி வருகிறார்கள். 
"ஏழ்மையை ஒழிக்க  பல நடவடிக்கைகள் எடுக்கப்
படுகின்றன;  முன்னேற்றம் அடைந்துள்ளோம்' என்று 
ஊக்கம் ஏற்படுத்தும் விதத்தில் ஆரோக்கியமான முறையில் விவாதிப்பதில்லை. 
உண்மையில் பல துறைகளில் நம் நாடு நல்ல வளர்ச்சி பெற்றிருக்கிறது. அந்த வளம் எந்த அளவிற்கு எல்லாருக்கும் சென்று அடைந்திருக்கிறது என்பதை மத்திய அரசின் நிதி ஆயோக் தொடர்ந்து கணக்கிட்டு சமன் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
1938- ஆம் வருடம் இந்திய தேசிய காங்கிரஸ்  தலைவர் சுபாஷ் சந்திர போஸ், வறுமையைக் கணக்கிடுவதற்கு  ஜவாஹர்லால் நேரு தலைமையில்  குழு ஒன்று அமைத்தார். அதுதான் முதல் திட்ட கமிஷன். 
மக்களின் பொருளாதார நிலையை ஆராய்ந்து அவர்களை வறுமையிலிருந்து காப்பாற்றி கௌரவமான வாழ்வு அளிக்க திட்டங்களை வகுக்க வேண்டும் 
என்பதற்கான முதல் முயற்சி. நேஷனல் திட்ட கமிட்டி தனிநபருக்கு மாதம் ரூ.15 -இலிருந்து ரூ.20 வரையிருந்தால் தான் குறைந்தபட்ச வசதியோடு வாழ முடியும் என்று நிர்ணயம் செய்தது. அதையே 1944- இல் பம்பாய் திட்ட வல்லுநர்கள் வருடத்திற்கு ரூ.75 ஆக கணக்கிட்டார்கள். முதன் முதலில் வறுமையின் அளவை 1901- ஆம் வருடம் தாதாபாய் நவ்ரோஜி என்ற தேசிய
வாதி "பிரிட்டிஷ் ஆட்சியில் வறுமை' என்ற புத்தகத்தில் பராரியாக வேலை தேடி உழைக்கும் வர்க்கத்தின் வறுமையை அளவிட்டு வருடத்திற்கு முப்பத்தைந்து ரூபாய் வரை 1867-68 விலைவாசி அடிப்படையில் தனி மனித அடிப்படை வசதி பூர்த்தி செய்ய தேவை என்பதை அறிவுறுத்தினார். 
"தனிமனிதனுக்கு உணவில்லை என்றால் ஜகத்தினை அழித்திடுவோம்' என்றார் பாரதியார். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, வறுமை ஒழிப்பு முக்கிய குறிக்கோளாக  வைக்கப்பட்டது. 1960 -இலிருந்து வறுமையின் பரிமாணங்களை ஆராய திட்ட கமிஷன் பல குழுக்களை அமைத்தது. அதில் வறுமையை நிர்ணயிக்க எடுத்துக் கொண்ட அளவு கோல் சரியானதா என்பதில் பல சர்ச்சைகள் எழுந்தன. உண்ண உணவு மட்டும் மனிதனின் தேவையைப் பூர்த்தி செய்யாது. உடுக்க உடை வேண்டும். இருக்க தலை மேல் கூரை வேண்டும். கல்வி, சுகாதாரம்  அடங்கிய சேவைகள் ஒவ்வொரு குடிமகனுக்கும் கிடைக்க வேண்டும் என்பவை முக்கிய அளவு கோலாக நிபுணர்களால் பரிந்துரைக்கப்பட்டது.
1971-ஆம் வருடம் ரத், தாண்டேகர் கமிட்டி தனி நபருக்கு 2250 எரிசக்தி ( கலோரி) உடல் ஊட்டசத்து, புரத சத்து அளிக்க  குறைந்தபட்ச தேவை என்று அளவிட்டது. இதைப் பெறுவதற்கு ஆகும் செலவு கிராமப்புறம், நகர்ப்புறம் என்று வகைப்படுத்தி அதனை வறுமை அளவு கோலாகக் கொள்ள வேண்டும் என்பது முக்கியமான பரிந்துரை. இதிலும் மாநிலங்களின் சீதோஷ்ணநிலை, ஜனத்தொகையின் வயது விகிதாச்சாரம் அடிப்படையில் வேறுபடும். 
சராசரி  பத்து வருடங்களுக்கு ஒரு முறை திட்ட கமிஷன் மூலம் வறுமை கணக்கெடுப்பு நடைபெறுகிறது. 1979 -ஆம் வருடம் ஒய்.கே.அலக் கமிட்டி, 1993 -ஆம் வருடம் லக்டவாலா கமிட்டி, 2009 -ஆம் வருடம் தெந்தூல்கர் கமிட்டி, 2012- ஆம் ஆண்டின் ரங்கராஜன் கமிட்டி வறுமைக்கோட்டினை வரையறுக்க பல வகை அளவுகோல்களைக் கொண்டு முடிவுகளையும் பரிந்துரைகளையும் அளித்தார்கள்.
நாள் ஒன்றுக்கு அடிப்படை வசதியோடு ஜீவிக்க எவ்வளவு செலவாகும் என்பதைப் பார்க்க வேண்டும். பொருளாதார நுணுக்கங்கள் அடிப்படையில் திட்ட கமிஷனால் அமைக்கப்பட்ட கமிட்டிகள் வறுமையைப் போக்கவும், பொருளாதாரத்தில் நலிந்த மக்கள் கண்ணியமான வாழ்க்கை வாழ அரசு எந்தவிதமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதை எடுத்துரைக்கின்றன. கூட்டிக் கழித்துப் பார்த்தால் அதை வைத்துதான் ஏழைகளுக்கு கைகொடுத்து சமுதாயத்திற்கு அவர்களது முழுமையான பங்களிப்பைப் பெற முடியும். நாள் ஒன்றுக்கு ரூ.49 கிராமப்புறத்தில் தனிநபருக்கு ஊட்ட சத்து குறைவில்லாத உணவு அளிக்க செலவாகும் என்றும் அதுவே நகர்ப்புறத்தில் ரூ57.2 என்று திட்ட கமிஷன் 1979- இல் கணக்கிட்டது. லக்டவாலா, தெண்டூல்கர் கமிட்டிகள் உடலுக்கு தேவையான கலோரிகள்- ஊட்டச்சத்தை மட்டும் வைத்து வறுமைக்கோட்டினை அளவிட முடியாது. இதர தேவைகள் சுகாதாரம், கல்வி ஆகியவை மாநில செலவினத்தில் வந்தாலும் இந்த இரு இனங்களுக்கும் ஒரு ஏழை சொந்தச் செலவு செய்ய வேண்டிய கட்டாயத்தையும் கணக்கில் எடுக்க வேண்டும் என்பதை தெளிவு படுத்தியுள்ளது. மேலும் நலிவுற்ற மக்களின் நுகர்வு மாற்றங்களைக் கருத்தில் கொண்டு தனிநபர் வருமானம் கிராமப்புறத்தில் மாதம் ஒன்றுக்கு ரூ. 441.68 என்றும்,  நகர்ப்புறத்தில் ரூ 578 என்றும்  2004-05 விலைவாசி அடிப்படையில் என்று வறுமைக்கோடு நிர்ணயிக்கப்பட்டது.
பொருட்களை வாங்கும் சக்தியின் அடிப்படையில் ரூ.33 நாளொன்றுக்கு தனிநபருக்கு தேவை என்ற தெண்டூல்கர் அறிக்கை பல சர்ச்சைகளை எழுப்பியது. 
அகமதாபாத் மேனேஜ்மெண்ட் இன்ஸ்டிடியூட்டில் படிக்கும் மாணவர் மும்பாய் தாராவி குடிசைப் பகுதியில் தங்கி,  33 ரூபாயில் எப்படி வாழ முடியும் என்ற 
கேள்வியை அனுபவரீதியாக எழுப்பினார். 
2012 - இல் அமைக்கப்பட்ட ரங்கராஜன் கமிட்டி, விலைவாசி அடிப்படையில் வறுமைக்கோட்டினை கணக்கிட மேலும் பல தேவைகளை உள்ளடக்கி பரிந்துரை வழங்கியது. களத்தில் சென்று ஏழைகளின் நிலையை அளவிடும் போது ஒவ்வொரு வீடுகளிலும் பலவிதமான பிரச்னைகள். கணவனால் கைவிடப்பட்ட குழந்தைகளோடு சமாளிக்கும் தாய், ஆண் துணையில்லாக் 
குடும்பங்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ள குடும்பங்களின் தேவைகள், படிப்பறிவில்லாத பட்டியலினத்தவர், நிலபுலன் இல்லாத விவசாயக் குடும்பங்கள் என்று வறுமை நிலை வேறுபடும். அதன்படி இந்தியாவின் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்கள் மொத்த ஜனத்தொகையில் 29.5% . அதுவே தெண்டூலகர் அறிக்கைப்படி 21.9%. அரசு வகுக்கும் நலத்திட்டங்கள் ஏழைகளுக்கு 
உடனடியாக உதவும் விதத்தில் அமைய வேண்டும். உணவு பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் குடும்ப ரேஷன் அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் சுமார் 1.96 கோடி  குடும்ப ரேஷன் அட்டைதாரர்கள் இருக்கிறார்கள். அதில் சுமார் ஒரு கோடி அட்டைதாரர்கள் 20 கிலோ விலையில்லா அரிசி பெறுகிறார்கள். "ஒரு நாடு ஒரு ரேஷன் கார்டு' முறையில் அட்டைதாரர் நாட்டின் எந்த நுகர்வு நிலையத்திலும் ரேஷன் பொருட்களைப் பெறலாம் என்பது வரவேற்கத்தக்க முடிவு. அதை சரியாக நடைமுறைப்படுத்த வேண்டும். மகாத்மா காந்தி வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் வருடத்தில் குடும்பத்தில் ஒருவருக்கு நூறு நாள் வேலை என்பது கிராமப்புற ஏழை மக்களுக்கு வரப்பிரசாதம். 
"ஜன் தன்' என்ற திட்டத்தில் எல்லாரும் வங்கிக் கணக்கு, வைப்பு ஒன்றுமில்லாத போதும்  தொடங்கலாம். 2014 செப்டம்பர் மாதம் தொடங்கிய ஒரு வாரத்தில் ஒன்றரை கோடி வங்கி கணக்குகள் பதியப்பட்டன. கின்னஸ் ரெகார்டில் ஒரே வாரத்தில் அதிக வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டது என்ற முத்திரை கிடைத்தது. 
ஜனவரி 2021 வரை 41.75 கோடி புதிய வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. அதில் 50 சதவீதத்துக்கு மேற்பட்டவர்கள் கிராமப்புற பெண்கள் 
என்பது தனிச்சிறப்பு. இதன் மூலம் பயனாளிகளுக்கு நேரடியாக அரசு நிவாரணம் தடங்கல் இல்லாமல் சென்றடைகிறது. 
அமெரிக்காவில் கரோனா நிவாரணம் வழங்க தனியே காசோலைகள் தபால் மூலம் பயனாளிகளிக்கு அனுப்பப்பட்டன. முழுமையாகச் செயல்படுத்த ஆறுமாதம் ஆனது. ஆனால் "ஜன் தன்' மூலமாக இந்தியாவில் ஒரேநாளில் நிவாரணம் பயனாளிகளுக்கு சென்றடைந்தது. அது அமெரிக்க நிதி நிபுணர்களின் பாராட்டைப் பெற்றது.
ஒவ்வொரு மாநிலமும் பிரத்யேக நலத்திட்டங்கள் நலிந்தோர் நன்மைக்காக வகுக்கின்றது. தமிழ்நாட்டில் பெண்கள், முதியோர், குழந்தைகள், விவசாயிகள், 
நெசவாளர்கள், கைவினைப் பொருட்கள் செய்பவர்கள், தொழிலாளர்கள், மாணாக்கர்கள் என்று பலதரப்பட்ட மக்களுக்கு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அரசு பள்ளிகளில் சத்துணவு, ஏழைகளுக்கு கறவை மாடு, ஆடு, மாணாக்கர்களுக்கு மடிக் கணினி, 
கர்ப்பிணிப் பெண்களுக்கு உதவும் திட்டங்கள் அதிகப் பயனுள்ளவை. இலவசமாக அளிப்பவை, தொடர்ச்சியாக பயனுள்ளதாக அமைய வேண்டும். கவர்ச்சிகரமான திட்டங்கள் தனிநபருக்கு பயன் தருவதாக மட்டும் இல்லாது சமுதாயத்திற்கும் நன்மை பயக்க வேண்டும். மக்களின் வரிப் பணம் பயனில்லா மானியங்களில் விரயமாகக் கூடாது. 
உலக வங்கி வறுமை கோட்டிற்கான குறியீட்டினை அளித்திருக்கிறது. 1.9 அமெரிக்க டாலருக்கு (ரூ 142.5) மிகாமல் ஒரு நாளைக்கு வருவாய் பெறுபவர் மிகவும் ஏழ்மையான நிலையில் இருப்பவராகக் கருதப்படுவார். எல்லா நாடுகளையும் எடுத்து கொண்டால் மேற்படி கணக்குப்படி  1.9 பில்லியன் (190 கோடி)  மக்கள் வறுமை கோட்டிற்கு கீழே வாடுகின்றனர். ஓர் ஆறுதலான தகவல் 2005- 2015 இடையிலான பத்து வருடங்களில் ஏழ்மையை ஒழிப்பதற்கு பல நாடுகள் எடுத்த முயற்சிகளின் பலனாக வறுமையில் வாடும் மக்களின் எண்ணிக்கை குறைந்து 736 மில்லியன்(73.6 கோடி) ஆக உள்ளது. இந்தியாவிலும் வறுமை ஒழிப்பின் பல பரிமாணங்களான சுகாதாரம், சிசு இறப்பு, பள்ளி கல்வி, ஊட்ட சத்து, குடிநீர் வசதி, வீட்டு வசதி,  சமையல் வாயு போன்றவற்றில் கணிசமான முன்னேற்றம் அடைந்துள்ளதாக உலக வங்கி பாராட்டியுள்ளது.

"கொடியது கேட்கின் நெடியவெல் வேலோய்!
கொடிது கொடிது வறுமை கொடிது
அதனினும் கொடிது இளமையில் வறுமை'
என்றாள் ஒளவை பிராட்டி. 

இளைய சமுதாயம் சமூகநீதி அரசியல் மாயையில் இடஒதுக்கீட்டையே நம்பி தங்களது இயற்கையான திறமையை வெளிப்படுத்த சுய முயற்சி இல்லாது  நேரத்தை வீணடிக்காமல்  உழைத்தால் உய்வுண்டு என்று ஏழ்மையிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ள முயற்சி எடுக்க வேண்டும். 

வறுமை ஒழிப்பில் அரசு மட்டுமல்ல, நல்லுண்ணம் படைத்தவர்களும் "தவ்வி கொடுமின் தலைபட்ட போதே' என்று இளைஞர்கள் மேம்பட உதவிக் கரம் நீட்ட 
வேண்டும். 

சென்ற வார கேள்விக்குப் பதில்: மராட்டா மஹாராணி அஹில்யபாய் ஹோல்கர் 1776 ம் வருடம் காசி விசுவநாதர் கோயிலை புனரமைத்தார்.

இந்த வார கேள்வி: சர்வதேச வறுமை ஒழிப்பு நாள் என்று அனுசரிக்கப்படுகிறது?

(விடை அடுத்த வாரம்)

கட்டுரையாளர்:

மேனாள் காவல்துறைத் தலைவர்
மேனாள் சட்டமன்ற உறுப்பினர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com