கிளர்ந்தெழுங்கள் தோழர்களே! - 31: வஞ்சிக்கப்படும் குழந்தைகள்!

பசுமையான திறந்தவெளி. வனம் சூழ்ந்த நிலப்பரப்பில் யானைகள் கூட்டமாகச் செல்வது கண்கொள்ளாக் காட்சி.
கிளர்ந்தெழுங்கள் தோழர்களே! - 31: வஞ்சிக்கப்படும் குழந்தைகள்!

பசுமையான திறந்தவெளி. வனம் சூழ்ந்த நிலப்பரப்பில் யானைகள் கூட்டமாகச் செல்வது கண்கொள்ளாக் காட்சி.  குடும்பத் தலைவராக ஆண் யானை எல்லாரும் வருகின்றனரா என்று கண்காணித்து கூட்டத்தை வழிநடத்தும். அதில் ஒன்றிரண்டு குட்டி யானைகள் இருக்கும். தாய் யானை மற்றும் வளர்ந்த குட்டிகள் கடைக்குட்டியை வாஞ்சையோடு அரவணைத்து எளிதாகச் செல்வதற்கு முட்டுக் கொடுப்பார்கள். தனியாக ஒரு யானைக் குட்டியோடு செல்லும்போது யாராவது குறுக்கிட்டால் தாய் யானை உடனே தாக்கும் . தனது குழந்தைகளைப் பாதுகாப்பதில் யானை ஒரு போதும் அடி சறுக்காது.  

ஆறறிவுள்ள மனிதனுக்கு மட்டும் தனது குழந்தைகளைப் பாதுகாப்பதில் எப்போதும் அடி சறுக்கல் தான். சமுதாயத்தில் இளைய சமுதாயம் வஞ்சிக்கப்படுவதைப்  பார்த்தால் நெஞ்சம் பதைபதைக்கும். தற்கொலை, சாலை விபத்துகள் இதில் ஒவ்வொன்றிலும் வருடத்திற்கு  சராசரி நாற்பதாயிரம் இளைஞர்கள் உயிரிழக்கிறார்கள்.

பாலின பாகுபாடின்றி பாலியல் கொடுமைகள் குழந்தைகள் மீது இழைக்கப்படுகின்றன. 

பாக்கு என்ற போர்வையில்  போதை மருந்து தடவிய குட்கா பாக்கு தெருமுனைக் கடைகளில் தெரிந்தவர்களுக்கு விற்பனை செய்வார்கள். தெரிந்தவர்கள் என்றால் போதைக்கு அடிமையான வாடிக்கையாளர்கள்! அவ்வப்போது காவல்துறை சோதனை நடத்தி பிடிப்பார்கள். அதிலேயே கவனம் செலுத்த முடியாது. வேறு வேலை வந்துவிடும். மீண்டும் போதை அரக்கனின் களியாட்டம் தொடங்கும்! 

ஒரு போதைப் பொருள் வேட்டையில் சென்னையில் சமீபத்தில் குட்கா விற்ற பெருமாள் என்பவனை காவல்துறை கைது செய்கிறார்கள். சோதனை செய்தபோது போதை பொருட்களோடு விரசமான படங்கள், 

அதுவும் குழந்தைகளோடு பாலியல் தொடர்பான வீடியோக்கள் காவல்துறையை அதிர வைத்தது. கள்ளத் தொடர்பு வைத்திருந்த பெண்ணின் வயது வராத மகளோடு அந்த கொடூரனின் தொல்லைகள், அதுவும் தாயாரும் உடந்தையாக இருந்த காட்சிகள் கைப்பற்றப்பட்டன. 

நமது நாட்டில்  குழந்தைகள் பாலியல் கொடுமையில் வஞ்சிக்கப்படுவது மூன்று கடற்கரைப் பகுதிகளில் அதிகமாக உள்ளது. கேரளாவில் கோவளம், கோவா கடற்கரை, மூன்று மகாபலிபுரம் . இந்த மூன்று இடங்களில்தான் அதிகம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். 2002-ஆம் ஆண்டு மகாபலிபுரத்தில் டச் நாட்டை சேர்ந்த வில்ஹல்ம் நடத்திய அநாதை ஆசிரமத்தில் இந்த கொடுமை நடப்பது வெளி வந்தது. அவர் கைது செய்யப்பட்டு வழக்கு நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு 2011 -இல்  பத்து வருட 
தண்டனை விதிக்கப்பட்டது. 

குழந்தைகளுக்கு  எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர் பெரும்பாலும் நெருங்கிய உறவினர் அல்லது குழந்தைகளுக்கு நன்கு பரிச்சயமானவர்கள். இதனால்தான் இந்த மாதிரி குற்றங்கள் வெளி வருவதில்லை. பாதிக்கப்பட்ட குழந்தைகளும் பயந்து வெளியில் சொல்வதில்லை. வெளிச்சத்திற்கு வரும் ஒரு நிகழ்விற்குப் பின்னால் வெளி வராத நிகழ்வுகள் ஆயிரக்கணக்கில் இருக்கும். பல நேர்வுகளில் பெற்றோர்களே பாலியல் கொடுமை பற்றி தெரிந்தும், செய்வதறியாமல் மறைத்து விடுகிறார்கள். சில குடும்பங்களில் தந்தையே சாத்தானாக பெற்ற மகளையே பாலியல் கொடுமைப்படுத்தும் கொடூரங்களும் நடக்கின்றன.

குழந்தை பாலியல் கொடுமை உலகளாவிய பிரச்னை. உலக சுகாதார அமைப்பு, பத்து குழந்தைகளில் ஒரு குழந்தை பாலியல் துன்பத்தில் சிக்குகிறது என்று கூறியுள்ளது. 

இது ஏதோ மேலை நாடுகளில் நடக்கும் கொடுமை என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் நிஜம் வேறு. சாக்ஷி என்ற தன்னார்வு தொண்டு நிறுவனம் தில்லியில் 350 பள்ளி மாணவிகளிடம் நடத்திய ஆய்வில் 63% தங்களுடைய நெருங்கிய உறவினர்களால் பாலியல் தொல்லையில் சிக்கியிருக்கிறார்கள்.   25% அருவருக்கத்தக்க வகையில் ஆண்களின் இச்சைக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது. 1997 -இல் தில்லி, கொல்கத்தா, மும்பாய், சென்னை, கோவா நகரங்களில் நடுத்தர உயர் மட்ட குடும்பப் பெண்களிடம் நடத்திய ஆய்வில் 76% பெண்கள் தாங்கள் சிறுமிகளாக இருந்த போது பாலியல் தொல்லை அனுபவத்திருப்பதாகத் தெரிவித்தனர். அதில் 71% கொடுமை இழைத்தவர்கள் சொந்தக்காரர்கள் தெரிந்த நண்பர்கள் என்பது வேதனைக்குரியது. வேலியே பயிரை மேய்ந்த பயங்கரம்! 

"துளிர்' என்ற குழந்தைகள் பாதுகாப்பு தன்னார்வத் தொண்டு அமைப்பு 2006 -இல் சென்னையில் சுமார் 2,300 பள்ளி மாணவியரிடம் நடத்திய கேள்வி பதில் ஆய்வில் குழந்தை பாலியல் கொடுமை 42% என்பதும், இதில் ஏழை பணக்காரர் என்ற வித்தியாசமின்றி எல்லாத் தரப்பட்ட குழந்தைகளும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதும் அதில் 48% ஆண் குழந்தைகள் பாலியல் கொடுமையைச் சந்திக்கிறார்கள் என்பதும் அதிர வைக்கும் முடிவு. பெண் குழந்தைகள் தாம் பாலியல் தொல்லைக்கு  ஆளாகிறார்கள் என்று நினைக்கிறோம். ஆனால் ஆண் குழந்தைகளும் அதே நிலையில் பாதிக்கப்படுகிறார்கள்.

குழந்தைகள் காணாமல் போவது, பல நகரங்களில் நடக்கிறது. காவல்துறையும் வழக்குப் பதிவு செய்து முதலில் ஆர்வமாகத் தேடுவார்கள். காலம் கடந்து விட்டால் வழக்கு மறக்கப்படும். சென்னை உயர்நீதிமன்றம் காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடிக்க காவல்துறை திட்டமிட்ட  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சி ஐ டி குற்றப்பிரிவு இதனை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருக்கிறது. குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பது, போதைப் பொருள் விற்பனை செய்வது போன்ற குற்றங்களில் ஈடுபட வைத்து ஆதாயம் பார்க்கும் குற்ற சிண்டிகேட்டுகள் உள்ளன. 

இத்தகைய சட்டத்திற்கு புறம்பான வலைகளில் விழும் குழந்தைகளை விசாரிக்க ஜுவனைல் ஜஸ்டிஸ் - சிறார் நீதி மற்றும் பாதுகாப்பு சட்டம் உள்ளது. அதன் மூலம் அவர்களை குற்றவாளிகள் கும்பலிடமிருந்து மீட்டு சீர்திருத்தப் பள்ளிகளில் கல்வி மற்றும் சிறு தொழில்களை கற்றுக் கொடுத்து நல்வழி படுத்தப்படுகிறார்கள். சமூக நீதித்துறை காவல்துறையோடு இணைந்து இதனை நிர்வகிக்கிறது .

காணாமல் போகும் குழந்தைகள் பிரச்னையை முன்னெடுத்து உச்சநீதிமன்றம், தேசிய குற்ற ஆவணகம் 18 வயதுக்குக் கீழ் உள்ள காணாமல் போன குழந்தைகள் பற்றிய தகவல்களை ஆவணப்படுத்த வேண்டும் என்று கொடுத்த ஆணைக்கிணங்க 2016- இல் இருந்து இந்த தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. 

2019- இல் சேகரித்த  தகவல்களின்படி,  73,138 குழந்தைகள் காணாமல் போனதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.  நாள் ஒன்றுக்கு சராசரி 200 குழந்தைகள் கடத்தப்படுகின்றன. இதில் பெண் குழந்தைகள் 52,019. மொத்தத்தில் 71%. மத்திய பிரதேசத்தில்  தான் அதிகமான வழக்குகள். அதைத் தொடர்ந்து பீகார் சட்டிஸ்கர், உத்தரபிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, தில்லி, ராஜஸ்தான் தெலங்கானா, ஒடிஷா பதினோறு மாநிலங்கள், நாட்டில்  80% காணாமல் போன குழந்தைகள் கணக்கிற்கு காரணமாகின்றன. சராசரி 60% காணாமல் போன குழந்தைகள்தாம் மீட்கப்படுகின்றன. கடந்த பத்து வருடங்களில் இன்னும் மீட்கப்படாத குழந்தைகள் எண்ணிக்கை மூன்று லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும்.   

பரவலாக எல்லா மாநிலங்களிலும் பாலியல் கொடூர நிகழ்வுகள் பற்றிய செய்தி மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதுவும் குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டிய நிலையில் உள்ள ஆசிரியர்கள், 

உறவினர்கள் இத்தகைய கொடுஞ்செயலில் ஈடுபடுவதைத் தடுக்க கடும் சட்டம் இயற்ற வேண்டும் என்ற நிலை உருவாகியது. பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, எல்லா மாநிலங்களிலும் அமலுக்கு வந்துள்ளது.

18 வயதுக்கு குறைவான எல்லா குழந்தைகளையும் பாலின வித்தியாசமின்றி பாலியல் துன்பத்திலிருந்து  காப்பதற்காக கொண்டுவரப்பட்ட சட்டம் கடுமையானதாக இருந்தாலும், மிகவும் தேவையானது.

"உலக பொருளாதார நுண்ணறிவு' என்ற சர்வதேச ஊடகப் பிரிவு 2019 -இல் குழந்தைகள் பாலியல் கொடுமை பற்றி 60 நாடுகளில் ஆய்வு நடத்தியது. 

இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்வீடன், போன்ற பல நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில்தான் குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம், அதன் ஷரத்துகள் நல்ல முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் இந்தியாவிற்கு இதில் முதலிடம் என்று ஆய்வறிக்கை  வெளியிட்டுள்ளது. 

இந்த சட்ட உட்பிரிவு 3, 4 -இன் படி குழந்தைகளை பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தும் குற்றத்திற்கு குறைந்தபட்சம் 7 வருடமும் அதிக பட்சமாக ஆயுள் தண்டனையளிக்க இடமுண்டு. பெற்றோர், உறவினர், ஆசிரியர், காவல்துறையினர் குற்றத்தை இழைத்தால் தண்டனை பத்து வருடம், அதிகபட்சமாக ஆயுள் தண்டனை அபராதமும் விதிக்கலாம். குழந்தைகளைப் பாலியல் உணர்வோடு சீண்டினாலும் ஐந்து வருட தண்டனை. உட்பிரிவு 11, 12-இல் குழந்தைகளை செய்கைகள் மூலமாக பாலியல் தொல்லை கொடுப்பது, வக்கிரமாகப் பார்ப்பது, தொலைபேசி மூலம் ஆபாசமாகப் பேசுவது, பாலியல் இச்சைக்கு அழைப்பது போன்ற குற்றங்களுக்கு,  குழந்தைகளைத் தொட வில்லை என்றாலும் அதிகபட்சமாக மூன்றாண்டு சிறை உண்டு. சமீபத்தில் அதிக பட்ச தண்டனைஆயுள் தண்டனையிலிருந்து  மரண தண்டனை என்ற மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது சட்டத்தின் வலிமை அதன் அமலாக்கத்தில் தான் இருக்கிறது. எவ்வாறு இந்த சட்டம் அமலாக்கப்படுகிறது என்பதை சமூக ஆர்வலர்கள் ஆய்வு செய்தனர். 

தமிழகத்தில் 2019 வரை போஸ்கோ சட்டத்தில் சுமார் 4300 வழக்குகள் பதிவாகின. முந்நூறுக்கும் மேற்பட்ட வழக்குகள் சேலம், திருநெல்வேலி, கடலூர், சென்னை மாவட்டங்களில் போடப்பட்டன. இந்த வழக்குகளில் 80% காதலித்து வீட்டை விட்டு ஓடிய ஜோடிகள் சம்பந்தப்பட்ட வழக்குகள். ஜாதி அடிப்படையில் தான் புகார்கள் வரும். மேல் ஜாதி பெண், வேறு ஜாதி ஆண் மகனைக் காதலித்தால் புகார் உடனே வரும். பெண்ணுக்கு 18 வயதுக்கு கீழ் என்றால் போஸ்கோ சட்டம் வயது வந்த ஆண் மீது போடப்படுகிறது. ஆண், பெண் இருவரும் 18 வயதுக்கு கீழ் என்றால் போஸ்கோ சட்டம் 18 வயதுக்கு கீழ் உள்ள ஆண் மீது போடப்படுவதில் நியாயமில்லை, ஏனெனில் சட்டப்படி 18 வயதுக்கு கீழ் உள்ள ஆணும் சட்டப்படி பாதிக்கப்பட்டவன் ஆகிறான்! இந்த விசேஷச் சட்டம் குழந்தைகள் மீது தொடுக்கப்படும் அநீதியைக் களைவதற்கு. ஆனால் காதல் ஜோடிகள் பிரச்னையை இதில் நுழைப்பது சரியில்லை. மேலும் போஸ்கோ வழக்குகள் பல வருடங்களாக கிடப்பில் உள்ளன. தள்ளுபடி செய்யப்பட்ட வழக்குகள் மீது மேல் முறையீடு செய்வதில்லை. போஸ்கோ வழக்குகளை மகளிர் காவல் நிலையம்  விசாரணை செய்கிறது. ஆனால் குற்றவாளிகள் ஆண்கள், அவர்களை சட்டம் ஒழுங்கு போலீசார் விசாரிக்க வேண்டும் என்பன போன்ற கருத்துகள் மேற்படி ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2010 -இல் கோயம்பத்தூரில் சிறுமி மஸ்கின் தம்பி ரித்திக் இருவரையும் கடத்தி பாலியல் கொடுமை இழைத்த மோகன்ராஜ், மனோகரன் ஆகிய இருவரில் மோகன்ராஜ் என்கௌண்டரில் சுடப்பட்டான். மனோகரனுக்கு தூக்கு தண்டனை. இதனை திறம்பட முடிவிற்கு கொண்டு வந்த அப்போதைய கோயம்புத்தூர் கமிஷனர் இப்போதைய டிஜிபி சைலேந்திர பாபு குழந்தைகள் மீது பாலியல் கொடுமை இழைக்கும் கொடூரர்கள் மீது கடுமையான  நடவடிக்கை உறுதி செய்ய வேண்டும்.

சென்ற வாரக் கேள்விக்கு பதில்: ஐக்கிய நாடுகள் பொது சபை 1992 -ஆம் வருடம் நிறைவேற்றிய தீர்மானத்திற்கு இணங்க  வறுமை ஒழிப்பு நாள் அக்டோபர் 17 அனுசரிக்கப் படுகிறது.

இந்த வாரக் கேள்வி: போஸ்கோ சட்டம் எந்த வருடம் அமலுக்கு வந்தது?  

(விடை அடுத்தவாரம்)

கட்டுரையாளர்:

மேனாள் காவல்துறைத் தலைவர் மேனாள் சட்டமன்ற உறுப்பினர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com