அரசு ஊழியர்களை உருவாக்கும் பிகார் ரயில்நிலையம்!

பிகார் மாநிலத்திலுள்ள சாசாராம் ரயில்நிலையத்தின் முதல் இரு நடைமேடைகள் அதிகாலையிலேயே களைகட்டிவிடுகின்றன.
அரசு ஊழியர்களை உருவாக்கும் பிகார் ரயில்நிலையம்!

பிகார் மாநிலத்திலுள்ள சாசாராம் ரயில்நிலையத்தின் முதல் இரு நடைமேடைகள் அதிகாலையிலேயே களைகட்டிவிடுகின்றன. அங்கு குழுக்களாக அமர்ந்திருக்கும் இளைஞர்கள் தங்களுக்குள் கேள்வி கேட்டு பதில் சொல்லிக் கொள்கிறார்கள்; பத்திரிகைகளைப் படிக்கிறார்கள்; போட்டித் தேர்வுப்புத்தகங்களைப் படிக்கிறார்கள். வேலைவாய்ப்புகளுக்கான தேர்வுகளுக்குத் தயாராகிறார்கள்.

அதிகாலையிலேயே அவர்களது சுறுசுறுப்பு ரயில்நிலையத்தைச் சூழ்ந்து கொள்கிறது. அந்த ரயில் நிலையத்திலுள்ள ஊழியர்கள், பணியாளர்களுக்கு அவர்கள் செல்லப் பிள்ளைகள். "ரயில்நிலையத்தின் மாணவர்கள்' என்று, அவர்களுக்கு ரயில்நிலைய மேலாளர் சார்பில் சிறப்பு அடையாள அட்டைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

சாசாராம், பிகார் மாநிலத்தின், ரோத்தார் மாவட்டத்திலுள்ள ஒரு நகராட்சி; மொத்த மக்கள்தொகை 1.5 லட்சம். இந்த ரயில்நிலையத்தில், காலையிலும் மாலையிலும் சுமார் இரண்டு மணிநேரம் பல்வேறு இடங்களிலிருந்து வந்து குழுமும் மாணவர்களும் இளைஞர்களும் தங்கள் எதிர்கால வாழ்க்கைக்காக, நல்ல அரசுப் பணியில் சேர்வதற்கான போட்டித் தேர்வுகளில் வெல்வதற்காகப் படிக்கிறார்கள். சில மாணவர்கள் குழுக்களாக இணைந்து விவாதித்து, சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்கிறார்கள். மூத்த மாணவர்கள் இவர்களை வழி நடத்துகிறார்கள்.

இந்த நடைமுறை 2002 - இல் தொடங்கியதாகச் சொல்கிறார்கள். அப்போது பிகாரில் கடுமையான மின்வெட்டு நிலவியது. வீடுகளில் இருந்தால் படிக்க முடியாது என்பதால், அருகிலுள்ள சாசாராம் ரயில்நிலையத்துக்கு வந்து இங்குள்ள விளக்குக் கம்பங்களின் கீழ் அமர்ந்து படித்த சில மாணவர்கள் தேர்வுகளில் வென்று அரசு அதிகாரிகள் ஆன பிறகு, இங்கு வந்து படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கைஅதிகரித்துவிட்டது.

நக்ஸல்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதி ரோத்தார் மாவட்டம். இங்கு வளர்ச்சி என்பது அண்மைக்காலமாகத் தான் எட்டிப் பார்க்கிறது.

இந்தச் சூழலில் வறுமையான குடும்பங்களில் பிறந்தவர்கள் போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்களை வாங்கவும் கூட சிரமமான நிலை உள்ளது. அவர்களுக்கு வரப்பிரசாதமாக சாசாராம் ரயில்நிலையக் கூடுதல் அமைந்துவிட்டது.

இங்கு தினசரி வரும் ஐநூறுக்கு மேற்பட்ட மாணவர்கள், தாங்கள் கொண்டு வரும் புத்தகங்களை பிறருடன் பகிர்ந்துகொள்கிறார்கள். நடப்பு விவகாரங்கள், பொதுஅறிவு, கணிதம், வரலாறு, தர்க்கவியல், சமூகவியல், அரசு நிர்வாகம் தொடர்பான, போட்டித் தேர்வுகளில் வரும் கேள்விகளுக்கு பதில்களை அறிகிறார்கள். முந்தைய போட்டித் தேர்வுகளின் வினாத்தாள்களை வைத்து மாதிரித் தேர்வுகளையும் எழுதிப் பழகுகிறார்கள்.

இதன்மூலமாக ஆண்டுதோறும் குறைந்தபட்சம் நூறு மாணவர்கள் அரசு வேலைகளில் சேர்வதாகத் தெரிகிறது. ரயில்வே வாரியத் தேர்வுகள், வங்கித் தேர்வுகள், மத்திய- மாநில பணியாளர் தேர்வாணைய போட்டித் தேர்வுகள், குடிமைப்பணித் தேர்வுகள் உள்பட பலதரப்பட்ட பணிகளுக்கு இங்கு மாணவர்கள் தயாராகிறார்கள். இங்கு படித்து ஐஏஎஸ் தேர்வில் வென்ற மாணவர்களும் இருக்கிறார்கள்.

போட்டித் தேர்வுகளில் வென்று அரசுப் பணிக்குச் சென்றவர்களும், தேர்வில் வெல்ல முடியாதபோதும் விடாமுயற்சியுடன் படிப்பவர்களும், இங்கு புதிதாக வரும் மாணவர்களுக்கு மூத்த வழிகாட்டிகளாக அமைந்து உதவுவதுதான் சாசாராமின் சிறப்பு. எழுத்துத் தேர்வுகளில் வென்று நேர்காணலுக்குச் செல்லும் புதியவர்களுக்கு உதவ, மூத்தவர்கள் குழுவும் இங்கு உண்டு.

இதன் காரணமாக, கடந்த 20 ஆண்டுகளில் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட பல துறை ஊழியர்கள் இங்கிருந்து உருவாகியிருப்பதாகக் கூறுகிறார், இங்கு படித்து ஐபிஎஸ் அதிகாரியான மாணவர் ஒருவர். ஐஐடி, ஐஐஎம்களில் படிக்கும் மாணவர்கள் பலரும் இங்கு வந்து படிப்பதைக் காண முடிகிறது. 60 கி.மீ. சுற்றளவிலிருந்து வருகை தரும் சில மாணவர்கள் இரவு இந்த ரயில்நிலையத்திலேயே தூங்கி, அதிகாலையில் எழுந்து படித்தபின் வீட்டுக்குச் செல்கிறார்கள்.

வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் தடைகளை எப்படி வெல்வது என்பதற்கு சாசாராம் ரயில்நிலையத்தின் மாணவர்கள் ஓர் உதாரணம். மிகவும் எளிய குடும்பங்களில் பிறந்த இந்த மாணவர்கள், தொடர் மின்வெட்டையும் குடும்ப வறுமையையும் குறையாகக் கருதி ஒதுங்காமல், நேர்மறையான எண்ணங்களுடன் ஒன்றிணைந்ததால், இந்திய ரயில்வே வரைபடத்தில் சாசாராம் முக்கிய இடம் பிடித்துவிட்டது.

தினசரி ரயில்கள் வந்துசெல்வதுபோலவே இந்த மாணவர்களின் பயணமும் தொடர்கிறது. திட்டமிட்ட வழித்தடங்களில் இயக்கப்படும் ரயில்கள் சேர வேண்டிய இடங்களைச் சேர்வதுபோல, இந்த மாணவர்களின் முயற்சியும் வெற்றி இலக்கை நோக்கிப் பயணிக்கிறது. இந்த ரயில் நிலைய நடைமேடைகளில் படித்து போட்டித் தேர்வுகளில் வென்று நல்ல அரசுப் பணிகளில் சேர்ந்த பலர், புதிதாக வரும் இளைஞர்களுக்கு வழிகாட்ட ரயில்நிலையத்தில் காத்திருக்கிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com