கணினிமயமான காய்கறி வணிகம்!

விவசாயம் லாபம் இல்லாத ஒன்றாகப் போய்விட்டது என்று கவலையுடன் சொல்பவர்கள் அதிகம்.அதை லாபகரமானதாக மாற்றுவது எப்படி?
கணினிமயமான காய்கறி வணிகம்!


விவசாயம் லாபம் இல்லாத ஒன்றாகப் போய்விட்டது என்று கவலையுடன் சொல்பவர்கள் அதிகம். அதை லாபகரமானதாக மாற்றுவது எப்படி? என்று சிந்தித்து தனது செயல்களின் மூலம் லாபகரமாக மாற்றிக் காண்பித்து இருக்கிறார் கோயம்புத்தூரைச் சேர்ந்த இளைஞர் ஷியாம்பிரசாத். அதற்காக அவர் உருவாக்கியுள்ள நிறுவனம்தான் "வெஜ்ரூட்'.

பெரும் வியாபாரிகளும், இடைத்தரகர்களும் ஆக்கிரமித்துக் கொண்டிருந்த விவசாய விளைபொருள்கள் விநியோகத்தை,தான் உருவாக்கிய எளிய செயலிகள் மூலம்,விவசாயிகளுக்கு லாபம் தரும் ஒன்றாகமாற்றிவிட்டார்.இது தொடர்பாக ஷியாம் பிரசாத்திடம் பேசியதிலிருந்து...

""நான் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன்.

காலங்காலமாக விவசாயிகளின் விளைபொருள்களுக்கான விலையை நிர்ணயிப்பவர்கள் விவசாயிகள் அல்ல.எங்கிருந்தோ வரும் மொத்த வியாபாரிகளும், இடைத்தரகர்களும் விளைபொருள்களுக்கான விலையை நிர்ணயித்து வந்தார்கள். இன்னொருபுறத்தில் விவசாயவிளைபொருள்களை வாங்கிப் பயன்படுத்தும் மக்களும் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை இருந்தது. இதனால் விவசாயிகளுக்கும் லாபம் இல்லை. பயன்படுத்தும் மக்களுக்கும் லாபம் இல்லை.இந்தநிலையை மாற்ற வேண்டும் என்று நினைத்தேன்.

எனக்கு பள்ளியில் படிக்கும் காலத்தில் இருந்தே படிப்பில் பெரிய அளவுக்கு ஆர்வமில்லாமல் இருந்தது.வெறும் புத்தகப் படிப்பாக உள்ள இக்காலக் கல்வியால் மாணவர்கள் மிகவும் திறமையானவர்களாக உருவாவதில்லை என்பது என் கருத்து.

எனக்கு சமூக சேவையில் ஆர்வம் அதிகம் என்பதால், பசியோடு இருக்கும் மக்களுக்கு இலவச உணவு அளிக்கும் தொண்டு நிறுவனம் ஒன்றில் சிறிது காலம் பணி செய்தேன். இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் எக்காலத்திலும் நல்ல வாய்ப்புகள் உள்ள உணவு தொடர்பான நிறுவனத்தை 2018 -இல் தொடங்கினேன்.

விவசாயிகளை இடைத்தரகர்களிடம் இருந்து மீட்பது; விளைபொருள்களை வாங்கி பயன்படுத்தும் மக்களை வியாபாரிகளிடம் இருந்து மீட்பது ஆகியவைதான் எனது நோக்கமாக இருந்தது.

இதற்காக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்தசெயலிகளை உருவாக்கினேன்.அவற்றில் ஒன்றுதான் இந்தியாவின் முதன்முதலான சாட்பாட்எனும் செயலி. இதை எங்களுடைய நிறுவனத்தின் இணையதளத்தில் இணைத்திருக்கிறோம்.

விவசாயி இந்த செயலியைப் பயன்படுத்தி, தங்களுடைய விளைபொருள்களான காய்கறிகள், பழங்கள், கீரைகள் ஆகியவற்றுக்கு அவர்கள் பெற விரும்பும் விலையைச் சொல்லி,உரிய விலையை நிர்ணயிக்கலாம்.

அவர்கள் தங்களுடைய விலைபொருள்களுக்கான விலையை நிர்ணயித்து, ஒப்புதல் வழங்கிவிட்டால்,அவர்கள் இருக்கும் பகுதியில் உள்ள எங்களுடைய கொள்முதல் நிலையங்களில் உள்ள பணியாளர்கள் நேரில் சென்று விளைபொருள்களை வாங்கிக் கொள்வார்கள். பிறகு அவற்றை தரம் பிரித்து, பேக் செய்து மக்களிடம் விநியோகம் செய்வதற்கான அடுத்த கட்ட பணியை மேற்கொள்வார்கள்.

அடுத்து விளைபொருள்களை மக்களுக்குக் கொண்டு செல்வதற்கு உதவக் கூடிய செயலி ஒன்றையும் உருவாக்கியிருக்கிறோம்.இந்தச் செயலியை கூகுள் பிளேஸ்டோர், ஆப்ஸ்டோர்களில் இருந்து ஒருவர் தனது செல்பேசியில் நிறுவிக் கொள்ளலாம்.

இந்தச் செயலியைப் பயன்படுத்தி எங்களுடைய நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு,தங்களுக்குத் தேவையான காய்கறிகள், பழங்கள், கீரைகளை ஆர்டர் செய்தால், எங்கள் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் அவர்கள் இருக்கும் இடத்துக்கே நேரடியாகச் சென்று டெலிவரி செய்வார்கள்.

அடுத்து,மிகப் பெரிய அபார்ட்மென்ட்களில் வசிப்பவர்கள் கரோனா தொற்று காலத்தில் அபார்ட்மென்ட்டை விட்டு வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. லிஃப்ட்களில் செல்வது, காய்கறி கடைகளுக்குச் சென்று காய்கறிகள் வாங்குவது எல்லாம் தொற்றின் அபாயத்தை அதிகப்படுத்துபவையாக இருந்தன.

வெளியில் இருந்து காய்கறி விற்பவர்கள் வந்தாலும்அவர்களாலும் தொற்று பரவும் அபாயம் இருந்தது. இந்தநிலையை மாற்ற அபார்ட்மென்ட்டின் பொது இடம் ஒன்றில் பேக் செய்யப்பட்ட எங்களுடைய காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றைநேரடியாக மக்களுக்கு விநியோகித்தோம்.

இப்படி காய்கறி வணிகத்தில்இடைத்தரகர்கள், வியாபாரிகள் இல்லாமல் செய்தோம்.இதனால்வழக்கமாகக் கிடைப்பதைவிட விவசாயிகளுக்கு அதிக விலை கிடைத்தது. மக்களுக்கு விலைகுறைவான தரமான காய்கறிகள், பழங்கள், கீரைகள் கிடைத்தன.

ஆனால் இதனால் ஒரு பாதிப்பும் ஏற்பட்டது. நடைபாதையில் கீரை விற்றுக் கொண்டிருக்கும் ஏழைப் பெண்கள், பாட்டிகள் பாதிக்கப்படும் நிலை இருந்தது.இதையும் மாற்ற "மைக்ரோ க்ரீன் கியாஸ்க்' என்ற பெயரில் அனுமதி பெற்ற காய்கறிக் கடைகளை உருவாக்கினோம். அங்கே நாங்கள் விநியோகம் செய்யும் காய்கறி, கீரைகள், பழங்களை விற்பனைக்குக் கொடுத்தோம்.ஏற்கெனவே காய்கறி, கீரை விற்றவர்கள் இந்தக் கடையை நடத்தலாம். இதற்காக ரூ.300 மாதத்தவணையாக அவர்கள் கட்ட வேண்டும்.தவணைத் தொகையைக் கட்டி முடித்ததும் கடை அவர்களுக்குச் சொந்தமாகிவிடும். ஏற்கெனவே காய்கறி விற்றவர்கள் என்றில்லை. புதிதாகத் தொடங்க நினைப்பவர்களும் எங்களிடம் தொடர்பு கொள்ளலாம்.

வருங்காலத்தில் கார்டை ஸ்வைப் பண்ணினால், தேவையான காய்கறிகளைப் பெறக் கூடிய இயந்திரங்களை உருவாக்கி பொது இடங்களில் நிறுவ இருக்கிறோம்.

எங்களுடைய இந்த முயற்சிகளுக்கு இந்திய அரசின் அங்கீகாரம், ஸ்டார்ட்அப் தமிழ்நாட்டின் அங்கீகாரம் ஆகியவை கிடைத்துள்ளன.

பல தனியார் நிறுவனங்களைச் சேர்ந்தவர்களின் நிதி முதலீடும்ரூ.1.25 லட்சம் டாலர் அளவுக்குக் கிடைத்துள்ளது. வெறும் 22 வாடிக்கையாளர்களுடன் தொடங்கிய எங்கள் நிறுவனத்தில் இப்போது 52 ஆயிரத்துக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

கோவை, சென்னை, மதுரை, திருப்பூர்,தூத்துக்குடி, பெங்களூரு, கோவா ஆகிய நகரங்களில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நாங்கள்,அடுத்து கன்னியாகுமரி, மும்பை, நாசிக், ஹைதராபாத், விருதுநகர், டெல்லி ஆகிய நகரங்களில் விரிவு படுத்தும் முயற்சியை மேற்கொண்டிருக்கிறோம்.

காய்கறி வணிகத்தை கணினிமயமாக்கும் எங்களுடைய முயற்சிகள் தொடரும்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com