உணவில் கவனம்!

இன்றைய உலகம் அவசர உலகம் அதற்கேற்றாற் போல் ஃபாஸ்ட் ஃபுட் எனப்படும் துரித உணவு கலாசாரம் பெரு நகரங்களை தாண்டி நகரங்களிலும் வேகமாக பரவி வருகிறது.
உணவில் கவனம்!

இன்றைய உலகம் அவசர உலகம் அதற்கேற்றாற் போல் ஃபாஸ்ட் ஃபுட் எனப்படும் துரித உணவு கலாசாரம் பெரு நகரங்களை தாண்டி நகரங்களிலும் வேகமாக பரவி வருகிறது.

காலில் சக்கரத்தைக் கட்டிக்கொண்டு வேலை வேலை என அலையும் இளைஞர்கள் பலர், "" உட்காருவதற்கு கூட நேரமில்லையா?'' என குடும்பத்தினர் அங்கலாய்த்தாலும் கூட அதையெல்லாம் காதில் வாங்காமல் நின்றுகொண்டே அரக்க பரக்க சாப்பிட்டு விட்டு  பணிக்குச் செல்வார்கள். தாங்கள் சாப்பிடுவது என்னவென்றே தெரியாமல் சாப்பிடுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். வேலைக்குப் போகும் இளம் வயதினர் என்றில்லை, கல்லூரிக்குச் செல்பவர்கள் கூட கடைசி நிமிடம் வரை  சும்மா இருந்துவிட்டு, கல்லூரிக்குக் கிளம்பும்போது அவசர அவசரமாகச் சாப்பிட்டுவிட்டு ஓடுகிறார்கள். 

சிலர் உணவு வகைகளைப் பற்றியோ அதன் குணங்களை பற்றியோ உணராமல் நாள் முழுவதும் சாப்பிடுபவர்களாக இருப்பார்கள். ஒரு சிலர் ஓய்வு இல்லாத காரணத்தால் உணவு குறித்த சிந்தனையே இல்லாமல் இருப்பார்கள்.  ஒரு சிலரோ எந்தவிதமான குறுக்கீடுகளும் இல்லாமல் இதுவரை சாப்பிட்டு இருக்கவே மாட்டார்கள். ஒரு வாய் உணவை சாப்பிடும் பொழுது அவரது உதவியாளர் ஏதோ ஒரு விஷயம் குறித்து அவரிடம் கேட்பார். 

இதனால் அந்த உணவை அவர் முழுமையாக சாப்பிடக் கூட முடியாமல் போய்
விடலாம். 

ஒரு நாளில் ஒருவர் பலமுறை உணவு சாப்பிட்டாலும், பானங்களை குடித்தாலும் எத்தனை முறை உணவை ரசித்து, ருசித்து சாப்பிட்டார்கள் என்றால் அது கேள்விக்குறிதான். உணவு உண்ணும் முறை கூட உடலிலும், மூளையிலும், மனதிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்கின்றன ஆய்வுகள். "மைண்ட் புல் ஈட்டிங்' எனப்படும் ரசித்து ருசித்து சாப்பிடும் முறை உண்மையிலேயே மனதையும் உடலையும் வலுவாக்கிறது. 

அத்துடன் உணவுக்கும் மூளைக்கும் இடையே எண்ணற்ற தொடர்புகள் இருப்பதாகவும், மனநலத்திலும் உணவின் தாக்கம் அதிகம் இருப்பதாகவும் பல்வேறு ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. சாப்பிடும்போது அமைதியாகவும் ரசித்தும் சாப்பிடுவதன் மூலம் நரம்பியல் கடத்திகள் சிறப்பாக செயல்பட்டு மூளைக்கு தேவையான எரிபொருளையும், சக்தியையும் அளிக்கும் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

அத்துடன் ஊட்டச்சத்து மிக்க உணவுகளும் ஏராளமான மனமாற்றத்தை அளிக்கின்றன. மனதுக்குப் பிடித்த உணவுகளை உண்ணும்போது அல்லது காய்கறிகளுடன் உணவு உண்ணும்போது அது மனமகிழ்ச்சியை ஏற்படுத்துவதாகவும் அதன் மூலம் மூளை சுறுசுறுப்பாக இயங்குவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

அத்துடன் முறையான உடற்பயிற்சியுடன் சரியான உணவுகளை ரசித்து சாப்பிடுபவர்களால் அறிவாற்றல் மிகுந்த செயல்களை எளிதாகச் செய்ய முடிவதாகவும்  ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இத்தகைய உணவு உண்ணும் முறைகளால் கவலை, மனச்சோர்வு ,தூக்கம் போன்றவையும் வேறுபடுவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

மன அழுத்தத்தில் இருக்கும்போது சாப்பிட்டாலும் பிஸியாக இருக்கும்போது சாப்பிட்டாலும் அது உடல் ஆரோக்கியத்தை குறைத்து விடும்.   

வேகமாக ஓடும் வாழ்க்கையில் கவனச்சிதறல் மற்றும் குறுக்கீடு இல்லாமல் சாப்பிடுவது என்பது சற்று கஷ்டம்தான். இருந்தபோதும் கிடைக்கும் நேரத்தில் அமைதியாகவும் நிதானமாகவும் சாப்பிடப் பழக வேண்டும்.  

உணவின் நிறத்தையும், சுவையையும், அதன் வாசனையும் அனுவித்துச் சாப்பிடுங்கள். குறைந்த அளவு உணவு எடுத்துக் கொண்டாலும் அதை முழுமையாக நிதானமாகச் சாப்பிடப் பழகுங்கள். 

இப்படிச் சாப்பிடுவது, உடலின் எடையைக் குறைப்பதற்காக அல்லது கலோரிகளை குறைப்பதற்காக உள்ள முறையல்ல.    உணவு குறித்து முழுமையாகத் தெரிந்து அதனுடைய சுவையை அனுபவித்து, அதனுடன் உணர்வுபூர்வமாக கலந்து சாப்பிடுவதே "மைண்ட் புல் ஈட்டிங்' ஆகும். ஒரு விஷயத்தை நேசித்து செய்தால் நமது மனம் மகிழ்ச்சி அடையும். அதன் மூலம் மூளை சுறுசுறுப்பாக இயங்கும். எந்தச் செயலையும் நன்றாக விரைவாக செய்து முடிக்க முடியும். உணவை ரசித்து ருசித்து சாப்பிடுங்கள். சாப்பிடும்போது வேறு எதைப் பற்றியும் சிந்திக்காதீர்கள். பேசிக் கொண்டே சாப்பிடுவது, டிவி பார்த்துக் கொண்டே சாப்பிடுவது போன்றவற்றைத் தவிர்த்து
விடுங்கள். உடல் மட்டுமல்ல, மனநலமும் மேம்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com