திறன்களை வளர்த்தால்தான் எதிர்காலம்!

எங்கும் எதிலும் தேங்கிவிடாமல் நகர்ந்து கொண்டே இருப்பதற்கு, திறன்கள் அவசியமானவை. திறன்களை கற்றுக்கொள்ள தவறினால், வாழ்க்கையில் ஏற்படும் தேக்கநிலையை தவிர்க்க முடியாது.
திறன்களை வளர்த்தால்தான் எதிர்காலம்!


எங்கும் எதிலும் தேங்கிவிடாமல் நகர்ந்து கொண்டே இருப்பதற்கு, திறன்கள் அவசியமானவை. திறன்களை கற்றுக்கொள்ள தவறினால், வாழ்க்கையில் ஏற்படும் தேக்கநிலையை தவிர்க்க முடியாது. உச்சங்களை கனவுகளாக்கி பயணிப்பவர்கள் தங்குதடையில்லாமல் பயணிக்க திறமை எனும் ஊன்றுகோல் தேவை.

2020-ஆம் ஆண்டுக்கு பிறகு மனிதவாழ்க்கை புதிய திசையை நோக்கி பயணத்தைத் தொடங்கியுள்ளது. புதிய சிந்தனை,  புதுமை, புதிய திறமை. இம்மூன்றையும் பற்றிக் கொள்ளும் எவரும் உச்சங்களை நிச்சயம் தொட முடியும். 

ஆனால் எல்லாத்துறைகளிலும்  போட்டிகள் நிறைந்த உலகத்தில் புதிய புதிய திறன்கள், எதிர்காலத்தை செம்மையாக்கிக்கொள்ள உதவும்.

எனது எதிர்காலம் எப்படி இருக்கும்? இந்த கேள்வியைக்  கேட்காத மாணவர்களை நீங்கள் பார்த்திருக்க முடியாது. அதற்கான விடை எளிதானது. சக்கரம் இல்லாமல் மிதிவண்டி ஓட்ட நினைப்பது போல தான், திறன்கள் இல்லாமல் எதிர்காலத்தை பற்றி சிந்திப்பது. எதிர்காலம் கண்களுக்குத் தெரிய வேண்டுமானால், உங்களில் திறமைகளை குவித்துக்கொண்டே இருக்க வேண்டும். அப்படியானால், திறன்களை வளர்த்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும்? 

படிப்பும் மனிதவளத் திறனும்:

எந்தவொரு வேலை செய்வதற்கும், தொழிலை நடத்துவதற்கும் பட்டப்படிப்பு மிக மிக அவசியம். அத்துடன் பல்வேறு திறன்கள் இருந்தால் வெற்றிக்கான வாய்ப்பு வெகுஎளிதில் வாய்த்துவிடும் என்கிறது அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வு முடிவுகள். பட்டப்படிப்புக்குப் பிறகு வேலை அல்லது தொழிலில்  வெற்றி பெறுவதற்கு மனிதவளத் திறன் முக்கியம் என்று 74 சதம் மாணவர்களும், கடின படிப்பு தான் முக்கியம் என்று 26 பேரும் தெரிவித்துள்ளனர். கல்லூரியில் கற்றுக்கொள்வதை தவிர, தலைமைப் பண்பு, பொறுப்பேற்கும் பண்பு, மொழி ஆளுமை, சமூக நல்லிணக்கம், பேச்சுத்திறன் போன்ற மனிதவளத் திறன்களும் முக்கியம் என்பதை ஆய்வு தெளிவாக்குகிறது. வேலை அல்லது தொழிலுக்கு துறைசார்ந்த ஆழமான அறிவுதான் அடித்தளம் என்றாலும் அதில் வெற்றி காண்பதற்கு மனிதவளத்திறன் மிகவும் அவசியம். 

கல்லூரி படிப்புகளில் மூழ்கியிருந்தாலும் மனிதவளத்திறனை வளர்த்துக் கொள்வதற்கு கொஞ்ச நேரத்தை ஒதுக்கிக்கொள்வது நல்லதாகும்.

பல்துறை திறன் மேம்பாடு:

மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றுபவராக இருந்தால், அவருக்கு மென்பொருள் சார்ந்த ஆழமான அறிவு அத்தியாவசியமாகும். அதிலும் குறிப்பாக செயற்கை நுண்ணறிவு சம்பந்தமான பணி என்றால், அது பற்றிய திறன்களை கற்றிந்திருப்பது கட்டாயமாகும். அதேநேரத்தில், ஒருசில திறன்கள் எல்லா துறைகளுக்கும் பொருந்தக் கூடியதாக இருக்கும். அப்படிப்பட்ட திறன்களில் ஒன்று தான், திட்டமேலாண்மை. எந்த வேலையாக இருந்தாலும் திட்டமேலாண்மைத் திறன் பெற்றிருப்பது அவசியம் அல்லது அதில் பணியாற்றிய அனுபவம் கட்டாயம் தேவை என்று நிறுவனங்கள் வலியுறுத்துவதைப் பார்த்திருக்கலாம். நிறுவனம் அல்லது அமைப்பு எதுவாக இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட திட்டத்தை நோக்கியே செயல்பாடுகளை அமைத்துக் கொள்கின்றன. அதற்கு தான் திட்டமேலாண்மை அவசியம் என்கிறார்கள். அமெரிக்காவில் திட்டமேலாளர்களுக்கு எழுதப்படாத குறிக்கோளாக கூறுவது இதைத்தான்: "சிறந்ததை எதிர்பாருங்கள், மோசமான விளைவுகளை எதிர்கொள்ள திட்டமிட்டுக் கொள்ளுங்கள், எதிர்பாராத ஆச்சரியங்களுக்காகவும் தயாராக இருங்கள்.'

இதைப் படித்ததும் உங்கள் முகம் சிரிப்பை சிந்தலாம்.  ஆனால், எந்தத் துறையாக இருந்தாலும் திட்டமேலாண்மை திறன் எவ்வளவு முக்கியமானது என்பதையும் இந்த வாசகம் உணர்த்தும். எனவே, பல்துறை திறன் மேம்பாடு மிக மிக முக்கியம்.

வலிமையான தகவல் தொடர்புத்திறன்:

வேகமான உலகமயமாக்கலை உலகம் உள்வாங்கிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், இன்றைக்கும் நாளைக்கும் 

என்றைக்கும் வேலைச்சந்தையில் நிலையான போட்டியை எதிர்கொள்வதற்கு 
வலிமையான தகவல் தொடர்புத்திறன் அவசியமாகும். தன்னிடம் தகவல் தொடர்புத்திறன் இருப்பதாகப் பலரும் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். ஆனால், ஆக்கப்பூர்வமான நவீன தகவல்  தொடர்புக்கு சில அடிப்படையான விதிமுறைகள், நுட்பங்கள், அறிவியல் கோட்பாடுகள் உள்ளன. இவற்றை சரியாக தெரிந்துகொண்டால், தகவல் தொடர்பில் வெற்றியை எளிதாகக் கைப்பற்றலாம்.

உலக அளவில் இதுவரை யாரும் யோசித்திராத புதுமையான திட்டம் அல்லது யோசனையாக இருக்கலாம். ஆனால், அதை ஆக்கப்பூர்வமான தகவல் தொடர்பின் வாயிலாக நண்பர்கள், சக ஊழியர்களுடன் பகிர்ந்துகொள்ள இயலாவிட்டால், வெற்றியடைவது இயலாமல் போய்விடும்.

வடிவமைப்பு நிலையில் இருந்தபோது 50 ஐபோன் மாதிரிகள் அலசப்பட்டன. ஆனால் எதுவுமே சிறந்ததாகக் கருதப்படவில்லை. கடைசியில், தங்கள் மனதில் கற்பனையாக தோன்றியதை எளிதில் புரியும்படி தெள்ளத் தெளிவாக எடுத்து வைக்க முடிந்த அணியினரின் ஐபோன் வடிவமைப்பே தேர்ந்தெடுக்கப்பட்டது.  அதுவே   தற்போது நமது கரங்களில் ஐபோனாக தவழ்கிறது.

ஆக்கப்பூர்வமான நவீன தகவல் தொடர்புத்திறனை நேரடியாகவும் இணைய வழியாகவும் மேம்படுத்திக்கொள்ள ஏராளமான கல்வி கதவுகள் திறந்துள்ளன. "பொதுமேடையில் மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பேசுவதற்கான திறனை வளர்த்துக் கொள்ளும் எவரும்  வணித்தில் மட்டுமல்ல, எந்த துறையாக இருந்தாலும் வெற்றி பெறலாம்' என்று கூறுகிறார் அமெரிக்க நாட்டின் தொழில் அதிபர் வாரன் பஃப்பட்.  அதிநவீன எண்மத்திறன் (அட்வான்ஸ்டு டிஜிட்டல் ஸ்கில்ஸ்):

மனிதவாழ்க்கையின் பிரிக்க முடியாத பகுதியாக தொழில்நுட்பம் மாறியுள்ளது. தொழில்நுட்பம் இன்றி ஓரணுவும் அசையாது என்பது உண்மையாகியுள்ளது. நிறுவனம் அல்லது அமைப்பு எதுவாக இருந்தாலும் சமூக வலைதளம், மின்னணுக் கருவிகள், செயற்கை நுண்ணறிவு போன்ற புதிய தொழில்நுட்பத்தைச் சார்ந்து இருக்க வேண்டியுள்ளது. மிகப்பெரிய நிறுவனங்கள் மட்டுமல்லாது, அரசு நிறுவனங்களும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை அடித்தளமாகக் கொண்டு செயல்படத் தொடங்கியுள்ளன. இந்த சூழலில், அடிப்படை கணினி அறிவை மட்டும் வைத்துக்கொண்டு வேலைச் சந்தையில் நிலைத்திருக்க முடியாது. இணையதளத்தை திறமையாகப் பயன்படுத்துவது முதல் மைக்ரோசாஃப்ட் ஆபீஸ் மென்பொருளில் நுணுக்கமான வேலைகளைச் செய்வது வரை மற்றும் சாஃப்ட்வேர் கோடிங்  முதல் அதிநவீன இணையதள வணிகத்திறன்கள் வரை அனைத்தையும் வேலை தேடி வரும் பட்டதாரிகள் அறிந்திருக்க வேண்டும் என்று நிறுவனங்கள் எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டன. அதனால் அதிநவீன எண்மத்திறனை   கற்றறிவதைத் தவிர வேறு வழியில்லை.

உணர்வுசார் நுண்ணறிவு (எமோஷனல் இண்டலிஜென்ஸ்):

இன்றைய காலகட்டத்தில் இயந்திரங்களின் பயன்பாடு அதிகமாகிவிட்டது. நேரடியாகப் பேசுவதைக் காட்டிலும், இணையவழி ஊடகங்கள் வாயிலாகத்தான் அதிகமாக தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறோம். ஆனாலும், நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பு வகிப்பவர்கள், உணர்வுசார் நுண்ணறிவு குறித்து அதிகம் பேசி வருவதோடு, அத்திறன் கொண்டோரை பெரிதும் மதித்து வருகிறார்கள். இது முரண்பாடாக தென்பட்டாலும், இனிவரும் காலம் உணர்வுசார் நுண்ணறிவை தான் அதிகம் எதிர்பார்க்கிறது. சக மனிதர்களோடு சீரான உணர்வுகளோடு பழகுவது, உணர்வுகளை ஆக்கப்பூர்வமானதாகக் கட்டமைத்துக் கொள்வது, பணிக்குழுவினரிடம் செயலூக்கத்துடன் தகவல்களை பரிமாறி கொள்வது, நேர்மறையான பணிச்சூழலை உருவாக்குவதற்கு உணர்ச்சிகரமான தகவல்களை செம்மையாக பகிர்ந்து கொள்வது போன்றவற்றை தான் உணர்வுசார் நுண்ணறிவு என்கிறார்கள்.

இந்த திறன்களை கைவசமாக்கிக் கொள்வது நிறுவனங்களில் பணியாற்றும் சக ஊழியர்களுடன் வெற்றிகரமான கலந்துரையாடல்களை கட்டமைத்துக்கொள்ளவும், வேலை இலக்குகளை முகம் சுளிக்காமல் செய்து முடிக்கவும் உதவியாக இருக்கும். நேர்காணல்களில் அசத்தலான அணுகுமுறைகளைக் கையாள்வதற்கும், நீங்கள் தலைமையேற்று நடத்தும் குழுவினருடன் நேர்மறையான உணர்வுசார் சூழலை உருவாக்கிக் கொள்ளவும் உணர்வுசார் நுண்ணறிவு கைகொடுக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com