வேலையிலிருந்து விலகப் போகிறீர்களா?

இன்றைய காலகட்டத்தில் ஒரே நிறுவனத்தில் நிரந்தரமாக (அதாவது 20 வருடத்துக்கும் மேலாக) யாராவது பணி புரிந்தால்,
வேலையிலிருந்து விலகப் போகிறீர்களா?


இன்றைய காலகட்டத்தில் ஒரே நிறுவனத்தில் நிரந்தரமாக (அதாவது 20 வருடத்துக்கும் மேலாக) யாராவது பணி புரிந்தால், அதை ஓர் அதிசயமாகவே கருத வேண்டும். இடம், ஊதியம், பிற சலுகைகள், நேர் உயர் அதிகாரியின் (இம்மீடியட் பாஸ்) சுபாவம் போன்ற பல காரணிகளால்தான் இளைஞர்கள் வெவ்வேறு கம்பெனிக்கு மாறுகிறார்கள்.

இதில் தவறு இல்லைதான். பழைய வேலையிலிருந்து நீங்கும் போது சில நற்பண்புகளைக் கடைப் பிடிப்பது அவசியம் என்கிறார்கள் மனித மேம்பாடு நிபுணர்கள்.

விலகுமுன், நோட்டீஸ் தர வேண்டுமா, எத்தனை மாதம் போன்றவற்றை சரியாக கவனித்துக் கொள்ளுங்கள். இப்போதெல்லாம் அயல்நாடு செல்வது சர்வ சாதாரணமாகி வருகிறது.

துபாய், குவைத் போன்ற நாடுகளில் உறவினர்களைப் பார்க்கப் போகிறவர்கள், தற்செயலாக அங்கே வேலை கிடைத்தால், பற்றிக் கொண்டு விடுகிறார்கள். இது முறையான செயலல்ல.

(இதனாலேயே விடுப்பில் அயல் நாடு செல்லும் ஊழியர்களிடம் உத்தரவாதம் பெற்றுக் கொள்ளுகிறார்கள்)

நினைவிருக்கட்டும், இப்போதைய முதலாளி எதிரியல்ல, போகுமிடத்திலுள்ள புதிய முதலாளி தோழனுமல்ல. சில தனிப்பட்ட காரணங்களால் விலகுகிறீர்கள். ஆகையால் பழைய முதன்மை அதிகாரிகள், தோழர்கள் எல்லாரிடமும் புன்னகையுடன் விடைபெறுவதுதான் நாகரீகம். உங்களைப் "படுத்தி எடுத்த' அதிகாரியிடம் கூட ""நான் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன்'' என்று சொல்லுவதில் தவறே இல்லை. "பொய்மையும் வாய்மையிடத்து' புதிய ஸ்தாபனத்தில் சேரப் போவதை, ஒரு ரகசியம் மாதிரி பாதுகாக்காதீர்கள். அதற்காக எல்லாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியமுமில்லை. குடும்பத்தினரிடம் கலந்து ஆலோசியுங்கள், அதே சமயம் சிறிது விவேகத்தைக் கடைபிடியுங்கள்.

பழைய வேலை, புதியது இரண்டையும் தராசுப் பொருள் போல ஆராய்ந்து பாருங்கள். குடும்ப நிலை, குழந்தைகளின் எதிர்காலம் இவற்றுடன் கிடைக்கவிருக்கும் ஊதியத்துடன் ஒப்பிடுங்கள்.

1990 இறுதியில், தனியார் நிறுவனங்கள் ஆயுள் காப்பீட்டுக்கு போட்டியாக, துவங்கின போது, பல அதிகாரிகள் அதிக ஊதியத்துக்கு ஆசைப்பட்டு விலகிப் போனார்கள். ஆனால் அங்கு நிலவிய கெடுபிடி, போட்டி, பணிச்சுமை போன்றவற்றை தாங்க முடியவில்லை. "எண்ணித் துணிககருமம்' எப்படியும் மூன்று மாத நோட்டீஸ் கொடுக்க நேரிடும், புதிய நிறுவனம் சிவப்பு கம்பளத்துடன் உடனே வரவேற்கப் போவதில்லை. இடைப்பட்ட கால கட்டத்தில் வீட்டுச் செலவுகளை எப்படிச் சமாளிக்கப் போவது என்பதை மனைவியுடன் கலந்து யோசியுங்கள். உபரித் தொகையோ, முதிர்வாகும் வைப்புத் தொகையோ இல்லாவிடில் ~இடைக் காலத்தை சமாளிப்பது கடினம்.

விலகுவதென்று உறுதியான முடிவெடுத்தால் ஸ்தாபனத்திலிருந்து வர வேண்டிய பாக்கித் தொகையை கணக்கி லிடுங்கள், போனஸ், விடுப்பு ஊதியம், மற்ற சலுகைகள் எல்லா வற்றையும் கேட்டுப் பெற்று விடுங்கள். இப்போதெல்லாம் வருங்கால வைப்பு நிதி (டஊ) பற்றி அவ்வளவு கவலை இல்லை. தன்னிச்சையாக புதிய நிறுவனத்தில் மாறிவிடும். ஆனால் அதில் கடன் வாங்கியிருந்தால், விதிகளைக் கூர்ந்து கவனியுங்கள்.

வர வேண்டிய பாக்கிகளைப் போலவே நீங்கள் செலுத்தும் தவணைத் தொகை - வாகனம், வீட்டுக் கடன் எதாவது இருக்கலாம். அதற்கான நடைமுறைச் சடங்குகளை வங்கி அதிகாரியிடம் விசாரித்து, கையோடு அவரிடம் அத்தாட்சி கடிதம் வாங்குவது உசிதம்.

"அதிகாரிகள் மாற்றம்', "சிஸ்டம் சரியில்லை' போன்ற சில காரணங்களை வங்கி கூற நேரலாம். எனவே கூடுதல் எச்சரிக்கை தேவை.

முத்தாய்ப்பாக:- 1951-52களில் "ஸ்ரீமான் சுதர்சனம்' நாவலை தேவன் எழுதினார். தன் மேல் அதிகாரியான கங்காதரம் பிள்ளையின் ஏச்சு பேச்சுகளைப் பொறுக்க முடியாது, தான் பணி புரியும் ஏஜென்ஸியிலிருந்து விலக முடிவு செய்கிறான். முதலாளி ஒரு கடிதத்தை நீட்டுகிறார்.

""தங்கள் காரியாலயத்தில் அக்கவுண்ட்ஸ் டிபார்ட் மெண்டில் ஸ்ரீசுதர்சனம் என்பவர் ராஜிநாமா செய்திருப்பதன் காரணமாக, ஓர் உத்தியோகம் காலியாகி இருப்பதாக அறிகிறேன். சுதர்சனம் காலி செய்யும் ஸ்தானத்திற்கு என்னை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று பிரார்த்திக்கிறேன்''

""என்னப்பா! நீ துரை ராகவனிடம் போகப் பிடிவாதமாயிருக்கிறாய். அவனானால் இங்கே வந்து ஒட்டிக் கொள்கிறேன் என்கிறான்'' என்கிறார் முதலியார்.

சுதர்சனத்தை தவிர கங்காதரனும் நோய் காரணமாக விடுப்பில் செல்கிறார். சுதர்சனத்திற்குப் பதவி உயர்வு கிடைக்கிறது.

எந்த வேலையிலும் சாதக பாதகங்கள் உண்டு. விடுப்பு, பயணச் சலுகை, யூனியன் பாதுகாப்பு போன்ற பல இருந்தாலும், வடநாட்டு கோடியில் பணி புரியும் நிர்பந்தம் வங்கிகளில் உண்டு. தனியார் நிறுனத்தில் மாற்றல் ஆனாலும், பெரிய நகரங்களுக்குள் மட்டுமே இருக்கும். அதே சமயம் முதலாளியின் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புக்கு ஈடு கொடுக்க வேண்டியிருக்கும்.

எனவே நிதானமாக யோசித்து செயல்படுங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com