எதிர்கால வேலை முறை!

கரோனா பெருந்தொற்றால் உலகம் பாதிக்கப்பட்டு 2 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. இந்த காலகட்டத்தில் கொடிய தீநுண்மி மனித வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுள்ளது.
எதிர்கால வேலை முறை!

கரோனா பெருந்தொற்றால் உலகம் பாதிக்கப்பட்டு 2 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. இந்த காலகட்டத்தில் கொடிய தீநுண்மி மனித வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுள்ளது. தீநுண்மிக்கு இரையாகி மடிந்து போனவர்கள் ஒருபக்கம். வாழ்வாதாரம் இல்லாமல் வாழ்க்கையைத் தொலைத்தவர்கள் மறுபக்கம். கரோனா பேரலை உலக மக்களின் இயல்பு வாழ்க்கையை மட்டுமல்ல, வேலை முறையையும் புரட்டிப் போட்டுள்ளது.

வீட்டில் இருந்து வேலை செய்யும் புதிய நடைமுறையும் முளைக்கத் தொடங்கிவிட்டது. இன்னும் எத்தனை காலத்திற்கு இந்த தொல்லை? உலக மக்கள் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியுமா? அல்லது இதே நிலை தொடருமா? இப்படி பல்வேறு கேள்விகள் மனதில் நிழலாடிக் கொண்டிருக்கின்றன. ஆனாலும், இந்த கேள்விகளுக்கு  பதில்  தெரியாத குழப்ப நிலையே  நீடித்து வருகிறது.

வீட்டில் இருந்து வேலை:

முதலாவது கரோனா அலையின்போதே, பெரும்பாலான நிறுவனங்கள் வீட்டில் இருந்து வேலை செய்யும் முறைக்கு மாறிவிட்டனர். இரண்டாவது மற்றும் மூன்றாவது கரோனா அலையின்போது, வீடு பாதி-அலுவலகம் மீதி என்பது போல பாதிநாட்கள் வீட்டில் இருந்தும், மீதி நாட்கள் அலுவலகத்தில் இருந்தும் வேலை செய்யும் கலப்பு பணி முறைக்கு (ஹைபிரிட் வொர்க் மாடல்) மாறிவிட்டன. இந்தச் சூழலில் நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களின் மனதில் எழும் இயல்பான கேள்வி: "மீண்டும் அலுவலகம் திறக்கப்படுமா? நாம் அலுவலகம் சென்று வேலை செய்வோமா?' என்பது தான். கரோனா முழுமையாக துடைத்தெறியப்படாதநிலையில், அலுவலகம் சென்று வேலை செய்யும் நிலை ஏற்பட்டாலும், எத்தனை நாட்களுக்கு அது தொடரும்? அல்லது எப்போதாவது ஒருமுறையா? எப்போதுமா? ஒருவேளை கலப்பு பணிமுறை நீட்டிக்கப்படுமா? என்பன போன்ற பல கேள்விகள் எழுகின்றன. அலுவலகத்திற்கு நேரடியாக வேலைக்குச் செல்லாத சூழ்நிலைநீடித்தால், புதிய தலைமுறை ஊழியர்கள், நிறுவனத்தில் உடன் பணியாற்றும் மூத்த அதிகாரிகள், ஊழியர்களுடன் எப்படி கலந்துரையாடுவார்கள்? புதியனவற்றை எப்படிக் கற்றுக் கொள்வார்கள், எவ்வாறு இயல்பாக பழகுவார்கள் என்பன போன்ற கேள்விகளும் எழுகின்றன.

மீண்டும் அலுவலகம்:

இந்தியா உள்பட உலகின் பல பகுதிகளில் கரோனா பெருந்தொற்றின் பரவல் அல்லது பாதிப்பு குறைந்து வருவதால், நேரடியாக அலுவலகங்களுக்கு வருகைதருமாறு நிறுவனங்கள் தமது ஊழியர்களை கேட்டுக் கொண்டுள்ளது. ஆனால், மீண்டும் அலுவலகங்களுக்கு திரும்ப ஊழியர்கள் தயக்கம் காட்டுகிறார்கள். கடந்த 2 ஆண்டுகளாக வீட்டில் இருந்தே வேலை செய்து பழகிவிட்டனர். காணொலிக்கூட்டங்கள் காரணமாக, ஊழியர்கள் மற்றும் நிறுவனங்களின் உற்பத்தித்திறன் பெருகியுள்ளது. மேலும் அலுவலகங்களுக்கு வாகனத்தில் செல்லும் நேரம், கருத்தரங்குகளில் கலந்துகொள்வதற்காக போக்குவரத்து வசதிக்காக அலைவது போன்ற எந்த பதற்றமும் இல்லாத நிலை உள்ளது. வீட்டோடு மாப்பிள்ளை என்பது போல, வீட்டோடு வேலை இருந்துவிட்டால், வீட்டு வேலையையும் பார்த்துக் கொள்ளலாம்; அலுவலக வேலைகளையும் தவறாமல் பார்த்துக் கொள்ளலாம் என்று ஊழியர்கள் பலரும் நினைக்கிறார்கள்.

புதிய மவுசு:

அமெரிக்காவில் அண்மையில் எடுத்த ஆய்வில், நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளில் 83 சதம் பேர், ஊழியர்கள் மீண்டும் அலுவலகங்களுக்கு திரும்ப வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால், அலுவலகங்களுக்கு வர 10 சத ஊழியர்கள் தான் ஆர்வம் காட்டியிருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. பெரும்பாலான ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை பார்க்க விரும்புகிறார்கள் அல்லது கலப்பு  பணிமுறையைக் கடைப்பிடிக்க வலியுறுத்துகிறார்கள் என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது. வீட்டில் இருந்து வேலை, அலுவலகத்தில் இருந்து வேலை, இரண்டையும் உள்ளடக்கிய கலப்பு  பணிமுறை ... இப்படி மாறியுள்ள வேலைமுறையில் எதைக் கடைப்பிடிப்பது என்று முடிவெடுக்க முடியாமல் நிறுவனங்கள் ஆழமாக யோசித்து வருகின்றன. எந்த வேலை முறையைக் கடைப்பிடிக்கலாம் என்று மண்டையைக் குடைந்து வருகின்றன.

உற்பத்தித்திறன், செயல்திறன் மற்றும் வருவாயை அதிகப்படுத்துவதற்கு "கலப்பு  பணிமுறை' தான் சிறந்தது என்று பெரும்பாலான நிறுவனங்கள் முடிவு செய்ய தொடங்கியுள்ளன. இம்முறை எல்லா நிறுவனங்களுக்குமான பொதுவிதி அல்லது பொதுமுறை அல்ல. ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு முறையில் இயங்க வேண்டியிருக்கும். சிலதொழில்கள் அல்லது துறைகளுக்கு "கலப்பு  பணிமுறை ' கொஞ்சமும் பொருந்தி வராது. ஆனாலும், கலப்பு  பணிமுறையை பின்பற்றக்கூடிய நிறுவனங்கள் அம்முறையை தேர்ந்தெடுப்பதற்கு காரணம்: நிறுவனத்திற்கும், ஊழியர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கிறது என்பதால் தான்.

செலவு குறைப்பு:

கலப்பு  பணிமுறையில் ஊழியர்களால் அதிக நேரத்தை குடும்பத்துடன் செலவழிக்க முடிகிறது. இது உடல் மற்றும் மனநலத்தை மேம்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாது, வேலை உறவுகளை பலப்படுத்தியுள்ளது; உற்பத்தியை பெருக்கியுள்ளது; வேலையிடத்தை விருப்பத்திற்கு தேர்ந்தெடுக்கலாம்; வேலைக்கு செல்லும் நேரத்தை குறைக்க முடிந்திருக்கிறது... இப்படி கலப்பு  பணிமுறையின் பயன்கள் கூடிக்கொண்டே செல்கின்றன.

காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை வேலை நேரம் இருந்தாலும், அதையும் கடந்து கூடுதலாக ஊழியர்கள் வேலை செய்கிறார்கள் என்பதால், கலப்பு  பணிமுறை, ஊழியர்களுக்கும் நிறுவனங்களுக்கும் சாதகமாக இருப்பதாக பலராலும் கூறப்படுகிறது.

இம்முறையில் செலவு குறைவதாக நிறுவனங்கள் கருதுகின்றன. செலவு குறைவு என்பதே மற்றொரு வடிவிலான வருவாய் என்று நிறுவனங்கள் கணக்கு போடுகின்றன.

எல்லாருக்கும் பொது அல்ல:

ஆனால் ஒருசில வேலைகளை வீட்டில் இருந்து செய்ய முடியாது. சுகாதாரம், உற்பத்தி, வேளாண்மை உள்ளிட்ட துறை சார்ந்த வேலைகளை வீட்டில் இருந்து செய்துவிட முடியாது. இதுபோல வேறு சில துறைகளும் இருக்கின்றன. பெரும்பாலான துறைகளில் வீட்டில் இருந்து வேலை செய்வது எடுபடாது. மாறாக, நேரடியாக சென்று தான் வேலை செய்ய வேண்டும். ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு செய்யக்கூடிய வாடிக்கையாளர் உதவி மையம், கணக்கு மற்றும் எழுத்து அலுவல்கள், ஊடகவியல், கடன் வழங்கல் போன்ற வங்கிப்பணி, நிதி, தவணை வசூல், காப்பீடுகளை வழங்கும் காப்பீட்டுப்பணிகள், தரவு உள்ளீடு, ஊடுகதிர் வழி ஆவணங்களை படம் பிடித்தல் போன்ற பல்வேறு பணிகளை வீடுகளில் இருந்தபடியே செய்துவிடலாம்.

உள் மற்றும் வெளி அழைப்புகள், வணிக செயல்முறை சேவைகள்(பிபிஓ) வேலைகள், கணக்கு மற்றும் எழுத்து அலுவலக மேலாண்மை, பாதுகாப்பு மற்றும் சட்ட அனுமதிகள் கட்டாயம் தேவையில்லாத வேலைகள் உள்ளிட்ட பல வேலைகள் கலப்பு பணிமுறையில் செயல்படலாம்.

எல்லாம் சரியல்ல:

வீட்டில் இருந்து வேலை செய்வதில் எல்லாம் சரியாக இருப்பதாக யாரும் கருதி விடக் கூடாது. புதிதாக வேலையில் சேருவோர், முதலில் நிறுவனத்தையும், அதன் பிறகு உடன் வேலை செய்வோரையும் புரிந்து கொள்ள வேண்டும். புதிதாக வேலைக்கு சேர்ந்தோர் மனச்சோர்வடைந்துள்ளனர். வேலை செய்யத் தொடங்கியதில் இருந்து காணொலி அழைப்புகளிலேயே பேசி வருவதால், பணிச்சூழலைப் புரிந்து கொள்ளாமல் தடுமாற்றத்தில் இருக்கிறார்கள். காணொலிக் கூட்டங்கள் தரும் உடல் மற்றும் மனச்சோர்வில் இருந்து விடுபடாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். இப்படிப்பட்டவர்கள் அலுவலகங்களுக்கு சென்று வேலை செய்ய விரும்புகிறார்கள்.

கலப்பு  பணிமுறைத்  உற்பத்தியை பெருக்குவதாகவும், ஆக்கப்பூர்வமானதாகவும் கருதப்படுகிறது. உற்பத்தித்திறனை அதிகப்படுத்துவதற்கு ஊழியர்களின் நம்பகத்தன்மையும், ஒத்துழைப்பும் மிகவும்
முக்கியமாகும். இதனடிப்படையில் 63 சத நிறுவனங்கள் கலப்பு பணிமுறையைக் கடைபிடிக்க திட்டமிட்டுள்ளன. எதிர்காலம் வேகமாக மாறி வருகிறது. அந்த வகையில், வணிகம் மற்றும் மேலாண்மைக்கு உகந்த வேலைக் கொள்கையை வகுக்க வேண்டியது எல்லா நிறுவனங்களிலும் கடமையாகும்.

புதிய போக்குகள்:

அடுத்த பத்தாண்டுகளில், ஊழியர்களின் வேலைத்திறன் மற்றும் உற்பத்தித்திறன் ஏராளமான மாற்றங்களுக்கு உள்ளாகும். கரோனாவுக்கு பிந்தைய காலகட்டத்தில், பெரும்பாலான நிறுவனங்கள், முழுநாளும் வேலை செய்யும் அவசியமில்லாத ஒரு சில பணிகளுக்கு பகுதிநேர ஊழியர்களை வேலைக்கு எடுத்துள்ளன. மேலும் பல நிறுவனங்கள், ஓய்வு விடுப்பில் இருக்கும் ஊழியர்களை மீண்டும் பணிக்கு வருமாறு அழைத்துள்ளது. வீட்டில் இருந்தபடியே ஒரு நாளைக்கு 3-4 மணி நேரம் வேலை செய்தால், ஓய்வுவிடுப்பில் இருக்கும்போதும் வருவாயை ஈட்டமுடியும் என்பதால், ஓய்வு விடுப்பில் இருக்கும் ஊழியர்கள் பணிக்கு திரும்பிக்கொண்டிருக்கிறார்கள்.

கலப்பு  பணிமுறை :

பெரும்பாலான ஊழியர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதால், அலுவலகங்களின் எதிர்காலம் கலப்பு  பணிமுறையின் அடிப்படையில் தான் அமைந்திருக்கும். வாடிக்கையாளர்களுடன் கலந்துரையாடுவது போன்ற வழக்கமான வாடிக்கையாளர் பணிகளை தொலைபேசி அழைப்புகளில் முடித்துக்
கொள்ளலாம். புதிய திட்டங்கள் அல்லது புதிய செயல்முறைகளை அமல்படுத்தும் சூழல், பல குழுக்களுடன் இணைந்து ஊழியர்கள் கூட்டாக செயல்பட வேண்டிய தருணம் ஆகியவற்றில், கண்டிப்பாக கலப்பு பணிமுறைதான் புதிய வழக்கமாக மாறிவிடும். அந்த அளவுக்கு கலப்பு பணிமுறைக்கு எதிர்காலம் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com