அச்சுறுத்தும் அணு ஆயுதம்!

""மூன்றாம் உலகப்போர் எந்த ஆயுதத்தைக் கொண்டு நடைபெறும் என்பது எனக்குத் தெரியாது.
அச்சுறுத்தும் அணு ஆயுதம்!


""மூன்றாம் உலகப்போர் எந்த ஆயுதத்தைக் கொண்டு நடைபெறும் என்பது எனக்குத் தெரியாது. ஆனால், நான்காம் உலகப் போர் கற்களையும் தடிகளையும் கொண்டே நடைபெறும்''. புகழ்பெற்ற அறிவியலாளர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் அணு ஆயுதங்கள் குறித்த இந்தக் கருத்தை ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் அறிந்திருக்கவில்லையோ எனத் தோன்றுகிறது.  

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து வருகிறது. பதிலுக்கு மேற்குலக நாடுகள் ரஷியா மீது கடும் பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றன. 

உக்ரைனுக்கு ஆதரவளித்து ரஷியாவை எதிர்க்கத் துணியும் நாடுகள், வரலாறு காணாத கடும் பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என அதிபர் புதின் எச்சரித்துள்ளார். "வரலாறு காணாத பின்விளைவுகள்' என அவர் குறிப்பிடுவது அணு ஆயுதங்களைத்தான் என்பது அனைத்து நாடுகளுக்கும் தெரியும். 

அணுஆயுதங்களைக் காட்டி மற்ற நாடுகளை ரஷியா தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. உக்ரைனுக்குப் படைகளை அனுப்பினால், இரு நாடுகளுக்கிடையேயான போர், ஐரோப்பா முழுவதும் பரவி பெரும்  அழிவுகளை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்த நேட்டோ கூட்டமைப்பு நாடுகள், உக்ரைனுக்கு நேரடியாக உதவ மறுத்து வருகின்றன. அந்நாடுகளுக்கு உள்ள அச்சமும் அணு ஆயுதங்கள் குறித்ததே. 

அணு ஆயுதங்களின் பயன்பாடு, இரண்டாம் உலகப் போரை முடிவுக்குக் கொண்டு வந்தது. ஆனால், அடுத்து உலகப் போர் ஏற்பட்டால், அதில் நிச்சயம் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படும். எனவேதான் மூன்றாம் உலகப் போர் ஏற்படாமல் இருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் உலக நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. 

அணு ஆயுதங்களைக் கண்டு உலக நாடுகளும் மக்களும் அச்சம் கொள்வதற்கான காரணம் என்ன? உண்மையிலேயே அந்த ஆயுதங்களைக் கண்டு அச்சம் கொள்வது அவசியமா? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை காண்பதற்கு முன்பாக, அணு ஆயுதங்களால் ஏற்படும் விளைவுகள் குறித்து அறிந்து கொள்வது அவசியம். 

அறிவியலும் ஆற்றலும் 

நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு போன்ற இயற்கைப் பேரிடர்களின் விளைவுகள் குறித்து அனைவருக்கும் தெரிந்திருக்கும். அணு ஆயுதங்களின் விளைவுகள் எவ்வாறு இருக்கும்? 1945-ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போரின்போது ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்கள் மீது அமெரிக்கா அணு ஆயுதங்களை வீசியது. அவை ஏற்படுத்திய தாக்கங்களை மக்கள் கேள்விப்பட்டுள்ளனர். 

அந்நகரங்களில் பலர் உயிரிழந்தனர். அணு குண்டுகள் வெடித்தபோது வெளிப்பட்ட கதிர்வீச்சு காரணமாக பலர் நீண்டகால உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டனர். ஆனால், அப்போதைய அணு ஆயுதங்களையும் தற்போதைய அணு ஆயுதங்களையும் ஒப்பிட முடியுமா? அணு ஆயுதம் தயாரிப்பதற்கான அடிப்படைத் தத்துவம் ஒன்றே என்றாலும், கடந்த 75 ஆண்டுகளில் அணு ஆயுதத் தயாரிப்பு பல்வேறு படிநிலைகளை எட்டியுள்ளது.

கதிரியக்கத் தனிமங்களான யுரேனியம், தோரியம் ஆகியவற்றை செறிவூட்டி அணு ஆயுதங்கள் தயாரிக்கப்படுகின்றன. "அணுக்கரு பிளவு' என்ற அறிவியல் கொள்கையே அத்தகைய ஆயுதங்களின் தயாரிப்புக்கு அடிப்படையாக உள்ளது. அந்த ஆயுதங்கள் மூலமாக வெளிப்படும் ஆற்றல், நிலநடுக்கம் போன்ற இயற்கைப் பேரிடர்களால் வெளிப்படும் ஆற்றலைவிடப் பலமடங்கு அதிகமாக இருக்கும். பாதிப்புகளும் அந்த அளவுக்கு அதிகமாகவே இருக்கும். 

அணு குண்டு ஒருமுறை வீசப்பட்டால் படிப்படியாக என்ன நடக்கும் என்பதை அறிந்து கொண்டால் மட்டுமே அதன் ஒட்டுமொத்த விளைவுகளைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். அதற்காக நாம் எந்த நாட்டின் மீது அணு ஆயுதங்களை வீச வேண்டாம்; எவரையும் அச்சுறுத்தவும் வேண்டாம். நம் கற்பனையிலேயே அணு குண்டை வெடிக்கச் செய்து அதன் விளைவுகளை ஆராய்ந்து பார்ப்போம். 

உடனடி மரணம்

அணு ஆயுதம் ஏற்படுத்தும் பாதிப்பு, அதன் அளவு, எவ்வளவு உயரத்தில் இருந்து வீசப்படுகிறது உள்ளிட்டவற்றைப் பொருத்து மாறுபடும். நாம் 800 கிலோ டன் எடை கொண்ட அணுகுண்டை சுமார் 1,600 அடி உயரத்தில் இருந்து வீசுவோம். இந்த அணுகுண்டானது ஹிரோஷிமாவில் வீசப்பட்டதை விட 100 மடங்கு அதிக 
ஆற்றல் கொண்டது. 

அணுகுண்டு தரையில் விழுந்து வெடித்த சில நொடிகளில் மிகப் பெரிய நெருப்புவளையம் உருவாகும். அப்போது வெளிப்படும் வெப்பக் கதிர்வீச்சானது ஆயுதத்தில் உள்ள கதிரியக்கப்பொருளை வெப்பப்படுத்தும். அப்போதைய வெப்பநிலை, சூரியனின் மையப்பகுதி வெப்பநிலைக்கு (சுமார் 10 கோடி டிகிரி செல்சியஸ்) சமமாக இருக்கும். அந்த நெருப்புவளையமானது குண்டு வெடித்த இடத்தில் இருந்து சுமார் 800 மீட்டர் சுற்றளவுக்குப் பரவும். 

அந்தத் தொலைவுக்குள் இருக்கும் கட்டடங்கள் உள்ளிட்ட பொருள்கள் உடனடியாக எரிந்து ஆவியாகிவிடும்; மனிதர்களும் எரிந்துவிடுவர். 

அடுத்த சில நொடிகளில் நெருப்பு வளையத்தில் இருந்து மணிக்கு சுமார் 3,200 கி.மீ. வேகத்தில் (ஒலியின் வேகத்தை விடப் பலமடங்கு) பெரும் வெப்பக் கதிர்வீச்சும் உயர் அழுத்தமும் அனைத்து திசைகளிலும் வெளியேறும். அத்தகைய சூழலில் வெப்பநிலை 3,00,000 டிகிரி செல்சியஸாக இருக்கும். இது மனித சடலங்கள் எரிக்கப்படும் வெப்பநிலையை விட சுமார் 300 மடங்கு அதிகம். எனவே, அந்த வெப்பக் கதிர்வீச்சு பரவும் பகுதிகளில் உள்ள அனைவரும் உடனடியாக மரணிப்பது நிச்சயம். 

கட்டடங்கள் தவிடுபொடியாகும் 

அணுகுண்டு வீசப்பட்ட இடத்தில் இருந்து சுமார் 11 கி.மீ. தொலைவில் இருப்பவர்களுக்கு முதல்நிலை தீக்காயங்களும், சுமார் 9 கி.மீ. தொலைவில் இருப்பவர்களுக்கு இரண்டாம்நிலை தீக்காயங்களும், சுமார் 8 கி.மீ. தொலைவில் இருப்பவர்களுக்கு மூன்றாம்நிலை தீக்காயங்களும் ஏற்படும். சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ள அனைவரும் நிச்சயம் உயிரிழப்பர். 

அங்குள்ள பொருள்களும் எரிந்து சாம்பலாகும். மணல்கூட உருகி கண்ணாடியாகிவிடும். 

அணுகுண்டு வீசப்பட்டவுடன் வெளிப்படும் அதீத ஒளியானது பல கி.மீ. தொலைவுக்கு அப்பால் உள்ளவர்களின் கண்பார்வையையும் பறிக்கும் ஆற்றல் கொண்டது. குண்டு வீசப்படும்போது நிலவும் காலநிலையும் மாறுபட்ட விளைவுகளை ஏற்படுத்தும். மேகங்கள் சூழ்ந்த இடத்தில் வீசப்படும் அணுகுண்டானது, மேகங்கள் இல்லாத இடத்தில் வீசப்படுவதைக் காட்டிலும் குறைவான விளைவுகளையே ஏற்படுத்தும். எனினும், அந்த குண்டும் பலரது உயிரிழப்புக்குக் காரணமாக இருக்கும். 

இதுவரை கூறிய அனைத்தும் வெறும் முன்னோட்டக் காட்சி (டிரெய்லர்) மட்டுமே. அணுகுண்டின் உண்மையான விளைவுகள் இனிதான் ஆரம்பமாகும். அணுகுண்டில் இருந்து வெப்பக் கதிர்வீச்சு வெளிப்பட்ட சில நொடிகளில் பெரும் வெடிப்பு நிகழும். அப்போது அனைத்து திசைகளிலும் பரவும் அதிக அழுத்தம் கொண்ட ஆற்றலானது வழியில் உள்ள கட்டடங்கள், கட்டுமானங்கள் என அனைத்தையும் துவம்சம் செய்துவிடும். குண்டு வெடித்த இடத்தில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவு சுற்றளவிலுள்ள அத்தனையும் சுக்குநூறாகிவிடும். 

அணுகுண்டில் இருந்து வெளிப்படும் அதீத ஆற்றல் காரணமாக காற்றும் மிக பலமாக வீசும். உயரழுத்தமும் அதிவேகமான காற்றும் இணைந்து பெரும் சேதங்களை ஏற்படுத்தும்; கட்டடங்கள் தரைமட்டமாக்கப்படும்; மரங்கள் வீழும்; குண்டு வெடித்த சில நிமிஷங்களில் பல கி.மீ. தொலைவுக்கு சேதங்கள் ஏற்படும். கட்டடங்கள் இடிந்து விழும்போது ஏற்படும் சிறுதுகள்கள் காற்றில் பறந்து மேலும் பல்வேறு சேதங்களை ஏற்படுத்தும். 

துகள்கள் உள்ளிட்டவற்றுடன் கூடிய காற்று தரையில் இருந்து சுமார் 12 கி.மீ. உயரம் வரை சென்று மேகங்களை உருவாக்கும். அந்த மேகங்கள் மழையாகப் பெய்யும்போது மனிதர்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும். இதுவரை அணு குண்டின் 85 சதவீத ஆற்றல் மட்டுமே வெளிப்பட்டுள்ளது. மீதமுள்ள ஆற்றலானது கதிர்வீச்சாக வெளிப்பட்டு பல கி.மீ. தொலைவுக்குப் பரவி சேதத்தைத் தீவிரப்படுத்தும்.  

கதிர்வீச்சு அபாயம்

பாரம்பரிய ஆயுதங்களுக்கும் அணு ஆயுதங்களுக்கும் உள்ள முக்கிய வேறுபாடு கதிர்வீச்சு வெளிப்பாடு. அணு ஆயுதங்கள் அதிக அளவில் கதிர்வீச்சை வெளிப்படுத்துவதால் அவை தனித்துவம் பெறுகின்றன. ஆல்ஃபா, பீட்டா, காமா உள்ளிட்ட பல்வேறு வகை கதிர்வீச்சுகள் அணுகுண்டுகளில் இருந்து வெளிப்படுகின்றன. குண்டு வெடித்தவுடன் காமா, நியூட்ரான் கதிர் வீச்சுகள் வெளிப்படும். அணுகுண்டு வெடித்த இடத்தில் அவற்றின் செறிவு அதிகமாக இருக்கும். தொலைவாகச் செல்ல செல்ல அவற்றின் செறிவும் குறைந்துவிடும். 

அணுகுண்டில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சின் அளவு, அதன் அளவைப் பொருத்தே அமையும். குண்டு வெடிக்கும் இடத்துக்கு அருகில் நீங்கள் இருந்தால் கதிர்வீச்சினால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பது நிச்சயம். ஆனால், நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. ஏனெனில், ஏற்கெனவே வெளியாகியுள்ள வெப்பமே உங்களது மரணத்தை உறுதி செய்திருக்கும். கதிர்வீச்சு வெளிப்படும் வரை நீங்கள் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை. 

அணுகுண்டு வெடிப்பதால் வெளியாகும் கதிர்வீச்சுகள் சுமார் 100 ஆண்டுகளுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் திறன் கொண்டவை. குண்டு வெடிக்கும்போது பரவும் மாசு துகள்கள் மூலமாகவே கதிர்வீச்சும் பரவும். அத்துகள்களைக் கொண்ட காற்று, குண்டு வெடித்த இடத்தில் இருந்து நீண்ட தொலைவுக்குப் பயணித்து பாதிப்புகளை ஏற்படுத்தும். குண்டை காற்றிலேயே வெடிக்கச் செய்தால், குறைந்த அளவிலான துகள்களும், தரையில் வெடிக்கச் செய்தால் அதிக அளவிலான துகள்களும் பரவும். அத்துகள்கள் மற்ற இடங்களுக்குப் பரவும் வேகம், அப்போதைய காலநிலையைச் சார்ந்து அமையும். தரையில் அணுகுண்டை வெடிக்கச் செய்வது உயிரிழப்பு எண்ணிக்கையை அதிகப்படுத்தும். 

தீவிர பாதிப்புகள்

அணுகுண்டில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சுக்கு மக்கள் உள்படும் அளவைப் பொருத்து, அவற்றின் பாதிப்பும் தீவிரமடையும். திசுக்கள் மற்றும் பல்வேறு உடல் உறுப்புகளை அக்கதிர்வீச்சு பாதிப்புக்கு உள்ளாக்கும். மக்கள் கதிர்வீச்சுக்கு உள்படும் அளவானது "ரேட்ஸ்' என்ற அலகால் அளவிடப்படுகிறது. அதை அடிப்படையாகக் கொண்டு "ரெம்' என்ற மற்றொரு அலகும் பயன்படுத்தப்படுகிறது. 

மக்கள் 400 ரெம்-க்கு அதிகமான கதிர்வீச்சு பாதிப்புக்கு உள்படும்போது அவர்கள் உடனடியாக மரணிப்பர். 200 முதல் 300 ரெம் வரையிலான கதிர்வீச்சுக்கு உள்ளாவோருக்குப் பல்வேறு உடல்நலப் பாதிப்புகள் ஏற்படும். அவர்களில் 10 முதல் 35 சதவீதம் பேர் 30 நாள்களில் உயிரிழக்க வாய்ப்புள்ளது. 

20 ரெம்-க்குக் குறைவான கதிர்வீச்சு அளவில் உயிரிழப்பு அபாயம் இல்லை என்றபோதிலும், நீண்டகால உடல் பாதிப்புகள் ஏற்படும். குமட்டல், வாந்தி, தொடர் ரத்தப்போக்கு, வயிற்றுப்போக்கு, தோலில் எரிச்சல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். கதிர்வீச்சினால் உடல் உள்ளுறுப்புகளும் பாதிக்கப்படும். 200 ரெம்-க்கு அதிகமான கதிர்வீச்சுக்கு உள்பட்டால் வாந்தியும் குமட்டலும் முதலில் ஏற்படும். பின்னர் முடி உதிர்தல் பிரச்னை தோன்றும். 100 ரெம்-க்குக் குறைவான கதிர்வீச்சுக்கு உள்பட்டால், ரத்த வெள்ளையணுக்களின் எண்ணிக்கை குறையும்.  

ரத்த வெள்ளையணுக்களே உடலில் தோன்றும் நோய்களுக்கு எதிராகப் போராடும் சக்தியை அளிக்கின்றன. 

அவற்றின் எண்ணிக்கை குறைவது, நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைத்து புதிய 
நோய்கள் வேகமாகப் பரவுவதற்கு வழிவகுக்கும். தைராய்டு உள்ளிட்ட உறுப்புகள் அதிக அளவில் கதிர்வீச்சு பாதிப்புக்கு உள்ளாகும். பொட்டாசியம் அயோடைடு, கதிர்வீச்சினால் ஏற்படும் பாதிப்பைக் குறைக்கும். 

அணுகுண்டினால் ஏற்படும் உடனடி உயிரிழப்புகள் இறுதியானவை அல்ல. அதில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சினால் சில மாதங்கள் கழித்தும், சில ஆண்டுகள் கழித்தும் பலர் உயிரிழக்க வாய்ப்புள்ளது. கதிர்வீச்சுக்கு உள்ளான சில நபர்களுக்கு சில ஆண்டுகள் கழித்தே உடல்நலப் பாதிப்புகள் ஏற்படும். புற்றுநோய், கண்புரை உள்ளிட்டவை நீண்டகால பாதிப்புகளாக இருக்கும்.

சமூக பாதிப்புகள்  

மேற்கண்ட அனைத்திலும் நீங்கள் பாதிக்கப்படாமல் உயிரோடு இருந்தாலும், அணு ஆயுதமானது உணவு உற்பத்தி உள்ளிட்டவற்றையும் கடுமையாக பாதிக்கும். ஏற்கெனவே அணுகுண்டு வெடிப்பால் நகரம் சீர்குலைந்திருக்கும்; பலர் நோய்களால் பாதிக்கப்படுவர்; கதிர்வீச்சால் நீர்நிலைகள் பாதிக்கப்படும். இது குடிநீருக்கான தட்டுப்பாட்டை ஏற்படுத்தும். உணவுத் தட்டுப்பாடும் அதிகரிக்கும். மருத்துவ வசதிகளுக்கான தேவைகள் அதிகரிக்கும். ஒட்டுமொத்தமாக இது சமூக அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தும். 

தற்காலத்தில் சாத்தியமா?

உலகின் பல்வேறு பகுதிகளில் போர்மேகங்கள் சூழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. சிரியா, இஸ்ரேல்-பாலஸ்தீனம், ஆப்கானிஸ்தான், வடகொரியா, தைவான், ஈரான், ஆப்பிரிக்காவின் பல நாடுகள் பயங்கரவாதத்தாலும் கிளர்ச்சிக் குழுக்களின் தாக்குதலாலும் பாதிக்கப்பட்டுள்ளன. அங்கு அவ்வப்போது தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.


போர் குறித்து மக்கள் பேசிவந்தாலும், அணு ஆயுதங்களின் பயன்பாடு குறித்து அவர்கள் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. எந்த நாடும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தாது என்பதே மக்களின் பொதுவான நம்பிக்கையாக உள்ளது. ஆனால் சில நாடுகள் அணு ஆயுதங்களை இன்னும் முழுமையாகக் கைவிடவில்லை. உலகின் 90 சதவீத அணு ஆயுதங்கள் ரஷியா, அமெரிக்கா ஆகிய இரு நாடுகளிடம் மட்டுமே உள்ளன. அத்தகைய ஆயுதங்கள் மக்களுக்கு இன்னும் அச்சுறுத்தலாகவே விளங்கி வருகின்றன. 

இயற்கைப் பேரிடர்களும் அதனால் ஏற்படும் விளைவுகளும் நம் கைகளில் இல்லை. ஆனால்,  அணு ஆயுதங்களின் பயன்பாடும் அவற்றால் ஏற்படும் விளைவுகளும் நம் கைகளிலேயே உள்ளது. அணு ஆயுதங்களால் ஏற்படும் தீவிர விளைவுகளை அறிந்து கொண்ட  பிறகும் அவற்றை நாடுகள் தற்காலத்தில் பயன்படுத்த வாய்ப்புள்ளதா? என்ற கேள்வி எழாமல் இல்லை. 

அணு ஆயுதப் பயன்பாட்டை முறைப்படுத்துவதற்காகப் பல்வேறு ஒப்பந்தங்கள் இதுவரை கையொப்பமாகியுள்ளன. 

தாக்குதல் ஏவுகணைகளுக்கு எதிரான ஒப்பந்தம் (ஆன்டி-பாலிஸ்டிக் மிசைல் ட்ரீடி), நடுத்தர தாக்குதல் அணு ஆயுத ஒப்பந்தம் (இண்டர்மீடியட் ரேஞ்ச் நியூக்ளியர் ஃபோர்சஸ் ட்ரீடி), ஸ்டார்ட்-1, சார்ட், நியூ ஸ்டார்ட் உள்ளிட்ட ஒப்பந்தங்கள் சர்வதேச நாடுகளுக்கிடையே கையொப்பாகியுள்ளன. அவற்றில் சில ஒப்பந்தங்கள் காலாவதியாகி, இன்னும் புதுப்பிக்கப்படாமல் உள்ளன. சில ஒப்பந்தங்கள் காலாவதியாகும் தறுவாயில் உள்ளன. சில ஒப்பந்தங்களில் இருந்து குறிப்பிட்ட நாடுகள் விலகியுள்ளன. 

இத்தகைய நடவடிக்கைகள் அணு ஆயுதங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலேயே உள்ளன. பனிப்போர் காலத்தில் அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட நாடுகள் அணு ஆயுதங்கள் உள்ளிட்டவற்றைக் குவித்து வந்தன. பனிப்போர் காலத்துக்குப் பிறகு அந்நடவடிக்கை குறைந்தது. ஆனால், தற்போதைய சூழல் ஆயுதக் குவிப்பை மீண்டும் ஊக்கப்படுத்தி வருகிறது. புதிய தொழில்நுட்பங்களும் அணு ஆயுதங்களின் பயன்பாட்டைப் பல்வேறு வகைகளில் மேம்படுத்த உதவி வருகின்றன. ஹைப்பர்சானிக் ஏவுகணைகள் உள்ளிட்டவற்றில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தவும் நாடுகள் முயன்று வருகின்றன. 

கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், விண்வெளியின் துணை சுற்றுவட்டப் பாதைக்குச் சென்று அங்கிருந்து அணு ஆயுதங்களை இலக்கின் மீது ஏவும் திறன் கொண்டவை. அந்த ஆயுதங்கள் நிலத்துக்கு வந்து சேர்வதற்குள் ரேடார் உள்ளிட்ட கருவிகள் மூலமாக அதைக் கண்டறிந்து தாக்குதலில் இருந்து எதிரி நாடுகளால் தப்ப முடியும். ஆனால், ஹைப்பர்சானிக் ஏவுகணைகள் குறைந்த உயரத்தில் இருந்தே அணு ஆயுதங்களை வீசும் திறன் கொண்டவை. அந்த ஏவுகணைகளை எளிதில் கண்டறியவும் முடியாது. எனவே, அத்தாக்குதலில் இருந்து தப்புவதற்கு எதிரி நாடுகளுக்கு மிகக் குறைவான அவகாசமே கிடைக்கும். இது அந்நாடுகளுக்குப் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும். 

குறிப்பிட்ட நாடு எதிரி நாடு மீது தாக்குதல் நடத்த முயலும்போது, அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எதிரி நாடு மேற்கொள்ளும். ஆனால், தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குக் கூட எதிரி நாடுகளுக்கு அவகாசம் கிடைக்காத அளவுக்கு ஆயுதங்களைச் செலுத்துவதற்கான தொழில்நுட்பத் திறனை நாடுகள் மேம்படுத்தி வருகின்றன. ஹைப்பர்சானிக் ஏவுகணைகள் அதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அணு ஆயுதங்கள் பயன்பாட்டைத் தவிர்ப்பது தொடர்பாக நாடுகளிடையே கையொப்பமாகும் ஒப்பந்தங்கள், வெறும் காகிதங்கள் மட்டுமே. குறிப்பிட்ட நாடு எந்நேரத்திலும் அந்த ஒப்பந்தத்தை மீறும் அபாயம் உள்ளது. 

கற்பனை நிஜமானால்...

ஒருவேளை அணு ஆயுதப் போர் என்ற கற்பனை நிஜமானால் என்ன நடக்கும்? 1980-களின் மத்தியில் உலக அளவில் சுமார் 60,000 அணு ஆயுதங்கள் இருந்தன. அந்த எண்ணிக்கை தற்போது சுமார் 13,000 என்ற அளவுக்குக் குறைந்துள்ளது. உலக நாடுகளில் சுமார் 10,000 முக்கிய நகரங்கள் உள்ளன. நாடுகளிடம் தற்போது இருக்கும் அணு ஆயுதங்கள் அந்த நகரங்கள் அனைத்தையும் பூண்டோடு அழிப்பதற்குப் போதுமானவை. 

நாடுகள் அணு ஆயுதப் போரில் இறங்கினால் எதிரி நாடுகளின் ராணுவத் தளங்கள், அரசு கட்டடங்கள், பெரும் நகரங்கள் உள்ளிட்டவற்றைக் குறிவைத்தே ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்படும். அவ்வாறு அணு ஆயுதத் தாக்குதல் நடத்தப்பட்டால் என்னவாகும் என்பதை நீங்களே கற்பனை செய்துவிடலாம். லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான மக்கள் உடனடியாகக் கொல்லப்படுவர்; பலர் உடனடியாக மரணிக்காவிட்டாலும், கதிர்வீச்சு பாதிப்பினால் சில ஆண்டுகள் கழித்து உயிரிழப்பர். 

ஆனால், அணுகுண்டால் ஒட்டுமொத்த சுற்றுச்சூழலும் பாதிக்கப்படும்; அப்போது ஏற்படும் கரும்புகை, புவியின் வெப்பநிலையைப் பெருமளவுக்குக் குறைக்கும். போதிய வெப்பநிலை இல்லாமல் போனால், மழைப்பொழிவு குறையும். அதனால், உணவு உற்பத்தி பாதிக்கப்படும்; மூலப்பொருள்களுக்கான தட்டுப்பாடு ஏற்படும். பசிக்கொடுமை அதிகரித்து உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும். 

அணுகுண்டு வெடித்தால், மின்னணுப் பொருள்கள் இயங்காது; கைப்பேசி, தொலைக்காட்சி, இணையதளம் என எதுவும் இயங்க வாய்ப்பில்லை; ஓசோன் படலம் கடுமையாகப் பாதிக்கப்படும். சூரியனில் இருந்து வெளியாகும் புற ஊதாக் கதிர்கள் பூமியை அடைந்து மனிதர்களுக்குக் கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தும். 

காற்று மாசுபாடு அதிகரிக்கும்; மக்களுக்குப் பல்வேறு நோய்கள் உருவாகும். அதற்குச் சிகிச்சை அளிப்பதற்கான கட்டமைப்புகள் கூட தாக்குதலில் தரைமட்டமாயிருக்கும்; விலைவாசி உயர்ந்து பொருளாதாரம் கட்டுக்குள் இல்லாமல் சரிவைச் சந்திக்கும். போரில் ஈடுபடாத நாடுகளைச் சேர்ந்த மக்களும் பாதிக்கப்படுவர். ஒட்டுமொத்தமாக அணு ஆயுதப் போர் என்பது மனிதர்களின் அழிவுக்கு மட்டுமே வழிவகுக்கும். ஆனால், ஒட்டுமொத்த மனித இனமும் அழிந்துவிடாது என்பதே ஆராய்ச்சியாளர்களின் கருத்தாக உள்ளது. 

அதேபோல், அணு ஆயுதப் போர் உலகில் உள்ள அனைத்து உயிரினங்களையும் அழித்துவிடாது என்றே ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். டைனோசரஸ் உள்ளிட்ட இனங்கள் அழிவதற்கு மற்றொரு கோள் வந்து பூமி மீது மோதியதே முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. 

அத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு சுமார் 20,00,000 அணு ஆயுதங்கள் தேவை என்கின்றனர் விஞ்ஞானிகள். என்ன இருந்தாலும், அணு ஆயுதப் போர் நிகழ்ந்தால் என்னவாகும் என்ற கேள்விக்கான பதில் வெறும் கணிப்புகளாகவே உள்ளன. 

உண்மையில் போர் நிகழ்ந்தால் மட்டுமே விளைவுகள் குறித்து தெரியவரும். அந்தச் சமயத்தில் யார் மீது சரி, தவறு என யோசிக்கக் கூட நமக்கு நேரமிருக்காது. ஏனெனில், அப்போது நம் முன் பல்வேறு தீர்க்க முடியாத பிரச்னைகள் முளைத்திருக்கும். 

பெரிய போர்-சிறிய போர்

""அணு ஆயுதங்களை அதிக அளவில் பயன்படுத்தினால் மட்டுமே பிரச்னை. சிறிய அளவில் பயன்படுத்தினால் பிரச்னை ஏதும் இல்லை'' என்றெல்லாம் கூறிவிட முடியாது. இரு நாடுகள் மட்டும் தங்களுக்குள் அணு ஆயுதங்களை வீசிக்கொண்டால்கூட அவற்றினால் ஏற்படும் விளைவுகள் மிகவும் கடுமையாக இருக்கும் என்றே ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர். அத்தகைய சூழலும் புவியின் வெப்பநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தி உணவு உற்பத்தியைப் பாதிக்கும். குடிநீருக்குத் தட்டுப்பாடு ஏற்படும். சர்வதேச அளவில் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டு பஞ்சம் தலைவிரித்தாடும். அத்தகைய போர், ஒட்டுமொத்த மனித இனத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தாது என்றாலும், நவீன வளர்ச்சி சார்ந்த கொள்கைகள் கடுமையான பாதிப்பைச் சந்திக்கும். 

உணவுத் தட்டுப்பாடும் பொருளாதார பாதிப்பும் ஏற்பட்டால், அது மக்களுக்கிடையேயான மோதலை ஊக்குவிக்கும். அந்த மோதல் நாளடைவில் நாடுகளுக்கிடையேயானதாக மாறும். அத்தகைய 
சூழலில், தங்களிடம் உள்ள வளங்களைப் பாதுகாப்பதற்காக சில நாடுகள் மற்ற நாடுகள் மீது அணு ஆயுதங்களைப் பயன்படுத்தவும் வாய்ப்புள்ளது. மனித உரிமைகள் அனைத்தும் மீறப்படும்.  

மக்களின் பங்கு எந்தவொரு நாட்டின் அரசும் அந்நாட்டு மக்களுக்குக் கட்டுப்பட்டே இயங்கும். மற்ற நாட்டு அரசு வலியுறுத்தும் கருத்துகளை ஏற்காதவர்கள் கூட தங்கள் நாட்டு மக்களின் கருத்துகளை ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருப்பர். 

ஏனெனில் எப்படியிருந்தாலும் அடுத்த தேர்தல் வரும்போது ஆட்சியாளர்கள் மக்களைச் சந்திக்க வேண்டிய சூழல் உருவாகும். எனவே, நாடுகளுக்கிடையே அணு ஆயுதத் தாக்குதல் ஏற்படாதவாறு தடுப்பதிலும் மக்களுக்கு முக்கியப் பங்கு உள்ளது. 

அணு ஆயுதங்கள் உலக அமைதியை ஏற்படுத்தியுள்ளதா என்பது குறித்து ஆராய்ந்தால், அதை உறுதியாகச் சொல்லிவிட முடியாது. ஆனால், அணு ஆயுதங்கள் உலக அமைதிக்குத் தொடர்ந்து அச்சுறுத்தல் ஏற்படுத்தி வருகின்றன என்பதை மட்டும் மக்கள் உணர்ந்து கொண்டுள்ளனர். அணு ஆயுதங்கள் பெரும்பாலான நாடுகளுக்குக் கிடைக்கக் கூடாது என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. தற்போதைய சூழலில் 9 நாடுகளிடம் மட்டுமே அணு ஆயுதங்கள் உள்ளன. தங்கள் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்காவிட்டால், அணு ஆயுதங்களைத் தயாரிப்போம் என ஈரான் மிரட்டி வருகிறது. 

இந்தியா உள்ளிட்ட அணு ஆயுதங்களைக் கொண்டிருக்கும் அனைத்து நாடுகளும் "அணு ஆயுதங்களை முதலில் பயன்படுத்த மாட்டோம்' என்ற கொள்கையைக் கடைப்பிடித்து வருகின்றன. அக்கொள்கையை அந்நாடுகள் முறையாகக் கடைப்பிடிக்கின்றனவா என்பதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு சம்பந்தப்பட்ட நாட்டு மக்களுக்கே உள்ளது.   

தொடரும் அச்சுறுத்தல்

அணு ஆயுதங்களின் விளைவுகளை அனைத்து நாடுகளும் அறிந்தே உள்ளன. ஹிரோஷிமா, நாகசாகி நகரங்கள் மீதான தாக்குதலின் விளைவுகள் இன்னும் நினைவில் இருந்து அகலாமலேயே உள்ளன. அணு ஆயுதங்களைக் கொண்டு மற்ற நாடுகளைக் குறிப்பிட்ட நாடுகள் அச்சுறுத்துமே தவிர, எத்தகைய சூழலிலும் அவற்றைப் பயன்படுத்த நாடுகள் முன்வராது என்றே அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், அணு ஆயுதங்கள் இருக்கும்வரை அதுதொடர்பான அச்சுறுத்தலும் தொடரும் என்பதே கசப்பான உண்மை. ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் வார்த்தைகள், அணு ஆயுதங்களைக் கொண்டிருக்கும் உலக நாடுகளின் தலைவர்களுடைய காதுகளில் எந்நேரமும் ஒலித்துக் கொண்டிருக்கும் என நம்புவோம்.  

பாதுகாப்பு வழிமுறைகள்

குறிப்பிட்ட நாடுகளிடையே மோதல் நிகழும்போது, அணு ஆயுதங்களை அந்நாடுகள் பயன்படுத்தும் வாய்ப்பிருப்பதாகக் கருதினால், மக்கள் சில பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றலாம்: 

பதுங்கு குழிகள்: அணு ஆயுதப் பயன்பாட்டின் அச்சுறுத்தல் நிலவும் பகுதிகளில் மக்கள் பதுங்கு குழிகளில் இருப்பது பாதுகாப்பைத் தரும். முக்கியமாக, அணுகுண்டு வெடித்தவுடனும், அதைத் தொடர்ந்து சில நாள்களுக்கும் வெளியில் வராமல் இருப்பது நல்லது. பனிப்போர் காலத்தில் பலர் தங்கள் வீடுகளிலேயே பதுங்கு குழிகளை ஏற்படுத்தியிருந்தனர். ஆனால், தற்போதைய சூழலில் பலர் அப்பழக்கத்தைக் கைவிட்டுவிட்டனர். வீடுகளில் கதிர்வீச்சு துகள்கள் உள்ளிட்டவற்றை வடிகட்டி தூய காற்றை உள்ளே அனுப்பும் கருவிகளும் குறைந்த அளவிலேயே தற்போது பயன்பாட்டில் உள்ளன. 

வான ஒளியைக் காணக் கூடாது: அணுகுண்டு தாக்குதல் அபாயம் இருந்தால், வானத்தைப் பார்க்கவே கூடாது. அணு ஆயுதங்கள் வெடிக்கும்போது பெரும் ஒளித்திரள் உருவாகும். அதைப் பார்ப்பவரின் கண்கள் நிரந்தரமாகப் பார்வையை இழக்கும் அபாயம் உள்ளது. பகல் நேரத்தில் ஏற்படும் ஒளித்திரள், சுமார் 16 கி.மீ. தொலைவில் இருப்பவரின் கண்களையும் பாதிக்கும் திறன் கொண்டது. இரவு நேரத்தில் அந்த பாதிப்பு இன்னும் அதிக தூரத்துக்கு இருக்கும். 

உடனடி பாதுகாப்பு: அணுகுண்டு வெடித்தபிறகு அதில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு சிறிது நேரத்துக்குப் பிறகு தரையை நோக்கிக் கீழிறங்கும். அத்தகைய சமயத்தில் உடைகள் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் மீது கதிர்வீச்சு துகள்கள் படிவதற்கு வாய்ப்புள்ளது. எனவே, கதிர்வீச்சு துகள் பரவல் குறித்து அறிந்தால், அணிந்திருந்த உடையை உடனடியாக அப்புறப்படுத்திவிட வேண்டும். முடிந்தவரை உடனே குளித்துவிட வேண்டும். அதற்கான வசதியில்லை எனில், ஈரத்துணியால் உடலைத் துடைத்துவிட வேண்டும். 

உணவு கையிருப்பு: மோதல் தொடங்கியவுடனே ஒரு வாரத்துக்குத் தேவையான உணவுப் பொருள்களைக் கையிருப்பு வைத்துக் கொள்வது அவசியம். முக்கியமாக, குடிநீர் உள்ளிட்டவற்றை முறையாக மூடிவைத்து சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும். அடிப்படைத் தேவைக்கான மருந்துப் பொருள்களையும் கையிருப்பில் வைத்துக் கொள்வது அவசியம். 

வதந்திகளைத் தடுத்தல்: அவசரகாலங்களில் வதந்திகள் அதிக அளவில் பரவும். அவற்றில் இருந்து தற்காத்துக் கொள்வதே முக்கியம். நாடுகளுக்கிடையேயான போர் சமயத்தில் மின்சார வசதி தடைப்படும் என்பதால், பேட்டரியில் இயங்கக் கூடிய வானொலி மூலமாக அரசின் அறிவிப்புகளைத் தொடர்ந்து பின்பற்றி வர வேண்டும். 

அணு ஆயுதத்துக்கு எதிராக ராஜாஜி!

அணு ஆயுதப் பரவலைத் தடுக்க வேண்டும், நிறுத்த வேண்டும் என்பதற்காக தனது தள்ளாத வயதையும் பொருட்படுத்தாமல் மூதறிஞர் ராஜாஜி முதன்முறையாக வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டார். அணு ஆயுத உற்பத்தியை நிறுத்துங்கள் என்கிற கோரிக்கையுடன் அன்றைய அமெரிக்க அதிபர் ஜான் எப். கென்னடியைச் சந்தித்தார். அவரும் மிகுந்த மரியாதையுடன் அவரை வரவேற்று, அவரது கருத்துகளுக்கு செவிமடுத்தார். ஆனால், கென்னடியின் படுகொலை ராஜாஜியின் முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. 

உலகின் அணு ஆயுதப் பரவலுக்கு எதிராக தொலைநோக்குப் பார்வையுடன் களமிறங்கியவர் ராஜாஜி என்பதை வரலாறு பதிவு செய்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com