செயல்படுங்கள்... ஒன்றிணைந்து!

தொழில் அல்லது வேலை என்று வந்துவிட்டால்   போட்டி வந்துவிடுகிறது. போட்டி தவறானது அல்ல என்றாலும், அது கூடி பணி செய்தலை கெடுத்துவிடுகிறது;
செயல்படுங்கள்... ஒன்றிணைந்து!


தொழில் அல்லது வேலை என்று வந்துவிட்டால் போட்டி வந்துவிடுகிறது. போட்டி தவறானது அல்ல என்றாலும், அது கூடி பணி செய்தலை கெடுத்துவிடுகிறது; ஆபத்தான பல விளைவுகளுக்கு வித்திட்டுவிடுகிறது. "கூடி வாழ்ந்தால் கோடி நன்மை' என்பது பழமொழி மட்டுமல்ல, அது நடைமுறை சாத்தியமான மொழி. 

"போட்டி' என்ற ஒற்றை வார்த்தையை பிடித்துக் கொண்டு எவரோடும் சேர்ந்து வாழமாட்டேன் என்று அடம்பிடிப்பது, தனித்துவிடப்படுவதற்கான முதல்படியாக அமைந்துவிடும்.

அமெரிக்காவின் புகழ்பெற்ற உயிரியல் ஆய்வறிஞர் புரூஸ் லிப்டன் கூறுகையில், ""வாழ்க்கை என்பது போட்டி மற்றும் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டது; பிழைப்பதற்காக போராடித்தான் ஆக வேண்டும் என்று ஒரு கோட்பாடு கூறுகிறது. மாறுபாடுகளை உள்ளடக்கிய பரிணாமத்தின் இயல்புகளை கவனித்தால், இந்த கோட்பாடு முழுக்க முழுக்க வேறுபட்டது என்பது தெளிவாகும். வாழ்க்கையின் அடிப்படை போட்டி அல்ல''  என்கிறார்.

இன்றைய காலச்சூழலில் போட்டிகளுக்கு சாதகமான பல வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. "போட்டி நிறைந்த உலகம்' என்றே பெயரும் சூட்டிவிட்டனர். பணியிடங்களில் போட்டிக்கு தரப்படும் முக்கியத்துவம் வேறு எங்கும் காணமுடியாது. பணியிடங்களில் சோம்பலை உடைத்தெறியவும், உற்பத்தித்திறனை மேம்படுத்தும் வினையூக்கியாகவும் போட்டி இருப்பதாகக் கூறப்படுவது உண்டு. 

இந்த போட்டி உணர்வு, நிறுவனச் சூழலில் கொள்கை முடிவுகளை எடுப்பதை வெகுவாகப் பாதித்துள்ளதை காணலாம். போட்டியின் செயல்திறன் மற்றும் அவசியத்தை உணர்த்துவதற்கு அனுபவப்பூர்வமான ஆதாரங்கள் எதுவும் இல்லை. 

நடிகர் சிரஞ்சீவி நடித்த ஒரு தெலுங்கு திரைப்படத்தில், கால் ஊனமுற்ற மாற்றுத்திறனாளி குழந்தைகள் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொள்கிறார்கள்.  

விசில் ஒலியெழுப்பியதும், எல்லா குழந்தைகளும் ஓடத் தொடங்குகிறார்கள். "போட்டி' உணர்வு ஆட்கொண்டிருந்ததால், எல்லைக்கோட்டை தொட வேண்டும் என்ற இலக்கோடு எல்லோரும் வேகமாக ஓடிக் கொண்டிருந்தபோது, ஒரு மாற்றுத்திறனாளி கீழே விழுந்து விடுகிறார். இதை கவனித்துவிட்ட எல்லாரையும் விட முதலில் ஓடிக்கொண்டிருந்த குழந்தை, தனது ஓட்டத்தை நிறுத்திவிடுகிறது. இதைக் கண்டு ஓடிக்கொண்டிருந்த எல்லாரும் நின்றுவிடுகிறார்கள். அந்த குழந்தைகள் அனைவரும் கீழே விழுந்த குழந்தையைத் தூக்கிவிடுகிறார்கள். அத்துடன் நின்றுவிடவில்லை. போட்டியில் கலந்துகொண்ட எல்லா குழந்தைகளும் ஒருவரோடு ஒருவர் கைகளை கோர்த்துக் கொண்டு, சமமாக ஓட தொடங்குகிறார்கள். எல்லாரும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுகிறார்கள். குடும்பங்கள், பணியிடங்கள், தொழிலிடங்கள், சமூகங்களில் தேவைப்படும் அணுகுமுறை  டீம் வொர்க் தான். போட்டி, பொறாமைக்கு வித்திடும். கூட்டிணைவு ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

கரோனாவுக்கு பிந்தைய சூழலில், ஒருங்கிணைவின் தேவை தீவிரமடைந்துள்ளது. ஒரு நிறுவனத்தின் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கு போட்டி அல்ல, கூட்டிணைவு தான் பலம் சேர்க்கும் என்பதை கடந்த 2 ஆண்டுகால அனுபவம் நமக்கு உணர்த்தியிருக்கிறது. எல்லாரும் ஒன்று சேர்ந்து செயல்படும்போது, எல்லாருடைய  திறமைகளும் ஒருங்கிணைந்து பெரும்திறனாக உருவெடுத்து, அது நிறுவனத்தின் வளர்ச்சிக்கு வலுவான அடித்தளமாக மாறும்.

எல்லா வேலைகளையும் ஒருவரால் செய்து முடித்துவிட முடியாது. அப்படியானால், வெவ்வேறு திறமைகளின் கூட்டுக்கலவையாக அனைவரும் இணைந்து செயல்படும்போது, அது நிறுவனத்திற்கு ஏராளமான பலன்களை அளிக்க தவறாது. நினைத்துப் பார்க்க முடியாத வெற்றி வாய்ப்புகளை அள்ள வேண்டுமென்று நினைத்தால், கூட்டு முயற்சியின் அடிப்படையிலான கலாசாரத்தை நிறுவனத்தில் கட்டமைக்க வேண்டும். இது நீண்டகாலத்திற்கு நிறுவன வளர்ச்சிக்கு உரமாக அமையும். 

இதனை இதனால் இவன்முடிக்கும்  என்றாய்ந்து அதனை அவன்கண் விடல் என்ற திருக்குறளின்படி, தனியொருவரின் திறமைகளை கண்டறிந்து, அதற்கேற்ப பணிகளை ஒப்படைத்து திறமைகளை ஒருங்கிணைக்கும்போது நிறுவனத்தின் வளர்ச்சிக்கு யாராலும் தடைபோட முடியாது. ஒருங்கிணைவுக்கு 
பதிலாக போட்டியை முன்னிலைப்படுத்தினால், நிறுவனத்தின் வளர்ச்சி முடங்கும் அபாயம் உள்ளது. நிறுவன ஊழியர்களுக்கு இடையே போட்டி காணப்பட்டால், முதலில் சந்தேகம் கண்திறக்கும். அதன் பிறகு பொறாமை, வெளிப்படையின்மை, குறைகாண்பது, பிறரின் காலை இழுப்பது, ஊக்கத்தைக் குலைப்பது போன்ற வேலைகள் தலைதூக்கும். இது நிறுவனத்தின் அழிவுக்கு வழிவகுத்துவிடும். நிறுவனத்தில் பணி செய்பவர்களிடையே போட்டி நிறைந்திருக்கும்போது அறிவு அல்லது அனுபவப் பகிர்வு அற்றுபோய்விடும். பகிர்தல் இல்லாத நிறுவனங்கள் எப்படிமுன்னோக்கி பயணிக்க முடியும்?

அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில், பணியிடங்களில் எடுத்துக்கொள்ளும் இலக்கை அடையாமல் தோல்விகாண்பதற்கான காரணமாக 84 சதம் பேரால் சுட்டிக்காட்டப்பட்டது,  பணியாளர்களுக்கிடையிலான போட்டி மனப்பான்மைதான். திறமைவாய்ந்த சக ஊழியர்களோடு ஒரு சமூகம்போல செயலாற்றுவது, பிறரின் சாதனைகளைக் கொண்டாடுவது, பொதுவான இலக்கை வகுத்துக் கொண்டு ஒருமுகப்பட்டுசெயலாற்றுவது போன்றவற்றால், நிறுவனத்தின் வளர்ச்சி எதிர்பார்த்ததை விட பன்மடங்காக உயர்ந்ததாக 54 சதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். கரோனா போன்ற சூழலில் வீட்டில் இருந்து கொண்டேபணியாற்றும் புதிய வேலைமுறை அமலில் இருக்கும்போது, கூட்டிணைவு தான் கைகொடுக்கும். ஒருவருக்கு ஒருவர் ஊக்கப்படுத்திக்கொண்டு ஒருங்கிணைந்துசெயல்படும்போது, சோர்வு நீங்கி, இலக்குகள் வெல்லப்படும்.  

நிறுவனங்களில் வேலைசெய்யும் ஊழியர்கள் மட்டுமல்லாது, நிறுவனங்களுக்கு இடையேயும் ஒருங்கிணைவு காணப்பட்டதால் தான் தொழில்கள் அழிவில் இருந்து காப்பாற்றப்பட்டன. போட்டி நிறுவனங்களும் ஒருங்கிணைந்து, ஒத்திசைவாக செயல்பட்டதை கரோனா காலத்தில் காண முடிந்தது. உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களில் பற்றாக்குறை ஏற்பட்டபோது, போட்டி நிறுவனங்கள் அவற்றை அளித்து உதவி செய்தன. உற்பத்திப் பொருளை விற்பனைக்குக் கொண்டு செல்ல தடைகள் ஏற்பட்டபோது, அதற்கு போட்டி நிறுவனங்கள் கைகொடுத்தன. இது தான் இனி எதிர்காலம். ஊழியர்களுக்கும் ஊழியர்களுக்கும், நிறுவனங்களுக்கும் நிறுவனங்களுக்கும் இடையே இனி போட்டி தேவைப்படாது, ஒருங்கிணைவு தான் தேவைப்படுகிறது. இது காலத்தின் கட்டாயம், வளமான எதிர்காலத்தின் நுழைவுவாயில்.  ஒருவரை ஒருவர் சார்ந்து பணியாற்றுவதும், இணைந்திருப்பதும் கரோனாவுக்குபின் பூத்திருக்கும் புத்துலகின் பொதுமையாக மாறும். போட்டிகளைத் தாண்டி ஒருங்கிணைந்து செயல்படும் அணுகுமுறை நம்மை முன்னோக்கி நகர்த்தும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com