தேவை... உணர்வுரீதியான முதிர்ச்சி!

உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் முதிர்ச்சியடைந்த மனிதன் வாழ்க்கையின் எந்தவொரு சூழ்நிலையையும் எளிதாகக்கையாள முடியும். சக மனிதனைப் புரிந்துகொள்ளவும் மற்றவர்களைக் காயப்படுத்தாமல் வாழ்க்கையைக்
தேவை... உணர்வுரீதியான முதிர்ச்சி!

உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் முதிர்ச்சியடைந்த மனிதன் வாழ்க்கையின் எந்தவொரு சூழ்நிலையையும் எளிதாகக்கையாள முடியும். சக மனிதனைப் புரிந்துகொள்ளவும் மற்றவர்களைக் காயப்படுத்தாமல் வாழ்க்கையைக் கொண்டு செல்லவும் முதிர்ச்சி தேவையாகிறது. 

உணர்வுரீதியாக முதிர்ச்சி அடைந்தவர்கள் சுயகட்டுப்பாட்டுடன் சூழ்நிலைக்கு ஏற்றவாறு நடந்துகொள்வார்கள். பிறருக்கு உதவியாக இருப்பார்கள். சக மனிதனின் வாழ்க்கையைப் புரிந்து கொள்வார்கள். சுயநலமின்றி பிறர் நலமும் பற்றி யோசிப்பார்கள். 

உணர்வுரீதியான முதிர்ச்சியின்மை: இன்றைய காலகட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் புத்தக அறிவு மட்டுமே தரப்படுகிறது. வாழ்க்கைக் கல்வியை அடுத்த தலைமுறைக்கு கற்றுக் கொடுக்க யாரும் முற்படுவதில்லை. பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளுக்கு வாழ்க்கை அனுபவங்களைக் கூறுவதில்லை. ஏன், நவீன கலாசாரத்தின் தாக்கத்தினால் பெரியவர்களே இன்று பலரும் முதிர்ச்சியற்று காணப்படுகிறார்கள். 

உணர்வுவசப்படுதல்: சிலர் எதற்கெடுத்தாலும் திடீரென உணர்வு வசப்படுவார்கள்.சிறு சிறு விஷயங்களுக்குக் கூட  கோபப்படுவது, கத்துவது, திட்டுவது என்று இருப்பார்கள். இவ்வாறு எளிதில் உணர்வுவசப்படுபவர்களும் உணர்வுகளைக் கட்டுப்படுத்தத் தெரியாதவர்களும் முதிர்ச்சி அடையாதவர்களே.

அடம்பிடித்தல்: குழந்தைகள் எவ்வாறு தான் விரும்பியது கிடைக்காவிட்டால் அடம்பிடிப்பார்களோ அதைப் போலவே இளம் வயதினரும்  இருக்கிறார்கள். தங்களுடைய உணர்வு வெளிப்பாடு எவ்வாறு மற்றவர்களைப் பாதிக்கும் என்று உணராதவர்கள் முதிர்ச்சி அற்றவர்களே. இப்படியானவர்கள் உணர்வு வசப்பட்டு எதிர்மறையான சமூக விரோத செயல்களில்கூட ஈடுபட அதிக வாய்ப்புண்டு. 

கவனம் ஈர்த்தல்: சில இளம் குழந்தைகள், பெற்றோர்களுக்கு எப்போதும் தங்கள் மீது கவனம் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். இதற்காக அவர்களின் கவனத்தை ஈர்க்க ஏதாவது ஒரு செயலில் ஈடுபட்டுக்கொண்டே இருப்பார்கள். கவனத்தைத் தங்கள் பக்கம் திரும்ப என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். இளைஞர்களில் சிலரும் இப்படி இருக்கிறார்கள். தேவையற்ற உரையாடல்,  பொருத்தமற்ற நகைச்சுவை போன்றவற்றை இதற்கு உதாரணமாகக் கூறலாம். 

கிண்டல் செய்வது:  குழந்தைகள் ஒருவரையொருவர் பள்ளிகளில் அவர்களது பெயர் அல்லது நடத்தைகளை வைத்து கிண்டல் செய்வதைப் பார்த்திருப்போம். அதுபோலவே சில  இளம் வயது   நபர்களும் மற்றவர்களின் உருவம், நிறம், உடல் அசைவுகளை வைத்து வேறு பெயர் சொல்லி அழைப்பது எல்லாம் முதிர்ச்சியற்ற செயல்களின் உச்சம். 

பொறுப்புகளைத் தவிர்த்தல்: உணர்வுரீதியாக முதிர்ச்சியடையாதவர்களுக்கு எதிர்காலத்தைப் பற்றிய நேர்மறை சிந்தனையோ அல்லது திட்டமிடலோ இருக்காது. உறவுகளைப் பேணுவது, வீட்டில் பொறுப்புகளைப் பகிர்ந்து வேலைகளைச் செய்வது, சம்பாதிப்பது ஆகியவற்றைத் தவிர்ப்பார்கள். முடிந்தவரை பொறுப்புகளில் இருந்து விலகியிருக்க பார்ப்பார்கள். 

உடனிருப்பவர்களின் கஷ்டங்களைப் புரிந்து கொள்ள மாட்டார்கள். தங்களின் வளர்ச்சியையும் விரும்ப மாட்டார்கள். 

பிறரின் உணர்வுகளைப் புறக்கணிப்பது: தங்களைப் பற்றி மட்டுமே கவலைப்படுபவர்களுக்கு மற்றவர்களின் உணர்வுகள் பெரிதாகத் தெரியாது. மற்றவர்களின் கருத்துகளை கணக்கில் எடுத்துக்கொள்ள விரும்பமாட்டார்கள். மற்றவர்களின் தேவைகள் மற்றும் உணர்வுகளைக்  கொஞ்சம்கூட புரிந்துகொள்ள முயற்சிக்காதது மற்றும் புறக்கணிப்பவர்கள் உணர்வுகள் பற்றிய அடிப்படை புரிதலே இல்லாதவர்கள். 

தவறை ஒப்புக்கொள்ளாமை: சிலர், தான் செய்வது தவறு என்று தெரிந்தும் பொதுவெளியில் அதனை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். எந்த சூழ்நிலையிலும் அதை சமாளிக்க முற்படுவர். 

தனிமை உணர்வு: முதிர்ச்சியற்ற நபர்களிடம் தங்களுக்கு பிறரிடமிருந்து ஆதரவு கிடைக்கவில்லை, தங்களை யாரும் புரிந்துகொள்ளவில்லை என்ற தாழ்வு மனப்பான்மை இருக்கும். இதனால் தனிமையில் இருப்பதுபோன்ற உணர்வார்கள். 

சமூக வலைதளங்கள்: சமூக வலைதளங்களில் தேவையற்ற பதிவுகளைப் பகிர்வதும் முதிர்ச்சியற்ற தன்மையையே காட்டுகிறது. சிலர் யார் எந்த பதிவைப் பகிர்ந்தாலும் அதற்கு கமெண்ட் செய்வது, ஷேர் செய்வது, ஒருவரின் உணர்வுக்கு மதிப்பளிக்காமல் தன்னுடைய கருத்தை ஒருவரின் மீது கட்டாயமாகத் திணிப்பது ஆகியவையும் முதிர்ச்சியற்ற செயல்கள்தான். 

மன அழுத்தம் ஏற்படுமா? என்ன செய்யலாம்?உணர்வுரீதியாக முதிர்ச்சியற்ற நபர்களினால் பிறருக்கு மன அழுத்தம் ஏற்பட வாய்ப்பு அதிகமுள்ளது. 

உணர்வுரீதியில் முதிர்ச்சியடையாத நபருடன் நீங்கள் பழகும்போது உங்களுக்கு எரிச்சல் ஏற்படலாம். அவர்களுடைய புரிதல் இன்மை உங்களுக்கு கோபத்தை ஏற்படுத்தலாம். உங்கள் மன ஆரோக்கியம் கருதி அவர்களிடமிருந்து விலகியிருத்தலே நலம். ஏற்கெனவே பழகியவர் என்றால் படிப்படியாக அவர்களை உங்கள் வாழ்க்கையில் இருந்து விலக்கிவிடுங்கள். உங்கள் சிந்தனைக்கு ஒத்த நபர்களுடன் நட்பினை உருவாக்குங்கள். 

கண்டிப்பாக அந்த நபரை உங்கள் வாழ்க்கையில் இருந்து விடுவிக்க முடியாது என்றால் அவர்களிடம் நேரடியாகப் பேசி புரிய வைக்கலாம். ஒரு விஷயத்தை எவ்வாறு அணுக வேண்டும்; சூழ்நிலைக்கு தகுந்தவாறு எவ்வாறு பேச வேண்டும்;  உணர்வுகளை எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும் என்பனவற்றை அவர்களுக்குப் புரியும்விதத்தில் கூறலாம். பலமுறை கூறும்போது சில சூழ்நிலைகளில் அவர்கள் மாற வாய்ப்புள்ளது. 

அதுபோல ஒருவர் முதிர்ச்சியுடன் நடந்து கொண்டால் அவர்களைக் கண்டிப்பாக பாராட்ட வேண்டும். நற்செயல்களுக்கு பாராட்டு எதிர்பார்ப்பது மனிதனின் இயல்பே. நீங்கள் பாராட்டும்போது அவர்கள் மென்மேலும் தங்களுடைய புரிதலை மேம்படுத்திக்கொள்வார்கள். இளம் வயதினர் முதிர்ச்சியோடு நடந்து கொள்ளும்போது பெற்றோர்கள் அதை கண்டிப்பாகப் பாராட்ட வேண்டும். 

முதிர்ச்சி இல்லாத ஒரு நபரிடம் எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்ள வேண்டும். நாம் நினைப்பது போலவே சுற்றியுள்ளோரும் நடந்துகொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை. ஆனால், முதிர்ச்சியற்ற நபர்களின் நடத்தை சிக்கல்களைக் கண்டறிந்து அதை சரிசெய்வதற்கான வழிகளைக் கையாளலாம். 

உங்கள் வாழ்க்கையில் உணர்வுரீதியாக முதிர்ச்சியடையாத நபர் ஒரு சக பணியாளராக இருந்தால், மனிதவள மேம்பாட்டுத் துறை அதிகாரியிடம் இதுகுறித்துப் பேசலாம். அவரது நடவடிக்கைகள் உங்களைப் பாதிக்கும்பட்சத்தில் செய்யலாம். அவரை சகித்துக் கொண்டு வேலை செய்ய முடியாத நிலையில் ஆக்கபூர்வமான வழிகளைக் கண்டறியலாம். 

எந்தவொரு மனிதனும் பிறப்பு முதல் இறப்பு வரை ஒரேமாதிரியான மனநிலையில் இருப்பதில்லை. வாழ்க்கைச் சூழல்கள் அவனைப் பக்குவப்படுத்துகின்றன. பக்குவமடையாத நபர்கள், 

அம்மாதிரியான சூழ்நிலைகளை இதுவரை எதிர்கொள்ளவில்லை என்றுதான் கூறவேண்டும். அவ்வாறான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும்போது அவர்களும் மாறுவார்கள், முதிர்ச்சி அடைவார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com